நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நான் எழுதிய கடிதத்துக்கு ஒரு நண்பர் எழுதிய பதிலைப் பார்த்தேன். அவர் என்னை அணுமின் சக்தியின் தீவிர ஆதரவாளன் என்று நினைத்தால் அது தவறு. என்னுடைய கடிதம் அணுமின் சக்தியை முன்னிலைப்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஆனால் ஒழுங்கான அறிவியல் சார்ந்த விவாதம் இல்லாமல் அதை வெறுமனே எதிர்ப்பது சரியல்ல என்ற எனது எண்ணத்தை தான் எழுதியிருந்தேன்.

நிலக்கரி மின் நிலையங்களைப் பொறுத்தவரை அவற்றை இயக்குவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை விட நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவதால் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகம். அதுவும் இன்றைய செய்தியைப் பார்த்தால் தெளிவாகும். Centre for Science and Environment (CSE) என்ற தன்னார்வ நிறுவனத்தின் தகவலின்படி 2009ஆம் ஆண்டு மத்திய அரசால் காடுகளை அழிக்கக் கொடுக்கப்பட்ட அனுமதி மட்டுமே 1981ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டதில் 25% ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அனுமதி அதற்கு முன் கொடுக்கப்பட்டதை விட இருமடங்கு அதிகமாகும். இதில் பாதிக்கு மேல் நிலக்கரி சுரங்கம் தோண்டக் கொடுக்கப்பட்டது.

The pace of forest land diversion for clearing projects has doubled in the last five years. In one single year, in 2009 alone, as much as 87,883.67 hectares (ha) of forest land was granted clearance. This diversion is about 25 per cent of all forest land diverted for development projects since 1981. An assessment done by the Centre for Science and Environment (CSE), an NGO, has also revealed that coal mining accounted for more than half of all the forest land diverted for mining. (http://dailypioneer.com/nation/8409-forest-land-diversion-goes-up.html)

அது போதாதென இப்போதைய தகவலின்படி அடர்ந்த காடுகளிலும் சுரங்கங்கள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்க முடிவெடுத்துவிட்டது போல தெரிகிறது.

A group of Indian ministers agreed to allow companies to seek approval to mine coal in some dense forest areas, overturning an environment ministry ban, according to two government officials. (http://www.yourmoneysite.com/news/2011/sep/government-said-to-lift-curbs-on-coal-mining-in-dense-forest-areas.html)

புவிவெப்பமயமாதல் ஒரு மாயை என்பது அமெரிக்க தீவிர வலதுசாரியினர் வைக்கும் குற்றச்சாட்டு. இது குறித்து ஒருபுறம் அறிவியல் களத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் நாம் காணும் மிகுந்த தட்பவெப்ப மாற்றத்தினை வேறு எதைக் கொண்டு விளக்க இயலும் என்று தெரியவில்லை.

நிலக்கரி மின் நிலையங்களில் ‘Clean Coal’ என்ற தொழில்நுட்பம் இப்போது சில வளர்ந்த நாடுகளிலும் சீனாவிலும் பரிசோதனை செய்து பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களையும், கரித்துகள்களையும் கட்டுப்படுத்த முடியும், ஆனால் காடுகள் அழிக்கப்படுவதையும் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. கடந்த 42 வருடங்களாக ஒரு நிலக்கரி சுரங்கம் அமெரிக்காவில் எரிந்து கொண்டிருக்கிறது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது (http://www.treehugger.com/files/2009/12/underground-coal-fire-centralia-started-1962-burns.php). இந்த தீ வெறுமனே ஒரு ஊரில் குப்பைமேட்டின் மீது சிலர் தீ வைத்ததால் உருவானது.

இந்தியாவில் 150 சதுர கிலோமீட்டர் அளவில் பூமிக்குக் கீழே பல நிலக்கரி சுரங்கங்கள் எரிந்துக் கொண்டிருக்கின்றன.(http://en.wikipedia.org/wiki/Coal_seam_fire). இத்தகைய சுரங்கத்தீ பரந்த நிலப்பரப்புகளை உயிரினங்கள் வாழ ஏற்கத்தகாதது ஆக்குவதுடன் பெருமளவில் நச்சுப்பொருட்களையும் கக்குகின்றது.

இப்படியே ஒவ்வொன்றுக்கும் விளைவுகளைச் சொல்ல முடியும். உண்மை என்னவெனில் சரியாக மாசுகட்டுப்பாட்டு விதிகளைப் செயல்படுத்தாவிட்டாலோ அல்லது கவனக்குறைவாக செயல்பட்டாலோ எந்த தொழில்நுட்பமும் அபாயகரமானதே.

இன்றைய சூழலில் அணுமின் நிலையங்களின் விளைவுகளைப் பற்றி பேசுவது மிகவும் எளிது. செர்னோபில், புகுஷிமா போன்றவை நம் கண் முன் வந்து நிற்கின்றன. அணுக்கரு இயற்பியலை சாதாரண மக்களுக்கு விளக்குவது கடினமாகையால் அதன் மீது உள்ள அச்சத்தை நீக்குவதும் கடினமாகிறது. ஒரு படகு மூழ்கி விபத்தில் இருபது பேர் இறந்தால் அது பெரிய செய்தி அல்ல. ஒரு விமான விபத்தில் இரண்டு பேர் இறந்தால் அது எப்போதும் பெரிய செய்தி தான். ஏனெனில் பறப்பது என்பது பொதுவாக இயற்கையை மீறிய ஒரு செயலாகத் தெரிவதால் மனித மனதுக்கு அது ஒருவிதமான இன்பத்தையும், திகிலையும் ஒருங்கே அளிக்கிறது. இரண்டாம் உலகப்போர் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது ஹிரோஷிமா நாகசாகி தான். ஹிரோஷிமாவில் கிட்டத்தட்ட 80 ஆயிரம்-1 லட்சம் பேரும் நாகசாகியில் 60-70 ஆயிரம் பேரும் இறந்தனர். ஆனால் ஜெர்மனியில் ஹாம்பர்க் மற்றும் ட்ரெஸ்டென் நகரங்கள் சாதாரண குண்டுகள் வீசி அழிக்கப்பட்டது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இதில் ஹாம்பர்க் நகரத்தில் 50 ஆயிரம் பேரும் ட்ரெஸ்டென் நகரத்தில் 25 ஆயிரம் பேரும் இரண்டே நாட்களில் கொல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் ஹாம்பர்க் நகரத்தில் 1500 அடி உயரமுள்ள ஒரு பெரும் சூறாவளித்தீ உருவாகி நகரினை முற்றிலும் அழித்தது (http://en.wikipedia.org/wiki/Dresden_bombing, http://en.wikipedia.org/wiki/Bombing_of_Hamburg_in_World_War_II).

இன்று நாம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்து அணுவினால் மட்டுமே அல்ல. ரசாயனங்கள் மற்றும் நுண்ணுயிரிகளாலும் நாம் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். இத்தகைய சூழலில் வெறுமனே அது சரி இது சரியல்ல என்ற வாதம் ஒன்றின் மீது நம் முழு கவனத்தையும் செழுத்தி மற்றத்தை மறந்து விடச்செய்யக்கூடும். செர்னோபில் விபத்தினால் விற்காமல் போன இறைச்சி மற்றும் காய்கறிகளை விட பறவைக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலினால் விற்காமல் போனவை உலகளவில் அதிகமாக இருக்கும் அல்லவா?

நம்முடைய தேவைகள் அதிகரித்துவிட்டன. இயற்கையால் நம்முடைய தேவைகளை முழுவதும் பூர்த்தி செய்ய முடிவதில்லை. “Earth provides enough to satisfy every man’s need, but not every man’s greed” என்ற மகாத்மாவின் வாக்கு உண்மையே. நம்முடைய இந்த நாகரீக(?) வாழ்க்கைக்குத் தேவையான எரிசக்தியை கொடுப்பதில் அணுமின்சக்தி பெரும் பங்கு வகிக்க இயலும். ஆனால் இன்று உள்ள நிலையில் அது மட்டுமே நமது எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறமுடியாது. அது போலவே அதனை முற்றிலும் புறந்தள்ளி மற்ற எரிசக்தி ஆதாரங்களையே பயன்படுத்தலாம் என்றால் அதுவும் ஏற்கத்தக்கது அல்ல. அணுக்கரு இயற்பியல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. Breeder Reactor போன்றவை மூலம் நம் நாட்டில் எளிதாகக் கிடைக்கும் தோரியம் போன்ற தாதுக்களைக் கொண்டு அணுமின் சக்தி தயாரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அறிவியல் வளர வளர அணுமின் நிலையங்களை மேலும் பாதுகாப்பாக செயல்படுத்த முடியும்.

கூடங்குளத்தைப் பொறுத்தவரை அதே வடிவமைப்பைக் கொண்ட அணு உலைகள் உலகில் பல இடங்களில் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன என்றாலும் மக்களின் நம்பிக்கையை அரசு பெறும்வரை அதை நிறுத்தி வைப்பது சரியானதே. அதே நேரம் அணுமின்சக்தியை பற்றிய விவாதமானது சரியான அறிவியல் சார்ந்ததாக இல்லாவிட்டால் நாம் நம்முடைய இளைய தலைமுறையினருக்கு அணுக்கரு இயற்பியல் மீது அவநம்பிக்கையையும் ஆர்வமின்மையையும் ஏற்படுத்திவிடுவோம் என்று அஞ்சுகிறேன். அப்படி நிகழ்ந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்.

இத்துடன் இதனை முடித்துக்கொள்கிறேன். தொடர்ந்து அனல்வாதம் புனல்வாதம் நடத்தி உங்கள் வலைத்தளத்தில் இடத்தை ஆக்கிரமிக்க நான் விரும்பவில்லை.

அன்புடன்,

சண்முகம்

முந்தைய கட்டுரைஉலோகம்,கடிதம்
அடுத்த கட்டுரைபரமக்குடி