முகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும், அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களக் காட்சிகள், வேட்டைக் காட்சிகளில் கூட.
முகலாய -சூஃபி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி உருவாக்குகிறது? முற்றிலும் கைக்குச் சிக்கக்கூடிய ஜடப்பொருளான மலருக்குள் இருந்து தொடமுடியா அற்புதமான மணம் எப்படி வந்தது? இப்பிரபஞ்சம் இறைமயம் என்பதற்கான மறுக்க முடியாத சான்றாக இதை சூஃபிகள் முன்வைத்தார்கள். மண்ணில் அதன் அனைத்து புழுதிகளுடனும், வியர்வைகளுடனும், ரத்தங்களுடனும் வாழ்கையிலும்கூட முகலாயப் பாதுஷாக்கள் விண்ணின் பேரருள் ஒன்றை எப்போதும் அறிந்துகொண்டிருந்தார்கள் என்பதே பாதுஷா முகரும் அந்த ரோஜாவின் பொருள்
சூஃபிகளுக்கு ரோஜா என்பது அறிவதற்கரிய இறைமொழியின் பேரழகு மிக்க ஒரு சொல். மண்ணில் உள்ள எந்த அர்த்தமும் அந்த நறுமணத்தை விளக்காது. ரோஜாவின் நறுமணம் ஒரு சொல்லாகுமென்றால் அல்லா என்று மட்டுமே ஆகும்.
ரோஜாவில் இருந்து சாறு எடுக்கும் கலையை பாரசீக வணிகர்களிடமிருந்து ஷாஜகானின் மகள் கற்றதாகவும் பின்னர் அது முகலாயப் பண்பாட்டின் மைய அடையாளமாக ஆகியது என்றும் வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன.
எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல் ‘யாமம்’ அத்தர் என்ற அற்புதப் பொருளைப் பற்றிய ஒரு புனைகதை. அத்தர் தயாரிக்கும் கலையை ஒரு சூஃபி ஞானியிடமிருந்து வரமாகப்பெற்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் கதையாக இது ஆரம்பமாகிறது. அந்த அத்தரின் பெயர் ‘யாமம்’
யாமம் என்றால் இரவு. ‘பிரபஞ்சம் என்ற பசுவின் அகிடில் இருந்து சொட்டும் துளிகளே இரவுகள்’ என்கிறார் சூஃபி. பகல் எளியது நேரடியானது. இரவு எட்டமுடியாத ஆழம் கொண்டது. ஒவ்வொரு உயிரும் தன்னை புதிதாகக் கண்டடையச்செய்யும் வெளி அது. பகல் நமது அறிந்த தளங்களின் பின்னல். இரவு நாம் அறியாத நம் ஆழங்களின் பெருவலை.
இந்நாவலின் முகப்பில் பலவகையான சொற்களின் வழியாக இரவை ஒரு கவியுருவகமாக[மெடஃபர்] ஆக்க எஸ்.ராமகிருஷ்ணன் முனைகிறார். அந்த மைய உருவகத்தின் சரடில் இந்நாவல் கோர்க்கப்பட்டுள்ளது. இரவை நாம் ஒரு பெரும் படிமமாக வளர்த்துக் கொண்டோமென்றால் இந்நாவல் அதன் உட்குறிப்புத்தளத்துக்கு நம்மை எளிதில் எடுத்துச் செல்லும். ஒரே வரியில் இந்நாவலை விளக்க வேண்டுமென்றால் தங்கள் ஆளுமையின் இரவுகளால் அலைக்கழிக்கபப்ட்ட ஆளுமைகளின் கதை இது. அவ்விரவில் தூங்கும் மிருகங்களை துயிலுணர்த்தும் அழைப்பாக இருக்கிரது ‘யாமம்’
அவ்வகையில் எஸ்.ராமகிருஷ்ணன் முற்றாக சூஃபி மரபிலிருந்து வேறுபடுகிறார் என்பதைக் காணலாம். இங்கே நறுமணம் என்பது அல்லாவின் சொல்லாக ஒலிக்கவில்லை, சாத்தானின் மாயக்கருவியாக விளையடுகிறது. அல்லாவில் அலகிலா விளையாட்டை சாத்தானின் வழியாகவும் அறியலாமென்ற நவீன இலக்கிய நம்பிக்கையின் வெளிப்பாடு இது.
கடந்த பதினைந்து வருடங்களாக எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ச்சியாக உருவாக்கி முன்னெடுத்துவரும் தனித்தன்மை கொண்ட எழுத்து முறையின் சமீபத்திய சிறந்த உதாரணம் என நான் இந்நாவலைச் சொல்வேன். இத்தனித்தன்மையை ‘நவீன மீபொருண்மை’ [மாடர்ன் மெட·பிஸிக்ஸ்] என்று குறிப்பிடுவேன்.
நாம் காணும் இப்பிரபஞ்சம், இங்குள்ள வாழ்க்கை, நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட வகையில் சிக்கலானதாக, துண்டுகளாக, சிதறிப் பரந்ததாக, பொருளற்ற பேரியக்கமாக உள்ளது. மனித சிந்தனை அதற்கு ஒழுங்கும், பொருளும், தொடர்ச்சியும் உண்டென எண்ணிக் கொண்டபோதே மீபொருண்மை உருவாயிற்று. மீபொருண்மை நோக்கில் இருந்துதான் எண்ணற்ற பழங்குடி நம்பிக்கைகள் உருவாயின. நான்கு ஆமைகள் மீது அமர்ந்திருக்கிறது பூமி என்ற நம்பிக்கை. பூமாதேவி பூமியை தாங்குகிறாள் என்ற நம்பிக்கை. பின்னர் அந்நம்பிக்கைகள் இணைந்து மதங்கள் உருவாயின
எல்லா மதங்களும் மிக விரிவான ஒரு மீபொருண்மைத்தளத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். அங்கே பிரபஞ்ச நிகழ்வுகளுக்கெல்லாம் ஒரு தெளிவான காரணம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. விளக்கப்படாத ஏதும் அங்கே இல்லை.
மீபொருண்மையியல் கவியுருவகங்கள் , படிமங்கள் வழியாகவே இயங்க முடியும். புறத்தே காணும் பொருளுக்கு ஓர் அர்த்தத்தை நம் மனம் உணர்ந்ததென்றால் உடனே அது உருவகமாகி விடுகிறது. மீபொருண்மை மொத்த பிரபஞ்சத்தையே விளக்க முயல்கிறது. அப்போது அதன் கண்ணில் படும் அனைத்துமே படிமங்களாக ஆகிவிடுகின்றன.
மீபொருண்மை நோக்கு உருவாக்கும் கவியுருவகங்களும் படிமங்களும் காலப்போக்கில் ஆழ்படிமங்களாகின்றன. தொன்மங்களாக வளர்கின்றன. அவற்றால் ஆனதே நாம் அறியும் பண்பாடு என்பது. எளிமைப்படுத்தல் என்று தோன்றலாம். ஆனால் சுருக்கிப்பார்த்தால் இந்தியப் பண்பாடு என்பது என்ன? மூத்தார் வழிபாடு, மறு பிறப்பு போன்ற சில தொன்மங்கள் அல்லாமல்?
நவீன அறிவியல் மீபொருண்மையின் மீது பலத்த அடிகளை வீழ்த்தியது. பதினாறு பதினேழாம் நூற்றாண்டில் ஓங்கி நின்ற பல சிந்தனையாளர்கள் அடிப்படையில் மீபொருண்மையியலாளர்கள். அவர்களின் சிந்தனைகள் புறவயமான அறிதல் என்ற கல்லில் உரசி பரிசீலிக்கப் பட்டன. மத சிந்தனைகள் அதன் மூலம் கடுமையாக நிராகரிக்கப்பட்டன.
ஆனால் மீபொருண்மையியல் என்பது மனித சிந்தனையின் ஆதாரமான தேவைகளில் ஒன்றை நிறைவேற்றுகிறது. நாம் வாழ்வது வெறும் தற்செயல்களின் மீதல்ல பொருள் உள்ள ஒரு பிரபஞ்சத்தில் என்று மனிதன் நம்பியாக வேண்டியுள்ளது. ஆகவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் புறவயமான அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கிய மீபொருண்மையியல் சிந்தனைகள் உருவாயின. கடவுளின் இடத்தில் இயற்கை என்ற முதல் முழுமைப் பொருளை நிறுத்திப்பார்த்தார்கள். இவ்வகைப்பட்டவர்களான தோரோ, எமர்சன் போன்றவர்களின் பாதிப்பு இல்லாத நவீன எழுத்தாளர்கள் மிக மிக குறைவு.
இலக்கியத்தில் இந்த நவீன மீபொருண்மையியலின் நேரடியான பாதிப்பு பல வகையிலும் பேசப்பட்டுள்ளது. நவீன இலக்கியத்தில் உள்ள இலட்சியவாத அம்சம் என்பது இந்த மீபொருண்மை நோக்கின் விளைவே என்று கூறலாம். ஆம், நாம் வாழும் இவ்வுலகுக்கு தெளிவான அர்த்தம் இருந்தால் அல்லவா நமது இலட்சியங்களுக்கும், கனவுகளுக்கும் பொருள் இருக்க முடியும்?
பதினேழாம் நூற்றாண்டில் அறிவியல் மத உருவகங்களை தாக்கி அவற்றின் மேலிருந்த நம்பிக்கைகளை அழித்தபோது மீபொருண்மை நோக்கு புதிய உருவகங்களுக்காக தேட ஆரம்பித்தது. இக்காலகட்டத்து கற்பனாவாதக் கவிதைகளில் இயற்கை ஒரு பெரும் அடிப்படை உருவகமாக முன்வைக்கப்பட்டு அதிலிருந்து பற்பல புதிய உருவகங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணம் ஆறு. ‘மனிதர்கள் வருவார்கள் மனிதர்கள் போவார்கள், நான் சென்றுகொண்டே இருப்பேன்’ என சொல்லும்போது அது ஓர் அழியா விழுமியமாக ஆகிவிடுகிறது.
யோசித்துப் பாருங்கள், நவீன இலக்கியத்தில் பறவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என. பறவை பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாத கவிதைகள் மூலமே அந்த அளவுக்கு மையமான கவிருவகமாக ஆக்கப்பட்டது. இன்றைய இலக்கியம் என்பது இதே போன்ற பற்பல நவீன உருவகங்களினால் ஆனது. பழைய இலக்கியத்தில் மத உருவகங்களுக்கு உள்ள இடம் இன்று இவற்றுக்கு உள்ளது.
இலக்கியம் மீபொருண்மை நோக்கைத் தவிர்க்கவே முடியாது. காரணம் நாம் காணும் இப்புறவுலகம் அதன் சாரமான இன்னொன்றால் ஆனது என்றே அன்றும் இன்றும் இலக்கியம் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்தச்சாரத்தை அது மீண்டும் மீண்டும் புதிதாக வரையறை செய்துகொண்டிருக்கிறது. நண்பர்களே, அடிப்படையில் பார்த்தால் இலக்கியம் என்பது என்ன? ‘வாழ்க்கை என்பது வெறும் வாழ்க்கை மட்டும் அல்ல’ என வாசகர்களிடம் சொல்லும் ஒரு கலை மட்டுமல்லவா?
நவீனத்துவம், குறிப்பாக இருத்தலியம், அனைத்து வகையான மீபொருண்மை நோக்குகளையும் நிராகரிக்க முற்பட்டது. காரணம் அவர்கள் சொல்ல வந்ததே பொருளின்மையைத்தானே. ஆனால் அந்த நோக்கில் இன்னொருவகையான மீபொருண்மையை– பொருளின்மை என்ற சாரத்தை நோக்கிச் செல்லக்கூடியது- உருவாக்கினார்கள்.
பின் நவீனத்துவம் பேருருவமாக கட்டி எழுப்பப்படும் மரபான மீபொருண்மை நோக்குகளை நிராகரித்தது. அதே சமயம் தனக்குரிய சிக்கலான ஊடுபாவுகள் கொண்ட ஒரு மீபொருண்மை உலகை அது உருவாக்கவும் செய்தது. நம் சமகாலப் பெரும் படைப்பாளிகள் அனைவருமே தங்களுக்குரிய மீபொருண்மை உலகமொன்றை உருவாக்கியவர்கள் என்று சொல்லலாம்.
ஒரு பெரும் படைப்பாளியின் உலகுக்குள் நாம் செல்லும்போது வரையறுக்கப்பட்ட ஒரு தனி உலகையே காண்கிறோம். காரண காரியங்கள் செயல்படும் உலகு, விளக்கப்பட்ட உலகு. அர்த்தம் உடைய புறப்பொருள் என்பது ஒரு உருவகம் அல்லது படிமமே. பெரும்படைப்பாளிகள் ஒரு தனி வகையான மதத்தைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களா என்ன? தன் எல்லைகளை உணர்ந்த மதம். தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளும் திறன் கொண்ட ஒரு மதம்
போர்ஹெயின் படைப்புலகுக்குள் நுழையும்போது இந்த ஐயம் எனக்கு ஏற்பட்டதுண்டு. அவர் மட்டும் ஒரு கீழைநாட்டில் இருந்து அந்த எழுத்துக்களை ஓவியங்கள், பேருரைகள் மற்றும் நூல்கள் வழியாக முன்வைத்தாரென்றால் ஒரு மதத்தையே நிறுவியிருப்பார் என. சாத்தான்கள் தெய்வங்கள், புதிர்ப்பாதைகள். மாய மிருகங்கள், விதியின் விளையாட்டுகள்.
சென்ற சிலவருடங்களாக எஸ்.ராமகிருஷ்ணன் சீராக சில கவியுருவகங்களை தன் புனைவுகள் மூலம் உருவாக்கி வருகிறார் என்பதைக் காணலாம். அவரது முந்தைய முக்கியமான நாவலான ‘நெடுங்குருதி ‘ வெயிலை ஒரு தொன்மம் அளவுக்கு வளர்த்தெடுக்கிறது. விண்ணில் இருந்து ஓயாமல் மண்ணுக்குப்பொழியும் ஒரு ஆற்றலாக, மண்ணை ஒவ்வொரு கணமும் உறிஞ்சுவதாக, மனிதர்களை ஆளும் ஒரு வல்லமையாக அது மாறிமாறி வடிவம் கொள்கிறது. அதேபோல இந்த நாவலில் இரவு.
மதராச பட்டினம் அமீர் சாகிப் தெருவில் அத்தர் வணிகம் செய்துவந்த அப்துல் கரீமின் கனவில் அல் அசர் முஸாபர் என்ற ஃபக்கீர் சொன்ன ஆரூடத்திலிருந்து தொடங்குகிறது இந்நாவல். இரவை ஒரு சுகந்தமென உருவாக்கும் கலை அவன் குடும்பத்திற்கு சித்தியாகிறது. அந்த சுகந்தத்தால் ஆட்கொள்ளப்படும் பலவகை மனிதர்களைப் பற்றிய தனிக்கதைச்சரடுகள் பின்னி உருவாகின்றது நாவல்.
மிக விரிவான தகவல் சார்ந்த ஆராய்ச்சிக்குப்பின் எழுதப்பட்ட ஆக்கம் இது. நுண்ணிய சித்தரிப்புகள் ஒரு நவீன வரலாற்று நாவலுக்குரிய தகுதியை இதற்கு அளிக்கின்றன. ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பில்லாது ஒன்றை ஒன்று தீர்மானித்தபடி பின்னிச் செல்லும் வாழ்க்கையின் வலையைக் காட்டுவது ஆசிரியரின் நோக்கம். நாநூறு வருடங்களுக்கு முன்பு லண்டனில் கூடிய வணிகர்கள் சிலர் குறுமிளகு வணிகத்தின் பொருட்டு ஒரு வணிக நிறுவனத்தை உருவாக்க திட்டமிடும் இடத்தில் நாவல் தொடங்குகிறது. அவர்கள் ஷா- ஜஹானின் அரசவைக்கு வருகிறார்கள். விதை ஊன்றப்படுகிறது. அது முளைத்தெழும்போது சர்.ஃபிரான்ஸிஸ் டே யால் கடலருகே இருந்த அரைச்சதுப்புநிலம் விலைக்கு வாங்கப்பட்டு கோட்டை கட்டப்படுகிறது. அதைச்சூழ்ந்து மதராச பட்டினம் என்ற கடற்பாக்கம் படிப்படியாக உருவாகி வருகிறது.
பின்பு அந்நகரின் பல்வேறு வகை மனிதர்கள் வழியாக நகரும் கதை அவர்களின் அகஇரவுகளைத் தொட முயல்கிறது. செல்வத்தில் கொழிக்கிறார் அத்தர் வணிகரான கரீம். அவர் பாரம்பரியமாக தயாரிக்கும் ‘யாமம்’ என்ற நறுமணத்தைலத்தை உயர்குடியினரும் பிறரும் விரும்பி வாங்கி பூசிக் கொள்கிறார்கள். உடலில் பூக்கள் மலர்வதுபோல காமத்தை அரும்பச்செய்யும் அத்தராகிய யாமத்தை அவர் மனைவியருக்கு அறிமுகம் செய்கிறார்.
புதுப்பெண் ஒருத்தியை மணந்து கொள்கிறார் கரீம். ஆனால் மெல்ல அவரது வாழ்க்கை சிதைகிறது. ‘எப்படியோ’ அவருக்கு குதிரைச் சூதாட்ட மோகம் பற்றிக் கொள்கிறது. சொத்துக்கள் அழிய அவர் நாடோடியாக மறைய அரசிகளாக வாழ்ந்த அவரது மனைவியர் தெருவில் மீன் விற்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்
இன்னொருகதை பத்ரகிரியுடையது. அவன் மனைவி விசாலா. குரூரமான தந்தையால் புறக்கணிக்கப்பட்டு அணுவணுவாகச் செத்த அன்னையின் நினைவோடு சித்தியுடன் சென்று வாழ்ந்த இளமைப்பருவம் கொண்டவன் அவன். அப்போது அவனது தம்பிக்கு நான்குமாதம். தம்பிக்கும் பத்ரகிரிக்குமான உறவு நுட்பமான சிக்கலுடன் சொல்லப்பட்டிருக்கிறது. கைக்குழந்தையாக அவனை பத்ரகிரியின் மடியில் சித்தி போடும்போது அழும் குழந்தையை இறக்கி விட்டு விட்டு வெளியே சென்றவன் பத்ரகிரி. ஆனால் மெல்ல தம்பிக்குத் தந்தையின் இடத்தில் அவன் வந்து சேர்கிறான்.
சிறுவயதிலேயே நட்சத்திரங்களை காணும் மோகம் கொண்டிருந்த பத்ரகிரி லாம்டனின் முதல் நிலஅளவைக் குழுவில் பணியாற்றுகிறான். பத்ரகிரியின் தம்பி திருச்சிற்றம்பலம் படிப்பாளி. அவன் தன் இளம் மனைவி தையல்நாயகியை விட்டு விட்டு லண்டனுக்குப் படிக்கச் செல்கிறான். தையல்நாயகி கணவனின் நல்ல தோழியாக இருந்தும்கூட ‘எப்படியோ’ பத்ரகிரிக்கும் அவளுக்கும் உறவு உருவாகிறது. திரும்பிவரும் திருச்சிற்றம்பலம் காண்பது காம உறவுகளால் சிதைந்துப்போனக் குடும்பத்தையும் உடைந்த மனிதர்களையும் மட்டுமே
வழக்குகள் மூலம் மொத்த சொத்துக்களையும் இழந்து பஞ்சையாக ஆகும் கிருஷ்ணப்ப கரையாளர் தன் விருப்பத்திற்குரிய முதிய தாசி எலிசபெத்துடன் தன் கடைசிச் சொத்தான மலை ஏறிச் செல்கிறார். காட்டில் எலிசபெத்தின் நோய் மறைகிறது. காமத்தில் தொடங்கி ஒவ்வொன்றும் ‘எப்படியோ’ புதிதாக தளிர்விட்டு விடுகிறது.
இவ்வாறு பல திக்குகளில் விரியும் கதைகளில் மர்மமாக நிகழும் ‘எப்படியோ’க்களில் எல்லாமே அந்த நறுமணம் ஒரு நுண்ணிய பங்கை வகிக்கிறது என்பதே இந்நாவலின் மையச்சரடாகும். அதாவது தன் சுய இயல்புகளால் வழி நடத்தப்படாத மனிதர்களின் கதை இது. ஒவ்வொருவரும் இயல்பாக அவர்கள் எதைச் செய்வார்களோ அதற்கு நேர் மாறான ஒன்றை மிக ஆழத்திலிருந்து எழும் ஒன்றின் மூலம் தூண்டப்பட்டு செய்கிறார்கள். சதாசிவப்பண்டாரத்தை இட்டுச்செல்லும் நீலகண்டம் என்ற நாய் போல மனிதர்களை அவர்களுடைய உள்ளுணர்வுகள் இட்டுச்செல்கின்றன, அறியாத திசைகளுக்கு.
அர்த்தமில்லாத ஒரு ஆட்டக்களத்தில் புதிரான அகக் காரணங்களுக்காக அலையும் காய்கள் போல இருக்கின்றனர் இம்மனிதர்கள். காமம் போலவே கசப்புக்கும் விளக்கம் இல்லை. அனைத்தையும் பணயம் வைத்து பத்ரகிரியுடன் கூடும் தையல்நாயகிக்கு விரைவிலேயே அவன் மீது கடும் துவேஷம் உருவாகிவிடுகிறது. ஆம், ‘எப்படியோ’தான்.
அதைத்தான் நாவல் மனித அகத்தின் இரவு என்கிறது.”யாவரின் சுகதுக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப்போல முடிவற்று எல்லா பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது .அதன் சுகந்தம் எப்போதும்போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது” என முடிகிறது இந்நாவல்
மனிதர்களை அலைக்கழிக்கும், ஆட்கொள்ளும், வழிநடத்தும், வெறுக்கவும், விரும்பவும் வைக்கும் அறிய முடியாமையைப்பற்றிய நாவல் ‘யாமம்’
காமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’
[யாமம். எஸ்.ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம். சென்னை]