திரு ஜே அவர்களுக்கு,
வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை.
நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ என்ற நாவலையும் ராபர்ட் கலைச்சோ எழுதிய ‘க’ என்ற நாவலையும் தற்பொழுது படித்து வருகிறேன். இவைகள் முடிந்த பிறகு கொற்றவை படிக்கலாம் என நினைக்கிறேன்.
தங்களுடய வலைத்தளத்தையும் ஓரிரு மாதங்களாகப் படித்து வருகிறேன். தங்களை கோவை புத்தகக்கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். கை குலுக்கியிருகிறேன். எனது ஊர் குமரிமாவட்டம்.
நான் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவன். சமயம் வாய்க்கும் போதெல்லாம் சர்ச்சுக்கு செல்கிறேன். ஆனால் சமீப காலமாக என்னுள் சில மாற்றம். சொல்லத் தெரியவில்லை. பிரபஞ்சம் என்றால் என்ன? எப்படி உருவானது? திருமறையில் (பைபிள்) சொல்லக்கூடிய படைப்பின் வரலாறு உண்மை தானா? உண்மையிலேயே சொர்க்கம் என்பது உண்டா? சிந்திக்கத் தொடங்கினேன். விடை தெரியவில்லை. ஆனால் இப்பொழுதும் சர்ச்சுக்கு சென்று வருகிறேன். நான் அறிந்தும் கேட்டும் வாசித்தும் இருக்கிற இந்து புராணகதைகளும் நம்ப முடியவில்லை. தங்களுடைய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற புத்தகம் வாசித்த பொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
மொத்தத்தில் எனக்குக் கடவுள் என்ற தத்துவம் உண்டா? என்று வினவத் தோன்றுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் என் மனது சஞ்சலப்படுகிறது. எதையோ தேடுகிறதுபோல் இருக்கும். எனக்கு ஒரு ஆறுதல் தேவைப்படுகிறது. நான் திரும்பவும் ஏசுவைப்பிரார்த்திக்கிறேன். பரவசமடைகிறேன்.
இப்பொழுது தாங்கள் ஆன்மீகத்தை வேறுவிதமாகக் கூறிவருவதை கவனித்துவருகிறேன். இன்னும் முழுமையாகப் புரியவில்லை. அதைக் கொஞ்சம் விளக்க யாசிக்கிறேன்.
இவண்
த. அருளப்பன்
அன்புள்ள அருளப்பன்,
நான் ஆன்மீகம் பற்றி பல தளங்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். அவற்றை தொடர்ந்து கவனித்து உங்களுக்குள் விவாதித்துக்கொள்ளும்போதே நான் சொல்வதென்ன என்பதை நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். ஆன்மீக விஷயத்தில் ஏன் இந்தச்சிக்கல் என்றால் நாம் சிறுவயதிலேயே ஆன்மீகம் சார்ந்த பலவற்றை நம்மையறியாமலே கற்று நம்பி வாழ ஆரம்பித்துவிடுகிறோம். ஆகவே நாம் புதியதாகக் கற்கும் எதுவும் ஏற்கனவே கற்கப்பட்டவற்றை அழித்து அங்கே தன்னை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சில அடிப்படை விஷயங்களை முதலிலேயே தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆன்மீகம், கடவுள், மதம் மூன்றையும் நாம் ஒன்றாகவே எண்ணிக்கொண்டிருக்கிறோம். இளமையில் நமக்களிக்கப்படும் சித்திரம் அதுவே. ஆனால் சிந்திக்க ஆரம்பிக்கும்போது அவற்றைத் தனித்தனியாக வரையறைசெய்துகொள்வதே சரியான புரிதலை உருவாக்கும்.
ஆன்மீகம் என்பது நம் வாழ்க்கையை, மானுட வாழ்க்கையை, இயற்கையை, பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் அறிவதற்கான ஒரு மானுடமுயற்சி. முழுமைநோக்கு அல்லது சாராம்சநோக்கு என அதை விளக்கலாம்.
இந்திய மதங்களில் ’இதம்’ என்ற சொல் முக்கியமானது. ’இது’ என அச்சொல்லுக்கு அர்த்தம். இதெல்லாம் என்ன, இதெல்லாம் ஏன், இதெல்லாம் எவ்வாறு என்ற வினாக்களுக்கான பதில்தேடலே ஆன்மீகம்.
கடவுள் என்பது அந்தத் தேடலில் நம் முன்னோரால் கண்டடையப்பட்டு நமக்களிப்பட்டுள்ள ஒரு பதில் மட்டுமே. அந்தப் பதிலானது கடவுள் என ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் உண்மையில் அது பலவகையாக விளக்கப்படுவது. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் ‘இந்த உலகத்தைப் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய ஓர் ஆளுமை அல்லது இருப்பு’. இஸ்லாமுக்கும் அப்படித்தான்.
இந்து மரபின் அடிப்படையாக உள்ள கடவுள் உருவகம் பிரம்மம். பிரம்மம் என்றால் இந்த முடிவற்ற பிரபஞ்சத்துக்கு எது மூலகாரணமாக உள்ளதோ அது. இந்தப் பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் ஒரு தோற்றம் மட்டுமே. அந்த மூலகாரணம் எப்படிப்பட்டது என்று அறியவோ விளக்கவோ முடியாது.
ஆனால் இப்பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் இன்னொரு வடிவம் என்பதனால் இதில் உள்ள எல்லாமே அதுதான். அதாவது மோர் என்பது உண்மையில் பால்தானே? ஆகவே இப்பிரபஞ்சத்தை, இதில் உள்ள எல்லாவற்றையும் அந்த மூலகாரணமாக எண்ணலாம். ஒரு மரமோ, மிருகமோ , பாறையோ , புயலோ, மழையோகூட அதன் தோற்றமே.இங்குள்ள அன்பு கருணை வீரம் எல்லாமே அதன் தோற்றமே
இவ்வாறு இந்து மரபு பல்வேறு கடவுள்களை உருவகித்துக்கொண்டது. எங்கெல்லாம் நம்மை நம் அன்றாடப் பார்வைக்கு அப்பால் பார்க்கச்செய்யும் ஒரு பிரம்மாண்டம் தென்படுகிறதோ அங்கெல்லாம் கடவுளைக் கண்டது. இவை இருவகை. பொருட்கள், கருத்துக்கள். ஆயிரம் விழுது பரப்பிய ஓர் ஆலமரம் பொருள்வடிவமான கடவுள் என்றால் ஒரு அகோர வீரபத்ரர் வீரம் என்ற விழுமியத்தின் வடிவமான கடவுள். ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற பெருங்கடவுள்கள் பற்பல விழுமியங்களைத் தொகுத்து உருவகித்த ஒட்டுமொத்த வடிவங்கள்.
ஆனால் அவை எல்லாவற்றையும் பிரம்மம் என்றுதான் இந்து மரபு சொல்லும். அறியமுடியாத பிரம்மத்தை இந்த அறியக்கூடிய வடிவத்தில் வழிபடுகிறோம் என்று அதற்குப்பொருள். இந்த விஷயத்தைக் குறியீடுகள் மூலம் விளக்குபவைதான் புராணங்கள்.
பௌத்தம் கடவுள் என்றால் பிரபஞ்சத்தை இயக்கும் முழுமுதல் நெறி அல்லது விதி என்று உருவகித்து அதை மகாதர்மம் என்ற சொல்லால் குறிப்பிட்டது.அதன் வடிவமாக புத்தரின் உடலை பிற்காலத்தில் உருவகித்துக்கொண்டார்கள்.
இந்த ’கடவுள்’ என்ற கருதுகோள் நமக்கு ஏன் தேவையாகிறது? மூன்று அடிப்படைக் காரணங்களுக்காக.
1. நாம் வாழும் இந்த வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் முன்பின் தொடர்பு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. பிறப்பு இறப்பு நோய் இழப்பு மகிழ்ச்சி என மாறி மாறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த ஓட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே நமக்கு ஒரு பதற்றம் ஏற்படுகிறது
கடவுள் என்ற உருவகம் இதைப்பற்றிய பதற்றத்தை தீர்க்க உதவுகிறது. வாழ்க்கையை கடவுளை வைத்து எளிமையாக வகுத்துக்கொள்ளமுடியும். கடவுள் என்பது எளிமையான திட்டவட்டமான விடை. மானுட வாழ்க்கையில் நம்பிக்கையையும் பிடிப்பையும் அந்த உருவகம் அளிக்கிறது
2. மனிதன் அன்பு,பாசம், கருணை, தியாகம், ஒழுக்கம் போன்ற பல நற்பண்புகளையும் பல்வேறு அறங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். இந்தப் பண்புகளும் அறங்களும் சீரான சமூகச் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. கடவுள் என்ற உருவகம் இந்த எல்லா நற்பண்புகளையும் அறங்களையும் தொகுத்துக்கொண்ட ஒரு வடிவமாக உள்ளது. ‘அன்பே சிவம்’ ‘ஏசு அன்பாக இருக்கிறார்’ போன்ற வரிகள் இதையே குறிக்கின்றன
இந்தப் பண்புகளையும் அறங்களையும் நம் மனத்திலும் சமூக மனதிலும் நிலைநாட்ட கடவுள் என்ற உருவகம் உதவுகிறது. கடவுள் பக்தி என்பது சாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த அறங்கள் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கை என்றுதான் அர்த்தம் கொள்கிறது. அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார்
3. மனிதனுக்கு இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் ஒரு தனிமை உணர்ச்சி உள்ளது. ஆகவே அவனுக்கு தலைக்குமேலே அவனை பார்க்கக்கூடிய அவனைப் பாதுகாக்கக்கூடிய ஒரு தந்தை, அல்லது எஜமான், அல்லது அரசன் அல்லது அளவிடமுடியாத ஆற்றல் தேவையாகிறது. அதாவது மனிதனுக்கு வேண்டிக்கொள்ளவும் மன்றாடவும் புகார்செய்யவும் ஒரு இடம் தேவை. கடவுள் அந்த இடம்.
கடவுள் உண்டா இல்லையா என்பது பொத்தாம்பொதுவான கேள்வி. எந்தக் கடவுள், எப்படிப்பட்ட கடவுள் என்பதே இன்னும் குறிப்பான கேள்வி. அத்துடன் இந்தப் பிரபஞ்சத்தை ஆளும் ஒரு அலகிலா ஆற்றல் உண்மையில் உள்ளதா இல்லையா என்பது ஆன்மீகமான கேள்வி. அதை ஆன்மீகதளத்தில் எழுப்பிக்கொள்ளலாம். அதைக் கடவுளுடன் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை.
நடைமுறை வாழ்க்கையில் கடவுள் உங்களுக்கு எதற்காகத் தேவைப்படுகிறார் என்பதே இன்னும் முக்கியமானது. உங்களுக்கு ஏசு எதற்காகத் தேவைப்படுகிறார்? உங்கள் மனதில் ஏசு உயர் பண்புகளுக்கும் அறத்துக்கும் வடிவமாக இருக்கிறார் என்று கொள்வோம். ஏன் அவர் உண்டா இல்லையா என்று நீங்கள் விவாதிக்கவேண்டும்? அந்தப் புராணக்கதைகள் உண்மையா பொய்யா என ஏன் நினைக்கவேண்டும்.
பண்புக்கும் அறத்துக்கும் வடிவமான ஏசுவைப் பணிந்து அவர்முன் கண்னீருடன் மண்டியிடுவதில் என்ன நஷ்டம்? உங்கள் ஆன்மாவில் அவர் அன்பையும் பண்பையும் தியாகத்தையும் நிறைக்கிறார்தானே?ஆகவேதான் தேவாலயத்தில் பிரார்த்தனைசெய்தால் நீங்கள் நிறைவடைகிறீர்கள்.அந்த நிறைவை நீங்கள் இழக்க வேண்டியதில்லை.
ஒரு எளிய லௌகீகனாக உங்கள் அச்சங்களைக் களையவும் உங்கள் துயரங்களை இறக்கி வைக்கவும் உங்களுக்கு ஒரு கடவுள் தேவைப்படுவார் என்றால் அந்தக் கடவுளிடம் அதைச் செய்வதில் பிழை ஒன்றும் இல்லை. தேவாலயத்தில் அதை செய்யலாம்.
கடவுள் உண்டா இல்லையா என்பதை முதலில் முடிவுசெய்துவிட்டுதான் இதையெல்லாம் செய்வேன் என்று நினைப்பதில் அர்த்தமில்லை. இந்தக் கடவுள் உருவகம் உங்களுக்கு எதை அளிக்கிறது என்பதே முக்கியம்.
கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக அமைப்புதான். பிறப்பது முதல் இறப்பது வரையிலான சடங்குகளின் தொகை அது. ஒரு மக்கள்கூட்டத்தை இணைத்துக்கட்டும் நம்பிக்கை.
அந்த சமூக அமைப்பு உங்களுக்கு ஒரு சமூகவாழ்க்கையை வாழ உதவுகிறது என்றால் அதில் இயல்பாக நீடிப்பதே சரியானது. அந்தச்சடங்குகள் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவான புற அடையாளமும் வாழ்க்கைநெறியும் உருவாகிறது என்றால் அதைக் கடைப்பிடிப்பதிலும் பிழை இல்லை. உங்கள் குடும்பம் அதில் இயல்பாக வாழ்கிறது என்றால் அதை அவர்கள் அனுபவிக்க அனுமதிப்பதே விவேகம்.
ஆன்மீகமான தேடலைக் கடவுள் மதம் இரண்டுக்கும் அப்பால் வைத்துக்கொள்ளவும். அது மிகமிக அந்தரங்கமானது. ஒரு குரு அமைந்தால் அவரிடமன்றி எவரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது. அதைப் புறவயமாக விவாதிக்கக் கூடாது.
ஆன்மீகம் என்பது நாம் நமக்குரிய விடையை நாமே கண்டடைந்து அதை நம்முள் நிறைத்துக்கொள்வதாகும். அது பல படிகளிலாக நம்முடைய அகத்தில் நாம் சிறுவயது முதலே பெற்று நிறைத்திருக்கும் ஏராளமான நம்பிக்கைகள் அழிந்து , மனப்பழக்கங்கள் மாற்றம் கொண்டு, நாமே மெல்லமெல்ல மாற்றம் அடைந்து நாம் சென்று சேரும் ஓர் இடம். அந்தப் பயணத்தின் எல்லாப் படிகளும் அந்த வகையில் நம்மை மேலே கொண்டுசெல்லக்கூடியவையே.
ஆன்மீகத்தை ஒரு தூய மெய்த்தேடலாக , மத அடையாளம் அற்றதாக, அந்தரங்கமானதாக வைத்துக்கொள்வதே நல்லது. ஆன்மீகதளத்தில் நீங்கள் இந்துவோ கிறித்தவனோ அல்லாமல் ஒரு தூய மானுடப்பிரக்ஞையாக மட்டுமே இருப்பதே ஒரே வழி. அந்நிலையில் எல்லா மதநூல்களும் எல்லா ஞானங்களும் உங்களுக்கு ஒன்றே.
அப்படி நீங்கள் தேடினால் பைபிளையே மதம், கடவுள் இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆன்மீகநூலாக வாசிக்கலாம். ஏசுவை மனிதகுமாரனாக அல்லாமல் மகத்தான ஞானகுருவாக அணுகலாம்.அதற்கான எல்லா வழிகளும் அதற்குள் உள்ளன.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
கடவுள்நம்பிக்கை உண்டா
ஆன்மீகம் போலி ஆன்மீகம் மதம்
கடவுள் மதம் குழந்தைகள்
மறுபிரசுரம்/முதற்பிரசுரம்Oct 10, 2011