உலோகம்,கடிதம்

அன்பின் ஜெ அவர்கட்கு !விமலன் என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் அஞ்சலின்  மொழிநடை ஈழத்தில் இருப்பதாக அறியவில்லை. யாழ்ப்பாண மாவட்ட வழக்கில் உள்ள சில வட்டார வழக்கை மிகைபடப் பயன்படுத்தி இந்தக் கடிதம் கோமாளித்தனமாக எழுதப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாண வட்டார வழக்கிற்கு அங்கீகாரம் தேடும் சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுவது  தெரிகின்றது. இந்த மொழிநடை இலங்கைத் தமிழரின் சராசரி மொழி வழக்கில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.ஒரு ஈழத் தமிழனாக நான் இந்தக் கடிதம்   ஒரு  அசட்டுத்தனத்தின்  வெளிப்பாடு என்றே  கருதுகின்றேன்.கனகசபாபதி சரவணபவன்*

அன்புள்ள ஜெ வணக்கம்
நான் உங்கள் ஆக்கங்களை விரும்பிப் படிப்பேன் தற்போது உங்கள் இணையத்தைத்
தொடர்ந்து படித்து வருகிறேன். என்னைப்பொறுத்த வரையில் மிகவும்
பயனுள்ளதொன்றாகவே இதைக் கருதுகிறேன்.

(உலோகம்- கடிதம்) என்னும் கடிதம் வாசித்தேன் தான்- தமிழன்
என்றும் ஈழத்தவன் என்றும் விமலன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவருடைய
கடிதம் வாசித்து முடித்தபின்பும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது
எனக்குப் புலப்படவில்லை. தவிர எழுத்துப்பிழைகள் வாசிக்கும்போது
எரிச்சலடைய வைக்கின்றன. சரி அவற்றைப் பெரிது படுத்தாமல் விட்டாலும்
அவருடைய கடிதம் ஈழத்து மொழிப்பிரயோகத்தின் சாயலில் எழுதப்பட்டிருந்தது.
நானும் ஈழத்தவன்தான் ஆனால் அவர் யாழ்ப்பாணப் பேச்சுமொழியைக்
கையாள்கிறாரா? மட்டக்களப்புப் பேச்சு மொழியைக் கையாள்கிறாரா? மலையகப்
பேச்சுமொழியைக் கையாள்கிறாரா? என்பது புலப்படவில்லை. ஏன் இந்த மாறாட்டம்?
அவருடைய பேச்சு அப்படித்தான் என்றால் அதில்நான் தலையிடவில்லை திட்டமிட்டு
நடந்துகொள்ளாவிட்டால் சரி. இதில் நடிகர் விவேக் கதைத்ததை எப்படிக்குற்றம்
சொல்ல முடியும் என்றுதான் யோசிக்கிறேன்?

நன்றி
அன்புடன்
அ.கேதீஸ்வரன்.

அன்புள்ள சரவணபவன், கேதீஸ்,

இதேபோல பல கடிதங்கள் வந்துள்ளன.

இந்தக் கடிதத்தை அல்லது கட்டுரையை நான் பிரசுரித்த நோக்கமே அதுதான். அது ஈழத்தமிழே அல்ல. ஈழத்தமிழைப் போலி செய்கிறது. தவறாக. ஆனால் இதேபோன்ற எழுத்துக்கள் தமிழகத்தில் இப்போது பெருகி வருகின்றன. இந்தியாவில் இருந்தபடியே ஈழவரலாற்றை ஈழப்பண்பாட்டைத் தாங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் ஒரு சாரார். இதற்குத் தமிழ்ப்பற்று என்று பெயர் சூட்டுகிறார்கள்.

யோசித்துப்பாருங்கள், அந்த முன் குறிப்புக்கடிதம் இல்லாமல் இது ஒரு இதழில் அச்சாகியிருந்தால் சராசரித் தமிழன் இதை முள்ளிவாய்க்காலில் போராடி முள்வேலியுள் வாழும் ஒரு ஈழப் போராளி எழுதியிருப்பார் என்றே நம்பிவிடுவான் இல்லையா? ஆகவே அந்த முன்குறிப்புடன் பிரசுரித்தேன். ஆகவேதான் சாதாரணமான பதிலை அளித்தேன்.

சென்றகாலங்களில் எப்போதுமே ஈழப்போராட்டத்துக்கு ஆதரவோ தொடர்போ இல்லாமலிருந்து இப்போது சட்டென்று அதைப்பற்றி மிகையுணர்ச்சியுடன் பேச ஆரம்பிக்கும் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இவர்களுக்கு எந்த வரலாறும் தெரியாது. எந்தப் பின்னணியும் புரியாது. இவர்கள் இன்றைய ஊடகப்பிரச்சாரம் வழியாக எளிமையாக உருவாக்கிக்கொண்டுள்ள ஒரு சித்திரத்தை அல்லாமல் எவர் என்ன சொன்னாலும் அது தமிழ்த்துரோகம் என்ற கெடுபிடியை உருவாக்குகிறார்கள். இந்தக் கெடுபிடிகளால் ஈழ எழுத்தை ஒரு தலைமுறைக்காலம் அழித்தார்கள். தமிழில் இந்த மிரட்டல்களுக்கு ஆட்பட்டால் எழுத்தே அழிந்துவிடும் என நினைக்கிறேன்.

ஈழத்தில் ஒரு போர் நடந்தது. அதன் அழிவுகளை சுமக்கும் அந்த மக்களுக்கு தங்கள் வரலாற்றையும் வரலாற்றில் இருந்து பெறும் பாடங்களையும் எழுதிக்கொள்வதற்காவது உரிமை எஞ்சட்டும் என்பதே என் எண்ணம். அதையும் நாங்களே எழுதி அவர்களுக்குக் கொடுப்போம் என்ற எண்ணமே இங்கே சிலரிடம் ஓங்கியிருக்கிறது இன்று. அதற்கான ஆதாரமே இக்கடிதம்.

அதேபோல உலோகம் முழுக்கமுழுக்க இந்தியச் சூழலில் இந்தியா சார்ந்த எதிர்வினையாக உருவாகி உள்ளது. அது ஈழப்போராட்டம் பற்றிய நாவல் அல்ல, இந்தியாவில் நடந்தவை பற்றிய நாவல். அந்த வகையில் அது மிகமிக உண்மையானது என்றும், அந்த உண்மையை விவாதிக்குமளவுக்கு விஷயமறிந்தவர்களே குறைவு என்றும் மட்டுமே நான் சொல்லமுடியும். அதை எழுதுவதற்கான உரிமையை மறுக்க ஈழத்தவருக்கும் உரிமை இல்லை.

திரில்லர் என்பது அந்த விஷயங்களைப் பேசுவதற்குப் பிற எவற்றைவிடவும் வசதியான வடிவம் என்பதனால் அந்த வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அடிப்படையான ஒரு விஷயத்தைப் பேசுகிறது. ஒருவகையில் பின் தொடரும் நிழல் பேசிய அதே விஷயம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅனலும் அணுவும்
அடுத்த கட்டுரைநிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்