அனலும் அணுவும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,கூடங்குளம் குறித்து சண்முகம் என்பவரின் கடிதம் பார்த்தேன். நிலக்கரி அனல் மின் நிலையங்கள் என்று வரும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு என்கிற மிகப்பெரிய பூச்சாண்டியைக் கையில் எடுப்பது வழக்கமாகி விட்டது. இது குறித்துக் குழும விவாதத்தில் நான் பதிந்த கருத்துகளை இங்கே மீள் பதிய வேண்டிய அவசியம் உள்ளது.நிலக்கரி மூலம் அனல்மின்சக்தி என்பதற்கு எதிராகச் சொல்லப்படும் காரணங்கள் இரண்டு: 1. காற்று மாசுபடுதல், 2. சுரங்க விபத்துகள்

கார்பன் துகள்களை வடிகட்டும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. நிலக்கரி மின் உற்பத்தியில் வெளியாகும் கரியமிலவாயு, கந்தக வாயு ஆகியவறைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் இன்றே உள்ளன. ஆனால் எரிசக்தி கொள்விலையை அதிகமாக்குவதாகச்சொல்லி அவற்றை வளர்த்தெடுக்கவோ நிறுவவோ மேற்கின் அனல்மின் சக்தி முன் நிலையங்கள் தயங்குகின்றன. மேற்கின் விலையதிக தொழில்நுட்பங்கள் எல்லாம் கிழக்கினால் விலை குறைக்கப்பட்டு வரும் காலம் இது. சீனாவிலும் இந்தியாவிலும் மலிவாய்க் கிடைக்கும் மனித வளம் மேற்கில் இல்லாத ஒன்று. இந்தியா இந்த துறையில் குறிப்பாய் கவனம் செலுத்தி நிலக்கரி மின் நிலையங்களின் மாசு வெளியேற்றத்தை அடுத்த பத்தாண்டுகளில் பெரிதும் குறைக்க முடிந்தால் அதைவிட நம் நாட்டுக்கு மாபெரும் நன்மை வேறெதுவும் இருக்க முடியாது.

((குறிப்பு: குளோபல் வார்மிங் என்னும் ஐரோப்பாவின் புதிய பூச்சாண்டிக்கு நாம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பணயம் வைக்கக்கூடாது. குளோபல் வார்மிங்கை ஒப்புக்கொள்ளாதது என்பது அறிவியலையோ, சூழல் பாதுகாப்பையோ மறுதலிப்பதாகாது. இது குறித்து என் விரிவான கட்டுரை, ”அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங்” என்று சொல்வனத்தில் வந்தது:

பகுதி 1: http://solvanam.com/?p=121
பகுதி 2: http://solvanam.com/?p=318
பகுதி 3: http://solvanam.com/?p=590

ஒரு அணுமின்சக்தி நிலையத்தின் ரிஸ்கை அனல் மின்னுற்பத்தியுடன் ஒப்பிடும்போது,  விபத்தின் உடனடி மற்றும் நீண்ட கால விளைவுகள், காற்று, தண்ணீர் என சூழலமைப்பு மொத்தமும் கெட்டுப்போவது என்பதோடு, எல்லைகள் தாண்டி அவை உருவாக்கக்கூடிய விளைவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். செர்னோபில் கதிரியக்கத்தின் விளைவு பிரிட்டனில் இன்றும் உள்ளது. செர்னோபில் விபத்து நடந்த வருடம் பிரிட்டனில் 9000 பண்ணைகள் பாதிப்புக்குள்ளானதாகக் கண்டறியப்பட்டு அவற்றின் விளைபொருட்கள் (பால், மாமிசம், தாவரம் என்று எல்லாமே) கட்டுப்படுத்தப்பட்டன. 2006-இல் பிரிட்டனின் உணவுத்தரக்கட்டுப்பாடு துறை இன்னமும் கூட 355 பண்ணைகள் பாதிப்பில் இருந்து வெளிவரவில்லை என்று அறிவித்தது (டெலிகிராஃப் செய்தி).

இந்தப்பண்ணைகளின் கால்நடைகளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு விற்க வேண்டுமென்றால் கட்டுப்பாட்டு சோதனைக்கு எழுதி அதிகாரி வரவழைக்கப்பட்டுக் கதிரியக்க சோதனை செய்யப்பட வேண்டும். இவை ஒவ்வொன்றிற்கும் ஆகும் செலவை ரஷ்ய அரசு ஏற்கப்போவதில்லை. இந்தியாவில் இதுபோன்ற நிலை பக்கத்து நாட்டு அணுமின் நிலைய விபத்தால் வந்தால், என்ன ஆகும்- யாருக்கு என்ன காம்பன்சேஷன் கிடைக்கும்- போபாலில் நடந்தது என்ன என்றெல்லாம் நாம் யோசிக்கலாம்.

அனல்மின் சக்தி நிலையங்களின் தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாய் அமல்படுத்தப்பட வேண்டும். மீறல்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் ஆனாலும் லஞ்சம் தலைவிரித்தாடும் நாட்டில் இதனை முழுமையாய் நடைமுறைப்படுத்த முடியாமல் இழப்புகள் தொடரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் அதே போன்ற ஒரு ஊழல் நிறைந்த அரசியல் சூழலில்தான் நம் அணு மின் நிலையங்களும் இயங்குகின்றன என்பதை நினைத்தால்தான் எனக்குப் பதைக்கிறது.

ஆனால் மின்நிலைய விபத்து/ விபத்தினால் பாதிப்பு என்று எடுத்துக்கொண்டால், சுரங்க விபத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை அணுமின்நிலைய பாதிப்புகளை விட பலமடங்கு குறைவுதான்.  பல நேரங்களில் சுரங்கம் அமைக்கப்படும் வடிவமைப்பிலேயே பாதுகாப்பை மையமாக்கி அமைக்கும் விதிமுறைகளைக் கொண்டு வரவேண்டும். சிலியில் அவ்வளவு பெரிய விபத்திலிருந்தே அத்தனை சுரங்கத்தொழிலாளர்களும் பல வாரங்களுக்குப்பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர் என்பது குழும நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

உலகிலேயே நிலக்கரி வளம் அதிகம் உள்ள நாடுகளில் மூன்றாம் இடம் வகிக்கிறது பாரதம். 62,300 மில்லியன் ஷார்ட் டன் உற்பத்தி செய்யக்கூடிய அளவு நிலக்கரி வளம் நம் நாட்டில் உள்ளது. இதில் நாம் இன்று உற்பத்தி செய்திருப்பது 528.5 மில்லியன் ஷார்ட் டன்கள் மட்டுமே. அதாவது 1%-க்கும் குறைவு! நம் நாட்டின் எரிசக்தித் தேவையை அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு முழுமையாகத் தீர்க்கும் அளவுக்கு நம்மிடம் நிலக்கரி உள்ளது. (ஆனால் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்கிறோம்!!! லஞ்சம் தலைவிரித்தாடும் துறைகளில் நிலக்கரி அமைச்சரவை முன்னணியில் நிற்கிறது, கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஷிபு சோரன், தெலுங்கு திரைப்படத் துறையைச்சார்ந்த தாசரி நாராயண ராவ் போன்ற ”தொழில் வித்தகர்களை” அமைச்சர்களாகக் கண்ட பெருமை வாய்ந்தது இத்துறை.)

அணுமின் நிலையங்களால் மேற்கு நாடுகளுக்கு உடனடி நன்மை உண்டு. அனல் மின்நிலையங்களால் நம் நாட்டிற்கு நீண்ட கால நன்மை உண்டு. எந்த ஒற்றைவகை மின்சக்தியும் முழுமையாய் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யப்போவதில்லை. ஆனால் அணுமின் நிலையங்கள் மீதான நம் சார்பை மிகவும் குறைவாக வைத்துக்கொள்வதே நம் எதிர்காலத்திற்கு நல்லது என்று எனக்குப்படுகிறது. நம் நிலக்கரிவளங்களை நாம் முழுமையாக உபயோகப்படுத்தத் தொடங்குவதே அணுமின் நிலையங்கள் மீதான நம் சார்பை மட்டுப்படுத்தும். நம் நாட்டின் நிலக்கரி வளத்தைப்புறக்கணித்து விட்டு வெளிநாட்டில் இருந்து அணுமின் தொழில்நுட்பங்களை வாங்குவது, கறவை மாட்டை வீட்டில் வைத்துக்கொண்டு கடையில் மோர் வாங்குவது போல.

அருணகிரி.

முந்தைய கட்டுரைஉலோகம்-கடிதம்
அடுத்த கட்டுரைஉலோகம்,கடிதம்