ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம்

மார்ச் பதினொன்றாம் தேதி காலை ஆறுமணிக்கு ஒரு வாடகைக்காரை வரச்சொல்லியிருந்தேன். நண்பர் சுகாவை அழைத்து அவரது நெல்லை நண்பர் குஞ்சரமணியிடம் சொல்லி ஏற்பாடு செய்தேன். ஒரு டாட்டா சுமோ வண்டி. சொன்னபடியே ஆறுமணிக்கு வந்துவிட்டார். எங்கள் முகாம்களில் சரியாக விடிகாலையில் எழுந்து பிறரை எழுப்பிவிடுபவர் கிருஷ்ணன் தான். ஐந்தரை மணிக்கே என்னை எழுப்பினார். அறையில் வெந்நீர் இல்லை. ஏஸியில் தூங்கிவிட்டு காலையில் பச்சைத்தண்ணீரில் குளிப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

காரில் நேராக கிருஷ்ணாபுரம் செல்வதாகத்தான் எண்ணியிருந்தோம். ஆனால் டிரைவர் நவதிருப்பதி தரிசனம் என்று எண்ணிக்கொண்டு வண்டியைக் கொண்டுசென்றார். திருச்செந்தூர் சாலை. முதல் ஊர் ஸ்ரீவைகுண்டம். தாமிரவருணி நதியின் கரையில் உள்ளது. ஸ்ரீவைகுண்டம். அணை அனேகமாக தாமிரபரணியில் உள்ள கடைசி நீர்த்தேக்கம் என்று நினைக்கிறேன். கோடையிலும் நீர் இருந்தது. செழிப்பான பூமி

ஏழரை மணிக்கெல்லாம் அங்கிருந்தோம். ஸ்ரீவைகுண்டம் பெரிய ஊர் .கோபுரம் உயரமானது அல்ல. முகப்பு மண்டபமும் சிற்பங்கள் அற்றது. ஆனால் உள்ளே செல்லும் தோறும் கோயிலின் பிரம்மாண்டம் நம்மை சூழ்ந்துகொள்ளும். கோயிலின் முகப்புக் கோபுரத்தின் விளிம்பில் நுண்ணிய சிறிய கல்சிற்பங்கள் உள்ளன. ராமர் பட்டாபிஷேகத்தோற்றம், அனுமன் சீதையுடன் நிற்கும் ராமர் போன்ற சிலைகள் மிக அழகானவை.

கோபுரத்தில் பலவகையான சுதையாலான காமச்சிற்பங்கள் –கேளிசிற்பங்கள் — உள்ளன. பெருமாள்கோயில்களில் அது வழக்கம். விஷ்ணு கொண்டாட்டத்தின் தெய்வம்–  கோலாஹலன் — என்பதனால். கோபுரங்களில் பல்வேறு தோற்றங்களில் வானரங்களின் சிற்பங்கள் உள்ளன. பக்கவாட்டில் உள்ள சிற்பங்கள் நிறைந்த வசந்த மண்டபம் தென்பாண்டிநாட்டு கோயில்களில் காணப்படும் பொதுவான சிற்பங்கள் கொண்டது. நாயக்கர் காலகட்டத்து சிற்பவெற்றிகளின் ஒரு சான்று இது.

தென்பாண்டிநாட்டுச் சிற்பங்களில் முக்கியமான சில சிற்பங்கள் உண்டு. குறத்தி சிலை அதில் ஒன்று. நெல்லையப்பர் கோயில் மண்டபத்தில் உள்ள குறத்தி குறவன் சிலைகள் மிக அழகானவை. குறத்தி  ஆண்மை கலந்த பெண்மைத்தன்மையுடன் விரிந்த தோள்கள் கொண்டவளாக கையிலும் தோளிலும் குழந்தையும் இடுப்பில் நார்ப்பெட்டியுமாக இருப்பாள். குறத்தியின் முகம் நாணம் போன்ற உணர்வுகளுக்குப்பதிலாக கம்பீரமும் பெரூமிதமும் கலந்த தோற்றத்தில் இருக்கும்.

குறவன் வேலைப்பாடுகள்  நிறைந்த கட்டாரியுடன்  விரைந்து ஓடும் நிலையில் இருப்பான். குறவனின் உடலில் ஆடைகளும் கச்சையும் தோளின் வார்ப்பட்டையும் மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்கும். அவன் உடலின் தசைநார்கள் விலாவெலும்புகள் வயிற்றுச்சதைமடிப்பு போன்றவற்றில் அபாரமான யதார்த்த நேர்த்தி இருக்கும். பொதுவாக சிற்பங்களில் தசைநார்களையும் எலும்புப்புடைப்புகளையும் செதுக்குவதில்லை. நாயக்கர் காலகட்டத்துச் சிற்பங்களில்தான் அவை நுட்பமாக காணப்படுகின்றன. அதேசமயம் அவை யதார்த்தச் சிற்பங்களும் அல்ல. அவை சாமுத்ரிகா லட்சணப்படி அமைந்தவை. உக்கிரமான உணர்ச்சிநிலைகளின் நடனத்தோற்றத்தில் உறைந்தவை. 

 

 

சீவைகுண்டம்

 

மதுரையிலும் பிற பாண்டிநாட்டுக் கோயில்களிலும் வீரபத்ரர் சிலைகள் மிக அற்புதமான உக்கிரநிலைகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. மதுரையில் உள்ள வீரபத்ரர் சிலைகள் புகழ்பெற்றவை. ஆனால் சிற்ப நேர்த்தியில் அவையளவுக்கே முக்கியமானவை தென்பாண்டிநாட்டு வீரபத்ரர்கள். அகோர வீரபத்ரர், உக்கிர வீரபத்ரர், ஊர்த்துவ வீரபத்ரர், அக்னி வீரபத்ரர் போன்ற சிலைகள் உக்கிரமே சிலை வடிவம் கோடவை போல வாளும் வில்லும் ஏந்தி நடன நிலையில் தோற்றமளிக்கின்றன.

ஸ்ரீவைகுண்டம்

 

தென்பாண்டிநாட்டுக் கோயில்களில் உள்ல ரதிமன்மதன் சிற்பங்களும் மோகினி சிற்பங்களும் சிற்ப்பக்கலையின் உச்சகட்டச் சாதனைகள். மன்மதன் எப்போதுமே மீசையுடன் ஆண்மைகொண்டவனாக செதுக்கப்பட்டிருப்பான். கையில் கரும்புவில். இன்னொருகையில் முல்லைமொட்டு அம்பு. ”மீசை இருந்தாலும் அது ஒரு சிருங்கார மீசைதான்” என்றார் கல்பற்றா நாராயணன். மன்மதனுக்கு தேவதைகள் சாமரம் வீசி நிற்கின்றன. நேர் எதிர்ச்சுவரில் ரதி அன்னபப்றவைமேல் அமர்ந்திருப்பாள்.

 

ரதிமன்மதன் சிலைகள் அக்காலத்தில் ஒரு சடங்குமுக்கியத்துவம் கொண்டவை. நடவுக்கு முன் ரதிமன்மத பூஜைசெய்யும் வழக்கம் முன்பு இருந்திருக்கிறது. அது விளைச்சலைபெருக்கும் என்ற எண்ணம்தான். அதேபோல தென்பாண்டிநாட்டுக் கோயில்களில் அர்ஜுனனும் கர்ணனும் சிலைவடிவில் இருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு தாடியும் மீசையும் உண்டு. தாடியின் நுனியில் சிறுமுடிச்சு போடப்பட்டிருக்கும். கர்ணன் அர்ஜுனனை விட அழகாக இருப்பார். மீசை உண்டு. கையில் நாகபாசம் இருக்கும். பல கோயில்களில் அர்ஜுனனும் கர்ணனும் எதிர் எதிராக நிற்பார்கள். திருவட்டாறு, நெல்லை,  ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி கோயில்களில் சிலைகளின் அமைப்பு கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஸ்ரீவைகுண்டம்
 
ஸ்ரீவைகுண்டம் பெருமாளுக்கு சம்ஸ்கிருதத்தில் சோரநாதர் என்று பெயர். தமிழில் கள்ளர்பிரான். இரண்டு நாயகியர் சோரநாயகி மற்றும் வைகுண்ட நாயகி. ஒன்பது பெருமாள்கோயில்களும் ஒன்பது கிரகங்களுக்கு முக்கியத்துவம் உடையவை என்பார்கள். இத்தலத்தின் தேவன் சூரியன். பெருமாளை வணங்கிவிட்டு அருகே உள்ள சிறிய ஓட்டலில் நுழைந்தோம். வீட்டுச்சாப்பாடு. சென்றமுறை அருண்மொழியுடன் வந்தபோதும் இந்த சிறிய ஓடலில் சாப்பிட்டோம். தோசை இட்லி எல்லாமே அபூர்வமான சுவையுடன் இருந்தன

உக்கிரவீரபத்ரர் சீவைகுன்டம்

அங்கிருந்து அடுத்த திருத்தலமாகிய ஆழ்வார் திருநகரிக்குச் சென்றோம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் அவதரித்த தலம் என்று சொல்லப்படுகிறது.நம்மாழ்வாரின் அன்னை குமரிமாவட்டம் திருவெண்பரிசாரத்தைச் சேர்ந்தவர் [திருப்பதிசாரம்] என்றும் ஒரு வரலாறு உண்டு. இங்கே ஒரு புளிமரத்தின் அடியில் நம்மாழ்வார் அமர்ந்திருந்ததாகவும் நெடுங்காலம் தன் குருவை தேடியலைந்த மதுரகவியாழ்வார் அங்கே நம்மாழ்வாரைக் கண்டடைந்து தன் குருவாக ஏற்றுக்கோண்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆழ்வார் திருநகரி பெருமாளின் பெயர் ஆதிநாதர். இரண்டு பிராட்டியர். ஆதிநாதவல்லி திருகுருகூர் வல்லி. இங்கே நம்மாழ்வாருக்கு தனி சன்னிதி இருக்கிறது. நாங்கள் சென்றபோது நம்மாழ்வார் சிலை பல்லக்கில் கொண்டு செல்லபப்டுவதற்காக வெளியே எடுத்துவைக்கபப்ட்டிருந்தது. தமிழகத்தில் இரு கவிஞர்கள் கோயில்கொண்டிருக்கும்  கோயில்கள் உண்டு.  நம்மாழ்வார் இங்கே, ஆண்டால் ஸ்ரீவில்லிபுத்தூரில்.

நம்மாழ்வார் இருந்த புளியமரம் திருப்புளியாழ்வார் என்ற பேரில் ஒரு வளாகத்துக்குள் உள்ளது. மிகத்தொன்மையான மரம். பலவாக பிளந்து பட்டைகளிலிருந்து மீண்டும் முளைத்திருக்கிறது. இது உறங்காப்புளி மரம். இதன் இலைகள் இரவில் ஒன்ற்¡க மூடிக்கொள்ளாது. 

ஆழ்வார் திருநகரி கோயிலிலும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளதுபோன்ற சிறப்பான சிற்பங்கள் உள்ளன. குறவன் குறத்தி வீரபத்ரர் மோகினி ரதிமன்மதன் சிற்பங்கள். நாயக்கர்களுக்கு குதிரைகள்மேல் மோகம் அதிகம். குதிரைகள் அவர்களின் போர்வெற்றிகளுக்குக் காரணம். ஆகவே திமிறிப்பாயும் குதிரைகளும் அவற்றின் மேல் பயணம்செய்யும் வீரனும் பல கோயில்களில் இருக்கிறார்கள். துதிக்கை உள்ள யாளிகள் தூண்கலிலும் மேலுத்தரங்களில் சிங்கமுக யாளிகளும் உள்ளன.

ஆழ்வார்திருநகரியில் இருந்து திருக்கோளூர் சென்றோம். கோடைகாலம். ஆனால் அன்று  மலைகளில் மழைபெய்தமையால் இதமான மழைமூட்டமும் குளிர்காற்றும் இருந்தது. பயணத்தில் அதுவே தனி உற்சாகத்தை அளித்தது. சிற்பங்கள் ஏதுமில்லாத நடுத்தரமான கோயில். ஆற்றங்கரையில் பசுமையான சூழலில் உள்ளது. கோயிலின் முக்கியமான கவற்சியே மையக்கருவறை நிறைத்துப் படுத்திருக்கும் பெரிய பள்ளிகொண்ட பெருமாள்தான். வைத்தமாநிதிப் பெருமாள் என்று பிரானுக்குப் பெயர்.

கோயிலில் கத்ரி கோபால்நாத்தின் இசை ஒலித்துக்கோண்டே இருந்தது. வேறுயாருமே இல்லை. சுற்றிவந்தபோது யுவன் அது ஆபேரி என்று சொல்லி பிற ஆபேரி ராகத்துப் பாடல்களைப் பாடிக்காட்டினான்.

அங்கிருந்து தென்திருப்பேரை சென்றோம். தாமிரவருணியின்கரையில் அருகருகே இத்தனை கோயில்கள் இருப்பது அங்கே ஒருகாலத்தில் செழித்திருந்த வேளாண்மைக்கும் பண்பாட்டுக்கும் ஆதாரம். தெந்திருப்பேரை பெருமாளின் பெயர் மிக அழகானது. மகர நெடுங்குழைகாதன். குழைககாதுவல்லி என்பது தாயாரின் பெயர். சிற்பங்கள் இல்லாத நடுத்தரமான அழகிய கோயில் இது.

அங்கிருந்து கிருஷ்ணாபுரம் போகலாமென்று தீர்மானித்தோம். நாங்கள்செல்லும்போது நடைசாத்த தயாராக இருந்தார் பூசாரி. ஓடிப்போய் வெங்கடாசலபதிப் பெருமாளை வணங்கிவிட்டு திரும்பவந்து சிற்பங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். தென்பாண்டியநாட்டு நாயக்கர் காலச் சிற்பங்களின் உச்ச கட்டச் சாதனை என்றால் அது கிருஷ்ணாபுரம்தான் என்பது கலைவிமரிசகர்களின் ஒருமித்த எண்ணம்.

கருங்கல்லில் செதுக்கபப்ட்ட சிற்பங்களில் தமிழ்நாட்டிலேயே ஈடிணையற்ற சிற்பங்கள் இங்கே உள்ளவையே. கல்லை கிட்டத்தட்ட உலோகத்தின் வழவழப்புக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். டிவிஎஸ் காரர்களோ அரசோ திருப்பணி என்று மணல்வீச்சுமுறை செய்யும் காலம்வரை  அனேகமாக இன்னும் சில ஆண்டுகள் இச்சிற்பங்கள் இருக்கும். அதன்பின் பிற சிற்பச்செல்வங்கள் போல இவையும் அழிந்துவிடும்.

கிருஷ்ணாபுரம் வீரபத்ரர்

 

புகைப்படத்திலோ சொற்களிலோ அச்சிற்பங்களை விவரிப்பது பொருத்தமற்றத்து. கிருஷ்ணாபுரம் சிற்பங்களில் நாயக்கர் காலகட்டத்து தென்பாண்டிநாட்டுக் கோயில்களில் உள்ள வழக்கமான சிற்பங்கள் அவற்றின் முழுமையை அடைந்த நிலையில் உள்ளன. குறவன் குறத்தி வீரபத்ரன் அர்ஜுனன் கர்ணன் மோகினி சிலைகள்.. பீமனின் சிலை மிக அபூர்வமாகவே கோயில்களில் இருக்கும். இங்கு புருஷமிருகத்துடன் போரிடும் பீமனின்  ஆறடி உயரமான சிலை உள்ளது.

கிருஷ்ணாபுரம் சிற்பங்களில் மிகச்சிறப்பானவை  ராஜகுமாரியைத் தூக்கிச்செல்லும் குறவனும் ராஜகுமாரனை தூக்கிச்செல்லும் குறத்தியும் . இச்சிலைகளின் பொருளென்ன என்பது பற்றி ஆய்வாளர்களிடையே தொடர் விவாதம் உள்ளது. நெல்லை, குமரிமாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் எல்லாமே இச்சிலை காணபப்டுகிறது. கிருஷ்ணாபுரத்தில் அச்சிலைகளின் மிகச்சிறந்த வடிவை நாம் காணலாம்.

தூக்கிச்செல்லபப்டும் இருவருமே மகிழ்ச்சியுடன் செல்வதுபோல உள்ளது. ராஜகுமாரி குறவனின் தோளில் அமர்ந்து வெயிலுக்கு புடவையால் முக்காடுபோடிருக்கிறாள். கல்லிலேயே மிக நுணுக்கமாக அந்தபுடவையை குடைபோல செய்திருக்கிறார்கள். குறவன் கம்பீரமாகவும் மெலிந்த வலுவான உடல் கொண்டவனாகவும் இருக்கிறான். கையில் சிற்ப நுட்பங்கள் கொண்ட குத்துவாள் அவன் வெறும் மலைமகன் அல்ல அவன் ஒரு மன்னன் என்பதைக் காட்டுகிறது

அதேபோல குறத்தி திரண்ட தோள்களும் நிமிர்ந்த உடலும் கோண்டவளாக அச்சமில்லாத தோற்றத்துடன் இருக்கிறாள். அவள் தோளில் உள்ள ராஜகுமாரன் மீசையுடன் கம்பீரமாகவே இருக்கிறான்.

இந்த தொன்மங்கள் வழக்கொழிந்துவிட்டன. கவிமணி தேசிகவினாயகம்பிள்ளையின் ஊகத்தின்படி இப்பகுதிகளை முற்காலத்தில் குறவ மன்னர்கள் ஆண்டுவந்தார்கள். அவர்களுக்குரிய கோயில்கள் இவை. பிற்காலத்தில் இவை பாண்டியர்களால் கையகப்படுத்தப்பட்டபோது  குறவர்களுக்கு கோயிலில் சில உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கலாம். இச்சிலைகள் அந்த அவ்வழக்கத்தின் விளைவாக உருவானவை.

குறவனும் ராஜகுமாரியும்

கிருஷ்ணாபுரம் மோகினி பலகோணங்களில் பார்த்துப் பார்த்து வியக்க வேண்டிய ஓர் அற்புதமான சிலை. அவள் உடலின் குழைவும் எங்கும் நிறைந்திருக்கும் பரிபூரணமான பெண்மையும் நளினமும் வெட்கமும் மிக அழகானவை. ஆனால் ஆண்மைகலந்த கம்பீரம் கொண்ட குறத்தி முன் அவள் சற்று ஒளிமங்குவதாகவும் தோன்றுகிறது.

கிருஷ்ணாபுரம்

 

கிருஷ்ணாபுரம் அரியநாதமுதலியாரால் கட்டப்பட்டது. அரியநாதமுதலியார் வேலூர் அருகே பிரந்தவர். பிழைப்பு தேடி அவர் அன்றைய விஜயநகரத்துக்குச் சென்றார். அங்கே சாதாரண சிப்பாயாகச் சேர்ந்து படிப்படியாக முன்னேறி படைத்தலைவர் ஆனார். மதுரையை பிடிக்க விஸ்வநாத நாயக்கர் வந்தபோது கூடவந்த அமைச்சர் அரியநாதரே. மதுரைக்கு விஸ்வநாத நாயக்கர்  மன்னராக அபிஷேகம்செய்யப்பட்டபோது அரியநாதர் முதலமைச்சராக ஆனார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் அமைப்பில் 72 பாளையப்பட்டுகளை பிரித்து நாயகக்ர்களின் அரசை கட்டமைத்தவர் அவரே. ஒருகாலத்தில் பெரிய ஊராக இருந்த கிருஷ்ணாபுரம் படிபப்டியாக தேய்ந்து இன்று சிற்றூராக உள்ளது.

 

அகோரவீரபத்ரர்

பன்னிரண்டரை மணிக்கு அர்ச்சகர் நடைசாத்தவேண்டும் என்றார். சிற்பங்களை போதிய அளவில் பார்த்து முடிக்கவில்லை என்றாலும் அங்கிருந்து கிளம்பினோம்.

 

 

புகைப்படங்களுக்கு நன்றி

 http://farm1.static.flickr.com/206/465961895_ec754e713a_b.jpg
 

http://www.edreamsinetcafe.in/tirunelveli/krishnapuram%20gallery.htm

http://www.google.co.in/imgres?imgurl=http://www.dinamalar.com/koil_english/photos/Krishnapuram-d.jpg&imgrefurl=http://www.dinamalar.com/koil_english/68_venkatachalapathi_krishnapuram.asp&usg=__BwzaWE4q_xgSzMb6Wc2yocVTh4E=&h=253&w=190&sz=7&hl=en&start=19&sig2=u1wQgRgaKCmlrII1pJP82w&tbnid=nT9qOMHwlLGjRM:&tbnh=111&tbnw=83&ei=yE-9SaTKNoPakAWWmd2UCA&prev=/images%3Fq%3Dkrishnapuram%26hl%3Den%26sa%3DG

http://www.lovenellai.com/Tirunelveli/Krishnapuram.aspx

http://thoothukudi.nic.in/upinfo/tourism/navathirupathi.html
http://www.flickr.com/photos/sowri/1136957228/

 

http://www.ohmtv.in/srivaikundam01.html

முந்தைய கட்டுரைஇணையத்தில் எழுத…
அடுத்த கட்டுரைநூல்கள்:கடிதங்கள்