அன்பின் ஜெ,
நலம்தானே. அண்மையில் ம பொ சி அவர்கள் எழுதிய தமிழகத்தில் பிற மொழியினர் என்ற ஒரு சரளமான நடையில் அமைந்த நிதானமான தொனியில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை வாசித்தேன்.அதில் அவர் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களான டி.எம். நாயர், பனகல் அரசர், பி டி தியாகராயர் ஆகியோர் மீது வைக்கும் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு, அவர்களின் சொந்த மாநிலங்களில் திராவிடர் என்ற கருத்தாக்கத்தைப் பரப்ப அவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதும், திராவிடர் என்ற கருத்தாக்கம் ஆந்திர கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஒருபோதும் எடுபடவில்லை என்பதும். அந்தக் கருத்தாக்கமே தமிழகத்தில் பிற மொழியினரின் ஆதிக்கத்தை மறைப்பதற்கான ஒரு திரை என்றும் வாதிடுகிறார். நீதிக் கட்சி மற்றும் திராவிடர் என்ற கருத்தாக்கம் என்பவை கேரளத்தில் எப்படிப் பார்க்கப்பட்டது? மேலும் டி எம் நாயர் அவர்களின் செயல்பாடுகள் கேரளத்தில் கவனிக்கப்பட்டதா ? அங்கே அவருக்கான அவரது முயற்சிகளுக்கான எதிர்வினை என்ன ? நீதிக்கட்சி மற்றும் திராவிடர்கழகம் கேரளத்தில் உண்டாக்கிய பாதிப்புகள் என்ன?
அன்புடன்
வே. சுரேஷ் கோவை.
அன்புள்ள சுரேஷ்
ஆர்வமூட்டும் ஒரு வினாதான் இது. டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றவர்கள் கேரளத்திலும் ஆந்திரத்திலும் திராவிட இனவாதக் கொள்கையைக் கொண்டு செல்லவில்லை என்பது உண்மை. அதற்கான காரணம் இங்கிருந்த தெலுங்கர் மலையாளி நலன்களைப் பாதுகாப்பதே என்ற மபொசியின் வாதம் வெறும் ஐயம். வரலாற்றுப் பின்புலம் அற்றது. இவை பேசப்பட்ட காலகட்டத்தில் சென்னை மாகாணம் என்பது மலபாரையும் கடலோர ஆந்திராவையும் உள்ளடக்கியதாக இருந்தது. தமிழ்நிலம் என்ற கருதுகோள் இருக்கவில்லை. நாயரும் பனகல் அரசரும் தங்கள் நிலத்து மக்களைக் கருத்தில் கொண்டே பேசினார்கள்.இங்கே ஊடுருவுவதைப்பற்றி அல்ல.
திராவிட இனவாத சித்தாந்தம் என்பது பல்வேறு மொழி,சாதிபேதங்கள் கொண்ட பிராமணரல்லாதார் அனைவரும் பிராமணர்களுக்கு எதிராக ஒருங்கிணைவதற்கான ஒரு பொது அடையாளமாகவே முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தில் பிரிட்டிஷ் அரசு ஊழியத்தில் பிராமணர் வகித்த முன்னிலைப்பங்குக்கு எதிராகத் தங்களுடைய பங்கைக் கோரி எழுந்த இயக்கம்தான் அது. பின்னர் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு அரசியலுரிமைகள் அளிக்க ஆரம்பித்தபோது அரசியல் சார்ந்து விரிந்தது.
ஆரம்பத்தில் அதற்கு பிராமணரல்லாதார் என்ற அடையாளமே முன்வைக்கப்பட்டது. அதை விட திராவிட இன அடையாளம் அழுத்தமானது என்பதைக் கண்டுகொண்டதும் அந்த அடையாளத்துக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. இவ்வாறுதான் திராவிட அரசியல் உருவாகி வந்தது.
இந்தப் பிரச்சினை ஆந்திரத்திலும் கேரளத்திலும் வேறு வகையில் இருந்தது. கேரளத்தில் பிராமண ஆதிக்கம் இருவகையில் இருந்தது. நிலப்பிரபுக்களான நம்பூதிரிகளின் ஆதிக்கம், அரசுப்பணிகளை ஆக்ரமித்திருந்த தெலுங்கு பிராமணர், தமிழ் பிராமணர்களின் ஆதிக்கம். நம்பூதிரிகளின் நில ஆதிக்கத்தை இரண்டாம்நிலைச் சாதியினரான நாயர்கள் எளிதில் கைப்பற்றினார்கள். ஆனால் ‘பரதேச பிராமணர்கள்’ என நாயர்கள் சொன்ன ஐயர்கள்,ராவ்களின் அரசூழிய மேலாதிக்கத்தை வெல்லமுடியவில்லை. மலபாரிலும் திருவிதாங்கூரிலும் அவர்களுக்கு எதிராக உருவான இயக்கமே சென்னையில் பிராமணரல்லாதார் இயக்கமாக டி.எம்.நாயரால் கொண்டுசெல்லப்பட்டது.
கேரளத்தில் இந்த இயக்கத்துக்கு இனவாதம் தேவைப்படவில்லை. ராவும் அய்யரும் மலையாளிகள் அல்ல, அன்னியர்கள் என்பதே போதுமானதாக இருந்தது. அதாவது இன அடையாளத்துக்குப் பதில் மொழி அடையாளம்.‘பரதேச பிராமணர்’ என்ற சொல்லை அக்காலங்களில் எல்லா நாயர் தலைவர்களும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். அது பொது எதிரியாக அந்த சிறுபான்மை பிராமணரை ஆக்கி அவர்களை எளிதில் அதிகாரச்சூழலில் இருந்து விலக்கியது. ஆகவே அங்கே திராவிட இனவாதம் தேவைப்படவில்லை.
மேலும் அதிகாரத்தைப்பெற்றதுமே நாயர்கள் மேலும் மேலும் தங்களை சம்ஸ்கிருதமயமாக்கவும், ஆரிய அடையாளம் நோக்கிச் செல்லவுமே முயன்றார்கள். மலையாளம் முக்கால்வாசி சம்ஸ்கிருதமாக ஆன காலம் இது. தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்வதே நாயர்களுக்குப் பிடித்தமானதாக இருந்தது. இன்றும் கேரளத்தில் நடைமுறையில் அதிகாரம் நாயர்களிடம் இருந்து போகவில்லை. அதை ஈழவர்களிடம் பகிர்ந்துகொள்ள நாயர்கள் முன்வந்ததுமே பிரச்சினை முடிந்துவிட்டது.
இதே நிலைதான் ஆந்திரத்திலும். விஜயநகர ஆட்சியில் நியோகி பிராமணர் நிர்வாக அதிகாரத்தில் இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களுக்கு ஒரு சின்ன மேலாதிக்கம் வந்தது. ஆனால் மிக எளிதில் அதை அங்கே ரெட்டிகள் உடைத்தார்கள். எண்ணிக்கை பலத்தாலும் செல்வ பலத்தாலும். சென்னையில் மட்டுமே அவர்களுக்கு இங்கிருந்த பிராமணர்களிடம் ஒரு போட்டி இருந்தது. அதை வெல்லவே பிராமணரல்லாதார் இயக்கத்தில் ஆர்வம் காட்டினார்கள். ஆந்திராவில் இன்றும் ரெட்டி ஆதிக்கம் தான். அதன்பின் எதற்கு திராவிட வாதம்?
பிராமணரல்லாத உயர்சாதியினரான நாயர்களும் ரெட்டிகளும் ஜனநாயக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமளவுக்கு எண்ணிக்கை பலமும் கொண்டவர்கள் என்பதை கவனிக்கவேண்டும்.தமிழ்நாட்டில் அப்படி அல்ல நிலைமை. பிராமணரல்லாத உயர்சாதியினர் எண்ணிக்கைபலமற்றவர்கள். ஆகவே உருவாகி வந்த பிற்படுத்தப்பட்டவர்களை தங்கள் அணியில் நிறுத்தவேண்டியிருந்தது. அதற்கு திராவிட இனவாதம் போல ஒரு பொது அடையாளம் தேவைப்பட்டது. ஆகவே அது முன்னெடுக்கப்பட்டது.
மேலும் திராவிட இனவாதம் தமிழகத்தில் உருவான ஒன்று. எல்லிஸ், கால்டுவெல் துரைகளால் முன்வைக்கப்பட்டு மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, ஞானியார் அடிகள் போன்ற உயர்சாதிச் சைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. அதற்கு அன்று தமிழ்நாட்டு அதிகார அரசியலில் ஒரு தேவை இருந்தது. பின்னர் பிற்படுத்தப்பட்டோர் அரசியலில் பிராமணரல்லா உயர்சாதியினர் ஆதிக்கம் மூழ்கியபோது அதுவும் மூழ்கியது. அவ்வளவுதான்
ஜெ