ஓர் ஓவியம் ஒரு போர்

அன்புள்ள ஜெ.

இதை நீங்கள் பார்த்தீர்களா ? உங்கள் ‘ஏரியா’ ஆரல்வாய்மொழியில் நடந்த
போரைப் பற்றிய சுவர்சித்திரமாம்…

http://www.thehindu.com/arts/history-and-culture/article2440107.ece

மது


[பத்மநாபபுரம் அரண்மனை]

அன்புள்ள மது

ஆய்வாளர் பாலுசாமி சொல்லும் சித்திரம் சரியாக இருக்கலாம். ஆனால் சில சின்ன சிக்கல்கள் இருக்கின்றன.

சோழர் ஆட்சி 1200களின் இறுதியில் திருவிதாங்கூர் மண்ணை விட்டு நீங்கிய பின்னர் இங்கே  என்ன நடந்தது என்பதற்கான முறையான வரலாறு இன்னும் எழுதப்படவில்லை.கேரள அரச ஆவணங்களான மதிலகம் சுவடிகளைக்கொண்டு திருவிதாங்கூர் அரசின் திவானாக இருந்த பி.சங்குண்ணிமேனன் எழுதிய திருவிதாங்கூர் சரித்திரம் தகவல் அடிப்படையில் நம்பகமான நூல் எனப்படுகிறது.

இந்த நூலில் ஆரம்ப கால திருவிதாங்கூர் [அல்லது வேணாடு அல்லது கூபகநாடு] வரலாறு தெளிவற்றதாகவே உள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சி முடிந்து பாண்டியர்களின் ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில்தான் இன்றைய திருவிதாங்கூர் அரச வம்சம் உருவாகி வந்தது. இது இங்கே இருந்த பல அரச வம்ச குடும்பங்களில் ஒன்று. திருப்பாம்பரம் சொரூபம் என்ற பேரில் கல்குளம் என்ற கிராமத்தில் இருந்தார்கள். பத்மநாப புரத்துக்குத் தங்கள் தலைமையிடத்தை மாற்றிக்கொண்டு இந்நிலப்பகுதிமீது அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள். தங்களை வஞ்சியை ஆண்ட சேரன் செங்குட்டுவனின் குருதிவழியினர் என சொல்லிக்கொண்டார்கள். வஞ்சீசபால என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டார்கள். இங்கே இருந்த பிற அரசகுலங்களைப் போரில் வென்றோ அல்லது திருமணம் மூலமோ எதிர்ப்பில்லாமலாக்கிக்கொண்டார்கள்.

ஆனால் சோழர்காலம் முதலே நில அதிகாரமும் கோயிலதிகாரமும் கொண்டிருந்த பிரபுக்கள் பலர் இங்கிருந்தனர். அவர்களே எட்டுவீட்டுப் பிள்ளைமார் என்று சொல்லப்படுபவர்கள். அவர்களுக்கும் இந்தத் திருவிதாங்கூர் அரச குலத்துக்கும் நிரந்தரமான அதிகாரக் கலகம் இருந்து வந்தது. ஆரம்பத்தில் சோழர்காலப் பின்னணி கொண்ட நிலப்பிரபுக்களால் பொதுவாகத் தேர்வுசெய்யப்படும் தலைவராகவே மன்னர் இருந்தார். 1732ல் பதவிக்கு வந்த மார்த்தாண்ட வர்மா இந்த பிரபுக்களை வேருடன் அழித்தார்

ஆரம்பகால வேணாட்டின் வரலாறு சிக்கலானது. முதலில் பாண்டியர்களுக்குக் கப்பம் கட்டினர். மதுரையை சுல்தான்கள் பிடித்தபோது தோற்று எங்கிருந்தார்கள் எனத் தெரியாமல் இருந்தார்கள். மதுரை நாயக்கராட்சிக்குப் போனபோது அவர்களிடம் கப்பம் கொடுப்பவர்களாகத் திரும்பி வந்தார்கள். நாயக்கர் ஆட்சி பலவீனமாக ஆன காலகட்டங்களில் தனியதிகாரம் தேடிக்கொண்டார்கள். உள்ளூரில் எட்டு வீட்டுப் பிள்ளைமாரிடம் அதிகாரப்போட்டி. கொல்லம் காயங்குளம் மன்னர்களுடன் நிலப்போர். இதுவே இவர்களின் வரலாறு. பெரும்பாலும் பெயர்களே கிடைக்கின்றன

சங்குண்ணி மேனனின் நூலின்படி கிபி 1528ல் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூருக்கு மன்னரானார். ஒன்பது வருடம் மட்டுமே ஆண்டார். இவருக்குப்பின் 1537ல் இவரது மருமகன் உதயமார்த்தாண்ட வர்மா பதவிக்கு வந்தார்.  மார்த்தாண்ட வர்மா காலகட்டத்தில் கொல்லம் ஜெயத்துங்க அரசின் கீழிருந்த தென்காசி களக்காடு சேர்மாதேவி பகுதிகளை இவர் கைப்பற்றிக்கொண்டார். களக்காடு கோயிலுக்கு சில கொடைகள் செய்திருக்கிறார். இவருக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் சில பூசல்கள் நிகழ்ந்தன.

பாலுசாமி சொல்வதைப்போல 1532ல் உதயமார்த்தாண்ட வர்மா  எப்படி அச்சுதப்ப நாயக்கரிடம் போரிட்டிருக்க முடியும் எனத் தெரியவில்லை. அது அவரது மாமா மார்த்தாண்டவர்மாவாக இருக்கலாம்.  மதுரை ஆவணங்களில் எப்போதுமே பெயர்கள் மாறி மாறித்தான் இருக்கின்றன. திருமலை நாயக்கர் காலம் வரை மதுரை நாயக்கர்களின் தென்னகச் செல்வாக்கு வலுவானதாக இருக்கவில்லை. திருவிதாங்கூர் மன்னர்கள் கொஞ்சம் சுதந்திர முயற்சிகளைச் செய்திருக்கலாம்.

 

ஜெ

 

 

 

முந்தைய கட்டுரைபாரதி உரிமை
அடுத்த கட்டுரைஉப்பும் காந்தியும்