பாரதி உரிமை

அன்புள்ள ஜெமோவுக்கு

சமீபத்தில் ஒரு இணைய இதழில் பாரதியைப் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன். அதற்கான சுட்டி

பாரதியும் ஏவிஎம்மும் — சில உண்மைகள் பகுதி 1

இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?

அதே இதழில் ஏற்கனவே நீங்கள் பாராட்டியுள்ள பாலாசி என்பவரின் கதை ஒன்று வந்துள்ளது. அதற்கான சுட்டி வதம்

உங்கள்  கருத்துகளை எதிர்பார்த்து

சாரா

அன்புள்ள சாரா

இந்தக் கட்டுரையை திரு ஹரிகிருஷ்ணன் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் முன்னர் ’ஓடிப்போனானா பாரதி’ என்ற நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறார். பாரதியைப்பற்றி உள்நோக்குடன் பரப்பப்படும் அவதூறுகளுக்கான வலுவான பதில் அந்தக்கட்டுரைத்தொடர். நூலாகவும் வெளிவந்தது.

பாரதி பாடல்கள் ஏ.வி.எம் பாதுகாக்காவிட்டால் அழிந்திருக்கும் என்ற கூற்று அறியாமை அல்லது அலட்சியத்தின் விளைவு மட்டுமே. பாரதி பாடல்கள் அவரது காலத்திலேயே தமிழின் வேறெந்த இலக்கியத்தை விடவும் பிரபலமாகவே இருந்தன. சுதந்திரப்போராட்ட காலத்தில் சத்தியமூர்த்தியால் தமிழகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டபின்னர் அவை ஒரு மக்களியக்கமாகவே ஆயின.

ஆனால் அவை உரியமுறையில் பதிப்பிக்கப்படவில்லை. அதற்கு அனுபவமும் வணிகத்திறனும் கொண்ட பதிப்பாளர் அமையாததே காரணம். பாரதி பாடல்களின் உரிமையைக் கையில் வைத்திருந்தவர்களின் முதிரா முயற்சிகளாகவே அவை அமைந்தன. ஆனால் எந்த ஒரு தருணத்திலும் அவை ஒரு பெரும் மக்களியக்கம் அல்ல என்ற நிலை இருந்ததே இல்லை. இன்றும் தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்கும் நூல் பாரதி கவிதைகளே.

பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்து கேளிக்கையாகப் பயன்படுத்துவதற்கு உள்ள உரிமையை மட்டும் ஏ.வி.எம் விலைகொடுத்து வாங்கினார். ஆனால் பாரதி பாடல்களை நூலாக அச்சிடுவது, இதழ்களில் வெளியிடுவது அனைத்தையுமே அவர் கட்டுப்படுத்தினார். அவற்றுக்குக் கட்டணம் வாங்கினார், இதுதான் உண்மை.

ஏனென்றால் அன்று பதிப்புரிமைச் சட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. பாரதி பாடல்களின் சட்டபூர்வ உரிமை எவரிடம் உள்ளது எனக் கண்டுபிடிப்பதே கடினம் .  யாராவது ஒருவர் ஏதேனும் ஒரு உரிமையை வைத்திருந்தால் அவரே சட்டபூர்வ உரிமையாளர். அவரை நீதிமன்றத்தில் சந்திக்கும் அளவுக்கு வேறு எவரிடமும் எந்த ஆவணமும் இருக்காது.இதுவே ஏவிஎம் செட்டியாரால் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.

இது இன்றுகூடப் பெரும்பாலான எழுத்தாளர்களின் நூல்களின் நிலைமை. ப.சிங்காரம் படைப்புகளின் பதிப்புரிமை எவரிடம்? யாரிடமும் இல்லை.  ஆவணங்களே இல்லை. யாராவது ப.சிங்காரம் கொடுத்த ஏதேனும் ஒரு அனுமதிச் சீட்டை வைத்திருந்தால் அவர் தனதெனச் சொல்லிக்கொள்ளலாம்.

பின்னர் பாரதி பாடல்களின் உரிமை பெரிய விவாதமாக ஆகியது. அந்த உரிமையை மீட்கும் விஷயத்த்தில் அன்றைய பெரும் அரசியல் சக்தியான ராஜாஜி தலையிட்டார். ஆகவே ஏ.வி.எம் செட்டியார் உரிமையை விட்டுக்கொடுத்தார். ஏ.வி.எம் எந்த பாரதி பாடலையும் சேமிக்கவோ பாதுகாக்கவோ இல்லை. சேமித்து வைத்திருந்ததைப் பிறர் வெளியிடுவதற்கு கட்டணம் மட்டுமே வசூலித்தார்கள்

ஏவிஎம் திரைக்கதைகள் போல அவர்களின் சொந்த ஆவணங்களைக்கூட அவர்கள் பாதுகாக்கவில்லை. இன்று ஏவிஎம்மின் எந்தத் தகவலையும் அவர்களிடமிருந்து பெற முடியாது என்பதே உண்மை. அவர்கள் பாரதி பாடல்களைப் பாதுகாத்தார்கள் அல்லது பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார்கள் இரண்டுமே இன்று உருவாக்கப்படும் பொய்வரலாறு.

நன்றாகவே கட்டுரை எழுதப்பட்டுள்ளது

 

ஜெ

முந்தைய கட்டுரைதமிழில் சிறுகதை எழுத ஆங்கில அறிவு அவசியமா?-கடிதம்
அடுத்த கட்டுரைஓர் ஓவியம் ஒரு போர்