திருமந்திரத்திற்கு 1991ல்தான் ஆங்கில மொழியாக்கம் கிடைத்தது என்று பின்வரும் இணைப்பு சொல்கிறது. உண்மையாகவா?
பதஞ்சலி தெரிந்த அளவுக்கு நமக்கு திருமூலர் தெரியாது. (ஒன்றே தேவன்…மரத்தில் மறைந்தது..போன்ற சில தவிர). ஏன்? தமிழ் ஞான மரபில் திருமந்திரத்தின் பங்கு என்ன?
எனக்கு இவரது குரலும் மொழியும் பிடித்திருக்கிறது :).
நேரம் வாய்த்தால் பார்க்கவும்.
நன்றி
வெங்கட் சி
அன்புள்ள வெங்கட்,
திருமந்திரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டது. ஜெ.எம்.நல்லுச்சாமிப்பிள்ளையால். அவர் சிறந்த திருமந்திர விளக்கச் சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறார். முழுமையான மொழியாக்கம் வந்தது பின்னால்தான்
ஆனால் திருமந்திரம் தமிழிலேயே சரியாக புரிந்துகொள்ளப்படாத நூல். அதன் இரண்டாம் இருநூறுகளில் பெரும்பாலான பாடல்களை சரிவர பொருள்கொள்ளமுடியவில்லை. மனம்போனபடி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காரணம் அது பல்வேறு மறைஞானச் சடங்குகள் மற்றும் குறியீடுகளைக் குறிப்பிடுகிறது. அவற்றை பற்றிய முறையான ஞானத்தொடர்ச்சி இங்கே இருக்கவில்லை. அவை சைவ தாந்திரீக மதத்தை சேர்ந்தவை, அந்த மதங்கள் பதினெட்டாம் நூற்றாண்டுக்குள் மெல்ல மெல்ல அழிந்து சிதைந்து பெருமரபுக்குள் கலந்தன. ஆகவே அவற்றின் சடங்குகளும் குறியீடுகளும் என்ன என்றே பெரும்பாலும் தெரியாது.
பதஞ்சலி முன்வைத்த மரபு செயல்தளத்தில் அழியாமல் அறுபடாமல் நீடித்தது. காரணம் அது எல்லா யோகமரபுகளுக்கும் பொதுவான நூல். ரகசியத்தன்மை அற்றது. திருமந்திரம் சைவ தாந்திரீக மதத்தைச் சார்ந்தது. சைவ பக்தி மரபால் கண்காணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது சைவ தாந்த்ரீக மதம். ஆகவே நெடுங்காலம் அது ரகசியமாகவே செயல்பட நேர்ந்தது. திருமந்திரத்தை சைவப்பெருமரபு ஏற்றுக்கொண்டு தனக்குரிய விளக்கம் கொடுக்க ஆரம்பித்தது பின்னால்தான். இன்றும்கூட திருமந்திரத்தை விலக்கும் சைவர்கள் உண்டு
ஜெ