ராஜஸ்தானி ‘சங்’கில் நுழைகையில் மணி 8:20. வாசலிலேயே வாசகர் இருவருடன் நீங்கள் விழாவின் வளர்ச்சி பயணத்தை பற்றி தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தீர்கள். முதல் மூன்று வருடங்கள் சற்றே சிறிய அளவில் நடந்தது, 2016ல் புதிய வாசகர் சந்திப்புகள் எப்படி விஷ்ணுபுரம் அமைப்பிற்கே ஒரு புது ரத்தம் பாய்ச்சியது, 2017க்குப் பின் விழா தொடர்ந்து பெரிய அளவில் வளர்ந்தது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கையில்தான் உள்ளே நுழைந்தேன். ஒரு நொடி நிறுத்திவிட்டு ஆரத்தழுவிக் கொண்டீர்கள். பின்னர் ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்த சின்ன பெரிய மாற்றங்கள் என்று உரையாடல் தொடர்ந்தது.
உங்கள் ஸ்பரிசத்தினாலே சட்டென்று எனக்குள் ஒரு இலகுத்தன்மை உண்டானதை இனங்கண்டுகொள்ள முடிந்தது. இதன் தொடர்ச்சியாகவே அன்றைய நிகழ்வினிடையே நடந்த காலை தேநீர் உரையாடலை உணர்ந்தேன். கிருஷ்ணன் சார் ஒரு கேள்வி எழுப்பினார் -“வாசகன் மட்டுமே முக்கியமல்ல என்று சொல்பவர்கள் எதற்காக இவ்வாறு அவனை கட்டிக் கொள்ள வேண்டும்” என்று.
இது என்னை ஒரு வாரமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற கேள்வி. இன்று யோசிக்கையில் விஷ்ணுபுரம் கூடுகைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து அறிவியக்கத்தை மையப்படுத்தி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். அந்தச் சூழலே நாம் தனித்துவமானவனாக, சற்றேனும் சராசரிக்கு மேம்பட்டவனாக, சிறிய அளவிலேனும் சாதனையாளனாக இருப்பதை மறைமுகமாகவேனும் கட்டாயப்படுத்துகிறது. இந்த அழுத்தம் நம்மை நிச்சயம் அவ்வப்போது அவஸ்தைக்குள்ளாக்குகிறது. ஆனால் அது அவ்வாறு தான் நிகழ முடியும். எளிமையாக சொன்னால் ‘தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும்’ கணக்குதான்.
ஆனால் ஒரு வருடத்தின் பெரும் பகுதியை சராசரித்தனத்திற்கு மத்தியில் கழிக்கும் பெரும்பாலானவர்களுக்கு இது கொடுக்கும் அழுத்தம் சாமானியமானதல்ல. இந்தச் சூழலில் தான் தங்களின் அந்த அரவணைப்பு ஒரு பெரும் ஆசுவாசத்தை வாசகனுக்கு அளிக்கிறது. (அகம் புறம் கட்டுரையில் வண்ணதாசன் ‘ஏன் ஆண்களுக்கிடையே மட்டும் அந்த கண்ணுக்குத் தெரியாத திரை விழுந்து விடுகிறது’ என்று விசன பட்டிருப்பார்). “ஆம் நமக்கும் இங்கே ஓரிடம் உண்டு” என்ற நம்பிக்கையை அவன் அடையும் இடம் அது.
பின்னர் எழுத்தாளர்களுடனான உரையாடல்கள். நான் பார்த்தவரை பத்மநாபன் சார், சக்திவேல், சரவணகுமார் (ஈரோடு சிறுகதை முகாமில் அறிமுகமானவர்; ‘சொற்சுவை’ குழுமத்தில் தொடர்ந்து வாசிப்பவர்) போன்றவர்கள் சின்சியராக வாசித்து விட்டு (ஜனரஞ்சகமாகச் சொன்னால் ‘நிறைய ஹோம்வொர்க் செய்துவிட்டு’) அனைத்து உரையாடல்களையும் உயிருள்ளதாக்கினார்கள்.
லாவண்யா சுந்தர்ராஜன் எவ்வாறு தான் குடும்பம் என்ற கயிறின் ஒரு நுனியில் கட்டப்பட்டு உள்ளேன் என்பதையும் அது அளிக்கும் சுதந்திரத்தையும் அதை அவசியமில்லாமல் மூர்க்கமாக மீறினால் அதன் பின் விளைவுகளையும் தான் உணர்ந்தே இருப்பதை குறிப்பிட்டார். அசட்டுத்தனமான பெண்ணியக் கருத்துக்களுக்கு மட்டுமே பழகிய பொது வாசகனுக்கு அவரின் இந்த தெளிவு நிச்சயம் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும். குழந்தையின்மையும் அது சார்ந்த அழுத்தங்களும் பெருகியிருக்கும் இச்சூழலில் இவரது நாவலை (காயாம்பூ) படிப்பதற்காக குறித்துக் கொண்டேன்.
தமிழ் பிரபா அவர்களுடனான உரையாடலின் தொடக்கத்திலேயே கிருஷ்ணன் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தார். “தமிழ் பிரபா அவர்களின் அறிமுகத்தை வாசகர்கள் தமிழ் விக்கி தளத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம். உரையாடலுக்கு செல்வோம். என்னிடம் தமிழ் பிரபாவின் படைப்புகள் குறித்து ஐந்து கேள்விகள் இருக்கின்றன. அவை அனைத்தும் செலவாகவில்லை என்றால் இந்த அரங்கு நிச்சயம் வெற்றி” என்று குறிப்பிட்டார். முன்னர் நடந்த உரையாடல் நிகழ்வுகளில் நேர்காணலை தொடங்கியவர்கள், தமிழ் விக்கி தளத்தில் உள்ள அறிமுகத்தை மட்டுமே சொல்லி தொடங்கியதைக்கண்டு சற்றே சலிப்புற்றிருந்த வாசகனை இது புன்னகைக்க வைத்திருக்கும். ஆனால் இத்துடன் நிறுத்தியிருந்தால் அவர் கிருஷ்ணனே அல்ல. ‘கோசலை’ நாவலில் இரண்டு இடங்களிலிருந்து அவர் தமிழ் பிரபாவிடம் கேட்ட கேள்விகள்
1. தமிழ் பிரபா எழுதிய இரண்டு கடிதங்களும், அவரது அத்தை எழுதிய கடிதமும் புத்தகத்தில் ஒரே கையெழுத்தில் இருந்தது எப்படி? தமிழ் பிரபா தெறிச்சுப் போய்விட்டார் .சிரித்துக்கொண்டே பதிப்பாளரிடம் சொல்லி அடுத்த பதிப்பில் மாற்றி விடுவதாகக் குறிப்பிட்டார்.
2. கோசலையின் அப்பா அவரது காதலை நிராகரிக்கும் இடத்தில் காரணம் ஏதும் சொல்லாமல் தவிர்க்கிறார். ஆனால் 70 பக்கங்களுக்கு பின்னர் அது வாசகனுக்கு உணர்த்தப்படுகிறது. எனில் வடிவ போதத்துடன் தான் நாவல் எழுதப்பட்டு இருக்கிறதா?
பின்னர் வந்த மொழிபெயர்ப்பாளர் கயல் அவர்களின் சகஜத்தன்மை வெகுவாய் கவர்ந்தது. “வேலூர் கந்தக பூமிங்க. தண்ணியே இல்லாத பாலாறு ஓடுற இடம். அங்க இருந்துகிட்டு நான் கற்பனை பண்ற காடு பசுமையா, குளுமையா மட்டும்தான் இருக்கும். பயங்கரமான மிருகங்களுக்கு அங்க இடமில்லதான்”. அவரது மற்றுமொரு அழுத்தமான அவதானம் “நல்ல மழை பெய்யும் போது, சகல அவயங்களும் நனையற மாதிரி சந்தோஷமா, மழைய ரசிச்சு நடந்த போறதுக்கு இந்த சமூகம் ஒரு பெண்ணை விட்டு வைக்குமா”. தனது ஆளுமையில் பள்ளிக்கால ஆங்கில ஆசிரியரின் பங்கை குறிப்பிட்டார். ஒன்றை நன்றாக தெரிந்து கொண்டு அதைக் கடந்து வருகையில் மட்டும்தான் அதை துச்சமாக மதிக்கும் தன்னம்பிக்கை வர முடியும். ‘ஆங்கிலமும் தொடர்புக்கு உண்டான ஒரு கருவி தான் அதில் அதற்கு மேல் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை’ என்ற நம்பிக்கை அவரது ஆசிரியை வழியாகவே வரப்பெற்றதை குறிப்பிட்டார்.
இந்த முறை செந்தில் அவர்களின் இலக்கிய வினாடி வினாவிற்கு விடுமுறை. அதற்கு பதிலாக மெய்க்களம் குழுவின் இரண்டு நாடகங்கள் வாள் மற்றும் கழுமாடன். வாள் மிகவும் கூர்மையான கதை. நம்பிக்கையின்மையால் அமைப்பை கேள்வி கேட்கும் இரண்டாம் நிலை துறவியின் கரங்களில் அதன் பீடாதிபதி வாளை அளித்து “இன்னும் அவநம்பிக்கையோடு இருந்தால் எதிரில் இருக்கும் துறவியை கொன்று சென்று சாதாரண வாழ்க்கை வாழலாம் ஆனால் அது நம்பிக்கையின் அடையாளமாகவே பொருள்படும். மாறாக அவர் இன்னும் நம்பிக்கையோடு இருந்தால் தன்னைத்தானே குத்திக் கொள்ளலாம்” என்று மிகச் சிக்கலான ஒரு catch-22வில் கொண்டு நிறுத்தி விடுகிறார். முடிவு open-ended ஆக விடப்படுகிறது. செறிவான வசனங்கள். நரேன், தாமரைக்கண்ணன் மற்றும் பீடாதிபதியாக நடித்தவர் அனைவரும் மிகச் சிறப்பாக வெளிப்பட்டனர்.
கழுமாடன் இன்னும் புதுமையான முயற்சி. கதையின் விவரிப்புத் தன்மை மிகுந்த பகுதிகளை சுதா சீனிவாசன் அவர்கள் வாசிக்க, சம்பவங்கள் நாடகமாக நிகழ்த்தப்பட்டன. கழுமாடம் விரிவாக விவரிக்கப்படும் இடத்தில், என் உடல் மீது அதை அறிந்த நடுக்கத்தை உணர்ந்தேன். இறுதியில் ‘நான் ராணியத் தொடவே இல்லை மாமா’ என்று கழுமாடன் அட்டகாசமாக சிரித்துக்கொண்டே கழுவில் ஏறப்போகும் காட்சியுடன் நிறைவுற்றது. “அவங்களுக்குத் திருப்பிக்கொடுக்கிறதுக்கு நம்மகிட்ட பழி ஒன்னு தானே இருக்கு மாமா” “ என்பது மிகக் கூர்மையாக வசனம். முதல் முயற்சியிலேயே நரேன், சுஷில் குழுவினர் வெகுவாக வென்று விட்டனர்.
அடுத்த நாள் விக்னேஷ் ஹரிஹரன் அவர்கள் கீரனூர்ஜாகிர்ராஜாவுடனான உரையாடலை, தமிழ்விக்கியின் அறிமுகத்திற்கும் மேலாக இன்னும் சில சொற்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுத் தொடங்கியபோது ‘சரிதான்! குட்டி வக்கீல் பதினாறு அடி பாயறாரு” என்று நினைத்துக் கொண்டேன். ஜாகிர்ராஜாவின் திறந்தமனதுடனான பதில்கள், இஸ்லாமியச் சமூகத்தினரையும் விமர்சனத்துடனேயே அணுகிய அவரது நேர்மை முதலியவை முழு உரையாடலையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது. ‘பாதியில் தொடங்கி மிச்சம் வைத்திருக்கும் நாவல்களை எப்போது முடிப்பதாக உத்தேசம்’ என்று அவரது மனைவி சமயம் பார்த்து கொக்கி போட்டார்.
பின்னர் சுனில் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் விவேக் ஷான்பேக்கின் உரையாடல். தான் நடத்திய சிறு பத்திரிக்கையில் ஒவ்வொரு இதழிலும் இந்திய எழுத்தாளர்களின் ஒரு கதையையாவது மொழிபெயர்ப்பு செய்கையில், இரண்டாவது இதழிலேயே உங்களின் கதை ஒன்று வெளியானதை குறிப்பிட்டார். “ஜெயமோகனை வாசிக்காமல் இந்தியா குறித்தான நமது சித்திரம் முழுமை அடையாது” என்று அவர் குறிப்பிட்டபோது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். கடந்த நூறு வருடங்களில் நடந்த மிக முக்கியமான நிகழ்வாக தாராளமயமாக்கலைக் குறிப்பிட்டது மிக முக்கியமான அவதானம். இந்த முறையும் குறிப்பிட்ட சொல்ல வேண்டியது சுனில் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு. இலட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவழித்து நடத்தப்படும் இலக்கிய விழாக்களில், இந்திய எழுத்தாளர்களின் சிந்தனை தமிழிலும் சென்று சேர்வதற்கான வாசல் திறக்கப்படுகிறதா என்பதில் எனக்கு ஐயங்கள் உள்ளன. ஆனால் இந்த எளிமையான ஆனால் முக்கியமான படி, விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினராக வரும் இந்திய எழுத்தாளரின் சிந்தனை, மொழிப் பாகுபாடின்றி அனைத்து வாசகர்களுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்கிறது. (‘என்று அவர் குறிப்பிடுகிறார்’,‘அப்படின்னு சொல்றாரு’ போன்ற பதங்களை களைந்து விட்டால் சுனில் செய்தது அருமையானதொரு மொழிபெயர்ப்பு)
இரா.முருகனுடனான அரங்கை காளி பிரசாத் ஒருங்கிணைத்தார். தனது எழுத்திற்குரிய அங்கீகாரத்தில் கிஞ்சித்தை கூட இரா.முருகன் இன்னும் அடையவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் நிறையவே உண்டு. சுஜாதாவுடன் அவரை ஒப்பிடுவது (அவரது தொழில்நுட்ப பின்புலம், சவுக்கு நுனி நடை போன்ற ஆரம்ப கால ஒற்றுமைகளைக் கழித்து விட்டால்) மாபெரும் அநீதி. ஆவணப்படத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல், ‘அரசூர் வம்சம்’ நாவல் தொடரையோ ‘மிளகு’ போன்ற முயற்சிகளோ நிச்சயம் சுஜாதா செய்திருக்கக் கூடியது அல்ல. ‘கருப்பு சிவப்பு வெளுப்பு’ நாவலும் ஏதோ ஒரு கணேஷ் வசந்த் கதை தான்.
மாறாக இரா முருகனில் அம்பலப்புழை, அப்போதைய சென்னை என்று அந்தந்த நிலங்களின் சித்திரமும், அப்போதைய வாழ்க்கையும் விரிவாக விவரிக்கப்படுகிறது. “நீங்கள் கப்பல் சுக்கானை பற்றி எழுதியிருந்தது மிகக் கூர்மையான நம்பகமான சித்திரம். தாங்கள் எவ்வாறு கப்பலுக்குள் சென்று அதை கண்டீர்கள்” என்று (கப்பல்காரன்) ஷாகுல் ஹமீதின் கேள்விக்கு முருகன் தான் கப்பலுக்குள் சென்றதே இல்லை என்றும் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஆங்கில சஞ்சிகை ஒன்றில் வந்த குறிப்புகளை வாசித்தே அந்த பகுதியினை எழுதியதாக குறிப்பிட்டார்.
தனிப்பட்ட முறையில் எனக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது இராமுருகன் அவர்களை புரட்டி போட்டு இருக்கும் பார்க்கின்சன்ஸ். அவரால் மிக மெதுவாகவே நடக்க முடிந்தது. பேசுகயிலும் தனக்குள் சொற்களை கோர்த்துக்கொண்ட பின்னரே வெளியில் சொல்ல முடிந்தது. ஆனால் இந்த நோய் தன்னிடம் இருந்த coherent thinking உட்பட நான்கு முக்கியமான திறன்களை பறித்ததாக குறிப்பிடுகையில் அவரது கூர்மை வெளிப்பட்டது. நாலு வருடங்களுக்கு முன்னர் அவரது மனைவியும் தவறிவிட்டதை தமிழ் விக்கியில் வாசித்தது நினைவிற்கு வருகையில், ‘முன்னோர்கள் அவரை கைவிட்டு விட்டனரா’ என்ற கேள்வி எழுவதை தவிர்க்கவியலவில்லை. ஆனால் மெதுவாக அவர் பேசினாலும் சலிப்பின்றி, பொறுமையாக அவரது பதில்களை ரசித்த வாசகத்திரளும், அவருக்கு கிடைத்த இந்த மாபெரும் வெளிச்சத்தையும் (“இப்படியே போயிடலாம் போல இருக்கு” என்று தன் ஏற்புரையில் குறிப்பிட்டார்) பார்க்கையில் முன்னோர்கள் அவரிடம் இன்னமும் பரிவுடனேயே இருக்கின்றனர் என்று பட்டது
கூத்துக்காரன், கடற்கரையில் சாமானியனுக்கு இரா முருகன் பற்றி விவரிப்பதாகவும், இடையிடையே நீங்கள்,விக்னேஷ் ஹரிஹரன், சரவணன் சந்திரன், காளி. கார்த்திக் புகழேந்தி முதலியோர் முருகனைப் பற்றி கலந்துரையாடுவதாகவும் ஆவணப்படம் அமைந்திருந்தது. அகரமுதல்வன் மிகச் சிறப்பாக இயக்கியிருந்தார், எடிட்டிங் கச்சிதமாக அமைந்திருந்தது.
ரம்யா, எம்.கோபாலகிருஷ்ணன், விவேக் ஷான்பேக், மற்றும் உங்களது உரைகள் இரா.முருகனின் மாய யதார்த்த உத்தி, வரலாறு ஒரே நேர்கோடாக அல்லாமல் பல்வேறு சரடுகளின் ஊடுபவங்களாக சித்தரிக்கப்பட்டிருப்பது, சாமானியனும் சேர்ந்ததுதான் வரலாறு, என்பதயெல்லாம் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தன. குழு புகைப்படம் எடுக்கையில் திருமண நிகழ்வின் இறுதியில் வரும் அந்த இனிய ஏக்கம் நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. நாம் அனைவரும் நம்மை கரைத்துக் கொண்டு அகமகிழும் ஒரு விழா இது.
சில விழா துளிகள்:
1. 2016ல் முதன் முதலாக விஷ்ணுபுரம் விழாவிற்கு வந்தேன். அன்றிலிருந்து இன்று வரை படிப்படியான மாற்றங்களை காண முடிகிறது. 2016 முதலில் தொடங்கிய இலக்கிய வினாடி வினாவிற்கு பதில் இந்த முறை நாடகம். முக்கியமாய் சொல்ல வேண்டியது தன்னறம் விற்பனையகம். 2022 நிகழ்வின்போது வாங்கி வந்த சேலையை தான் இன்றளவும் என் அம்மா நினைவு கூர்கிறார். “எல்லாத்தையும் விட அந்த புடவை தாண்டா கட்டிண்டா உடம்பை உறுத்தாம இருக்கு” என்று. நூற்பின் வேட்டி சட்டைகள், அணிபவருக்கு ஒரு மிடுக்கை அளிப்பதை கவனித்திருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டியது தன்னறம் புத்தகங்களின் செய் நேர்த்தி, அசட்டுத்தனம் அல்லாத அவர்களின் குழந்தைப் புத்தகங்கள், சமூக அக்கறையுடன் தன்னறம் வெளியிடும் புத்தகங்கள். சிவகுருநாதன் நிச்சயம் மிக முக்கியமானதொரு ஆளுமை.
2. நான்கு இடங்களில் அமைக்கப்படும் புத்தக விற்பனைப் பகுதிகள். தமிழினி, பாரதி புத்தாகாலயம், விஷ்ணுபுரம் மற்றும் இன்னொன்று. இதில் விஷ்ணுபுரம் தவிர்த்த மீதி 3 ஸ்டால்களும் இன்னும் கவனம் செலுத்தி புத்தகங்களை தேர்வு செய்து வைக்கலாம் என்று படுகிறது.
3. ஜா.தீபா, இல.சுபத்ரா, போன்ற சென்ற நிகழ்வுகளின் சிறப்பு பங்கேற்பாளர்களைக் காண முடிந்தது நிறைவாக இருந்தது. அவர்களைப் போன்ற முக்கியமானவர்களும் (தாங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இல்லாவிட்டாலும்) பங்கெடுப்பது விழாவின் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதாக இருந்தது.
4. சுரேஷ் பிரதீப்பை சந்திக்க முடிந்தது மற்றும் ஒரு மகிழ்ச்சி. கணேஷ் பெரியசாமியும் இவரும் whatsappல் ஒருங்கிணைக்கும் (வாரத்தில் நான்கு நாட்கள்) ‘சொற்சுவை’ வாசிப்புகள் அளவில் சிறியதானாலும் தொடர்ந்து செய்யப்படும் முக்கிய முயற்சிகள். மேலும் அவரது காணொளிகள் மிக முக்கியமானவை. இன்று யோசிக்கையில், இம்பர்வாரி குழுமம் (4 வருடங்களாக கம்பராமாயணப் பாடல்களை வாரந்தோறும் வாசிப்பவை), மணிநீலம் (2022 மார்கழியில் தொடங்கி ஜாஜா முன்னெடுக்கும் பிரபந்த வாசிப்பு) போன்றவை இதுபோன்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே முன்னெடுக்கப்பட்டிருப்பதும், வருடம் முழுவதும் இணையம் மூலம் குரல் வழியாக கூடுபவர்கள் வருடத்திற்கு ஒரு முறை நேரில் சந்திக்கும் ஒரு முனையமாகவும் விஷ்ணுபுரம் விழா வழங்குவதை அறிய முடிகிறது.
5. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கெடுப்பதன் மிக முக்கியமான தடை, குடும்பத்தினரிடையே இது போன்ற நிகழ்வுகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பது. நான் உணர்ந்த வகையில் நமது உலகியல் வாழ்வை இன்னும் தெளிவாக அமைத்துக் கொள்வதற்கு வாசிப்பும், இதுபோன்ற நிகழ்வுகளும் அளிக்கும் கூர்மையான முக்கியமான அவதானங்களும் நிச்சயம் பயன்படுகின்றன. இதை குடும்பத்தினருக்குத் தெளிவாக உணர்த்துவதற்கு எளிய, சிறந்த வழி அவர்களையும் அழைத்துக் கொண்டு வருவது. (தொடர்ச்சியாக நாம் வந்தாலே அவர்களின் ஆர்வமும் இயல்பாக தூண்டப்படும்). இந்த ஆண்டு சுனில், சாந்தமூர்த்தி சார் (1000 மணி நேர வாசிப்பை வெகு விரைவில் நிறைவு செய்தவர் ) உட்பட பலர் தங்கள் இணை, குழந்தைகளுடன் (பரிவாரங்கள் புடை சூழ) வருகை தந்திருந்தனர். கடந்த முறை காளி தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
6. விழா உரையின் போது நீங்கள் வெளியிட்ட “2026 இல் நியூயார்க் தமிழ் இயக்கத்திற்கான விழா” என்னும் பிரம்மாண்ட இலக்கு நிச்சயம் பார்வையாளர்களை பலவிதத்திலும் அதிரச்செய்திருக்கும். ஆனாலும் இதுவும் அடையக்கூடிய இலக்கே என்பது உங்களது கடந்தகாலச் சாதனைகளை வைத்து பார்க்கையில் புரியும்.
7. இன்னும் விழாவை ஒருங்கிணைத்த ஜாஜா, யோகேஸ்வரன் ராமநாதன், புகைப்படம் எடுப்பவர்களின் பங்கு, ஸ்ருதி டிவி கபிலன் இவர்களையெல்லாம் குறிப்பிட முடியவில்லை என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது. கடிதத்தை மறுபடிவாசிக்கையில் பந்திப்பாய் விரித்த உணர்வை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் இப்படி பங்கேற்பாளர்களின் உழைப்பை குறிப்பிட்டாவது என் பங்கை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசானமே அதற்கு காரணம்.
இறுதியாக சில நாட்களுக்கு முன் முழுமையறிவில் வெளியான கடிதம் பற்றி. மாபெரும் இவ்விழா அதன் பிரம்மாண்டத்தினாலேயே ஒரு வாசகனை சற்று அச்சுறுத்துவதை, சிறிதாக உணரச் செய்வதை கண்டு கொள்ள முடிகிறது. ஆனால் எப்படி ஒரு நல்ல இலக்கிய ஆக்கம் அதன் இறுதியில் நம்முள் ஒரு வெறுமையை உண்டாக்கினாலும் அதன் பின்னரான நமது செயலூக்கத்திற்கான ஒரு முக்கிய காரணியாக அமைகிறதோ, அதேபோலத்தான் இந்த உணர்வை என்னால் காண முடிகிறது. அந்த வாசகர் உணர்ந்தது போன்ற ஒரு தனிமையை அவ்வப்போது நானும் உணர்கிறேன். ஆனால் இன்னும் ஊக்கத்துடன் நான் செயல்படுவதற்கான கிரியாஊக்கியாகவே அந்த வெறுமையை கண்டுக்கொள்கிறேன். அந்த வாசகருக்கும் அதையே பரிந்துரைப்பேன் – ‘2025 இல் நிச்சயம் பங்கெடுங்கள்’ என.
சலிப்பும் வெறுப்பும் காழ்ப்புமாக எதிர்மறை எண்ணங்களை எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கயில், நேர்மறை எண்ணங்களை நிறைத்துக் கொள்ளும் விதமாக இவ்விழாவினைத் தொடர்ந்து பதினைந்தாவது ஆண்டாக நடத்துவதற்கு நன்றிகள் பல.
அன்புடன்
வெங்கட்ரமணன்