2009 ஆம் வருடத்துக்கான பாரதிய ஞானபீட விருது இந்தி எழுத்தாளர் ஸ்ரீலால்சுக்லாவிற்கும் அமர்காந்துக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலால் சுக்லாவின் ராக் தர்பாரி என்ற நாவல் தமிழில் ‘தர்பாரி ராகம்’ என்ற பேரில் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கிடைக்கிறது. அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை நான் இருபது இந்திய நாவல்களைப் பற்றிய என்னுடைய நூலான ‘கண்ணீரைப் பின் தொடர்த’லில் எழுதியிருக்கிறேன். இணையத்திலும் உள்ளது. [ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்]
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசியல், சமூகவாழ்க்கையைப்பற்றிய மிகக்கூரிய அங்கதம் வெளிப்படும் நாவல் தர்பாரி ராகம். இந்நாவல் இந்தியாவின் 15 மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளது. தேசிய தொலைக்காட்சியில் தொடராகவும் வந்தது.
1925ல் உத்தரப்பிரதேசத்தில் லக்னோ அருகே அட்ரௌலி என்ற கிராமத்தில் பிறந்த ஸ்ரீலால்சுக்லா 1947ல் அலகாபாத் பல்கலையில் பட்டப்படிப்பை முடித்தபின் 1949ல் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தார். 25 நூல்களை எழுதியிருக்கிறார். பல்வேறு இலக்கிய விருதுகளை பெற்ற ஸ்ரீலால் சுக்லா 2008ல் பத்மவிபூஷண் பட்டம் பெற்றார்
ஸ்ரீலால் சுக்லாவுடன் சேர்ந்து விருது பெறும் அமர்காந்த் இந்தியில் முக்கியமான எழுத்தாளர். தமிழில் இவரது நூல்கள் கிடைக்கின்றனவா எனத் தெரியவில்லை.
2010 ஆம் வருடத்திற்கான ஞானபீட விருது கன்னட எழுத்தாளரான சந்திரசேகர கம்பாருக்கு வழங்கப்படுகிறது. கம்பார் கன்னட வசனகவிதையின் முன்னோடிகளில் ஒருவர். கேரளத்தில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் எழுதியதுபோல நாட்டுப்புறப்பாடல்களின் மொழி,தாளம் ஆகியவற்றைப் புதுக்கவிதைக்குள் கொண்டு வந்து எழுதியவர். கவிதையை மக்கள் மயமாக்கியவர் என்று அவர் குறிப்பிடப்படுகிறார்.
எழுபதுகளில் கம்பாரின் பல கவிதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை இங்குள்ள வானம்பாடிக் கவிஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தன. மொழிபெயர்ப்பில் அவை நீளமான பேச்சுகளாகவே இருந்தன, கவித்துவ அனுபவம் கைகூடவில்லை.
கம்பாரின் இன்னொரு செயற்களம் நாடகம். எழுபதுகளில் நாட்டுப்புற அம்சங்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்ட நவீன நாடகங்களுக்கு முன்னோடியாகக் கருதப்பட்டவர்களில் கம்பாரும் ஒருவர். அவரது ரிஷ்ய சிருங்கர் என்ற நாடகம் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. சமகால கன்னடச் சிறுகதைகள் என்ற தொகுதியில் அவரது இரு கதைகள் உள்ளன. மொழியாக்கத்தை வைத்துப் பார்த்தால் கம்பார் முக்கியமான படைப்பாளி என்ற எண்ணம் ஏற்படவில்லை.
கன்னடமொழிக்கு தேசிய அளவில் கலாச்சார நிறுவனங்களில் சற்று அதிகமான செல்வாக்கு உள்ளது என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. அந்தச் செல்வாக்கு ஏ.கே.ராமானுஜம், யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஆகியோரால் உருவாக்கப்பட்டு இன்றும் நீடிக்கிறது. ஆகவேதான் கன்னட இலக்கியம் இவ்வாறு அதிகமான ஞானபீட விருதுகளைப் பெறுகிறது என தோன்றுகிறது.
கம்பார் பெறும் இவ்விருது நியாயமானதுதானா என்ற ஐயம் ஏற்படுவதற்கு இரு காரணங்கள். கம்பார் பலகாலமாகவே காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர். பல்வேறு மத்திய அரசு கலாச்சார நிறுவனங்களில் பங்கெடுத்து வருபவர்.
மேலும் கன்னடப் படைப்பாளிகளில் சிவராம காரந்துக்குப் பின் மிகப்பெரிய படைப்பாளியும் கிருகபங்க [தமிழில் ஒரு குடும்பம் சிதைகிறது] பர்வ [தமிழில் பருவம்] ஆகிய பெரும் படைப்புகளின் ஆசிரியருமான எஸ்.எல்.பைரப்பா தொடர்ந்து கன்னடச்சூழலில் நிலவும் இலக்கிய அரசியலால் புறக்கணிக்கப்பட்டு கம்பார் போன்றவர்கள் ஞானபீட விருது பெறுவதும் வருத்தம் தரக்கூடியது
எல்லா விருதுகளிலும் சில சிறு போதாமைகள் இருக்கும். பெரும்பாலும் ஞானபீட விருது தகுதியற்றவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இம்முறை ஐயங்கள் எழுகின்றன