அனல் காற்று – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

தமிழுக்கு என்ன ஒரு வன்மை! உங்கள் எழுத்துக்கு ‘அனல் காற்று’ ஒரு புத்தம் புதிய சிறகு. மிதந்து செல்லும் நிகழ்வுகளூடே அலைந்து திரிந்து முடித்த உடன் ஏற்படும் களைப்பு புது அனுபவம்.

ஸ்டெல்லா ப்ருசினுடைய ‘அது ஒரு நிலாக் காலம்’ தந்த சுகம், உணர்வை ரசித்தேன்.
ராம்கி, சுகந்தா, ரோஸ் போன்ற நிலைத்துவிட்ட மாந்தர்கள், அருண், சுசி, சந்திரா மற்றும் அம்மா.

கதை முழுதும் கொஞ்சப்படுகிற சுசி, காதலை தவிர எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அரிய பெண். மற்றவர்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக்கொள்ளும் எளிய, நம் வாழ்வில் அனுதினம் சந்திக்கும் நபர்கள்.

அடிக்கடி நீங்கள் கூறுவது போல், அனல் காற்று, உங்கள் படைப்புகளில் புது வார்ப்பு. புது களம்; உரையாடல்கள். ஜோ பேசும் வரிகளில் மட்டும் கிண்டலும், எள்ளலும் ஊறிக் கிடப்பது தேர்ந்த திறனின் வெளிப்பாடு.

இக்கதையை பாலு மகேந்திரா படம் செய்ய எத்தனித்தார் என்று சொல்லி இருந்தீர்கள்.  இந்த கதைக்குத்தான் தமிழ் வேண்டுமே தவிர, விஷூவலுக்கு மொழி தேவையில்லை. காட்சிபடுத்தலுக்கு அபூர்வமான வார்த்தைக்கூறுகளை முயன்று வெற்றியும் கண்டிருக்கிற இயக்குனர்கள் பலர் உலக திரைப்பட வரலாற்றில் உண்டு.

சொல்லப் போனால், இக்கதையை ஓர் அழுத்தமான, வசனங்கள் குறைந்த, அடர்த்தியான திரைப்படமாக பார்க்கும் ஆசையில் யார் அந்த ஆளுமை என்று என் குறைந்த சுவை அனுபவத்தில் தேடி நிற்கிறேன். ஏன், கமல் ஹாசன் தன் படைப்பு திறனின், பாசாங்கற்ற உச்சத்தில் இருந்த போது செய்திருக்கக் கூடிய முயற்சியே ‘அனல் காற்று’.

பலர் காண்பது போலல்லாமல், ஆணின் காமமாக மட்டும் இக்கதையின் அமைப்பு தோன்றவில்லை. மிக எளிய, இரு பாலருக்கும் மிக மிக பொதுவான காதலும், காமமும், காமம் தோன்றும் ஊற்றுக்கண்ணாக சுயநலமும், இன்னும் பல எளிய, தொன்மையான திரையிடப்படாத உணர்ச்சிகளுமே ‘அனல் காற்றை’ நாம் திகைப்புற வீசி செல்லும் படைப்பாக ஆக்கியிருக்கிறது.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு, என்னை ஈர்த்த ‘அனல் காற்றின்’ சில வரிகள் (சில, அமரத்துவம் ததும்பும் அழகு):

“புதிய வெயிலில் நீராடிய பெருநகரம் என்னை நோக்கி பெருகி வந்தது.

உன் உடல் வழியாக ஒவ்வொரு கணமும் புத்தம் புதிதான பேரழகுடன் நிகழ்ந்துகொண்டிருந்தாய். ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு பெண்ணை உன் உடலில் கண்டபடி கண்கள் மட்டுமே நானாக பிரமித்து அமர்ந்திருந்தேன். சுசி, எத்தனை நூறு அழகுபாவனைகளின் தொகுப்பு பெண்!

பெண்மையின் முடிவிலா ஜாலங்களில் சிக்கி அழிவதையே ஆணுக்கு இன்பமென வைத்திருக்கிறான் உலகியற்றிய முட்டாள்.

உன்னைப்போல் சிந்தனையிலும் சிரிப்பவர்கள் ஆசீர்வதிக்கபப்ட்டவர்கள்.

நெஞ்சில் இல்லாத புன்னகையை முகத்தில் வரவழைப்பதென்பது எத்தனை சிரமமானது…

மிக நெருக்கமாக ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட கணங்கள். பின்னால்செல்லும் ஆட்டை முட்டி முன்னால்தள்ளி நகரும் ஆட்டுமந்தைபோல காலம்…

நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் மிக விரும்பும் ஒரு நடிப்பைத்தான் இல்லையா?

நீ என்னைத் தொட்டிருந்தால் நீர்த்துளி சிறு தொடுகையில் உருவழிவதுபோல் நான் உடைந்திருப்பேன்.

இப்பூவுலகில் இதுவரை மலர்ந்த பெண்களிலேயே நீதான் பேரழகி என்று சற்றும் ஐயமின்றி நான் உணர்ந்த தருணங்கள் எனக்காக உருவாகிக் கொண்டிருந்தன அப்போது…

சொற்களில்லாமல் இரு தொலைபேசிகளுக்கு  அப்பாலும் இப்பாலும் சில கணங்கள் நின்றிருந்தோம்.

தன் அம்மாவையும் மனைவியையும் ஒரே சமயம் சேர்ந்து காணும்போது ஆண் ஒரு விசித்திரமான மனக்குழப்பத்தை அடைகிறான்.

காமத்தால் அலைக்கழிக்க விதிக்கப்பட்ட ஆணை அனைவருமே மன்னிக்கத்தான் வேண்டும் சுசி.

ஆண் மனதின் நுண்ணிய மென்பகுதியில் அறைவதற்கு நீ கற்றிருக்கவில்லை. சுசி, அது ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி பெண்கள் கற்றுக்கொள்வது.

மண்ணில் எதையும் நியாயபப்டுத்திவிடலாம். கொஞ்சம் கண்ணீரும் கொஞ்சம் சொற்களும்போதும்.”

நன்றி, ஜெயமோகன்.

Saravanan
singapore


http://sarandeva.blogspot.com/

அன்புள்ள சரவணன்

நன்றி,

அனல்காற்றின் சிறப்பு என்று நான் எண்ணுவதே அதில் காமம் சார்ந்த மனச்சதுரங்கம் சித்தரிக்கப்பட்டிருப்பதுதான். வலியும் உவகையும் கறுப்புவெளுப்புக் கட்டங்களாக  அவற்றின் மீது ஒரு கணமும் ஓயாத காய்நகர்த்தல். அந்த உணர்ச்சிகளை நோக்கி மொழி செல்லும்போது உருவாகும் சொற்றொடர்கள். அவை அந்தந்தக் கணங்களில் அந்தக் கதாபாத்திரங்கள் உணரும் உண்மைகள், அல்லது உண்மையின் சிதறல்கள்

ஜெ

**

அன்புள்ள ஜெ..சார்.,
அனல் காற்றை நான் மிகவும் ரசித்தேன். நல்ல மனவியல் கதைகள் வெளி வந்து வெகு நாட்களாகின்றன.
சொற்கள் வந்து விழும் வேகத்தை வைத்து அதன் spontaneity யை உணர முடிந்தது. உங்களை எந்த ஒரு ‘ism’ category யிலும் சேர்க்க யாராலும் முடியாது. only ‘jeyamohanism”!.


elamparuthy

அன்புள்ள இளம்பரிதி அவர்களுக்கு
உளவியல் என்னும்போது உளவியலின் கோட்பாடுகள் நினைவுக்கு வருகின்றன. எனக்கு உளவியல் கோட்பாடுகள் மீது ஆழமான ஈடுபாடும் அதைவிட ஆழமான ஐயமும் எப்போதும் உண்டு
நன்றி
ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

என்னைப்பொறுத்தவரை அனல்காற்று 14 ஆம் அத்தியாயத்திலேயே முடிந்துவிட்டது. பதினைந்தை படிக்காமல் இருந்திருக்கலாமா என்று எண்ணினேன். பதினைந்து சரியான சினிமாத்தனம் என்று தோன்றியது

டி எஸ்.ரவி

அன்புள்ளரவி

ஒரு கதையை எழுதியபின்னர் அதை விவாதிப்பது ஆசிரியனுக்கு கஷ்டமான வேலை. பொதுவாக கதையை இங்கே முடித்திருக்கலாம் இப்படி முடித்திருக்கலாம் என்பதெல்லாம் வாசகர் அந்தக் கதையை எப்படி வாசித்தார் என்பதை பொறுத்தவை — வாசிப்புவகைகள் மட்டுமே. எல்லாவகையான வாசிப்புக்கும் ஓர் இலக்கியப்படைப்பில் இடம் உண்டு.

உங்கள் வாசிப்புக்கு நன்றி

ஜெ

 

வணக்கம் குரு.,

“அனல் காற்று” ஒரு நாவலாக சிறந்த, உணர்ச்சிகரமான கதையம்சம் கொண்டது! திரைப்படமாக அதன் தளம் என்னவென்று ஊகிக்க முடியவில்லை, கதை நாயகனின் நினைவலைகளாக புரளும் கருத்துக்களும்,தனிமனிதனின் அந்தரங்க உரையாடல்களும்,காமம்,உறவுகள் குறித்த பார்வைகளும் அதனதன் எல்லைகளை (எல்லைகளை மீறியும்) தொட்டு செல்கிறது,அது “காடு” படைத்த உங்களால் மட்டுமே செல்லக்கூடியது!

முதல் அத்தியாயத்தில் ஏற்பட்ட பதட்டம் இறுதிவரை குறையவில்லை,தினம் விழித்தவுடன் அனல் காற்றை சுவாசித்துவிட்டு அடுத்த நாளுக்கு எதிர்பார்த்து ஏங்க வைத்துவிட்டது!கண்டிப்பாக திரைப்படத்தால் இவ்வளவு தாக்கத்தை வெளிக்கொணர முடியுமா என்பது சந்தேகமே!

நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் மிக விரும்பும் நடிப்பைத்தான் இல்லையா? நாயகனின் கூற்றாக வரும் இந்த வாக்கியம், ஷேக்ஸ்பியரின் “உலகமே ஒரு நாடக மேடை” என்பதற்க்கு இணையான விளக்கம் இல்லையா? சற்று அதிர்ச்சி அடைய வைக்கும் வாக்கியமும் கூட! இந்த ஒற்றை வாக்கியம் போதும் வேஷமிடும் உறவுகளின் “கண்ணீர் கசிந்துருகும்” நடிப்பை உணர!!

“மனம், நிறைந்த ஏரி போல. ஏரியின் ஒவ்வொரு துளியும் அழுத்தத்தால் நெரிபடுகிறது. விடுவித்துக் கொள்ளத் துடிக்கிறது. ஒரு சிறிய வழியை கண்டடைந்ததும் அதன் வழியாக பீரிட்டு வெளிப்பட்டு தன்னை உடையாமல் காத்துக் கொள்கிறது”.   இந்த விளக்கத்திற்க்கும்

“பயன்படுத்தப்படாத ஆற்றல் என்பது வீணான பெரும் சுமை. அச்சுமை அழுத்தமாக மாறுகிறது. அதற்கான வெளிப்பாட்டை நாடுகிறது. சிறு இடுக்கு கிடைத்தால்கூட விசையுடன் பீறிட்டு வெளிவருகிறது”.  “ரத்தம் காமம் கவிதைகட்டுரையில் வரும் இந்த விளக்கத்திற்க்கும் என்ன பொருள்? இரண்டும் ஒத்த பொருளையே சுட்டுகிறது இருப்பினும் மன நிலைகள் வெவ்வேறு! முதலாவது, வாசிப்பு கூட ஒரு மறைவிடமாக,மனதை சமநிலை படுத்த உதவுவதாக குறிக்கிறது. இரண்டாவது,இது ஒரு புரட்சி மனம் அடையும் மன எழுச்சி என்றாலும்,மனச்சுமையை குறைக்கவே அவ்வாறு ஈடுபட வைக்கிறது என்று கொள்ளலாமா?

கதை நாயகனின் நினைவுகளாக எழும் கருத்துக்களை திரைப்படத்தில் எவ்வாறு காட்சி படுத்துவார்கள்? அந்த வகையில் பாலு சார் தோல்வியே கண்டிருப்பார் என தோன்றுகிறது! என் சிற்றறிவிற்க்கு அது எழுத்தால் மட்டுமே சாத்தியம் எனபடுகிறது. மனித மனம் சிந்தித்துபார்க்கவே தயங்கும்,அருவருப்பாக உணர்ந்து கொள்ளும் பல ஆழ்மன கேள்விகளை போட்டு உடைத்திருக்கிறீர்கள்! இந்த திரைப்படம் உருவாகி வெளிவந்து இருந்தால்,உறவுகளின் பல அபத்த நாடகங்களை சம்மட்டியால் அடித்த மாதிரி அமைந்து இருக்கும்., இல்லை என்றபோது உங்கள் முன்னுரை தான் ஆறுதல்எது நிகழ்கிறதோ அதுவே அது“..

 

முதல் பகுதிமுதல் நான் பெரிதும் எதிர்பார்த்தது அருணின் மரணம் தான்,அது தான் அவன் உளசிக்கலுக்கான மீட்பாக இருக்க முடியும் என்று எதிர்பார்த்தேன்! ஆனால் இறுதி பகுதி சராசரி தமிழ் சினிமாவின் அம்சங்களுக்காக சமரசம் செய்துள்ளீர்கள் என்றே தோன்றுகிறது. இல்லையென்றால் நம் ரசிகர்கள் அரங்கின் உள்ளே தின்றுகுவித்தவை ஜீரணமாகாது என்பதாலா? :-)

பணிவன்புடன் மகிழவன்

அன்புள்ள  மகிழவன்

உங்கள் கருத்துக்களைப் படித்தேன். அனல்காற்று கதையின் அடிப்படை என்பது என் கோணத்தில் இதுதான். அது ஒரு குறுகிய கால அளவில் வீசும் உக்கிரமான அனல், அவ்வளவுதான். சட்டென்று அதன் உச்சத்தில் குளிர்ந்துவிடும். அனல்காற்றின் உச்சத்தில் மழைவரும் என்பதை நாம் அறிவோம். அந்த உச்சப்புள்ளியை நோக்கி கதையை கொண்டுசென்று அதை தொட்டு சட்டென்று குளிர்ந்து மீள்வதே அந்தக்கதையின் அமைப்பு.
அந்தப்புள்ளியை பற்றி இரு கதாபாத்திரங்களும் உணர்வது என்ன என்பதுதான் கதையின் இறுதி. அதாவது உச்சத்துக்கு பிறகுவரும் இறங்குமுகம்.
பொதுவாக நம் சூழலில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இத்தகைய ஓர் அதிதீவிர உணர்ச்சிகரமான கணம் வாழ்க்கையில் உருவாகியிருக்கும். அதன் மூலம் அவர்கள் ஒன்றும் அழிந்திருக்க மாட்டார்கள். இந்த அனல்காற்றுக்குள் இருக்கும்போது அது அதி உக்கிரமான ஒன்றாகபப்டும். அதன் வட்டத்தில் இருந்து வெளியே வந்ததுமெ அது அற்பமானதாக சாதாரணமானதாக மிக இயல்பானதாக மாரி அபப்டியே பின்னகர்ந்துவிடும். நினைவுகளில் ஒன்றாக மாறிவிடும். இதற்குப்போயா இந்த  அவஸ்தை என்று புன்னகைசெய்யும்படி ஆகிவிடும். பெரும்பாலான உறவின் வெம்மைகளே நாம் அந்தக் கணத்தில் நம்மை அறியாமலேயே உக்கிரப்படுத்திக் கொள்வனதான்.
அப்படியான உக்கிரமே 14 அத்தியாயங்கள். உச்சத்திற்கு பிறகு உருவாகும் தெளிவே கடைசி அத்தியாயம். கதையில் சொல்லவந்த விஷயம் அந்த உச்சத்தின் வினோதமான வசீகரத்தைப் பற்றித்தான்
ஜெ
அன்புள்ள ஜெ,
“அனல் காற்று ” வாசித்து கொண்டு இருக்கிறேன். அந்த கதை நான் யோசித்து கொண்டு இருக்கும் பல விஷயங்களை தொட்டு செல்கிறது.
அருன் ஜோவிடம் ” மனுஷ மனசு சிம்பிள் தியா¢க்கெல்லாம் கட்டுபட்டதில்லை” என்கிறான். கல்லூ¡¢ பருவத்தில் Psychology தொ¢ந்தால் மனிதர்களை பு¡¢ந்து கொள்ளலாம் என்ற முதிரா நோக்கு எனக்கு இருந்தது.பின்னர் மனித மனத்தை அப்படியெல்லாம் எளிதாக பு¡¢ந்து கொள்ள இயலாது என்று உணர்ந்தேன். மனித மனத்தை கோட்பாடு சட்டத்தால் கட்ட முடியாது. அப்படி செய்தால் அதை மீறி செல்வதே அதன் முதல் குறிக்கோளாக இருக்கும். அந்த கோட்பாட்டாளானே அதை மீறி வெகு தூரம் சென்று இருப்பான்.இது என்னுள் நிகழும் உரையாடலின் ஒரு தரப்பு.
இன்னொரு தரப்பு. இன்றைய மனித மனம் கூட்டு வாழ்க்கை மற்றும் பா¢ணாமத்தில் இருந்து பெறபட்டது. பின்னோக்கி முடிவிலியை நோக்கி ஒடுகின்ற ஒன்று.மிகச் சிக்கலானது. சொற்களால் பு¡¢ந்து கொள்ள இயலாதது. ஆனால் இதை ஒரு நுண்ணிய மனம் உள்ளுணர்வால் முழுமையாக பு¡¢ந்து கொள்ளும் போதோ அல்லது தானாக நிகழும் போதோ மனித மனம் என்பது ஒன்றுமே இல்லை; மிக எளியது; என்றுதான் தோன்றுமா ? அப்படி உணர்ந்தவர்களைத்தான் ” தன்னை உணர்ந்தவர்கள் ” என்று சொல்கிறோமா ?
அன்புடன்,
ராஜா.
அன்புள்ள இளையராஜா
ஒரு நதியை எப்படி புரிந்துகொள்ள முடியும்– அது போகும் நிலத்துக்கு ஏற்ப அது வடிவமும் இயல்பும் கொள்கிறது. அதன் வேகமும் வளைவுகளும் அந்த நிலத்தால் தீர்மானிக்கபப்டுகின்றன.  அதுவே மனித மனத்துக்கும் பொருந்தும்
ஆனால் நீரைப்புரிந்துகொண்டால் நதியை புரிந்துகொள்ளலாம். ஒருவரால் தன் மனதை– சக மனிதனின் மனத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு புரிதல் மனிதனுக்குச் சாத்தியம். அது நிபந்தனையற்று, அறிபடு பொருளில் இருந்து முழுமையாக விலகி நிற்கும்போது மட்டும், சாத்தியபப்டுவது. அதை அடைந்தவரே ஞானி
ஜெ
அன்புள்ள திரு ஜெயமொஹனுக்கு,

தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம்.

ஒரு சராசரி வாசகனான என்னுடைய வாசிக்கும் திறனையும் தரத்தையும் தங்களுடைய எழுத்து கொஞ்சம் மேம்படுத்தியுள்ளது என்று நம்பிக்கொண்டு இருப்பவன் நான்.  தங்களுடைய சமீபத்திய கதைகளாகிய ஊமைச் சென்னாய் மற்றும் மத்தகம் படித்து அசந்து போனவன் . (தற்போது விஷ்ணுபுரம் படித்து வருகிறேன்)

ஆனால் தங்களுடைய “அனல் காற்று” என்னை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது.  காட்சி சித்தரிப்பில் நுணுக்கம் மற்றும் அடர்த்தியின்மை (மனதையே காடாகவும்  ஆனையாகவும் மாற்றும் இது ஜெயமோகனா இது?); சம்பவங்கள் மற்றும் வசனங்களில் ஒரு சினிமாத்தனம், செயற்கைத்தனம்;  மிகவும் சுலபமான நீர்த்து போன ஒரு முடிவு. போதாக்குறைக்கு பல இடங்களில் சுஜாதாவை நினைவூட்டும் நடை(குறிப்பாக ஜோ பாத்திரப்படைப்பு).

என்ன ஆயிற்று ஜெயமோகன்? ஏன் என்னால் இந்த கதையை கொஞ்சமும் ரசிக்க முடியவில்லை? எதையாவது கோட்டை விட்டு விட்டேனா?     நேரமிருந்தால் இரண்டு வரி எழுதுங்கள். மிக்க மகிழ்வேன்.

என்னைப்பற்றி: 39 வயது ஆண். USA வில் கூலி வேலை பார்க்கிறேன் – software programmer ஆக.

 ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்

உங்கள் கடிதத்துக்கு நன்றி

உங்கள் கடிதம் உங்களுடைய வாசிப்புக்கோணத்தைக் காட்டுகிறது. அது சரியாக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். என்னுடைய தரப்பில் ஒன்றுதான் சொல்லமுடியும். என்னுடைய எல்லா கதைகளிலும் கதைக்குள்செல்ல எந்த தீவிரமான முயற்சிகளை எடுத்துக்கோன்டிருப்பேனோ அதைத்தான் இங்கேயும் செய்திருக்கிறேன். இந்தக்கதையில் நான்கு மனிதர்கள் அல்லாமல் வேறு சூழல் விவரணைகள் வரக்கூடாது என்ற எண்ணம் எனக்கிருந்தது. நான்கு மனங்கள் — உறவுகள் மட்டும். கவித்துவத்தைப் பொறுத்தவரை இதிலும் ஒரு மூர்க்கமான நேரடியான கவித்துவம் இருக்கிரது என்பதே என் எண்ணம். என்னைப்பொறுத்தவரை ஒரு இடத்தில் என் மனம் தடுபடுகிறது. அந்த இடத்தில் தோண்டுகிறேன். அவ்வளவுதான். எழுதி முடித்ததுமே அந்த இடம் முடிந்துவிடுகிறது. எதுவந்ததோ அதுதான் அது

என்னுடைய படைப்புகள் ஒனுடன் ஒன்று தொட்ர்பில்லாதவை. ஆகவே ஒரு படைப்பை மிக விரும்பி இன்னொன்று கொஞ்சம்கூட பிடிக்காதவர்கள் பலர் உண்டு. விஷ்ணுபுரம் படித்தவர்களுக்கு ஏழாம் உலகம் பிடிக்கவேயில்லை. கன்யாகுமரி பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கவில்லை. இது தனிப்பட்ட ரசனைகளைச் சார்ந்தது.

ஜெ

முந்தைய கட்டுரைசிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு
அடுத்த கட்டுரைஅவுஸ்திரேலியாவில் தமிழ்