நழுவும் தருணம்- கலைச்செல்வி

கிராதத்தில் அர்ஜுனனின் அம்பென தாவிப் பறந்த நாவல், மாமலரில் ஓரி்டமாக அமர்கிறது. அது கோமதி நதிக்கரை. அது சொல்வளர்க்கும் காடல்ல, வேத சொற்களற்ற யானை, புலி, மான், எருது, குரங்குகள் வசிக்கும் காடு. தருமனின், அர்ஜுனனின் தேடல்களுக்குப் பிறகு இது பீமனின் முறை. அதற்கு ஜெயத்ரதன் என்ற நிமித்தக்காரணம் தேவைப்படுகிறது. இமயத்தின் அடிவாரத்தில் கோமதி நதிக்கரையில் அமைந்திருந்தது கோதவனம். பீமன் அவ்வனம் திருத்தி சோலையமைத்து வானரங்களோடு வாழ்க்கையமைத்துக் கொள்ள, தருமர் நுாலோடும் திரௌபதி ஆணவமற்ற எளிய அடுக்களைப் பெண்ணாகவும் மற்ற இருவரும் அவளுக்கு உதவி புரிபவர்களாகவும் இருந்த நேரத்தில் படைக்கலம் தேடிச் சென்ற அர்ஜுனன் வந்து சேர்கிறான்.

மாமலர் என்பது எது? மலரா? மலர்தலா? மலரும் தருணமா? நறுமணமா? மலரிருந்து மணத்தை பிரிக்கவியலுமா? அதை மனமென்பதா? மணமென்பதா? மலர்தலின் கணமெனும் முகூர்த்தென்பதா? நுணுக்கத்தைத் தேடி நுண்ணிழைப்பாவாத மனங்கொண்ட பீமன் பயணம் தொடங்குகிறான். சிந்து நாட்டரசனும் துச்சளையின் கணவனுமான ஜயத்ரதன் உறவு முறையில் சகோதரி என்றாகும் திரௌபதியை கோமதி ஆற்றுக்கு நீராட வருகையில் கவர்ந்துச் சென்று விடுகிறான். சகோதரர்களின் துடிப்பும் ஆற்றலும் அவளை மீட்டுக் கொண்டு வந்தாலும் பீமனின் சினத்தையும் அன்று துரியோதனனின் அவையில் வாளாவிருந்த தங்கள் கையலாகாத இழிநிலையை வென்று விடுபவன் போன்ற அவன் நடத்தையையும் திரௌபதியால் உணர முடிகிறது. அறம் மறம் நியதி நெறி என்றெல்லாம் வேடமிட்டுக் கொண்டு வந்த கோழைத்தனத்தை அனுபவப்பட்டிருந்த அவளுக்கு ரௌத்திரத்தை கண்களில் ஏந்திய பீமன் மீது – தன்னை தானென்பதற்காகவே விரும்பும் பீமன் மீது – மனம் குழைந்து நிற்கிறது. அம்மனநெருக்கம் மலரின் நறுமணமென அவளை சூழ்கிறது. அது காதலின் மணமா? அல்லது கல்யாண சௌந்திக மலரின் மணமா? விழைவுகளற்ற, கவித்துவமற்ற, பலம் வாய்ந்த கரடுமுரடான பீமனால் அதை உணரவியலுமா? காதல் கொண்ட மனத்தால் அதனை சிந்திக்கவியலாது. அவள் அம்மென்மையை பருப்பொருளென, மலரென எடுத்து வருமாறு பீமனிடம் கோருகிறாள். கோடாரியால் மலைகளை பிளப்பவன் மலரை பறித்து வர புறப்படுகிறான். பெயர் தெரியாத, நறுமணத்தால் மட்டுமே உணரப்பட்ட, அதுவும் மனைவியின் மனதால் உணரப்பட்ட நறுமணத்துக்குரிய மலரைத் தேடிய பயணம். அதனாலேயே முண்டனையும் உடனழைத்துக் கொள்கிறான். முண்டன் உளம்புகு கலை அறிந்தவன். காலம் கடக்கக் கற்றவன், காற்றானவன். அல்லது அனுமன்.

 

இந்நாவலில் பிறழ்உறவுகள் உட்பட பலவகையான ஆண் பெண் உறவுகள் இடம் பெறுகின்றன. காதல் மனதின் ஆழத்திலிருந்து எழும் உணர்வா? அல்லது மனங்கொள்ளும் விழைவுகளையும் கணக்கிலேற்றிக் கொண்டு அணுகும் தன்மையா? அத்தருணம் நகர்கையில் முன்னது வீழ்ந்து விடுமா? காலமும் அண்மையும் பின்னதில் அவ்வுணர்வை செலுத்தி விடுமா? பிரஹஸ்பதியின் மனைவியான தாரை என்பவளுக்கு அத்ரிக்கும் அனுசூயைக்கும் பிறந்தவனும் கணவனின் சீடனுமான சந்திரன் மீது காதல் உண்டாகிறது. அவர்களுக்கு புதன் பிறக்கிறான். புதனுக்கும் இளை-க்கும் பிறந்தவன் புரூவரஸ். அவன் ஊர்வசியை மணக்கிறான்.  அவனில் ஏழு மைந்தர்களை பெற்ற அவள் கூடுக் களைவது போல உதிர்ந்து தேவலோக பெண்ணாகி விட, திகைத்துப் போன புரூவரஸ் அதுவரையில் காத்து வந்த அறம் வழுவி மறம் தழுவி நிற்க, அந்தண அமைச்சரான பத்மன் அதிகாரத்தை கையிலெடுத்து புரூவரஸின் மைந்தன் ஆயுஸை அரசனாக்கி வடக்கிருந்து உயிர்த் துறக்கிறான். காட்டில் விடப்பட்ட புரூவரஸ் அறத்தின் பொருட்டு காமத்தை பொருளையும் விட்டவன், பின் அவையிரண்டிற்காக அறத்தை விடுத்தவன். இப்போது மூன்றையும் விடுத்து விடுதலையானதில் விலங்கென்றாகி மகிழ்ந்திருந்தான்.

அடுத்து ஆயுஸ் இந்துமதி காதல். ஆயுஸ் அயோத்தி இளவரசியான இந்துமதியை மணந்து நகுஷனை பெறுகிறான். அவன் கலத்தையே எரிக்கும் கனல். அது அவன் தன் தந்தை புரூவரஸிடம் வேண்டி பெற்றுக் கொண்ட சாபம். இந்திரனை வெல்லும் ஆற்றல் கொண்டவனென ஜாதக அமைப்புக் கொண்ட நகுஷனை நாகர் குலத்தவனான ஹுண்டன் கவர்ந்துச் சென்று விட மகனை காணாத துயரத்தோடு ஆயுஸ் மறைகிறான். காட்டில் வளர்ந்த நகுஷன் தான் யாரென அறிந்ததும் குருநகரிக்கு வருகிறான். தனக்காக காந்திருந்த அசோககுமாரியை மணக்கிறான். ஆயினும் சந்திரகுலத்தில் அரசிகள் நிலைப்பதில்லை. ஊர்வசி தேவகன்னிகை என்பதால் பாதியில் விலகி விடுகிறாள். இந்துமதியோ தென்திசை அழைப்புக்கு இளமையிலேயே செவி சாய்த்து விடுகிறாள். நெறிகளால் கட்டுப்படுத்தவியலாத விசித்திரமான இளமையும் முதுமையும் கொண்ட பெண்ணான அசோககுமாரியும் இறந்துப் போகிறாள். ஹுண்டனும் அவளை விரும்பியவனே.

காதலின் நறுமணத்தை திரௌபதியைப் போல இந்திரனும் உணர்கிறான். அத்தருணத்தில் அவன் விருத்திரனை கொன்ற பழியிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள மானசசரோவர் ஏரியில் மூழ்கி தவம் செய்துக் கொண்டிருக்கிறான். அதனை வாய்ப்பாக்கி இந்திரலோக தலைவன் பதவியை கைப்பற்றிய நகுஷன் அத்தலைவியையும் தன்வசப்படுத்த விழைய, மனைவி மீது கொண்ட காதலை இந்திரன் மலரின் மணமென உணர்கிறான். அதனை அழிக்க செல்லும் நகுஷன் அகத்தியரின் சாபம் பெற்ற நாகமென யமுனை நதிக்கரையில் குகையொன்றில் வந்தமைகிறான். மண்ணுலகு வந்து நெளிகிறான் என கதைக்குள் கதை பாதையமைக்க, முகராத நறுமணத்தை பார்த்தறியா மலரில் தேடும் பீமனுக்கோ அது அறிந்து கொள்ளவியலாத உள விளையாட்டென்றும் பொருளற்ற ஒரு ஆழ்துழாவலென்றும் தோன்றுகிறது. ஆயினும் விட முடியாது. அது திரௌபதி மீது அவன் கொண்ட காதல்.

அடுத்தது கசன் மீது தேவயானி கொள்ளும் காதல். அது திரௌபதிக்கு கர்ணனின் மீது ஏற்பட்ட காதலை போல கள்ளமற்றது. எவ்விழைவுகளுமற்று வெறும் பெண்ணென ஆண் மீது மனங்கொள்ளும் பெருவிழைவு அது. ஆனால் பேரரசியென தந்தையின் சொல்லால் போர்த்தப்பட்ட திரௌபதியின் மனம் ஒருபோதும் அவளுடைய காதலை நிறைவேற்றாது. பேரோசையின் அடுத்தெழும் பெருமவுனம் போல நிறைவேறாத காதல் வெறுப்பென மறுவடிவம் கொள்கிறது. பெருங்காதலின் பெருவிசை. அவ்வகையில் அவளுக்கொரு முன்னோடி இருந்தது. அது தேவயானி என்ற பேருதாரணம்.  ஆணவம், அழகு, மணிமுடி என அவளைப் பற்றி நிழலிடை எழும் வெய்யில் போல வெண்முரசு நாவல் வரிசையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தவை முழுவடிவம் கொள்வது இந்நாவலில்தான்.

அவள் அசுரகுருவான சுக்ரரின் மகள். இந்திரனின் துணைவி சச்சியின் மகளான ஜெயந்தியின் மகள் என்ற வகையில் தேவயானி இந்திரனின் பேத்தியும் கூட. சுக்ரர் தேவர்களை வழிநடத்தும் பிரஹஸ்பதியின் சீடர். தைத்ய குலத்தைச் சேர்ந்த அசுர பேரரசனான விருஷபர்வன் விண்ணையும் வெல்லும் பெருநோக்குக் கொண்டு சுக்ரரின் உதவியைக் கோருகிறான். சுக்ரர் சஞ்சீவினி வித்தையறிந்தவர். அவர் புடவியின் நெசவை மீறும் இறவாவரத்தை தைத்யகுல அசுரர்களுக்கு அளிக்க, தேவ அசுர போர் நிகழ்கிறது. அது நிகர்நிலைகளின் போர் என்பதால் குறையவேயில்லை. குறைய வேண்டுமெனில் சஞ்சீவினி நுண்சொல்லை சுக்ரரிடமிருந்து தேவர்குலம் கற்றேயாக வேண்டும். அதற்கென பிரஹஸ்பதி தன் மகனை சுக்ரரிடம் அனுப்புகிறார். அவனே கசன். அழகியத் தோற்றம் கொண்ட துடிப்பான இளைஞன். தேவயானி அவன் மீது காதல் கொள்கிறாள்.

கசனின் திட்டமறிந்த விருஷபர்வனின் ஆட்கள் அவனை கொலை செய்து அவ்வுடலை ஓநாய்க்கு உணவாக்குகின்றனர். மகள் துடிக்க, சுக்ரர் சஞ்சீவினி மந்திரத்தால் அவனை மீட்கிறார். இரண்டாவதான கொலை முயற்சியில் அவனுடல் அவளின் வளர்ப்பு வேங்கைகளுக்கு உணவாக்கப்படுகிறது. மந்திரம் வேங்கைகளின் உடலைக் கிழித்தெடுத்து அவனை மீட்கிறது. மூன்றாவது முயற்சியில் அவனுடல் கறியாக சமைக்கப்பட்டு சுக்ரருக்கு அளிக்கப்படுகிறது. ஓநாய்களும் வேங்கைகளும் வயிறு வெடித்து இறந்தனபோல் அவர் இறக்க முடியாது. ஆகவே அவர் அதனை குழந்தையாக வளர்த்தெடுக்கிறார். அவரின் வித்தையும் அவனுள் வந்து விடுகிறது.

வெளியே வந்த அவனை தேவயானி பெருங்காதலோடு அணுக, அவனோ சுக்ரரின் வயிற்றிலிருந்து வந்தமையால் தான் அவளின் உடன்பிறந்தவனே என அவளை மறுத்து விட்டுக் கற்றுக் கொண்ட வித்தையோடு வந்த வேலை முடிந்ததென அங்கிருந்து சென்று விடுகிறான். நிராகரிப்பு இறப்புக்கு நிகரானது. காதல் தாளவியலாத விசையென அவளை முக்காட்டுகிறது. அதன் பேருச்சமென  எதன் பொருட்டு இங்கு வந்தீர்களோ அது நிறைவேறாது என்று அவள் சாபமிட, பதிலுக்கு அவனும் உன் ஆணவம் முற்றழிந்து வெறும் பெண்ணென்றாவாய். அன்று நீ உதிர்க்கும் கண்ணீரைக் காண நான் வந்து நிற்பேனென பதில் சாபமிடுகிறான்.

கசனின் செல்கைக்கு பிறகு சுக்ரர் தனது தவச்சாலையை விருஷபர்வனின் ஹிரண்யபுரிக்கு மாற்றிக் கொள்கிறார். விருஷபர்வனின் ஒரே மகள் சர்மிஷ்டை. அந்தஸ்தில் நிறைந்தவள், அழகில் குறைந்தவள். மன்னன் மகள் என்பதால் நகுஷனின் மகன்களுள் ஒருவனும் குருநகரியின் மன்னனுமான யயாதிக்கு பேசி முடிக்கப்படுகிறாள். அந்தணப்பெண்ணும் பேரழகியுமான தேவயானியுடன் அவள் நெருங்கிப் பழகி இருவரும் தோழிகளென்றாகி விட்ட நிலையில் ஏதோ காரணத்தால் சர்மிஷ்டையின் அந்தஸ்து அவளின் வார்த்தைகளின் வழியே சற்றே மேலெழும்ப, தேவயானி சிவப்புநிறத்தால் சீண்டப்படும் காளையாகிறாள். தன்னை காப்பாற்றிய யயாதியை மணமகனாக்கிக் கொள்கிறாள். அவனுக்கு பேசி முடிக்கப்பட்ட சர்மிஷ்டையை சேடிப் பெண்ணாக்கி தன்னுடன் குருநகரிக்கு அழைத்துச் செல்கிறாள். விருஷபர்வன் குலமா? மகளா? என்றெழும் மன விவாதத்தில் பிந்துவது மகளே.

கல்யாணத்தில் இணையவியலாத யயாதியும் சர்மிஷ்டையும் காதலால் இணைகின்றனர். தேவயானி அக்னி. அவளை நெருங்க முடியாது. அசோகவனியில் சேடியென வாழ்ந்து வரும் சர்மிஷ்டையை தேடி தேடி காதலிக்கிறான் யயாதி. அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்து வளர்ந்து வளரிளம் பருவத்தையடைந்தபோதுதான் தேவயானிக்கு கணவனின் காதல் தெரிய வருகிறது. அம்பை பெருங்கனலான இடம் இது. காதலனால், காசியால் நிராகரிக்கப்பட்ட அவ்விளவரசி தன் ஆணவமனைத்தையும் தொலைத்து மண்டியிட்டு தீயநிழலென தன் வாழ்வின் மீது கவிழ்ந்த பீஷ்மனின் மீது தன் மனம்  கொள்ளும் காதலின் விநோதத்தை உணர்கிறாள். நால்வேதங்களும் ஆறு தரிசனங்களும் கற்றறிந்த அவள் தன்னை ஏற்குமாறு அவரிடம் மண்டியிடுகிறாள், இறைஞ்சுகிறாள். அவர் மறுத்து விட,  கனலென எழுகிறாள். தேவயானியின் நிலையும் அதுவே. இருவருமே வஞ்சிக்கப்பட்டவர்கள். பெண்ணென்பதால் சிறுமை செய்யப்பட்டவர்கள். அவர்களை விட உயர்ந்திருப்பதை ஆண்கள் உணர்ந்ததாலேயே தோற்கடிக்கப்பட்டவர்கள். நுகர்ந்து துறக்கப்படுபவர்கள். நல்லுணர்வால் ஏமாற்றப்படுபவர்கள். பெண்ணின் பெருஞ்சினம் என்னவென்பதை ஆண்கள் அறிய வேண்டும். தேவயானியின் உளவீழ்ச்சி பேரதிக விசைக் கொண்டது. அது அவள் கொண்ட உளநிமிர்வின் உச்சத்தின் வீழல். யயாதியின் கோழைத்தனமான பதில் வினைகள் அவளை மேலும் சினமேற்றுகிறது. கோபம் உச்சம் தொட சுக்ரரின் காலடியில் விழுந்துக் கிடந்த அவனை உடலாலும் சொற்களாலும் வதைத்து விட்டு  வெளியேறுகிறாள், முற்றிலுமாக.

சர்மிஷ்டையின் சொற்களுக்கு அத்தனை ஆழம் தேவைப்படுவதில்லை. சுக்ரரிடம் விழுந்து மன்றாடி சாபம் பெற்று பின் சாபநிவர்த்திப் பெற்று இளைஞன் என்றாகி காமம் கொள்ள வந்த கணவன் யயாதியின் மீது அவளுக்கென்ன மரியாதை இருந்து விட முடியும்? அதிலும் அவளுடைய மகனின் இளமையை பெற்றவனிடம்? தான் சாபமெனப் பெற்ற முதுமையை மகன் புருவிற்கு அளித்தவனிடம்? அதுவே அவளை தேய செய்திருக்க வேண்டும். எலும்பின் மீது ஒட்டி வைத்த சதையென உடலை உருக்கியிருக்க வேண்டும். காலத்தை விடவும் காடு தன் வஞ்சத்தை கரைப்பதை உணரும் திரௌபதி அதனை பிடிவாதமாக இருத்தி வைத்துக் கொள்வதை போல தேவயானியும் மானுடக் கற்பனைகள் தீண்டாத சூரியன் வரைந்து கொண்டிருக்கும் காட்டில் புலரியில், இருத்தல் என்ற இனிமைக்குள் தன் வெறுப்பும் ஆணவமும் வஞ்சமும் இளகுவதை உணர்ந்து அதனை இறுகக்கட்டிக் கருவென சுமக்கிறாள். இறுதியில் அதனை ஈன்ற பிறகு கிடைக்கும் விடுதலை அவளுடலை மெருகேற்றுகிறது. இருவரின் எண்ணத்துள் எங்கேனும் யயாதி இருந்திருப்பானா? அக்கானகத்தில் ஒட்டியொட்டி அமைக்கப்பட்டிருந்த அவ்விருவரின் சிலைகளும் அவர்களின் எண்ணங்களின் ஒருமையன்றோ? புருவின் குலச்சரடில் எழுகிறது அஸ்தினபுரி.

மாமலர் என்பது பெருங்காதலின் பருண்மை வடிவு. பகை விலக்கி வஞ்சமகற்றி துயர்களை ஐயங்களை விழைவுகளை பற்றுகளை கடன்களை என அனைத்தையும் உதறிய பின் அடைவது. மணம் என்பது மனமென்னும் தன்னுணர்வு எழுந்து பருப்பொருளைத் தொடுவது.  அது ஒரு தருணம். காலம் அதன் மேல் ஓடுவதில் அது நழுவி விடும். திரௌபதி தான் கோரியதையே மறந்துப் போனதாக கூறுகிறாள். மலரை கொய்த பின்னும் அதன் காம்பில் ஒட்டியிருக்கும் பாலின் மீது காலம் ஓடி அதனை உறைய வைக்கும் வரை நீடிக்கும் மலர்மை. அதை இன்னதென்று விவரிக்க விழைந்தால் இன்னுமொரு பயணம் தொடங்கி விடலாம். தர்மர் அடைந்ததென்ன? என்றபோது பீமன் அறியேன், ஆயினும் சிலவற்றை துறந்தேன் என்கிறான். அவன் தேடி சென்றதை அவன் வரையில் அடைந்திருப்பான். திரௌபதி வரவிருக்கும் வெறுமைவெளிகளைக் கடந்து சென்று அதனை உணர்வாள். அவர்களை தனிமையின் ஆழம் நோக்கி காலம் நகர்த்திக் கொண்டிருந்தது.

முண்டன் காமத்தை அறியாதவன் என்றாலும் துாய காதலை அறிந்தவன். வினாவற்ற மெய்க்காதல் விழைவற்றது, வினாவற்றது, அது சீதை, ராமன் மீது கொண்டதைப் போன்றது என்பதறிவான்.

கலைச்செல்வி 

கலைச்செல்வி தமிழ்விக்கி 

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : [email protected] 

Phone 9080283887)

 

 

முந்தைய கட்டுரையாக்கை- முத்துக்குமார்
அடுத்த கட்டுரைஅருட்செல்வன்