உயிர்மை ஜனவரி இதழ்

அச்சிதழ்களை வாசிப்பது மிகவும் குறைந்துவிட்டது. எனக்கு வந்துசேரும் இதழ்களை டைனிங் டேபிளில் அமர்கையில் மட்டும் மேலோட்டமாக புரட்டுவதுடன் சரி. மிகமிக அரிதாகவே சுவாரசியமாக ஏதேனும் கண்ணுக்குப் படுகின்றன. இணைய இதழ்களையே முழுமையாக வாசிப்பதில்லை – அவற்றில் எவரேனும் ஒரு படைப்பைப் பரிந்துரைக்கவேண்டும். என்னுடைய விரிவான நண்பர் வட்டத்தின் பார்வையில் இருந்து எந்த நல்ல படைப்பும் தவறவிடப்படாது என நான் நினைக்கிறேன் – இதுவரை அது பொய்த்ததில்லை.

அச்சிதழ்களுக்கு ஒரு அடிப்படை வரையறை உண்டு, பக்க எல்லைதான். அந்தக் காரணத்தாலேயே அவை படைப்புகளை தேர்வு செய்தாகவேண்டும். ஓர் இணைய இதழ் அனைத்துப் பக்கங்களையும் வாசகர் படிக்கவேண்டும் என நினைப்பதில்லை. ஆனால் அச்சிதழ் அப்படி எதிர்பார்க்கிறது. ஆகவே அச்சிதழில் ஓர் ‘ஆசிரியரும்’ அவருடைய தெரிவும் உண்டு. அவையனைத்துமே ஆசிரியரின் பரிந்துரைகள் என்று கொள்ளவேண்டியதுதான்.

உயிர்மை ஜனவரி 2025 இதழ் கைக்குக் கிடைத்ததும் அதன் எல்லா பக்கங்களையும் படித்துவிட முடிவுசெய்தேன். இப்படிப் படித்து இருபதாண்டுகளாவது ஆகியிருக்கும் என நினைக்கிறேன்.  விஜயகுமார் எடுத்த சரவணன் சந்திரனின் மிகநீண்ட நேர்காணல் இதழின் மையம்.

சரவணன் சந்திரன் தன்னுடைய வாழ்க்கையை, எழுத்தை முன்வைத்து விரிவாகப் பேசியிருக்கிறார். அறிவார்ந்த தேடல் கொண்ட ஒருவரின் பலதளப்பார்வையும் வரையறைகளும் கொண்ட பேட்டி என்று சொல்லமுடியாது. ‘எக்ஸ்க்ளூசிவ்’ என்று சொல்லப்படும் பேட்டிகளில் அது அவசியம் என்பது பொதுவான மரபு. ஆனால் இந்தப் பேட்டியில் ஓர் எழுத்தாளராக அவருடைய பரிணாமம் இருக்கிறது. தனிவாழ்க்கைக்கும் எழுத்துக்குமான அவருடைய ஊடாட்டமும் முரண்பாடும் உள்ளது. அவர் செயலாற்றிய வெவ்வேறு துறைகளுடன் அவர் எழுத்து கொண்டுள்ள உறவு உள்ளது. அவ்வகையில் ஒரு நல்ல பேட்டி என்று சொல்லலாம்.

சுவாரசியமான இன்னொரு படைப்பு இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘சங்க காலம் என்னும் அழகிய கற்பனை’. சங்ககாலம் என ஒன்று இருந்தமைக்கு அக்காலகட்டத்துச் சான்றுகள் ஏதுமில்லை என்பது தொடர்ச்சியாக ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டதுதான். அவை பிற்கால சமணமுனிவர்களால் அவர்கள் நடத்திய பல்லாயிரம் கல்விச்சாலைகளின் தேவைக்கேற்பத் தொகுக்கப்பட்ட நூல்கள் என்கிறார்கள் இவர்கள். சமணர்கள் பாட்டியல் எனப்படும் இலக்கண நூல்களையும் அதன்பொருட்டு உருவாக்கினர். அவை பெரும்பாலும் அழிந்துவிட்டன. தொடக்ககால ஆய்வாளர்களுக்குப் பின் துளசி ராமசாமி விரிவாக இதைப்பற்றி ஆய்வுசெய்து பெருநூல் ஒன்றை எழுதியுள்ளார். (துளசி ராமசாமி நூல் மதிப்புரை)

ஆனால் சங்ககாலத்துப் படைப்புகளை இப்பார்வை நிராகரிப்பதாகச் சில அடிப்படை மொழிவெறியர்கள் எடுத்து கொள்ளக்கூடும். உண்மையில் சங்கப்பாடல்கள் மேலும் கட்டற்ற படைப்புவெளி சார்ந்தவை, அரசு அல்லது அமைப்பு சாராதவை என்றுதான் இந்தப்பார்வை வரையறுக்கிறது. சங்ககாலத்துப் பாணனின் சுதந்திரம் சங்கப்பலகைகளால் வரையறை செய்யப்பட்டது அல்ல. கொல்லனும் வணிகனுமெல்லாம் கவிதை எழுதிய அக்காலகட்டம் ஒருவகையில் ஒரு ‘மக்கள் இயக்கம்’, அது ஒரு ‘மக்கள் கவிதை’ என இவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் நான் சங்கம் என்னும் அமைப்பு பிற்காலத்தில் (அதாவது கலித்தொகைப் பாடல்களின் காலகட்டத்தில்) இருந்திருக்கலாம் என்றும், அதற்கு அரச ஆதரவு இருந்திருக்கலாம் என்றும், முழுமையாக இல்லையென்றாலும் அது அக்காலக் கவிதையில் ஒரு தேர்வுமுறையை உருவாக்கியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன். அதற்கு வரலாற்றாதாரம் ஏதும் என்னிடமில்லை. சங்கக் கவிதைகளிலுள்ள பொதுமையம்சம், (இலக்கணம், பேசுபொருள் இரண்டிலும்) அதிலுள்ள செவ்வியல்தன்மை ஆகிய இரண்டுமே அதற்கான சான்றுகள் என்பது என் எண்ணம். அக்காலகட்டத்தின் இயல்பால் தவிர்க்கமுடியாதபடி அதிலிருந்த நாட்டார் அம்சம் செவ்வியல் இலக்கண நோக்கு கொண்ட சங்கம் என்னும் அமைப்பால் களையப்பட்டிருக்கலாம்.

சிறுகதைகளில் திருச்செந்தாழையின் நிறைசூலி, செந்தில் ஜெகன்னாதனின் போகன் வில்லா இரண்டும் புதிய எதையும் நோக்கிச் செல்லவில்லை என்றாலும் நல்ல கதைகள் என்று தோன்றியது. மற்ற கதைகள் என்னைக் கவரவில்லை. ஓர் நடுத்தர இதழில் இத்தனை பக்கங்களை நல்ல வாசிப்புக்கென உருவாக்கமுடிந்தமை சாதனைதான். படைப்புகள் பெறுவதற்கு படவேண்டிய பாடு என்ன  என்று தெரியும் என்பதனால் இதழ் தயாரிப்பாளர்களுக்கு என் பாராட்டுகள்.

இந்த இதழை வாசிக்கையில் எனக்கு தோன்றிய ஓர் எண்ணம், ஒரு சிற்றிதழ் என்பதன் தேவையை இவ்விதழே பாதிப்பங்கு நிராகரிக்கிறது என்பதுதான். முகநூலுக்குரிய அசட்டு மொழியிலும், அடிப்படை முதிர்ச்சிகூட இல்லாத வம்பளப்பு மனநிலையிலும் எழுதப்பட்ட யுவகிருஷ்ணா, ஆர்.அபிலாஷ், அதிஷா கட்டுரைகள் ஓர் இலக்கிய இதழில், அது நடுவாந்தர இதழாக இருந்தாலும், ஏன் வெளியாகவேண்டும்? அவை போன்றவையே முகநூலில் எழுதிக்குவிக்கப்படுகின்றன. அவை அங்கே வெளிவந்து இரண்டுநாளில் மறைவதனால் எந்த இழப்புமில்லை. அச்சிதழில் வெளிவருகையில் அவை தாளையும் உழைப்பையும் வீணடிக்கின்றன.

முருகவேள் எழுதியுள்ள நீண்ட சினிமா அரட்டையும் வாசிக்கத்தக்க இதழ் ஒன்றில் வெளிவரவேண்டியது அல்ல. அத்தகைய நீள நீள சினிமா ஆய்வுகள் இன்று ஒவ்வொரு வெள்ளிசனியிலும் இணையவெளியில் நூற்றுக்கணக்கில் வெளியாகின்றன. அவற்றுக்கு என்று ஒரு வாசகர்வட்டம் உண்டு, ஆனால் அச்சிதழ்களை பணம் கொடுத்து வாங்கி வாசிப்பவர்கள் அவற்றை விரும்புகிறார்களா என்ன?

இவை இணையவெளியில் வருமென்றால் நான் உடனே ‘பிளாக்’ செய்துவிடமுடியும். அவை வேறேதோ உலகில் அதற்கான கும்பலில் நிகழ்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. என் அறிதலுக்குள் அவை வந்து என்னை தொந்தரவு செய்யாமலிருந்தால் போதும். அச்சிதழ் தூலமாக வந்து நம் உலகுக்குள் நுழைந்துவிடுகின்றன. முகநூலில் தொண்ணூற்றொன்பது சதம் நிறைந்து கொப்பளிக்கும் அவற்றை தவிர்த்துவிட்டு தனக்கான அறிவுச்சூழலில் வாழ நினைக்கும் ஒரு வாசகனிடம் அவற்றை கொண்டுவந்து சேர்ப்பது நல்ல இதழின் பணி அல்ல. இக்காரணத்தாலேயே இவ்விதழ்களை வாசிக்கலாகாது என்று தோன்றுகிறது.

இந்த இதழில் கார்த்திகைப் பாண்டியன் எண்பதுகளின் சிக்கலான சிற்றிதழ் நடையில் மொழியாக்கம் செய்துள்ள எளிமையான போர் என்னும் கதையை 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் மொழியாக்கம் செய்தேன். தமிழில் ஏதோ சிற்றிதழில் வெளியாகியுள்ளது. (அப்போது அதை ‘செண்டிமெண்டல்’ கதை என எஸ்.சங்கரநாராயணன் விமர்சனம் செய்திருந்ததும் நினைவுக்கு வருகிறது) என்னிடம் பிரதி இல்லை, எவரிடமேனும் இருந்தால் அனுப்பலாம்.

முந்தைய கட்டுரைகுருகு ஜனவரி இதழ்
அடுத்த கட்டுரைஅ.பு.திருமாலனார்