என் அணுக்கமான நண்பர் ஒருவர், புத்தகவிழாக்களை ஒருங்கிணைத்தவர், கோவையில் ஒரு கல்லூரி சார்பில் நிகழும் இலக்கியவிழாவில் கலந்துகொள்ள என்னை அழைத்தார். அக்கல்லூரியும் மதிப்பிற்குரியது
என் சார்பில் முடிவுகளை எடுப்பவர்களில் ஒருவரான விஷ்ணுபுரம் பதிப்பகம் செந்தில்குமார் நான் செல்லலாம் என்றார். எனக்கு அந்நண்பர் மேல் பெரும் பிரியமும் உண்டு. போகலாமா என தயங்கினேன். பின்னர் வேண்டாம் என முடிவெடுத்தேன். அதை நேரில் சொல்ல தயங்கி செந்தில்குமாரிடமே சொல்லச் சொல்லிவிட்டேன்.
என்ன தயக்கம்? கல்லூரிகளுக்குச் சென்ற என் அனுபவங்கள் எல்லாமே, ஒன்றுகூட தவறாமல், ஆழ்ந்த உளச்சோர்வை அளிப்பவை. காரணம், இன்றைய மாணவர்கள். அவர்களால் எதையுமே கவனிக்க முடியாது. ஐந்தாறு நிமிடங்கள்கூட விழிகள் நிலைக்காது. நாம் பேசும்போது முற்றிலும் உதாசீனமாக அமர்ந்திருப்பார்கள். பேச்சுநடுவே எதையாவது செய்துகொண்டிருப்பார்கள். ஒருவர் இருவர் அல்ல மொத்த அவையுமே அப்படித்தான் அமர்ந்திருக்கும். அதுதான் மிகப்பெரிய பிரச்சினை. நான் சென்றவை பெரும்பாலும் தமிழகத்தின் மிகுந்த தரம் கொண்டவையாக அறியப்படும் பெருநகர்க் கல்லூரிகள்.
மிகச் சல்லித்தனமான நகைச்சுவைகளை அள்ளித்தெளிக்கும் பேச்சாளர்கள்கூட இந்த மாணவர்கும்பலைப் பற்றி சலிப்புடனேயே பேசுவார்கள். வேடிக்கையாகப் பேசினால் இவர்கள் சிரிப்பார்கள், ஆர்ப்பாட்டம் செய்வார்கள், ஆனால் கொஞ்சநேரத்துக்குள் கவனம் இழந்து சலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களை நோக்கிப் பேசுவது பெரும் சவால். இவ்வளவுக்கும் நம் தொழில்முறைப் பேச்சாளர்கள் கவனிக்காத கும்பலை நோக்கி பேசிப் பழகியவர்கள்.
சாமானியர்களுக்கு தொடர்கவனம் இல்லை என்றாலும் பேச்சாளர்கள் மேல் மதிப்புண்டு, படித்தவர்கள் என்றும் புகழ்பெற்றவர்கள் என்றும் எண்ணிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். கல்லூரி மாணவர்களுக்கு அதுவும் இல்லை. அத்துடன் நம் கல்லூரி மாணவர்களிடமிருக்கும் தன்னம்பிக்கை வியப்பூட்டுவது. அது பரிபூர்ணமான அறியாமையில் இருந்து உருவாவது. அவர்களுக்கு அடிப்படைப் பொது அறிவு என்பதே இல்லை. அவர்களில் பற்பல ஆயிரங்களில் ஒருவர் கூட பாடத்துக்கு அப்பால் ஏதேனும் ஒரு நூலைக்கூட படித்தவர்கள் அல்ல. சமகாலக் கருத்துக்களில் ஏதேனும் ஒன்றை அறிந்தவர்களே அரிதினும் அரிதினும் அரிதானவர்கள். நாளிதழ்களை வாசிப்பவர்களே பற்பல ஆயிரங்களில் ஓரிருவர்தான்.
ஆனால் அவர்கள் அதிபுத்திசாலிகளாக, குழந்தைமேதைகளாக அவர்களின் குடும்பத்தாரால் கருதப்படுகின்றனர். பெற்றோரால் அரசகுமாரர்கள்போல போற்றி வளர்க்கப்படுகின்றனர். ஆகவே இவர்கள் அந்நம்பிக்கையை தாங்களும் கொண்டிருக்கிறார்கள். உலகமே காலடியில் என நினைக்கிறார்கள். அதிலும் உயர்நிலைக் கல்லூரிகளில் படிப்பவர்கள் கொஞ்சம் மதிப்பெண் பெற்றவர்கள். ஆகவே தங்களை ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக கற்பனைசெய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த கணமே அமெரிக்காவுக்குப் பறந்து சுந்தர் பிச்சையின் இடத்தைப் பிடிக்கும் கனவில் இருக்கிறார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் பாடங்கள், கணிப்பொறி விளையாட்டுக்கள், சினிமா, தீனி- அவ்வளவுதான்.
அவர்கள் கல்லூரிவிட்டு வெளியே வந்து, நிஜத்தின் அடிகளைப் பெற்று, நிறுவனங்களின் சுரண்டலுக்கு ஆளாகி, தங்கள் எல்லைகளை உணர கொஞ்சம் பிந்தும். அப்போதுகூட மிகச்சிலரே தங்கள் போதாமையை உணர்கிறார்கள். எஞ்சியோர் தங்கள் ‘தகுதி’ ஏற்கப்படவில்லை என்னும் தன்னிரக்கத்தை சூடிக்கொள்கிறார்கள். உலகத்தையே விமர்சித்துக்கொண்டு எஞ்சிய வாழ்க்கையை தின்றுகுடித்துப்புணர்ந்து முடிப்பார்கள்.
அவர்களிலேயே கொஞ்சம் வாசிப்பை பின்னர் அடைபவர்கள். அவர்கள்கூட எந்தவிதமான அறிவுத்தகுதியையும் அடைவதில்லை. கோழி கிண்டுவதுபோல அங்குமிங்கும் உதிரியாகவே வாசித்து, ரசனைபேதமே இல்லாமல் எல்லாவற்றையும் கலந்துகட்டி, அசட்டுத்தன்னம்பிக்கையுடன் கருத்துக்களைச் சொல்லி, அதில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கல்லூரிகளில் முன்னால் விரிந்திருக்கும் மூடர்த்திரளைப் பார்க்கையில் பெரும் உளச்சோர்வு உருவாகும். எதிர்காலத் தமிழகத்தின் மீதே ஆழ்ந்த அவநம்பிக்கை பிறக்கும். நான் செயல்புரிபவன். செயலாற்றுவதற்கு அவசியமானது நம்பிக்கை. கல்லூரிகளுக்குச் சென்றால் அந்நம்பிக்கை உடைந்து பல நாட்களுக்கு சோர்வு நீடிக்கிறது. ஆகவேதான் கல்லூரிகளை தவிர்க்கிறேன்.
அந்நம்பிக்கையை எனக்கு அளிப்பவர்கள் இன்னொருவகை இளைஞர்கள். படிப்பவர்கள், சிந்திப்பவர்கள், தேடல்கொண்டவர்கள். அவர்கள் மிகமிகச் சிறுபான்மையினர். தமிழகத்தின் பல லட்சம் மாணவர்களில் ஆயிரம் பேருக்குள்தான் அவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் மட்டுமே பேச விரும்புகிறேன். அவர்களே எதிர்காலம் என நம்ப விழைகிறேன். அவர்கள் என்னை தேடிவந்துகொண்டே இருக்கிறார்கள். ரசனையும் நுண்ணுணர்வும் தேடலும் கொண்டவர்கள் எப்படியும் தேடி வந்துவிடுவார்கள்.
அண்மையில் அமெரிக்காவில் வாஷிங்டனின் ACADEMIES OF LOUDOUN கல்லூரியில் அறிவியல்கல்வி பயிலும் மாணவர்களிடம் உரையாடினேன். (அமெரிக்கப் பள்ளியில் ஓர் உரை ) என் கண்முன் அமர்ந்திருந்த மாணவர்கள் எனக்கு ஒரு திகைப்பையே உருவாக்கினர். அனைவருமே 16 அகவைக்குட்பட்டவர்கள் – ஆனால் அக்கல்லூரி தேர்வுசெய்யப்பட்ட தனித்திறன் கொண்ட மாணவர்களுக்குரியது. நான் பேச ஆரம்பித்ததுமே அவர்களின் கண்கள் ஒளிபெற்றன, கூரிய கவனம் உருவாகியது, அதுவே என்னைப் பேசவைத்தது. பேச்சுக்குப் பின் அவர்களுடனான உரையாடல் மேலும் நிறைவை அளித்தது.
அப்படி ஓர் அவை எனக்கு தமிழகத்திலோ கேரளத்திலோ கல்லூரிகளில் அமைய வாய்ப்பே இல்லை. நம் கல்வியமைப்பே வேறுவகையானது. என் கல்லூரி ஆசிரிய நண்பர்களே அதைத்தான் சொல்கிறார்கள். எவருமே நான் கல்லூரிகளுக்குச் சென்று பேசுவதை விரும்புவதில்லை.
“நாங்களே தலையெழுத்தே என வகுப்பு நடத்துகிறோம். நகரக் கல்லூரிகளிலுள்ள கொஞ்சி வளர்க்கப்பட்ட மாணவர்களின் அசட்டு அகங்காரத்தை எதிர்கொள்ளவே முடியாது. சென்றே ஆக வேண்டுமென்றால் சிறிய கிராமங்களிலுள்ள கல்லூரிகளுக்குச் செல்லுங்கள். அங்கே நூற்றில் ஒன்று திறந்த மண்டையாக இருக்கவும் உங்களை மதிப்புடன் செவிகொள்ளவும் வாய்ப்புண்டு. இங்கே இவர்கள் எல்லாம் எதிர்கால தகவல்தொழில்நுட்பத்திற்கான கொத்தடிமைகள்” என்றார் ஒரு கல்லூரி ஆசிரியரான நண்பர்.
ஆனால் அரசுக்கல்லூரி ஆசிரியரான நண்பர் சொன்னார். “கல்லூரிகளில் ஒரு சிந்தனையாளன் அல்லது எழுத்தாளன் பொழுதை வீணடிக்கவேண்டாம். கல்லூரிகளில் பேசும் தொழில்முறை பேச்சாளர்கள் பெரும் கட்டணம் பெற்றுக்கொண்டு வந்து பேசுவதனால் அவர்களுக்கு இழப்பில்லை. கல்லூரியில் இளைய தலைமுறையினரை சந்திக்கும் விருப்புடன் வரும் எழுத்தாளர்கள் முட்டாள்கள்” சிரித்துக்கொண்டே “ஒரு லட்சம் ரூபாய் உங்கள் அறக்கட்டளைக்காகக் கேட்டுப்பாருங்கள். முக்கால்வாசிப்பேர் ஓடிவிடுவார்கள். தருபவர்கள் அந்தவகையிலாவது உங்களுக்கு பயனுள்ளவர்கள்”
என் வாசகர்களாக, நான் நடத்தும் வகுப்புகளில் மாணவர்களாக வந்துகொண்டே இருக்கும் மாணவர்கள் உண்டு. அவர்கள் ஓராண்டில் திகைப்பூட்டும்படி வளர்ச்சியடைவதையும் காண்கிறேன். அவர்கள் எழுதவும் சிந்திக்கவும் ஆரம்பிக்கிறர்கள். தனியடையாளம் கொள்கிறார்கள். அவர்களிடம் எல்லா ஆற்றலும் உள்ளது – தூண்டுதலும் அறிமுகமுமே தேவையாகிறது. அவர்களிடம் மட்டுமே பேச விரும்புகிறேன். கற்பாறையின் மேல் விதைக்காமலிருப்பது நம் கையிலுள்ள தானியங்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை. நமக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கு நாம் செய்யும் கைமாறு.