இப்போது எழுதப்படும் குறுங்கதைகளைப் பற்றி என் நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். சென்ற மூன்று ஆண்டுகளில் தமிழில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குறுங்கதைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் ஆயிரம் குறுங்கதைகளையாவது வாசித்திருப்பேன். நான் வாசித்த குறுங்கதைகளில் மிகச்சில தவிர எவையும் நினைவில் தங்கவில்லை என்றேன். ஏனென்றால் சட்டென்று எதையும் நினைவுகூர முடியவில்லை. அது எனக்கு மட்டும் அல்ல. அவ்வாறு எந்தக் குறுங்கதையையும் எவரும் எடுத்துப்பேசி நான் கேள்விப்படவுமில்லை.
‘அது ஓர் அளவுகோலா?’ என்று நண்பர் கேட்டார். ’ஆமாம், முதன்மை அளவுகோல் அதுவே’ என்றேன்.
இலக்கியத்தின் முதன்மைச் சவால் என்பதே நினைவில் தங்குவதுதான். இலக்கியத்தின் சமர் என்பது மறதியுடனும் அந்த மறதியை உருவாக்கும் அன்றாடத்துடனும்தான். அன்றாடமே தூலமான மெய். இலக்கியமே அதைக்கடந்து நேற்றையும் நாளையையும் உருவாக்கி வரலாற்றையும் பண்பாட்டையும் சமைக்கிறது. நேற்றும் நாளையும் இருப்பது நம் நினைவிலும் கற்பனையிலும் மட்டுமே. இலக்கியத்தின் மூலப்பொருட்கள் அவைதான்.
அத்துடன் இலக்கியம் நிலம் -வாழ்களம் ஆகியவற்றை உருவாக்குவதிலிருந்து தப்பவே முடியாது. ஏனென்றால் அவையிரண்டும் உண்மையில் இல்லை – இருப்பவை வெறும் ஜடப்பொருட்கள்தான். கணம்தோறும் மாறிக்கொண்டிருப்பவை அவை. அவற்றுக்கு எந்த பொருளும் இல்லை. அவற்றுக்கு தொடர்ச்சியும் இல்லை. பொருளும் தொடர்ச்சியும் உருவாவது நாம் அவற்றை நம் தன்னுணர்வாக ஆக்கிக்கொள்வதனால்தான்.
நம் தன்னுணர்வை மொழியே நிலமென, களமென சித்தரித்து உருவாக்கிக்கொள்கிறது. மானுடர் பேச்சினூடாக நிலத்தையும் வாழ்களத்தையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். இலக்கியம் செய்வது அதன் விரிவாக்கத்தையும் நுண்மையாக்கத்தையும்தான். வாய்மொழிக் கதைகள் முதல் பேரிலக்கியங்கள் வரை அவ்வாறுதான்.
நிலமும் வாழ்களமும் இல்லாத கதை என ஒன்று இருக்கலாம், ஆனால் அது அடிப்படையான பெருங்குறைபாடு கொண்டது. அக்குறைபாட்டை கடக்குமளவுக்கு அதற்கு ஆழ்ந்த உணர்வுநிலை அல்லது கவித்துவம் இருந்தாலொழிய அது இலக்கியமாவதில்லை.
கதை என ஒன்று உருவான தொல்பழங்காலத்தில் ஒரு விஷயத்தை கதையாகச் சொன்னவர்களின் முதன்மை நோக்கங்களில் ஒன்று சொல்வனவற்றை கேட்பவர் நினைவில் நீடிக்கச் செய்வதாகவே இருந்திருக்கும். இன்று அச்சவால் பெருகிவிட்டிருக்கிறது. இன்று செய்திகள், சித்தரிப்புகள், காட்சிகள் வந்து குவிகின்றன. நடுவே இலக்கியம் அழுத்தமாக நிலைகொள்ள வேண்டும். குறுங்கதைகள் அங்கே தவறுகின்றன.
ஏன்? எனக்குத் தோன்றுவது இது. குறுங்கதை என்றால் கூர்மையான, செறிவான, கவித்துவமான கதை என்பதன்றி ‘அவசரமாக எழுதப்படுவது’ என்று புரிந்துகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆகவே வாசகர்களும் அவசரமாக வாசித்துச் சென்றுவிடுகிறார்கள்.
பலசமயம் எழுதுபவருக்கு எழுத்தில் இருக்கும் சலிப்பும், அக்கறையின்மையுமே கதைகளை அவ்வாறு சுருக்கி எழுதச் செய்கின்றன. ஆசிரியரில் அக்கரு வளரவில்லை, அவரால் அதை விரிக்கமுடியவில்லை, அதன் ஆழத்தை அடையமுடியவில்லை, அதில் அவர் வாழவில்லை. ஆகவே வாசகருக்கும் அவையேதும் அமைவதில்லை. குமிழிகள் போல அவை அந்தந்தக் கணங்களில் வெடித்து மறைகின்றன
குறுங்கதைகள் கதைக்களத்தை, கதைமாந்தரை, உணர்வுகளை நிறுவுவதில்லை. ஜீரோ நெரேஷன் என்ற பேரில் தட்டையான செய்திக்குறிப்பு நடையில் எழுதுகிறார்கள். அந்த நடை வாசகனுக்கு கற்பனைக்கான சாத்தியத்தை அளிக்காமல் வேகமாக வாசிக்கச் செய்கிறது. இரண்டு நிமிடங்களில் முடியும் வாசிப்பில் வாசகன் எந்தப் பயணத்தையும் செய்யமுடியவில்லை. நல்ல கதை வாசகனை தன் வரிகள் தோறும் நிறுத்திக் கற்பனைசெய்யவைக்கும். அதன் வழியாக அவனுள் பெருகும்
அத்துடன் பெரும்பாலும் இக்கதைகளில் இருப்பது ஓரு மிக எளிமையான முடிச்சு. அதுவும் எளிய அன்றாடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அல்லது அதைவிட எளிய தர்க்கமுறையால் உண்டுபண்ணப்பட்டது. வாசித்ததுமே அது மனதில் இருந்து மறைந்துவிடுகிறது. முடிவிலிருந்து முன்னகர்ந்து செல்லமுடிவதில்லை.
குறுங்கதைகள் தேவையாக ஆவதும், வெற்றிபெறுவதும் அவை ஒருவகை ‘மெடாஃபிக்ஷனாக’ ஆகும்போதுதான் என்று படுகிறது. அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ஒரு பெரிய கதையுலகின் (Narration) மீதான விமர்சனமாக, அல்லது விரிவாக்கமாக அல்லது பகடியாக அவை நிலைகொள்ளும்போது. ஏனென்றால் தனியாக ஓர் உலகை அவை உருவாக்கவேண்டியதில்லை. முதன்மையுலகை குறிப்பிட்டாலே போதும், வாசகன் அவ்வுலகை அடைந்துவிடுவான்.
ஆங்கிலத்தில் வுடி ஆலன், ஜான் அப்டைக் போன்றவர்களின் குறுங்கதைகள் உதாரணம். அவை அன்றைய பொதுப்புனைவுகள் வழியாக உருவாகி வந்த உலகின் மீதான புனைவுகள். (காஃப்காவின் குட்டிக்கதைகளும் ஒருவகையில் அவ்வாறுதான். அவை அவரே உருவாக்கிய புனைவுலகின் மீதான புனைவுகள்)
இன்றைய சர்வதேச வாசிப்புலகில் குறுங்கதைகள் சமூகவலைத்தளங்களின் சிறு வட்டங்களுக்கு அப்பால் ஏற்பு பெறுவதில்லை. அவை முப்பதாண்டுகளுக்கு முன் புதிய வகை எழுத்தாக முன்வைக்கப்பட்டு தொகுதிகள் வெளிவந்தன. ‘sudden fiction’ ‘flash fiction’ போன்ற பெயர்களில். என்னிடமே நாலைந்து தொகுப்புகள் உள்ளன. நான் சுந்தர ராமசாமிக்கு சில தொகுப்புகள் வாங்கிக்கொடுத்தேன். அவருக்கு ஒரு தற்காலிக ஆர்வம் அதில் உருவானது. பழைய காலச்சுவடில் சில கதைகளை வெளியிட்டார்.
நியூயார்க்கர் இதழுக்கு குறுங்கதை வடிவை முன்னெடுத்ததில் பெரும்பங்குண்டு. அவர்களின் அச்சிதழின் குறைவான பக்கங்களே அதற்குக்காரணம். ஆனால் விரைவிலேயே அந்த அலை பின்னகர்ந்தது. முதன்மைக் காரணம் சமூகவலைத்தளங்களின் வருகை. அவற்றிலுள்ள குறுஞ்சித்தரிப்புகளின் பெருக்கு. இன்று குறுங்கதைகளுக்கு வெளியீட்டாளர்கள் அமைவதில்லை என என் அமெரிக்க வெளியீட்டாளர் சொன்னார்.
(இன்றைய வாசிப்பில் உலகமெங்கும் விரும்பப்படுபவை முறையே நாவல்கள், தன்வரலாறுகள், ஒரு குறிப்பிட்ட பேசுதளமும் தர்க்க ஒருமையும் கொண்ட கட்டுரைநூல்கள். இந்திய ஆங்கிலப் பதிப்பாளர்களின் தேர்வும் அதுவே.
இன்று சுயமான வாசிப்பற்றவர்கள் அவ்வப்போது பொதுவாகச் சொல்லும் ஒன்றுண்டு, ’இந்த அவசர யுகத்தில் ஆற அமர வாசிக்க நேரமில்லை, ஆகவே சிறிய படைப்புகளே விரும்பப்படுகின்றன’ என்று. உண்மையில் பெரிய நூல்களே அதிகம் விற்பவை. பதிப்பாளர்கள் பெரிய நூல் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.)
நான் குறுங்கதைகள் எழுதுவதில்லை. என் இயல்புக்கு அது சரிவராது. நான் கதைகள் எழுதுவது விளங்காத ஏதோ ஓர் உணர்வால் உந்தப்பட்டு, ஒரு தற்செயல் வரியை கண்டடைந்து, அதிலிருந்து கற்பனைசெய்து முன்செல்வதன் வழியாகவே. என் கதை எழுத எழுதத்தான் உருவாகிறது. எழுதுவதற்கு முன் ஒரு வரியோ, கதைக்களமோ, கதைமாந்தரோ மனதில் இருக்காது. கதை முடிவு எழுதித்தான் வந்துசேரவேண்டும்.
ஆகவே எனக்குள் கதை ஊடுருவி, நான் அதற்குள் புகுந்து, ஒரு நிகர்வாழ்க்கையை வாழவேண்டும். அதற்கு கொஞ்சம் பொழுது வேண்டும். என் களமும் மாந்தரும் தன்னியல்பாக எழுத்தினூடாக வளர்ந்து நானே வியக்கும்படி உருவாகி அவர்களுக்கான முடிவை அடையவேண்டும். என் கதை வளரும்போதுதான் அதன் வழியாக நான் என்னை கண்டடைகிறேன், என்னை நிகழ்த்துகிறேன். நான் எழுதுவதே அதற்காகத்தான்.
குறுங்கதைகள் ’நிகழ்வதில்லை’. அதற்கான பொழுதும் களமும் அவற்றில் இல்லை. கதைமாந்தர் திரள்வதற்கு இடமும் இல்லை. ஆகவே அவற்றில் தானாக உருவாகிவருவது என ஏதுமில்லை. ஆசிரியர் சொல்வது, செய்துவைப்பதுதான் அதிகம். அரிதாக அவர் உலகியலில் கண்டடைந்த ஒன்று இருக்கிறது. எந்நிலையிலும் ஆசிரியனே அக்கதையை நிகழ்த்துகிறான்.
ஒருவேளை எனக்குக் குறுங்கதைகள் நினைவில் நிற்காமல் போவதற்கு என்னுடைய இந்த எழுத்துப் பழக்கமும் காரணமாக இருக்கலாம். வாசிப்பிலும் எனக்கு கதைக்குள் வாழ்வதற்குப் பொழுதும் களமும் தேவையாகிறது. நான் வாழ்ந்து நானே கண்டடையாத ஒன்றை நான் கதையில் இருந்து பெற்றுக்கொள்வதில்லை. ஆசிரியன் சொல்வதிலும் செய்வதிலும் எனக்கு ஆர்வமில்லை.
ஆகவே நான் குறுங்கதைகள் பற்றி அறுதியாக எந்தக் கருத்தும் சொல்வதில்லை. இது என் பார்வை என்று மட்டும் சொல்லிக்கொண்டு நின்றுவிடுகிறேன்.
*
குறுங்கதைகள் போட்டியிடுவது இன்று வந்துகொண்டிருக்கும் அன்றாடக் குறுஞ்சித்தரிப்புகளுடன் என நினைக்கிறேன். இன்றைய ஊடகங்களில் அவை அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன. அவை நேர்மையானவை, உடனடியானவை, தன்னிச்சையானவை என்பதனால் பலசமயம் குறுங்கதைகளைவிட ஆற்றல் கொண்டவையாக உள்ளன.
நண்பர் இளங்கோவன் முத்தையா எழுதிய இந்தச் சிறு அனுபவக்குறிப்பு ஓர் உதாரணம். அழகிய குறுங்கதையாக இதை ஆக்கிவிடலாம்.

பேருந்தில் இருவர்
இளங்கோவன் முத்தையா
சென்னையிலிருந்து மதுரை செல்லும், இருக்கைகளும் படுக்கைகளும் இணைந்த பேருந்து அது. நான் நடுவே நடைபாதையை ஒட்டிய இடப்பக்க மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்தேன். கோயம்பேட்டிலிருந்து கிளம்பிய பேருந்து போரூர் சிக்னலில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றிருந்தது. ஒரு இளம் தம்பதியினர் உள்ளே வந்தார்கள். இருவருமே அவரவர் பருவ வயதின் உச்சத்திலும், அப்பருவத்திற்கேயுரிய அழகிலும், வாளிப்பிலும் இருந்தார்கள். இருவருமே ஒன்று போல கருப்பு பேண்ட், வெள்ளை டீ ஷர்ட், அணிந்திருந்தார்கள். உண்மையில் மிகப் பொருத்தமான ஜோடி. இருவருக்கும் திருமணமாகி சில காலமே ஆகியிருக்க வேண்டும், அல்லது அவர்கள் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும், அல்லது காதலர்களாகக் கூட… இப்படிச் சொல்வதற்குக் காரணம், வழக்கமாகத் திருமணமான பெண்ணுக்கான எந்த அடையாளத்தையும் ஒரு ஜாடையில் நடிகை நித்யா மேனனின் தங்கை போலிருந்த அந்தப் பெண்ணிடம் காண முடியவில்லை.
வேறு சில பயணிகள் வந்து சேர்வதற்காக பேருந்து கால் மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருப்பில் இருந்தது. உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் உள்ள முதல் தரைதளப் படுக்கை அந்தப் பெண்ணுக்கானது. அந்த இளைஞன் வழியனுப்ப வந்தவன் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பெண் அவளது படுக்கையில் அமர்ந்திருக்க, அந்த இளைஞன் நடைபாதையில் மண்டியிட்டு அவளது மடிகளில் கை வைத்து தேவாலயத்தில் பிரார்த்தனையிலிருக்கும் ஒருவரைப் போன்ற நிலையில் அமர்ந்திருந்தான். அவனது முகபாவமும் அதைப்போலத்தான் இருந்தது. இருவரும் பேசிக்கொண்டதில் ஒரு வார்த்தை கூட மற்றவர்களுக்குக் கேட்காதவண்ணம் மிகச் சன்னமான குரலில் பேசிக்கொண்டார்கள்.
அவள் கொண்டு வந்திருந்து சிவப்பு ட்ராலி பையின் ஸிப்பைத் திறந்து எதையோ தேடுவதும், பிறகு அதை மூடி வைப்பதுமாகத் தொடர்ந்து அதையே நாலைந்து முறை செய்துகொண்டிருந்தார்கள். இருவரது முக பாவத்திலும் ஒரு மலர்ச்சியில்லாத, கொஞ்சம் கவலை தோய்ந்த தொனி இருந்தது. சற்று நேரத்தில் அந்த இளைஞன் அப்பெண்ணின் கைப்பையை வாங்கி அதற்குள் எதையோ தேடிவிட்டு உதட்டைப் பிதுக்கினான். அந்தப் பெண் லேசாகக் கண் கலங்கியது போல எனக்குத் தோன்றியது. அவள் அந்த இளைஞனைத் திடீரெனத் தன் பக்கம் இழுத்து இறுக அணைத்துக்கொண்டாள். அவன் அப்பெண்ணின் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி இருந்தான்.
வர வேண்டிய ஒரு பயணிகளில் ஒருவர் உள்ளே நுழைந்த போது சற்று அவள் மேல் சாய்ந்துகொண்டானே தவிர அப்போதும் அவன் மண்டியிட்டே அமர்ந்திருந்தான்.
சில நொடிகளில் அடுத்த பயணி உள்ளே நுழைந்தபோது எழப்போனவனை அந்தப் பெண் மேலும் தன் மேல் சாய்த்து இழுத்து அணைப்பிலிருந்து விலக்காமல் இறுக்கிக்கொண்டாள். பிறகு திடீர் ஆவேசத்தோடு அவனது தோளையும், கழுத்தையும், கன்னத்தையும் முத்தங்களால் நிறைத்தாள். சற்று நேரத்தில் ஒரு குடும்பம் உள்ளே வந்தது, வேறு வழியில்லாமல் அந்த இளைஞன் எழுந்து நின்றான்.
அந்தக் குடும்பம் உள்ளே வந்தவுடன் பேருந்து மெதுவாகக் கிளம்ப ஆரம்பித்ததும் அவன் கதவைத் தட்டி “நான் இறங்கிக்கறேன்” என்றான். பிறகு அந்தப் பெண் பக்கம் திரும்பி, மீண்டும் மண்டியிட்டமர்ந்து அவளது இரு கன்னங்களிலும் கைவைத்து, தன் பக்கம் இழுத்து அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டுவிட்டுச் சட்டென்று எழுந்து, திரும்பிப்பார்க்காமல் கதவைச் சாத்திவிட்டுப் பேருந்திலிருந்து இறங்கிப் போனான்.
அந்த ஒரு முத்தம்தான் அவன் அவளுக்குக் கொடுத்தது. அவன் அவளை முத்தமிடும்போது பெரும்பாலானவர்களின் பார்வை அவர்கள் மேல்தான் இருந்தது. அவளை முத்தமிட்டு விலகிய ஒரு நொடிப்பொழுதில் என் கண்களைச் சந்தித்த அவனைப் பார்த்து நான் மெலிதாகப் புன்னகைத்தேன். அவன் அதைக் கவனித்தது போலத்தான் எனக்குத் தோன்றியது.
அந்தப்பெண் மூக்கை உறிஞ்சியபடி தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். பிறகு திரையை இழுத்து மூடியவள் மதுரை வரும் வரை, நடுவில் இரண்டு முறை பேருந்து நிறுத்தப்பட்டபோது கூட இறங்கவில்லை. ஆனால் பேருந்தின் விளக்குகளை அணைத்தபிறகும் திரைக்கு அப்பால் அவளது மொபைல் திரை வெகு நேரத்துக்கு வெளிச்சத்தை உமிழ்ந்தபடியேதான் இருந்தது.
அதிகாலையில் மதுரை மாட்டுத்தாவணிக்கு வெளியே பேருந்து நின்றதும் நான் எழுந்து வெளியேறும் இடத்துக்கு வரவும், அவள் எழுந்து நிற்கவும் சரியாக இருந்தது, வரிசையில் எனக்கு முந்தைய ஆளாக இறங்கினாள். இறங்கும் முன்பு முதல் நாளிரவு அவர்கள் முத்தமிட்டுக்கொண்ட இடத்தை ஒரு பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தாள். இப்போது அவளது பருக்கள் மேடிட்ட முகத்தை என்னால் மிக அருகில் பார்க்க முடிந்தது. அப்போதும் அவளது முகம் அழுது ஓய்ந்த களையில்தான் இருந்தது.
அவளுக்கு அடுத்து நான் இறங்கும்போது, “அந்த இளைஞன் வேறு ஏதாவது ஒரு வகையில், காரிலோ, இன்னொரு பேருந்திலோ அவளுக்கு முன்னமே மதுரை வந்து அவள் பேருந்திலிருந்து இறங்கும்போது அவளை இருகரம் விரித்து அணைத்தபடி வரவேற்றால் எப்படியிருக்கும்” என்று எனக்குத் தோன்றியது. அப்படி நடக்கும்போது அவளது முகம் மலர்வதைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. நிகழ் வாழ்வில் அப்படி எதுவும் அதிசயங்கள் நடப்பதில்லைதானே?
வீடு திரும்பி, குளித்துக்கொண்டிருக்கும்போது “எனக்கு ஏன் அப்படி அந்த இளைஞன் வந்து நிற்கவேண்டுமெனத் தோன்றியது” என்று யோசித்துப்பார்த்தேன். சோக கீதம் இசைத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் மலர்வதைப் பார்ப்பதற்காக இருக்குமோ என்று முதலில் தோன்றியது.
ஆனால்… வாழ்வின் வேறு சில சந்தர்ப்பங்களில், வேறு சில இடங்களில், நான் சிலரை “இந்த நேரத்தில் இவர்கள் இங்கிருந்தால்…” என்று, அது நடக்காது என்று புத்திக்குத் தெரிந்திருந்தாலும் கூட, என் மனதின் அடியாழத்திலிருந்து எதிர்பார்த்து ஏமாந்த பொழுதுகளை, போலவே நான் இருந்திருக்க வேண்டிய இடங்களில், என்னை எதிர்பார்த்துச் சில விழிகளும், சில மனங்களும், சில பொழுதுகளில் ஏங்கிக் காத்திருந்ததைப் பிற்பாடு அறிய நேரிட்ட பொழுதுகளில், தகவல் தெரியாமலோ, தெரிந்தும் அறியாமையாலோ அல்லது அப்போதைய பொழுதுகளின் கோப, தாபங்களாலோ நான் செல்லாமல் தவிர்த்த, தவறவிட்ட சில பொழுதுகளைத்தான் என் மனம் இப்படி எவருக்கோ நடக்கும் நிகழ்வுகளில் பொருத்திப்பார்த்து, அவர்களுக்காவது நடக்கட்டுமே என்று சமாதானம் செய்துகொள்கிறது என்றும் தோன்றியது.
ஒரு வகையில் அது உண்மையாகவும் இருக்கலாம்.