தொன்மையின் தொடரில்…

இன்னுமொரு பயணம், தொல்பழங்காலச் சின்னங்களைப் பார்ப்பதற்காக. இம்முறையும் கிருஷ்ணனே முடிவெடுத்து, குழு அமைத்து, வழி தீர்மானித்தார். பிற ஏற்பாடுகளை நண்பர்கள் செய்தனர். திருப்பூர் அனந்தகுமார் தரவுகளைச் சேகரித்தார்.  பெங்களூர் ராஜேஷ் வழி, வண்டிகளை வகுத்தார். ஹைதராபாத் கார்த்திக் தங்குமிட ஏற்பாடுகளை செய்தார்.

நான் சென்னை புத்தகக் கண்காட்சியில் இருந்து ஜனவரி 8 மாலையில் கிளம்பினேன். எனக்கு பேருந்துக்கு முன்பதிவுசெய்திருந்தார்கள். புத்தகக் கண்காட்சியில் எட்டு மணிவரை இருந்துவிட்டுக் கிளம்புவதாக திட்டம். ஆகவே பேருந்து. ஆனால் இறுதிநேரத்தில் கழிப்பறை வசதிகொண்டதாக அறிவிக்கப்பட்டு முன்பதிவு செய்யப்பட்ட அப்பேருந்தில் கழிப்பறை வசதி இல்லை என்றார்கள். இன்னொரு பேருந்து வருமாம், கழிப்பறைப் பேருந்து பழுதாம். ஆனால் இதை ஓர் உத்தியாகவே செய்கிறார்கள். முன்பதிவுசெய்தவர்களுக்கு வேறு வழியே இல்லை.

ஆனால் என்னால் முடியாது. சென்னையின் நெடுந்தொலைவுப் பேருந்துகள் கிளம்பினால் இரண்டரை மணிநேரம் கழித்தே கழிப்பறைக்காக நிற்கும், நிறுத்த முடியும். அவ்வளவு தொலைவுக்கு கடைகளின் வரிசை. என்னால் நாலைந்து மணிநேரம்கூட கழிப்பறை போகாமலிருக்க முடியும். ஆனால் இரவின் தூங்குவதற்கு முன் போயாகவேண்டும். அவ்வெண்ணம் வந்தபின் தவிர்க்கமுடியாது. பெரும் வதையாக ஆகிவிடும்.

ஆகவே பேருந்தை விட்டுவிட்டு விமானத்தில் முன்பதிவுசெய்தேன். பெங்களூருக்கு அதிகாலை விமானம் சற்று விலைகுறைவு. ஆகவே மூன்றுமணிக்கு தூங்கி எழுந்து நான்கு மணிக்கு விமான நிலையம் சென்று ஐந்தரை மணி இண்டிகோ விமானத்தில் ஏறி அரைத்துயிலில் பெங்களூர் சென்றேன். விமானநிலையத்தில் ராஜேஷ் என்னை வரவேற்க வந்திருந்தார். பதினான்கு பாகை குளிர் இருந்தது. எங்கள் கார் நின்ற இடம்நோக்கி வேகமாகச் சென்றமையால் குளிர் தெரியவில்லை.

ஒன்பதாம் தேதி காலைமுதல் பயணம் தொடங்கியது. இரண்டு கார்கள். ஒன்று ராஜேஷுடையது. இன்னொன்று சக்தி கிருஷ்ணனின் கார். நான், கிருஷ்ணன் (ஈரோடு), சக்தி கிருஷ்ணன்,(திருச்சி) ராஜேஷ்(பெங்களூர்) கார்த்திகேயன் (ஹைதராபாத்), சுந்தரபாண்டியன் (சென்னை), ஸ்ரீதரன்,(பெங்களூர்) , திரு, அனந்தகுமார் (திருப்பூர்) என வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்களின் கூட்டம்.

இப்பயணம் முதன்மையாக அண்மையில் கண்டறியப்பட்ட தொல்பழங்காலச் சின்னங்களைப் பார்ப்பதற்காக என்றாலும் செல்லும் வழியில் இயன்றவரை தொல்லியல் மையங்களையும் கலைமையங்களையும் பார்த்துக்கொண்டே செல்வதாக ஏற்பாடு. இல்லையேல் பயணமே காரெனும் உலோகக்குமிழிக்குள் அமர்ந்திருப்பதாக ஆகிவிடும்.

அவ்வகையில் முதல் இடம்  சாந்திபென்னூர் புஷ்கரணி (Santhebennur Pushkarini) . சன்னகிரி என்னும் சிற்றூரில் உள்ளது. பொயு பதினாறாம் நூற்றாண்டில் நாயக்கர் கால பாளையக்காரரான ஹனுமந்தப்பா இங்கே கட்டிய ராமர்கோயிலின் ஒரு பகுதியாக இதைக் கட்டியிருக்கிறார். ஹனுமந்தப்ப நாயக்கர் பாமினி சுல்தான்களின் படையை வென்றதைக் கொண்டாட இதை கட்டினார். பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் ரனதுல்லா கான் என்னும் பிஜப்பூரின் படைத்தளபதி இந்த ஊரை வென்று இக்குளத்தைக் கைப்பற்றினார். இதன் கரையில் ஒரு மசூதியையும் ஒரு முசாபிரி பங்களாவையும் (பயணியர் மாளிகை) கட்டினார்.

இருநூற்று நாற்பது அடி அகலமும் இருநூற்றைம்பது அடி நீளமும் கொண்ட இந்த குளம் முப்பது அடி ஆழம் கொண்டது. சுற்றிலும் முழுமையாகவே கல்லால் ஆன படிகளே கரைகள். குளம் நடுவே ஓர் வசந்தமண்டபம், அல்லது தெப்ப மண்டபம். இத்தகைய பெரிய குளங்களை தமிழ்நாட்டிலும் கும்பகோணம், திருவாரூர் போன்ற இடங்களில் காணலாம். இங்குள்ள வேறுபாடு இங்கே கரைகளில் இருக்கும் மண்டபங்களும் நடுவே உள்ள வசந்தமண்டபமும் முகலாயர் பாணி கட்டிடக்கலை கொண்டவை என்பது. அராபியப் பாணி குவைமாடங்களையும் சீரான சமவடிவத்தில் நாற்புறமும் தூண்களையும் கொண்டவை இவை.

இந்தியக் கட்டிடக்கலையை அறிந்தவர்களுக்கு இந்தக் கலவை ஒன்றும் பெருந்திகைப்பை அளிக்காது. திருவாரூர் ஆலயத்திலேயே இஸ்லாமியக் கட்டிடக்கலையின் செல்வாக்கு கொண்ட அமைப்புகள் உள்ளன. கட்டிடக்கலை என்பது இரண்டு கூறுகளால் தீர்மானிக்கப்பட்டு அதற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஒன்று, கட்டுமானப் பொருட்கள். இரண்டு, கட்டிடத்தை வடிவமைக்கும் கொள்கைகள்.

இந்தியக் கட்டிடக்கலையின் தொடக்கத்தில் எகிப்திய குடைவரைக் கோயில்களின் பாணி, கிரேக்கத் தூண்களின் பாணி காந்தாரக்கலை வழியாக வந்துசேர்ந்தது. இங்கிருந்த மரம் மற்றும் செங்கல் கட்டிடங்களின் பாணியுடன் கலந்தது. அவ்வாறான கட்டிடக்கலைக்குச் சிறந்த உதாரணம் கார்லே குடைவரை. அவ்வடிவு தொடர்ச்சியாக அடுத்தகட்ட கற்கட்டுமானங்களில் வளர்ச்சியடைந்தது. தென்னிந்தியக் கட்டிடக்கலையில் நமது தொன்மையான மரக்கட்டிடங்களின் வலுவான செல்வாக்கைக் காணலாம்.

வழியில் மதிய உணவு. நாங்கள் செல்லும் பாதை என்பது பெரும்பாலும் உள்ளூர்ச்சாலைகளால் ஆனது என்று அறிந்திருந்தோம். ஆகவே நல்ல உணவை எதிர்பார்க்கவில்லை. மிகச்சிறிய விடுதிகளிலேயே சாப்பிட்டோம். ஆனால் பெரும்பாலும் எல்லா உணவுமே சிறப்பாகவே இருந்தன. எளிமையான உணவுதான், ஆனால் கலப்படம் இல்லை. கெட்டுப்போனவையும் அல்ல. சிறிய ஊர்களில் அப்படி கலப்படம் செய்து விற்கமுடியாது போலும்

கர்நாடகமும் ஆந்திரமும் இந்த மையத்தக்காணத்தில் ஒன்றாகவே உள்ளன. இங்கே இன்னும் காலம் தேங்கிய வாழ்க்கை உள்ளது. சிற்றூர்களில் பெரும்பாலும் மக்காச்சோளமே விளைச்சல். பருத்தியும் கம்பும் கண்ணுக்குப் பட்டன. மக்காசோளக் கதிரின் உறைகள் மட்டுமே பெரிய வைக்கோற்போர்களாக சிற்றூர்களின் இல்லங்களில் குவிக்கப்பட்டிருந்தன. மாடுகளுக்காக. சாந்தமான எருமைகளே பெரும்பாலான கால்நடைகள். வரலாற்றில் எங்கிருந்தோ வந்து அமர்ந்திருப்பதுபோல வண்ண உடையும் கல்நகைகளும் அணிந்த சிலரை பேருந்து தரிப்பிடத்தில் பார்த்தோம்.

அன்று மாலை ரான்னே பென்னூர் (Ranebennur) வெளிமான் (Black Buck) புகலிடம். ஹூப்ளி அருகே உள்ளது இந்த இடம். வெளிமான் மான் புரிபோன்ற திருகுகொம்பு கொண்டது. அரைப்பாலைகளில் மட்டுமே வாழ்வது. விரைவாக ஓடுவது. இதற்கு புல்வாய் என்ற பேரைச் சிலர் போட்டிருக்கின்றனர். வாயில் புல்கொண்டது என்னும் பொருள் கொண்ட அப்பெயர் மானினத்திற்கு பொதுவாக சங்கப்பாடல்களில் வருவது. தியடோர் பாஸ்கரன் வெளிமான் என்னும் சொல்லையே பயன்படுத்துகிறார். விரிந்த வெளிநிலத்தில் வாழ்வது என்னும் பொருளில்.

மலைகளில் வாழும் புள்ளிமான்கள் இன்று ஓரளவு வாழ்கின்றன, காரணம் மலைப்பகுதிகள் காடாகவே நீடிக்கின்றன. ஆனால் பரந்த புல்நிலங்களில் வாழும் வெளிமான்கள் கிட்டத்தட்ட அருகிவிட்டன. ஏனென்றால் அந்நிலங்கள் எல்லாம் பல்வேறு பாசனமுறைகளால் வேளாண்நிலங்கள் ஆகிவிட்டிருக்கின்றன. இந்த புகலிடமே மிகப்பெரியதெல்லாம் அல்ல. இதைச்சூழ்ந்து வேளாண்நிலங்கள். வேலிகட்டி பாதுகாத்திருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள வெளிமான் புகலிடங்கள் பெரும்பாலும் தக்காணப் பீடபூமியிலேயே உள்ளன.

ரான்னே பென்னூர் சென்று அந்த சிற்றூரில் அலைந்து வனத்துறையின் அலுவலகத்தைக் கண்டுபிடித்தோம். எங்கள் கார்களில் செல்லமுடியாது என்று சொல்லிவிட்டார்கள்.  அவர்களே வண்டி வைத்திருந்தனர். வனத்துக்குள் வேடிக்கைபார்ப்பதற்கான அமைப்புகொண்ட , விலங்குகளுக்கு உறுத்தாத பச்சை நிறம் கொண்ட வண்டி. அதில் ஏறிக்கொண்டு நிலத்தில் இருந்து பத்தடி உயரத்தில் அமர்ந்து சென்றோம். இந்த திறந்தப் பெருநிலத்தைச் சரியாகப்பார்க்க அதுவே உகந்த வழி. நீண்டதூரம் தெரியும், அப்படித்தான் வெளிமான்களைப் பார்க்கமுடியும்.

தொடுவானம் வளைவாகத் தெரியுமளவுக்குப் பரந்த நிலம். இங்கே மழைக்காலம் ஜூன் ஜூலையில்தான். அப்போது எங்கும் கண்நிறைக்கும் பசும்புல்வெளியாக இருக்கும். சில இடங்களில் நுணுக்கமான மலர்கள் விரிந்த வண்ணவெளி உருவாகும். அந்த மலர்நிலங்களைப் பார்க்க ஏற்கனவே சில பயணங்களை மேற்கொண்டிருக்கிறோம். அதன்பின் ஆகஸ்ட் செப்டெம்பரிலேயே மண் காய்ந்துவிடும். புல் பொன்னிற மென்மயிர்ப்பரப்பு போல ஆகி காற்றில் சிற்றலைகளுடன் விரிந்திருக்கும். வெளிமான்களின் வாழ்விடம் இதுவே.

கண்களை நிறைக்கும் அப்பொன்வெளியை முன்னர் ஆப்ரிக்க அரைப்பாலைகளிலேயே கண்டிருக்கிறேன். புல்வெளி என்றே சொல்லத்தோன்றாது. கோல்டன் ரெட்ரீவர் நாயின் உடல்போல. அல்லது சிங்கத்தின் பிடரிபோல. அதில் மாலைவெளிச்சம் படர்கையில் பொன்னிறம் செம்மைகொண்டபடியே செல்கிறது. குளிர்காலமாதலால் மெல்லிய தண்மையுடன் காற்று வீசியது. தொலைவில் வெளிமான்களைப் பார்த்துவிட்டோம்.

ஓரிரு மான்களைப் பார்த்ததுமே கண் பழகிவிடுகிறது. அதன்பின் மான்கள் தொடர்ச்சியாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. கூட்டம் கூட்டமாகத் தென்படுகின்றன. ஒரு மந்தைக்கு ஒரு புரிகொம்பு முதலாண் மட்டுமே. எஞ்சிய எல்லாமே பெண்களும் குட்டிகளும். ஆண் எச்சரிக்கையுடன் நம்மை நோக்கி செவிகோட்டி விழியூன்றி நின்றிருக்க பெண்கள் மேய்ந்தன. வண்டி அருகணைந்தபோது ஆண் செவியசைக்க அனைத்து மான்களும் மண்ணிலிருந்து விடப்பட்ட அம்புகள் போல எழுந்து பாய்ந்தன.

இவற்றின் பாய்ச்சல் அழகானது. ரப்பர்பந்து போல நான்குகால்களையும் ஒருங்கே தூக்கி துள்ளித் துள்ளிச் சென்று அரைவட்டமாக ஒரு தாவல். நம்பமுடியாத அளவு விசையும் வேகமும் கொண்டவை. புள்ளிமான்களும் விரைவானவை. ஆனால் இந்த மான்களின் வேகம் அவற்றுக்கில்லை. இந்த துள்ளுதல் எதற்காக என்று எண்ணினேன். கால்நீட்டிப் பாய்ந்தால் இந்தப் புல் காலில் தடுக்கி வேகம் குறைவுபடக்கூடும். துள்ளித் துள்ளிவிழுந்து செல்கையில் புல்மேல் தத்திச்செல்வதுபோலிருக்கும். இங்கே இவற்றை வேட்டையாடும் விலங்குகளுண்டு. ஓநாயும் சிறுத்தையும். அவையும் விரைவான விலங்குகளே.

தொல்பழங்கால ஓவியங்களைப் பார்க்கையில் வெளிமான் நினைவுக்கு வரவேண்டும். கணிசமான ஓவியங்களில் வரையப்பட்டிருப்பது வெளிமான்தான். ஏனென்றால் தொல்மக்களும் மழைகுறைவான, காடு அடர்த்தியாக இல்லாத, அரைப்பாலைகளில் ஊற்றுகளை நம்பியே வாழ்ந்தனர். சிறு விலங்குகளை கற்கருவிகளைக்கொண்டு வேட்டையாடினர். ஏனென்றால் மரங்களை வெட்டும் கருவிகள் அவர்களிடமிருக்கவில்லை. அவர்களுக்குச் சிக்கும் விருந்துதான் வெளிமான். அவர்களின் ஆடையாகவும் அது இருந்திருக்கலாம்.

செல்லும் வழியில் இருந்தமையால் இந்த வெளிமான் புகலிடத்திற்கு வந்தோம். ஆனால் பின்னர் தெரிந்தது, தொல் ஓவியங்களைப் பார்க்கையில் அந்த மக்கள் வாழ்ந்த நிலத்தைப் பார்த்த நினைவாக இது எழுந்து வந்தது. அவர்கள் வாழ்ந்தகாலத்தில் நிலம் இப்படித்தான் இருந்திருக்கும். இத்தனை மான்களும் இருந்திருக்கும். வேட்டை மிக எளிதாக நடந்திருக்கலாம். கனவுகாண நிறைய பொழுதும் அமைந்திருக்கக்கூடும்.

அக்கனவை முதல்நெருப்பெனக் கொள்கிறேன். அதிலிருந்து என் கனவின் தொடர்ச்சியை பற்றவைத்துக்கொள்ளவே இங்கே வந்துகொண்டே இருக்கிறேன்.

(மேலும்)

முந்தைய கட்டுரைகோமதி சுப்ரமணியம்
அடுத்த கட்டுரைThe God and Deity