மாற்றமும், மாறாத தன்மையும் -ரம்யா

தொலைவில் எங்கோ

(தொலைவில் எங்கோ சிறுகதையை முன்வைத்து)

அன்பு ஜெ,

மாறாததன்மை, நிலைத்ததன்மை என்பதன் மேல் மானுடத்திற்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. எல்லாவற்றிலும் உச்சம் என ஒன்று இருக்குமானால் அது மாறாத ஒன்று தான் என நினைத்ததுண்டு. நம் இலக்கே மாறாத ஒன்றை நோக்கிய பயணம் தான் என்று கற்பனை செய்ததும் உண்டு. “நிலைபெயராமை” என்ற சொல் வெண்முரசின் வழியாக அணுக்கமானது அதனால் தான். நிலைபெயராத ஒன்றை நோக்கி செல்ல வேண்டிய பயணம் தான் இது என்று நினைத்த கணமே அது முரண் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். அப்படி உண்மையில் நிலைபெயராத ஒன்று இருக்க வாய்ப்புள்ளதா? ’இல்லை’ என்பதற்கு இணையாகவே ’ஆமாம்’ என்றும் சொல்லலாம். அதனால் முதலில் அதை யோசித்துப் பார்த்தேன்.

நான் “நிலைபெயராமை” என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது மலையைக் கற்பனை செய்து கொள்கிறேன். கருங்கல் போன்ற இறுகிய தன்மையுடைய மலையை. பல வருடங்களாக இருந்து கல்லாக ஆன மரம், பல்லாண்டுகளாக மாறாமல் இருக்கும் சொல், மாறாத அன்பு, நிலைத்த அறம் ஆகியவற்றையும் கற்பனை செய்து கொள்கிறேன். அப்படியே ஆதி வரை சென்று தொட்டு, அங்கிருந்து இன்றுவரை மாறாத ஒன்று என்ற சிந்தனையை தொட்டுப் பார்த்திருக்கிறேன்.

இன்று “தொலைவில் எங்கோ” சிறுகதை வழியாக அப்படி ஒன்று இல்லையோ என்று சிந்தித்துப் பார்க்கிறேன். சற்று நிதானித்துப் பார்த்தால் நிலைத்த என்பதை “கால”த்தை அளவுகோலாகக் கொண்டே சிந்தித்திருப்பது புரிகிறது. என் கண் முன் நீண்ட நாளாக மாறாமல் இருக்கும் மலை நிலைபெயராமல் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறேன். எங்கள் ஊரின் செண்பகத்தோப்பு மலை முன் நிற்கும் போது ”எத்தனை மனுஷங்களப் பார்த்திருப்ப இல்ல” என்று அதை நோக்கி கேட்டதுண்டு. ஆனால் அந்த மலை காலத்தில் மாறிக் கொண்டே தான் இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த மலை அல்ல இன்று இருக்கும் மலை. நேற்று இருந்த மலையும் அல்ல தான். மாற்றம் இந்த மலை மேல் மெல்ல நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் நாம் அன்றாடம் அதை உணர்வதில்லை என்பதால் வரும் மயக்கம் தான் இது. அப்படியானால் அனைத்தும் மாறிக் கொண்டே தான் இருக்கிறது. பெருவெடிப்பிற்குப் பின் யாவும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மாறிக் கொண்டே தான் இருக்கிறது. எனில் மாறாத ஒன்றே இல்லையா?

*

“மாற்றம் ஒன்று தான் மாறாதது” போன்ற சொற்கள் மானுடரை ஆற்றுப் படுத்துவதற்காகச் சொல்லப்பட்டது. மாற்றம் நிகழ்வதை மானுடம் மறுக்கவில்லை. எதிர்பாராத மாற்றம் மானுடரை பிறழ்வுக்கு உள்ளாக்குகிறது. பிறழ்வுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே சடங்குகள், சம்பிரதாயங்கள் யாவும். பூப்புனித சடங்கள், திருமணச்சடங்குகள், வளைக்காப்புச் சடங்குகள், இறப்புச் சடங்குகள் என யாவும் இந்த மாற்றத்தை நாம் இயல்பாக ஏற்கும் பொருட்டு உருவானவையே என்று தோன்றுகிறது. மாற்றமே நிகழாததை அல்ல, மாற்றம் மெல்ல நிகழ்வதன் பொருட்டு சிரத்தையெடுத்துக் கொள்கிறோம்.

நிதர்சனத்தில் நாம் யாரை எந்த நபரை நம் வாழ்வில் நண்பராக, காதலராக, உடன் பயணிப்பவராக தேர்வு செய்கிறோம் என்று பார்த்தால் நிலையானவர்களை என்று சொல்லலாம். ஒவ்வொரு நாளும் நம்மைத் தேர்வு செய்யும் ஒருவரையே நாம் விரும்புகிறோம். மிக அணுக்கமானவர்களின் அருகில் நாம் இருக்க விழைவதும், அடிக்கடி சந்திக்க விரும்புவதும் அதனால் தான். கடவுளிடம் நாம் விழைவதும் எல்லையற்ற அன்பு, மாறாத அன்பைத்தான். மானுடமல்லாத ஒன்றை நாம் மாறாத ஒன்றை நோக்கிய கற்பனையாகவே இதுவரை விரித்திருக்கிறோம். இன்று அன்பைப் பொழிந்து நாளையே மாறிவிடும் நபர்களை நாம் நம்புவதுமில்லை, வாழ்வு அவர்களை நம்முடன் விட்டு வைப்பதுமில்லை. இந்த உலகில் நாம் யாரை அஞ்சுகிறோம் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். பொய்யர்களை, நடிப்பவர்களை, மாறாத அறத்தை, அன்பை நம்பாதவர்களை. மாறிக் கொண்டே இருக்கும் ஒன்றை நாம் விரும்புவதில்லை. மாறிக் கொண்டே இருக்கும் மனிதர்கள் நமக்கு ஒவ்வாமையை அளிக்கிறார்கள். அந்த மாறும் தன்மையால் பிறழ்ந்தும் அலைக்கழிக்கப்பட்டு நம்மை அவர்களிடமிருந்து, அந்த இடத்திலிருந்து விலக்கிக் கொள்கிறோம். அல்லது அது அப்படித்தான் நடக்கிறது.

ஆனால் முன் எப்போதையும் விட மாறிக் கொண்டே இருப்பவர்களின் எண்ணிக்கை இக்காலகட்டத்தில் அதிகரித்திருக்கிறது என்று தோன்றுகிறது. 30 நொடிக்குள் இன்னொன்றைத் தேடுகிறோம். ஓடிக் கொண்டே இருப்பதையே விழைகிறோம். நினைவுகளை நிதானமாக அள்ளிச் சேர்த்து எண்ணிப் பார்த்து ரசித்துக் கொள்ளும் போக்கு குறைந்திருக்கிறது. வாழ்வதை விட நுகர்வதன் மேலான வேட்கையே வேகமாக நம்மை ஓடச் செய்கிறது. நிறைய நுகர வேண்டும் என்னும் பேராசை. முதலாளித்துவ காலத்தைப் பற்றி மெளனகுரு சார் விளக்கும்போது விஞ்ஞானம்-பணம்-வியாபாரம்-விஞ்ஞானம் என்ற சுழற்சியைப் பற்றி விளக்கி அந்த சுழற்சியின் வேகம் காலம் செல்லச் செல்ல அதிகரித்திருப்பதாகச் சொன்னார். இந்த வியாபார நோக்கு, சந்தை மனநிலை மாற்றத்தை எல்லா மட்டங்களிலும் துரிதப்படுத்தியிருக்கிறது. விடுதலை, கொண்டாட்டம் ஆகியவற்றின் பேரில் பொறுப்பு துறப்பு ஆகியவற்றைக் கைகொண்டு மாறிக் கொண்டே இருக்கிறோம். தனி நலம் என்பது அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு தான் ஒட்டுமொத்த நலம், நீடித்த நிலையான வளம் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டிய சிந்தனைப்போக்கின் தேவை புத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் அதிகரித்தது. சிந்தனையாளர்களால் உலகளவில் முன்னெடுக்கப்பட்டது. வேறு எப்போதையும் விட மனிதன் துரிதமான மாற்றத்தை புவியில் நிகழ்த்திக் கொண்டிருப்பதை சூழலியல் சிந்தனையாளர்கள் சுட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

நிலைகுலைந்தவர்களே நிலையானதின் மேல் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நம்பிக்கையிழந்து மேலும் நிலைகுலைவை உருவாக்குபவர்களும் இவர்கள் தான். முன்னெப்போதையும் விட நிலைகுலைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நூற்றாண்டு இது தான். புறத்தைவிட அகத்தின் மாற்றங்கள் மேலும் சிக்கலானவை. பயத்தை அளிப்பது. அதிகம் மாறிக் கொண்டே இருக்கும் ஒன்று விரைவில் அழிகிறது. அதற்கு மதிப்பில்லை.

*

நீங்கள் இந்தச் சிறுகதையில் காட்டும் வேற்று கிரகத்தில் காலமும் வெளியும் பருப்பொருளும் ஒவ்வொரு நாளும் முற்றிலும் மாறுகிறது. காலத்தைப் பொறுத்து வெளியும் பருப்பொருளும் அதிகபட்சமாக மாற்றமடைவதே சாக்’கை அச்சுறுத்துகிறது.

சாக் இருந்த பூமியில் (இவ்வுலகில்) இந்த மாற்றம் சீராக நிகழ்கிறது. அல்லது அப்படி நிகழ்வதாக அவன் நினைத்துக் கொள்கிறான். இந்த இரண்டுக்கும் இடையே கிடந்து அலைக்கழிகிறான். திடீரென முறிந்து விழும் கிளை, உடைந்து சிதறும் கல், சீறும் கடல், மின்னல் ஒளி ஆகியவை நம்மை உண்மையில் அதிரச் செய்கிறது தான். நாம் தொகுத்துக் கொள்ள முடிந்தளவான மாற்றம் நம்மை தொந்தரவு செய்வதில்லை. மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது அவனுக்கு அருளப்படும்போது தான் அவன் துயர் கொள்கிறான், பிறழ்கிறான்.

மாறுதலின் மேல் கொண்ட பயத்தினால் மானுடம் உருவாக்கிக் கொண்டது தான் இந்த நிலையான அன்பு, மாறாத அறம். குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் அதன் பொருட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. விலங்குகளுக்கு இந்த மாறுவது பற்றிய பிரக்ஞை இருக்குமா? நாம் மாறுவதை நுணுகி அறிந்தது தான் முதல் சிக்கலா?. அந்த அறிவு தான் ஆதாமுக்கும், ஏவாலுக்கும் அளிக்கப்பட்ட சாபம் என்று இன்று தோன்றுகிறது. கடவுளிடம் இருப்பது/கடவுள் என்ற இடத்தில் வைக்கத்தகுந்தது அறிவுக்கு அப்பால் என்ற இடத்தில் நின்று அறியாமை அறிவு ஆகிய இரண்டு பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் இருப்பது என்று தோன்றுகிறது. ஆனால் இப்போது வேறு வழியில்லை. அறிவுப்பாதையை மானுடம் தேர்ந்தெடுத்தாயிற்று. சென்று கொண்டே இருக்க வேண்டியது தான். சந்தேகமே இல்லாமல் காலமும், இடமும், அறிந்த அறியப்படாத பரிமாணங்களும் இந்த உலகைப் பொறுத்து மாறிக் கொண்டே இருக்கப்போகிறது தான்.

ஆன்னால் இந்த உலகில் விலைமதிக்கவியலாதது மாறாத’ ஒன்று தான். இங்கு நிலைத்து அவ்வாறு நின்றிருக்கும் சொல்லும், படைப்பும், யாவும் அந்த மாறாததன்மையின் மேன்மையை நமக்குச் சொல்லவே. கலை அவ்வாறானது. கலையை நிலைத்து வாழச் செய்வதன் தொடர்ச்சியாக இருக்கும் கலைஞர்கள், மாறாதவற்றை நம் தனிப்பட்ட வாழ்வில் வழங்கும் உறவுகள், செயல்கள் ஆகியவற்றை இந்நேரத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

இந்த சிறுகதைகளின் வழியாகவெல்லாம் நீங்கள் கடத்த முற்படுவது மானுட நோக்கின் எல்லையைத் தான். ‘மேலே திறந்து கிடக்கிறது’ என்ற சிறுகதையிலும் இதை நீங்கள் விவாதித்திருக்கிறீர்கள். “நோக்கத்துக்கு வெளியே உள்ள ஒன்றை மானுடகுலம் இதுவரை அறிந்ததே இல்லை.” என்பதைப் பற்றிய விவாதமது. இது சோர்வை அளிக்கவில்லை. மாறாமல் நின்றிருக்கும் ஒன்றின்/ நித்தியமானவைகளின் முக்கியத்துவத்தை அந்த சோர்வுக்கு இணையாக சிந்திக்கச் செய்து சமன்படுத்துகிறது. “மனிதர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்” என்பதை விடவும் வேறு எவ்வாறும் இந்த சிந்தனையை முடித்துக் கொள்ள இயலவில்லை. இளைய யாதவரின் மாயப்புன்னகையும், புத்தரின் ஆழ்ந்த புன்னகையும் மேலும் இவற்றால் பொருள் கொள்கிறது.

 

நன்றி ஜெ.

பிரேமையுடன்

ரம்யா

 

முந்தைய கட்டுரைகோமியம், அறிவியல், கார்ல் பாப்பர்
அடுத்த கட்டுரைஅய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை