புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். குருகு இரண்டு வருடங்கள் கடந்து மூன்றாவது வருடத்தை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு குருகு ஏழு இதழ்கள் வெளிவந்தன. யட்சகான கலைஞர் சிவானந்த ஹெக்டேவின் நேர்காணல் முதல் இதழில் வெளிவந்தது. அந்த நேர்காணல் வழி நண்பர்கள் யட்சகானத்தின் மேல் ஆர்வம் ஏற்பட்டு அக்கலையை தேடி பார்த்ததாக தெரிவித்தனர். அவிநாசி தாமரைக்கண்ணன் எழுதிய ‘கிறிஸ்துவின் சித்திரங்கள்‘ தொடரும் அவர் மொழிபெயர்த்த ‘அறிவியல் தத்துவம்‘ தொடரும் வாசகர் விரும்பி வாசித்தவையாக இருந்தது. அத்தொடர்கள் சென்ற ஆண்டுடன் நிறைவு பெற்றது.
சூழலியல் சார்ந்து பறவையியலாளர் ரவீந்திரன் நடராஜன் உடனான நேர்காணலும், மா. கிருஷ்ணனின் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் தருண் எழுதிய குறிப்புகளும் வெளிவந்து நன்றாக வாசிக்கப்பட்டது. மற்றொரு நிகழ்த்துக்கலையான கூடியாட்டம், சாக்கியார் கூத்து பற்றிய கலாமண்டலம் ஈஸ்வர உண்ணியின் நேர்காணல் வெளியாகியது. புதுச்சேரி தாமரைக்கண்ணனின் ‘ஆடல்‘ தொடர் கம்பப்பாடல்கள் குறித்த ஆய்வாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
தத்துவம் சார்ந்த கட்டுரைகள் ஹென்றி ஸ்டீல் ஆல்காடின் பௌத்த வினாவல், வேதம் அறிதல்கள் சார்ந்து மு. சண்முகம் பிள்ளை, அனங்கனுடைய கட்டுரைகள் வெளியாகின. தியடோர் பாஸ்கரனின் சினிமா கட்டுரைகள் அழகியல் ரீதியாகவும் வரலாற்றுப்புலம் சார்ந்த அணுகி எழுதியவை நல்ல வாசிப்பை பெற்றது. 2024 ஆண்டிற்கான தமிழ்–விக்கி தூரன் விருது பெற்ற கோவை மணி குருகுவிற்கு நேர்காணலும் கட்டுரையும் தந்திருந்தார். சில முக்கியமான தொடர்களும் கடந்த ஆண்டு ஆரம்பித்துள்ளது. கு. பத்மநாபன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துகொண்டிருக்கும் தீ.ந.ஶ்ரீ கண்டய்யாவின் ‘இந்தியக் கவிதையியல்‘ அவ்வாறானது. கடைசியாக வெளிவந்த இதழில் தொல்லியலை இணையம் வழியாக அனைவருக்கும் கொண்டுசெல்லும் தன்னார்வலர் உதயசங்கர் நேர்காணல் இடம் பெற்றது.
நாங்கள் எண்ணியது போலவே கலை, தத்துவம், வரலாற்று சார்ந்த துறைகளிலிருந்து கட்டுரைகளும் நேர்காணல்களும் செய்யமுடிந்துள்ளது. எழுத்தாளர்கள் நண்பர்கள் வாசகர்களும் நல்லவிதமான எதிர்வினையை கடந்த ஆண்டு அளித்துள்ளனர். அவை இந்த வருடம் மேலும் எங்கள் இதழை மேம்படுத்தவும் செறிவாக வெளியிடும் உந்துதலை அளித்துள்ளது. இந்த வருடமும் நிறைய கனவுகளும் எண்ணங்களுடன் ஆண்டின் முதல் இதழை வெளியிடுகிறோம்.
******
குருகு பதினெட்டாவது இதழில் தெருக்கூத்து கலைஞரும் ஆசிரியருமான புரிசை கண்ணப்ப சம்பந்தனுடனான நேர்காணல் வெளிவந்துள்ளது. புரிசை குழுவினருடனான இந்த நேர்காணலை இரு பகுதிகளாக ஓவியர் ஜெயராமும் எழுத்தாளர் ரம்யாவும் செய்திருக்கிறார்கள். பன்னீர் செல்வம் எழுதியுள்ள விழிப்பின் வழி உற்றறிதல் கட்டுரை துக்கத்தை பௌத்த மெய்யியல் எவ்வாறு பார்க்கிறது என்பதை குறித்து எழுதப்பட்டுள்ளது . எஸ். கே. ராமச்சந்திர ராவின் ஆகமம் என்றால் என்ன என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது, ஆகமம் குறித்த அடிப்படை புரிதலுக்கு இந்த கட்டுரை துணைபுரியும்.
மேலும் இந்த இதழிலிருந்து இரண்டு புதிய பகுதிகள் அறிமுகமாகின்றன. பொன். மகாலிங்கம் எழுதும் டுடன்காமுன் கல்லறை தொடர் எகிப்து நாகரீக தளங்கள் மீள் கண்டடைவு செய்யப்பட்டதை விவரிக்கின்றது. புத்தக அறிமுகம் இந்த இதழில் துவங்கும் இன்னொரு பகுதி, கலை தத்துவம் வரலாறு குறித்த நூல்கள் தொடர்ந்து இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும். துவக்கமாக முனைவர் அம்பை மணிவண்ணனின் ‘சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள்‘ நூல் குறித்த அறிமுகத்தை கடலூர் சீனு எழுதியுள்ளார். இத்துடன் தொன்மத்தின் ஆற்றல், இந்தியக்கவிதையியல் தொடர்களும் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து குருகு இதழுக்கு பங்களிக்கும் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றி. இதழ் குறித்த வாசகர்களின் கருத்துக்களை எதிர்நோக்குகிறோம். நன்றி.
http://www.kurugu.in
பிகு– குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்.
https://twitter.com/KuruguTeam
அன்புடன்
குருகு