நடுவிரல்

அண்மையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த கார்ப்பரேட் முதலைகள் நாளுக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை, பதினெட்டு மணிநேரம் வேலை என்ற வகையில் பேசிக்கொண்டிருப்பதைப் பற்றி நண்பர் சொன்னார். “இவனுகளுக்கு அறிவு இருக்கா இல்லியான்னே தெரியலியே. பெரிய கார்ப்பரேட் மொதலாளின்னு பேருசரியான தத்தியா இருக்கான்

அதே விஷயத்தைப் பற்றி பேச்சு எழுந்தபோது ஒரு சினிமா பிரமுகர் சொன்னார். “நம்ம டெக்னிக்தான்….நம்மைவிட கச்சிதமாப் பண்றாங்க”. 

இதுதான் ஒரு தொழிலைச் செய்பவருக்கும், அத்தொழிலில் வேலை செய்து சம்பளம் வாங்குபவருக்குமான வேறுபாடு. ஊழியர்கள் எந்நிலையில் இருந்தாலும் ஒரு தொழிற்சூழலின் மையத்தையோ ஒட்டுமொத்ததையோ புரிந்துகொள்வதே இல்லை. அவர்கள் செய்யும் வேலைசார்ந்து மட்டுமே அறிந்து வைத்திருப்பார்கள். கூடுதலாகச் ஊடகச்செய்திகளை அறிந்திருப்பார்கள். அவற்றைக்கொண்டு தங்கள் கற்பனையை நிகழ்த்துவார்கள். தங்களை அதிபுத்திசாலிகள் என்றும், மற்றவர்கள் மடையர்கள் என்றும், விதிவசத்தால் பிறர் முதலாளிகளாக இருக்க தாங்கள் தொழிலாளிகளாக வாழநேர்ந்துவிட்டதாகவும் எண்ணிக்கொள்வார்கள். 

சினிமாக்காரர் சொன்ன அந்தடெக்னிக்என்ன? அதைத்தான்நார்மலைஸ்செய்வது என்கிறோம். சினிமாவுக்குள் அது சாதாரணம், எதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறோமோ அதை மெல்ல மெல்ல சாதாரணமாக, அன்றாடமாக ஆக்கிக்கொண்டே இருந்தால்போதும், அது ஏற்கப்படும். இது சினிமாவில் இருந்து விளம்பரத்துறைக்குச் சென்று அங்கிருந்து வளர்ந்த வடிவில் சினிமாவுக்கு திரும்ப வந்து சேர்ந்தது.

நார்மலைஸ் செய்வதன் படிநிலைகள் என்ன? முதல் விஷயம் சொல்லவேண்டியதை அதீதமாக, திகைப்பூட்டுவதாக, நம்பமுடியாததாக மிகைப்படுத்திச் சொல்வதுதான்.  அது உடனடியாகத் துணுக்குறலையும் எதிர்ப்பையும் உருவாக்கும். உடனே அதை பகடியாக ஆக்குவார்கள். திட்டமிட்டே சிலரைக்கொண்டு அதை பகடி செய்யவைப்பார்கள். அந்த அதீதத்தைக் கண்டு எரிச்சலுற்றவர்கள் அந்தப் பகடியைக் கண்டு சிரிப்பார்கள். அதைப் பரப்புவார்கள். ஆனால் அந்தச் சிரிப்பு வழியாக அது சாதாரணமாக, அன்றாட யதார்த்தமாக ஆகிக்கொண்டே இருக்கிறது என்றும், அன்றாடமென ஆன எதையும் நாம் ஏற்போம், கடந்துசெல்வோம் என அவர்கள் அறிவதில்லை.

விலைவாசி உயர்வு உடனடியாகஸ்பூஃப்ஆவதை எடுத்துப் பாருங்கள். அது ஒன்றும் இயல்பாக நிகழ்வது அல்ல. விலைவாசி உயர்வால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களால் அப்படி நையாண்டி செய்து சிரிக்க முடியாது. அந்த பகடி, கேலியைச் செய்பவர்கள் விலைவாசி உயர்வுக்கு மேலே இருப்பவர்கள். விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல அதைச் செய்கிறார்கள். ஆனால் அதனூடாக அதை நார்மலைஸ் செய்துவிடுகிறார்கள். அவர்களின் நோக்கம் அதுவே. 

ஒரு கடுமையான வரிவிதிப்பைப் பற்றிய விவாதத்தின்போது அதிகாரிகள் அதை எதிர்த்தனர் என்றும், அப்போதைய நிதியமைச்சர் எஸ்.பி.சவான்டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஆர்.கே.லட்சுமணனின் பத்து கேலிச்சித்திரங்கள் வரை எதிர்ப்பு தாங்கும்அவ்வளவுதான்என்று சொன்னதாகவும் சொல்வார்கள். ஆதிக்கத்தில் இருப்பவர்கள் அளவுக்கு பொதுமக்கள் மனநிலையை அறிந்தவர்கள் மிகக்குறைவு

முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் தொழிற்சங்கத்தில் இருந்த காலகட்டத்தில் தொழிற்சங்கத்தலைவர் ஜெகன் அதைச் சொல்வதுண்டு என்பார்கள். அன்றெல்லாம் ஆண்டுதோறும் போனஸ் பேச்சுவார்த்தை பெரிதாக நிகழும். அது ஒருமாதம் நீண்டு நிற்கும் ஒரு கடும் இழுபறிப் பேரத்தின் விளைவாகவே முடிவுக்கு வரும். 

(போனஸ் என்பது அன்பளிப்போ கூடுதல் ஊதியமோ அல்ல. அது நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் மட்டுமே. அதாவது இருதரப்பும் ஏற்றுக்கொண்ட ஓர் அடிப்படை ஊதியம் பன்னிரண்டாகப் பிரிக்கப்பட்டு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. எஞ்சிய தொகை நிலுவையில் இருந்து நிறுவனத்தின் லாபத்தை ஒட்டி பகிரப்படும், அதுவே போனஸ் என்பது. அது நிலுவை ஊதியம் என்று பொருள். )

அந்தப் பேச்சுவார்த்தையின்போது அதை எவ்வகையிலும் கேலி, கிண்டலாக ஆக்கிவிடலாகாது என்று ஜெகன் சொல்வாராம். ஏனென்றால் அதை பேசிச் சிரிக்க ஆரம்பித்தாலே அது சாதாரணமாக ஆகிவிடும். ஒரு கட்டத்தில் போராட்டம் அறிவிக்கப்படும்போது அதை நிகழ்த்துமளவுக்கு சீற்றம் ஊழியர்களிடம் இருக்காது.

இந்த தொழிலதிபச் சுரண்டிகள் உண்மையில் திட்டமிட்டே அதைச் சொல்கிறார்கள். இன்றைய சூழலில் சமூக ஊடகம் வழியாக நாமே அதை சொறிந்து சொறிந்து,  ரசித்து ரசித்து, இளித்து இளித்து நார்மலைஸ் ஆக்கிக் கடந்து செல்வோம் என அவர்கள் அறிவார்கள். 

இன்றும் இந்தியாவில் நாளொன்றுக்கு எட்டு மணிநேரம்தான் சட்டபூர்வமான உழைப்புநேரம். அதை மாற்ற நினைக்கிறார்கள். பதினாறு பதினான்கு என்றெல்லாம் சொல்லி, அதை நாம் கேலிசெய்து, கடந்துசென்றபின் சட்டபூர்வமான நேரவரையறையை இல்லாமலாக்கி பத்து அல்லது பன்னிரண்டு மணிநேரம் ஆக்கினால் அது ஒரு பேசுபொருளாகவே இருக்காது என அவர்கள் அறிவார்கள். அந்நம்பிக்கை பொய்க்கவில்லை. அதைத்தான் நாம் மிகுந்த ஊக்கத்துடன் செய்துகொண்டிருக்கிறோம்.

அப்படியென்றால் இந்தபின் நவீனத்துவப் பகடிஎல்லாம் என்ன? பகடியால் அதிகாரத்தை எதிர்கொள்வதென்றால் என்ன? அதெல்லாம் எப்படி எப்போது உருவானது?

உலகளாவிய பொருளியல் உருவாகத் தொடங்கியமையின் துணைவிளைவாக உருவானவை அவை. உருவானவை அல்ல, உருவாக்கப்பட்டவை. மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழியாக திட்டமிட்டு நுணுக்கமாக உருவாக்கி உலகமெங்கும் பெரும்பொருட்செலவில் ஏற்றுமதி செய்யப்பட்டவை. நிதிக்கொடைகள் வழியாக கீழைநாட்டுப் பல்கலைகளில் நுழைக்கப்பட்டவை. 

இதெல்லாம் இன்று அனைவரும் அறிந்தவைதான். பல கோணங்களில் மிக விரிவாகப் பேசப்பட்டவை. எல்லாவற்றையும் கேலியும் கிண்டலுமாக ஒருவாரம் பேசிவிட்டு அப்படியே கடந்துசென்று அடுத்த பேசுபொருளை நாடும் இன்றைய நமது மனநிலையை தொண்ணூறுகள் முதல் மெல்ல மெல்ல கட்டமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறிவுஜீவிகள் முதலில் அந்த திட்டத்திற்குள்  நுழைந்தனர், இதுதான் இப்போது நவீன மோஸ்தர் என்றால் அவர்கள் எதையும் செய்வார்கள். பாமரர் அவர்களைத் தொடர்ந்தனர். இன்று அதுவே ஒரு பொதுப்போக்காக ஆகிவிட்டிருக்கிறது.

எந்த தீவிரத்திற்கும் எதிரான உளநிலை எப்படி உலகளாவ நிலைகொண்டுள்ளது என்பதைக் காணத் திகைப்பாகவே இருக்கிறது. போர்கள், பஞ்சங்கள், பேரழிவுகள் எல்லாமே பகடிப்பொருட்களாக ஆகிவிட்டிருக்கின்றன. சர்வதேச இலக்கிய விழாக்களில்கூட “I laugh at this…” என்று கால்மேல் கால்போட்டு தலைமயிரை நீவிக்கொண்டு பேசுவதுதான் மோஸ்தர் என ஆகிவிட்டிருக்கிறது. எல்லா மேடைகலில் இருந்தும் அந்த ஒரே குரல் எழுவது அளிக்கும் சலிப்பு சாதாரணம் அல்ல.

இன்று அணையாத தீவிரத்துடன் தனித்துநிற்பதே சிந்திப்பவனின் கடமை என்று தோன்றுகிறது. எல்லா வகையான மழுங்கடித்தல்களுக்கும் எதிராக எழுத்தாளன் தன் குரலைக் கூர்மைசெய்துகொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். அதை “சலிப்பூட்டுகிறது” என்பார்கள் இன்றைய தலைமுறையினர். ‘பூமர்” என்னும் ஒரு சொல் இளம் அறிவிலிகள் நடுவே புழக்கத்தில் இருக்கிறது. அவர்களுக்கு நடுவிரலைக் காட்டாமல் இன்று ஒரு சிந்தனையாளன் பேசமுடியாது.

முந்தைய கட்டுரைடி.ஆர். சுப்பிரமணியன் 
அடுத்த கட்டுரைசைவத்தை அறிய…