காந்தியை தெருக்களில் சந்தித்தல்.

சிபி

விஷ்ணுபுரம் நண்பர்கள் மாணவர் நடுவே முன்னெடுக்கும் முயற்சிகளின் விளைவாக உருவானது முனை என்னும் அறக்கட்டளையும், காந்திய அடிப்படையிலான அதன் செயல்பாடுகளும். அவர்கள் 11 ஜனவரி 2025 அன்று கோவை போத்தனூர் காந்தி நினைவகத்தில் இருந்து தொடங்கி வேதாரண்யம் வரை செல்லும் நீண்ட நடைபயணத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.   பார்க்க: மாணவர்களின் காந்திய நடைபயணம்

நண்பர் கிருஷ்ணனின் கண்டெடுப்புகளில் முக்கியமானவர் மாணவர் சிபி. எந்த இலக்கிய அறிமுகமும், சிந்தனைத்துறை அறிமுகமும் இல்லாமல் வெறும் ஆர்வம் மட்டுமே கொண்டு மூன்றாண்டுக்கு முன் அறிமுகமானவர். இன்று அவருடைய ஆழ்ந்த கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவருடைய மொழி கூர்மையாக உள்ளது. ஒருங்கிணைப்புத்திறனும் இலட்சியவாத ஊக்கமும் கொண்டவராக ஆகியிருக்கிறார். நல்ல பேச்சாளராக ஆகியிருக்கிறார். அனைத்தும் கிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், வி.பி.குணசேகரன், குக்கூ சிவராஜ், சுனீல்கிருஷ்ணன், அனீஷ்கிருஷ்ணன் நாயர், லோகமாதேவி என நம் நண்பர்களின் பயிற்சி. ஆர்வமும், ஒருங்கிணைந்த கவனமும் இருந்தால் போதும், இரண்டு ஆண்டுகளில் ஒருவர் நம் சூழல் அளிக்கும் எல்லா எதிர்மறை விசைகளில் இருந்தும் தப்பி ஓர் ஆளுமையாக ஆகிவிட முடியும் என்பதற்கான சான்று சிபி. அவரைப்போல குறைந்தது இருபதுபேரை சுட்டிக்காட்டமுடியும்.

சிபி தன் பயணத்தைப் பற்றி முறையாக அறிவித்தார். (முனை இயக்கம் அறிவிப்பு) . அதைத்தொடர்ந்து வெவ்வேறு நண்பர்கள் இணைந்துகொண்டார்கள். காந்தியச் சிந்தனையாளரும் காந்திய கிராமிய இயக்கப் பணியாளருமான கண்ணன் தண்டபாணி ஜனவரி 11 அன்று பயணத்தை தொடங்கி வைத்தார். சிபி தன் பயணத்தைப் பற்றி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருக்கிறார்

இப்பதிவுகள் மிக ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையுடன் உள்ளன. இளைஞர்களின் உலகம். கூடவே இலட்சியவாதத்தின் வேகம். புதியவற்றைச் செய்யும் சாகச ஈடுபாடு. இவ்வாழ்க்கை மேல், எதிர்காலத்தின் மேல் கொண்டிருக்கும் அபாரமான நம்பிக்கை

காந்தியச் செயல்பாடு என்பது சில அடிப்படைகள் கொண்டது. ஒன்று , நம்பிக்கை, நேர்நிலை நோக்கு. இன்றைய சூழலில் அரசியல்வாதிகள், நவீன இலக்கியவாதிகள் இருசாராரையும் முழுமையாக விலக்காமல் அதை அடையமுடியாது. அரசியல் என்பது ஒருவரை ஒருவர் கடுமையாக எதிர்ப்பது என்று ஆகிவிட்டிருக்கிறது. இரு சாராரும் சேர்ந்து நடத்தும் ஒரு நடிப்பு அது- இரு சாராரும் மக்களைச் சுரண்டுபவர்கள், அதிகாரம் மட்டுமே குறியாகக்கொண்டவர்கள் என்பதை அந்த நாடகம் திறம்பட மறைத்துவிடுகிறது.

நவீன இலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் உலகப்போர்களுக்குப் பின் ஐரோப்பாவில் உருவான உளச்சோர்வை வெளிப்படுத்தும் இலக்கியங்களில் இருந்து அந்த உளச்சோர்வை மட்டுமே பெற்றுக்கொண்டு, எந்த காரணமும் இல்லாமல் அதை வெளிப்படுத்தும் எளிய நகல்கள். அவர்களின் எதிர்மனநிலை, கசப்பு, கேலி எல்லாமே அவர்களின் சொந்த இயலாமை அல்லது நோய்க்கூறின் வெளிப்பாடுகள் மட்டுமே. அவர்களின் அனுபவமண்டலத்தில் இருந்து உருவாவதுகூட அல்ல.

இந்த உலகம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படி வெளிப்படுவது. உண்மையில்  உலகம் என்பது நாமே உருவாக்கிக்கொள்வதுதான்.  இந்த மாபெரும் வெளியில் நமக்குரியதை நாம் வெட்டி எடுத்துக்கொள்கிறோம். நம்பிக்கையும் நேர்நிலை நோக்கும் கொண்டவர்கள் அவர்களுக்கான உலகைப் படைத்துக்கொள்கிறார்கள். அப்படி தன் வாழ்வை ஒளிமிக்கதாக ஆக்கிக்கொண்டு, தன் சூழலை ஒளிபெறச்செய்து, தன் உச்சகட்டத்தை உலகுக்கு அளித்துவிட்டு அமர்ந்திருப்போர் நம்மைச்சூழ உள்ளனர்.  நமக்கான முன்னுதாரணங்கள் அத்தகைய ஒளிமிக்க ஆளுமைகளா இருண்ட மனிதர்களா என்பது நம் தெரிவு.

காந்தி முன்வைப்பது இலட்சியவாதத்தை. இலட்சியவாதத்திற்கான இலட்சியவாதம் அது. இலட்சியவாதம் என்பது மகிழ்ச்சியை அளிக்கும், ஆன்மிக நிறைவை அளிக்கும், வாழ்வுக்கான நோக்கமும் இலக்கும் ஆகும் என்பதனால் அவர் இலட்சியவாதத்தை பரிந்துரைக்கிறார்.  காந்தி தொடர்ச்சியாக தன் சேவைப்பணியாளர்களிடம் மக்களைச் சந்திக்கச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். மக்களிடமிருந்து இலட்சியவாதத்தைக் கற்றுக்கொள்ளச் சொல்கிறார். மக்களிடம் இலட்சியவாதம் உள்ளுறைந்துள்ளது என்கிறார். ஏனென்றால் அவர்கள் வாழ்ந்தாகவேண்டும். அவர்களிடம் எத்தனை தீய அம்சங்கள் இருந்தாலும் அந்த இலட்சிவாத விழுமியங்கள் இல்லையேல் அவர்களால் ஒரு சமூகமாக வாழமுடியாது. இன்னல்களை கடக்க முடியாது.

இந்தப் பயணத்திலும் இளம்நண்பர்கள் மக்களிடமிருந்து அந்த வரவேற்பை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். அது அவர்களுக்கு நம்பிக்கையையும் நிறைவையும் அளிக்கிறது. ஏற்கனவே கிராமப்பணிகளில் அவர்கள் மக்களிடமிருந்து வெளிப்படும் அந்த இலட்சியவாதம் மீதான மதிப்பை நேரில் அறிந்திருக்கிறார்கள். மக்களிடமிருந்து அன்னியமாகி நின்று பார்க்கும் ஒருவரால் அதைக் காணமுடியாது. அவர்கள் மக்கள் பற்றி கொண்டிருக்கும் எதிர்மறைநோக்கு உண்மையில் பார்ப்பவரிடமிருந்து உருவாவது. தன் தீமையைக்கொண்டு அவர் பிறரிடம் தீமையை மட்டுமே காண்கிறார்.

காந்தி சமூகத்தீமைகளை எதிர்த்தவர். ஆதிக்கத்தை எதிர்த்தவர். அதன்பொருட்டு பேரியக்கங்களை உருவாக்கி நடத்தி வென்றவர். தீண்டாமை இயக்கத்தை வைக்கம் போராட்டம் வழியாக எதிர்த்து அதற்கான வழிமுறையை உருவாக்கினார். பொருளியல் எதிர்ப்பாக உப்புசத்தியாக்கிரகம் முதலியவற்றை உருவாக்கினார். குடிமை எதிர்ப்பாக ஒத்துழையாமைப் போராட்டத்தை வடிவமைத்தார்.

ஆனால் காந்தி எதிர்ப்பரசியல் செய்தவர் அல்ல. அவருடைய போராட்டம் என்பது எதிர்த்தரப்பின் மீதான வெறுப்பில் இருந்து எதிர்ப்பை உருவாக்கிக் கொள்வது அல்ல. தன் தரப்பின் அறஅடிப்படையை வலுவாக்கிக்கொண்டே செல்வதுதான். தாங்கிக்கொள்வதன் வழியாக, தன்னை திட்டவட்டமாக முன்வைப்பதன் வழியாக. அது முற்றிலும் நேர்நிலையான ஒரு செயல்பாடு. அதன் வழியாக போராடுபவர் மேலும் மேலும் உளவிரிவும் கனிவும் கொண்டவர் ஆகிறார். தன் பிழைகளையும் காணும் கண் பெறுகிறார்.

இன்றைய அரசியலில் உள்ள காழ்ப்பும் கசப்பும் இன்றைய எதிர்ப்பரசியலின் வெளிப்பாடு. இன்றைய அரசியலில் ஈடுபாடுள்ள ஒருவர் தன் தரப்பைத் தவிர அனைத்துத் தரப்புக்கும் எதிரிதான். அனைவரையும் வசைபாடி, எள்ளிநகையாடும் உரிமையை தான்பெற்றுவிட்டதாக அவர் நம்புகிறார். இரவுபகலாக வெறுப்பும் கசப்புமாக ‘களமாடிக்’கொண்டே இருக்கிறார். பலசமயம்  தங்கள் தனிவாழ்க்கையிலுள்ள தோல்விகளை கசப்பாக ஆக்கிக்கொள்பவர்களே அரசியல்வேடம் போடுகிறார்கள். ஏதேனும் ஓர் அரசியல் தரப்பை எடுத்துக்கொண்டால் அவர் வசைபாடுவதற்கும் காழ்ப்பைக் கொட்டுவதற்குமான காரணங்களைப் பெற்றுவிடுகிறார். அதில் திளைக்கமுடிகிறது.

உண்மையில் அவ்வண்ணம் எதிர்ப்பில் திளைப்பவர் தன்னை இருண்ட அகம் கொண்டவராக ஆக்கிக்கொள்கிறார். கசப்பு நிறைந்தவராக ஆகும் ஒருவர் தன் அகமகிழ்வைத்தான் இழக்கிறார். தன்னுடைய அனைத்து ஆன்மிகசக்தியையும் அழித்துக்கொள்கிறார். துன்பம் நிறைந்தவராக, துயரைப் பரப்புபவராக உருமாறிக்கொண்டே இருக்கிறார்.  அது ஒரு பெரும் ஆன்மிக வீழ்ச்சி. இன்றைய அரசியலியக்கங்கள் ஆள்சேர்க்கும் முனைப்புடன் இளைஞர்களை தங்கள் எதிர்ப்பரசியல் நோக்கி ஈர்த்துக்கொண்டே இருக்கின்றன. சுயநலமிகளாக, எல்லாவகை அரசியலில் இருந்தும் அகன்று வேலை தொழில் என இருக்கும் இளைஞர்கள் உண்மையில் தப்பித்துக்கொள்கிறார்கள். அந்த கசப்பின் வலையில் சிக்கிக்கொள்பவர்கள் பெரிய படிப்பும் வேலையும் இல்லாத எளிய இளைஞர்கள்.

காந்திய அரசியல் ‘கிளர்ச்சியூட்டக்கூடியது’ அல்ல. கிளர்ச்சிகளின்போது உருவாகும் செயற்கையான கொப்பளிப்பும் போலிநட்பும் அங்கே இல்லை. அது மெல்ல, நீடித்து நிகழ்வது. மெல்லிய உரசல்கள் வழியாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அணுகுவதே அங்கே நிகழும். மாற்றங்கள் எவையும் உடனே நிகழாது – ஆனால் மெய்யான மாற்றங்கள் காந்திய அரசியல் வழியாக மட்டுமே நிகழமுடியும். சிறிய அலகுகளில், சாத்தியமான சிறிய இலக்குகளை எடுத்துக்கொண்டு நம்பிக்கையுடன் தொடர்ச்சியாகச் செயல்படுவதே காந்திய அரசியல் என்பது. காந்திய அரசியல் உண்மையில் குறியீட்டுச் செயல்பாடு கொண்டது. அது ஒன்றைச் சொல்லி பிரச்சாரம் செய்கிறதென்றால் அதைச் சார்ந்த அனைத்தின்மீதும் ஒட்டுமொத்தமான கருத்துருவாக்கத்தை நிகழ்த்துகிறதென்பதே பொருள்.

இந்தப் பயணத்தில் இளம் நண்பர்கள் பார்த்துக்கொண்டிருப்பது தமிழ்ச்சமூகத்தை மட்டும் அல்ல, அவர்களையும்கூடத்தான். அவர்கள் அகத்தே வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். வாழ்க.

தொடர்புக்கு : [email protected]

முந்தைய கட்டுரைஅ. தட்சிணாமூர்த்தி
அடுத்த கட்டுரைஆலயக்கலைப் பயிற்சி