வல்லினம் இரு கதைகள், வாசிப்பு

மேலே திறந்து கிடக்கிறது…

ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்

அன்புள்ள ஆசிரியருக்கு

வெள்ளி மலையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடித்து திரும்பியவுடன் வல்லினம் ஜனவரி இதழில் வெளியான உங்களது “மேலே திறந்து கிடக்கிறது…” கதையும் அஜிதனின் “ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ்” கதையும் படித்தேன். சமீபமாக நீங்கள் பல்வேறு இதழ்களில் எழுதி வரும் கதைகளில் அறிவியல் புனைவு சாயல் கொண்ட களத்தை எடுத்துக் கொண்டு அதில் தத்துவார்த்தமான விஷயங்களை வைத்து பேசுகிறீர்கள். இக்கதையில் மனிதன் தன்னை சுற்றியுள்ள புற உலகத்தை மூன்று நிலைகளிலாக அறிவாக தொகுத்துக் கொள்கிறான் அது அந்தகரண விருத்தி, ததாகரண விருத்தி, நாமகரண விருத்தி அவ்வாறு தொகுக்கப்பட்ட
அறிவுத் தொகையிலிருந்து ஏதோ ஒன்று ஆணவமாக மாறி பின்னர் ஆற்றல் கொண்டு செயலாக வெளிப்பட்டு அது எப்படி அவன் அழிவுக்கு இட்டுச் செல்கிறது என்று பேசப்படுகிறது. கதை களம் பல நூற்றாண்டுகளாக பூமியிலும் பூமிக்கு வெளியிலும் நடப்பது, அந்த தகவல் அனைத்தும் உரையாடல் வழியாகவே வாசகர்களுக்கு கடத்தப்பட்டு விடுகிறது, இது இக்கதைக்கு ஒரு மிஸ்டிக் அம்சத்தை கொடுத்து விடுகிறது. தத்துவ கனமுள்ள கதை, எனக்குப் புரிந்தவரை வாசித்துள்ளேன்.
        அடுத்து நான் மிகவும் ரசித்து வாசித்தது அஜிதனின் “ஆசிர்வாதம் ஸ்டுடியோஸ்” இக்கதையை நான் மூன்று நிலைகளாக பகுத்துக் கொள்கிறேன் அவன், அவர், அவர்கள். முதலில் அவன், கரிசலில் பிறந்தது முதல் துளி அன்பும் கிடைக்க பெறாமல் மகிழ்ச்சி என்றால் என்னவென்றே அறியாத ஒருவனாக அவன் வளர்கிறான், அஜிதனின் எல்லாக் கதைகளையும் போலவே துல்லியமான காட்சி சித்தரிப்பு வழியே அந்நிலமும் ஆடு மேய்த்து வாழும் கீதாரிகளின் உலகமும் என் கண் முன் விரிந்தது. தமிழக மைய நிலத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலத்திலேயே ஒதுங்கியவனாக வன்முறை மற்றும் தற்கொலை எண்ணமும் கொண்டு வாழும் அவன் முதலில் அடைந்த மகிழ்ச்சி என்பது அவர் இசை வழியாக கிடைக்கபெறுவது தான். இக்கதையில் அவனுக்கு பெயர் கொடுக்கப்படவில்லை அதனால் அவனை இந்நிலத்தின் பிரதிநிதியாகவே எடுத்துக் கொள்கிறேன் அப்படிப்பட்ட நிலத்தில் எங்கோ இருந்து மழை மேகங்களை திரட்டி கொண்டு வரும் பருவ காற்றை போல் அவர் தன் இசையின் மூலம் இந்த நிலத்தில் பொழிகிறார். இக்கதையில் இளையராஜாவின் பெயரும் நேரடியாக சூட்டப்படவில்லை ஆனால் வாசித்த அனைவரும் இளையராஜா என்றே அவரை வாசித்திருப்பர், பின்னர் அவன் தன் ஊரை விட்டு கிளம்பி எவ்வாறு அவர் அருகாமையிலே தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறான் என்பது விவரிக்கப்படுகிறது, ஆனால் இக்கதையை ஒரு நல்ல கதையாக மாற்றுவது கதையின் இறுதியில் நடக்கும் நிகழ்வும் அவர் சொல்லும் வார்த்தைகளும் தான், இசை மூலம் அவர் ஓர் இரண்டற்ற பேதமற்ற நிலையை அடைந்து விட்டார் பின்னர் அவ்விசையே அவரை விட்டு ஆகன்றாலும் அவருக்கு ஒன்றும் இல்லை. இக்கதையின் ஊடாக வரும் விவரணைகளும் சில வரிகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது உதாரணமாக
“தொடுவானம் மெல்ல அழிந்து பூமி சாயமிழக்கும்.
தனக்காக மட்டும் வாழும் எந்த வாழ்க்கையும் காலடி மண்ணுக்குள் செரித்து அடங்கிவிடும்”
இளையராஜா மீது சமீபகாலமாக சிறுகும்பல் வன்மத்தை கொட்டியபடி உள்ளது அந்நிலையில் இதுபோன்ற கதைகள் மகிழ்வளிக்கிறது.
நன்றி
லால்குடி தினேஷ்.
அன்புள்ள ஜெ,
இருபத்தொன்பது ஆண்டுகளாக என் எரியும் வாழ்க்கையில் என்னுடன் இருந்த ஒரே துணைவருக்கு இதைவிட பெரிய ஒரு மொழிக்கிரீடத்தைச் சூட்டிவிடமுடியாது. அஜிதனுக்கு என் ஆசீர்வாதம்
எஸ். ஞானராஜ்
ஒருகட்டத்தில் தாங்கமுடியாத இறுக்கம் ஒன்று காற்றில் ஏறி அழுத்தும்போது மேற்கே திரையை கிழித்ததுபோல மலைகளைத் தாண்டி உடைத்துக்கொண்டு மலைகளுக்கு மேல் ஒரு மாபெரும் மலைபோல கருமேகங்கள் காற்றில் உருண்டெழும். இடியும் மின்னலும் வெற்று நிலத்தில் வானம் உடைபடுவதுபோல எதிரொலிக்கும். இருண்டபடி கண்முன்னே திரண்டுவரும் மழைமேகங்கள் உடலை நடுக்கும் பனிச் சாரலை அள்ளி வீசி தெளித்தபடி கிழக்கே கடல் நோக்கி விரைந்து கடக்கும். மண் மணம் பிடித்தபடி ஆடுகளும் கரிசல் ஜீவராசிகளும் அதில் பித்தேறி நிலைத்து நிற்கும். பனையும் கருவேலமும் எல்லாம் கோடையின் தூசு குளிர்நீரில் கழுவிச்செல்ல மினுக்கும் கன்னங்கரிய உடல்களுடன் தாட்டியமாக கல்போல் உறைந்து நிற்கும்.  கிடை ஆடுகளின் உடல் மட்டும் சிலிர்த்து சிலிர்த்து அடங்கும். மேய்ச்சலில் நிற்கும் நாங்கள் ஆடைகளை களைந்து விட்டு மயிர்கூச்செறிய சாரலில் நனைவோம். அவர் குரலும் அதுபோலத்தான் உள்ளே நுழைந்தது.
முந்தைய கட்டுரைTowards His Dreams
அடுத்த கட்டுரைஅ.சே.சுந்தரராஜன்