அன்புள்ள ஜெ
சித்தாந்தம் இணைய இதழ் தொடக்கம் நன்று. இன்று இத்தகைய ஓர் இதழை இளைஞர்கள் சேர்ந்து நடத்துவது மிகச்சிறப்பானது. இன்று சைவம் நலிந்து வருகிறது. வெறும் பக்தியாகச் சுருங்கிவிட்டிருக்கிறது. சைவ சித்தாந்தம் பேச கேட்க ஆளில்லை. இளைஞர்களுக்கு இதில் ஆர்வமிருப்பதும் அவர்கள் கற்பதும் இதழ் நடத்துவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியன. அவர்களுக்கு ஆசிகள்.
நீங்கள் தொடர்ச்சியாக சைவசித்தாந்த வகுப்புகளை ஒருங்கிணைப்பதும் அதை அனைத்து மதசித்தாந்தங்களுடன் இணைத்தும் ஒப்பிட்டும் கற்கச்செய்வதும் மிகுந்த முக்கியத்துவம் உடைய நிகழ்வுகள். இந்த இளைஞர்கள் உங்களிடமிருந்து கிளைத்திருக்கின்றனர். இப்படி பலநூறு கிளைகளும் விழுதுகளுமுள்ள ஆலமரமெனத் திகழ்கின்றீர்கள்
இந்த இதழிலுள்ள குறைகள்
சித்தாந்தம் என்ற பேரிலே ஒரு சைவ அச்சிதழ் நீண்டகாலமாக நடைபெற்றுள்ளது. இவ்விதழ் அதன் இணைய வடிவம் அல்ல என்பதை தெளிவுபடுத்தவேண்டும். இதழ்பற்றிய குறிப்பில் அதை இடம்பெறச்செய்யலாம்
ஆசிரியரின் பெயர் கட்டுரை முகப்பிலேயே இருந்தாகவேண்டும். ஆசிரியர் எவர் என நோக்க கட்டுரையை கீழே வரை இழுத்துக்கொண்டு செல்லவேண்டியுள்ளது. கீழே ஆசிரியரின் பெயரும் குறிப்பும் இருக்கலாம். இனி வரும் இதழ்களில் ஆசிரியர் எழுதிய எல்லா கட்டுரைகளையும் ஒரே தொகுப்பாகப் பார்க்கும் வசதி அமையவேண்டும்.
கு.அருணாசலம்
அன்புள்ள அருணாசலம் அவர்களுக்கு
வாழ்த்துக்களுக்கு நன்றி.
சைவ சித்தாந்த வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்துவதாகவே இருக்கிறோம். குறைவான பங்களிப்பு இருந்தாலும் வருபவர்கள் தீவிரமானவர்கள் என்பதை இச்செயல்கள் காட்டுகின்றன. அது நிறைவளிக்கிறது.
வரும் ஜனவரி 31, பிப் 1 மற்றும் 2 தேதிகளில் சைவசித்தாந்த வகுப்புகள் நிகழவுள்ளன (பார்க்க)
ஜெ