மனோன்மணீயம்
தமிழ்த்தாய் வாழ்த்து
பெ. சுந்தரம் பிள்ளை
சென்னை புத்தகவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமையால் எதிர்ப்பு தெரிவித்து நண்பர் எஸ்.கே.பி.கருணா அவரது நூல்களை விலக்கிக் கொண்டிருக்கிறார் என்றும், என் கருத்து என்ன என்றும் ஒரு நண்பர் கேட்டார்.
எனக்கு தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பாடல் என்றவகையிலேயே மிகப்பிடித்தமானது. அதன் சந்த அமைப்பும் சொற்சேர்க்கையும் ஒரு காரணம். அதன் முழுவடிவில் உள்ள அத்வைத தரிசனம் இன்னொரு காரணம். அதை எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எனக்கு மிக உவப்பானவர், ‘எங்கூர்க்காரர்’ என்பது இன்னொரு காரணம். அவருடைய மகன் நடராஜ பிள்ளை மீதே பெருமதிப்புண்டு.
அனைத்தையும் விட அந்தப்பாடலின் இசை. பெரும்பாலானவர்கள் ஏதேனும் நிகழ்ச்சிகளில்தான் அதை கேட்பார்கள். நான் ஓர் அக ஊக்கத்துக்காகவே அப்பாடலைக் கேட்பதுண்டு. எழுதுவதற்கு முன் கேட்கும் வழக்கம் உண்டு. துடிப்பான இசை என்பது ஒருபக்கம். இந்தத் தலைமுறையில் தமிழுக்கு மிக அதிகமாகப் பங்களிப்பாற்றுபவன் என நான் என்னை மதிப்பிடுவதனால் வரும் பெருமிதம் இன்னொரு பக்கம்.
அரசு நிகழ்வுகளில், அரசுடன் தொடர்புகொண்ட அமைப்பின் நிகழ்வுகளில் அரசு வகுத்த நெறிமுறைகள் மீறப்படலாகாது என்பதே என் எண்ணம். ஆகவே பபாசி நிகழ்ச்சியில், அதன் நிர்வாகிகள் முன்னிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றிப்பாடப்பட்டது பிழையானது.
ஆனால் உண்மையில் நான் அந்த மேடையில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? எனக்கு அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதே மண்டையில் உறைத்திருக்காது. அரசியலுள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே அதெல்லாம் தோன்றும். நான் மேடைகளில் வழக்கமாக இருப்பதுபோல உள்ளத்தை அலையவிட்டு, அல்லது நான் ஆற்றப்போகும் உரையை யோசித்தபடி அமர்ந்திருப்பேன். பிறகு எவராவது அதை குறிப்பிட்டுச் சொன்னால்தான் அந்தப்பிழை தெரியவரும்.
பபாசியின் நிர்வாகிகளை, குறிப்பாக கவிதா சொக்கலிங்கம் அவர்களை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்கு எந்த அரசியலும் இல்லை. எல்லா வணிகர்களையும்போல அவர்கள் தூய வணிகர்கள். எவரையும் பகைத்துக்கொள்ளலாகாது, அனைவரிடமும் இனிய அணுக்கம் தேவை என எண்ணுபவர்கள். அவர்களுக்கு ஒன்றுமே தோன்றியிருக்காது. பின்னர் அந்த மீறல் தெரியவந்தபோது எழுத்துவடிவில் கண்டித்திருக்கிறார்கள். அப்படித்தான் அது நிகழமுடியும்.
புத்தகக் கண்காட்சியில் அரசியல் இருக்கலாமா? இருக்கலாம், புத்தகங்களாக. மனோன்மணியம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்து ஏன் தேவையில்லை என்பதை விளக்கி ஒரு நூல் அங்கே விற்கப்படலாம். இந்திய தேசியம் ஏன் தேவையில்லை என்று விளக்கும் நூல்கள் விற்கப்படலாம். தமிழ்த்தேசியம் ஏன் தேவையில்லை என்றும் நூல்கள் விற்கப்படலாம். எந்த நூலுக்கும் அங்கே தடை இருக்கக்கூடாது – என் பார்வையில் அரசே கூட எந்த நூலையும் தடைசெய்யலாகாது.
ஆனால் அங்கே அரசியல் நடவடிக்கைகள் எவையும் நிகழலாகாது. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான அரசியல் தரப்புகள் உள்ளன. புத்தகக் கண்காட்சி மிகச்சிறிய இடம். அங்கே அத்தனை அரசியல் தரப்புகளும் எதையாவது செய்ய ஆரம்பித்தால் அது புத்தகக் கண்காட்சியாக இருக்காது. புத்தகத்துடன் சம்பந்தமற்றவர்கள் உள்ளே வந்து கூடி புத்தகக் கண்காட்சியே இல்லாமலாகிவிடும். இதை பபாசி உணரவேண்டும்.
இந்த ஆண்டு பல ஆண்டுகளாகக் கிடைக்காமலிருந்த என்னுடைய பல நூல்கள் மறுபதிப்பாக வெளிவந்துள்ளன. புதிய நூல்கள் சிலவும் வெளிவந்துள்ளன.
வாசகர்களை வரவேற்கிறோம்.
புதிய நூல்கள்
இந்துஞானம் – அடிப்படைக்கேள்விகள் வாங்க
இந்துஞானம் அடிப்படைக்கேள்விகள் என்னும் நூல் பரவலாக இந்துமெய்யியல் சார்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கான சுருக்கமான பதில்களின் தொகுப்பு.
கீதையை அறிதல். கீதை பற்றி நான் ஆற்றிய பேருரையின் எழுத்துவடிவம். உரை ஆதலால் வேகமான ஓட்டம் கொண்டதாக உள்ளது. ஆனால் செறிவானதாகவும் உள்ளது. கீதையை ஒரு நவீன வாசகன் அறிமுகம் செய்துகொள்வதற்கு உகந்த நூல்
நான் என் நண்பர்களுடன் அமெரிக்காவில் கிழக்குக் கடற்கரையில் இருந்து (நியூயார்க்) மேற்குக்கடற்கரை வரை (கலிஃபோர்னியா) செய்த நீண்ட கார்ப்பயணத்தின் அனுபவக்குறிப்பு. உடன் வந்த நண்பரான விஸ்வநாதன் எழுதியது.
வடகிழக்கு மாநிலங்களில் நான் என் நண்பர்களுடன் மேற்கொண்ட பயணங்களின் நேர்ப்பதிவு. வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய நம் புரிதல் உள்நோக்கம் கொண்ட இதழாளர்களல், அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. இவை கண்கூடான காட்சிகளின் வழியாக உருவாகும் சித்திரங்கள்
இமையமலை அடிவாரத்து மாநிலங்கள் வழியாகச் சென்ற பயணங்களின் பதிவுகள். பனியும் அமைதியும் உறைந்துகிடக்கும் ஆளற்ற நிலம் வழியாகச்செல்லும் போது கண்கள் மட்டுமே செயல்படுகின்றன. உள்ளமும் கண்களாகின்றது.
மறுபதிப்புகள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |