விஷ்ணுபுரம் அரங்கில் அமர்ந்து தொடர்ச்சியாக வாசகர்களைச் சந்திப்பதென்பது ஓர் அரிய அனுபவம். எந்த வணிகருக்கும் வாடிக்கையாளர்களைச் சந்திப்பது போல நேர்ப்புரிதல் அளிப்பது பிறிதில்லை என்பார்கள். நான் இலக்கியம் வாசகர்களால் எந்நிலையிலும் வழிநடத்தப்படுவதாக அமையக்கூடாது என்னும் கொள்கை கொண்டவன். ஆகவே வாசகர்கள் சொல்லும் எதிர்வினைகளில் என் படைப்பு எப்படி சென்றடைந்துள்ளது என்பதை மட்டுமே கருத்தில் கொள்வது என் வழக்கம்.
அப்படித்தான் நீண்டகாலமாக எழுதி வந்தேன். ஆகவே ஒரு வகையில் என் எழுத்து ஒரு தலைமுறைக் காலத்திற்கும் மேலாக ஒரு தனிவழியாக, பெரும்பான்மையின் உலகில் இருந்து முற்றிலும் வேறொன்றாக இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் மெல்ல மெல்ல எனக்கான வாசக உலகம் ஒன்று உருவானது. என்னுடன் இடைவிடாமல் அகத்தொடர்பில் இருப்பவர்கள் பல்லாயிரவர் இன்றுள்ளனர். அவர்களை இணைத்துக்கொண்டு ஓர் இலக்கிய இயக்கமாக முன்னகரத்தொடங்கியிருக்கிறேன். அதன் விளைவுகளும் மிக வெற்றிகரமானவை
அவ்வாறு ஓர் இயக்கமாகச் செயல்படுகையில் அந்த வட்டத்திற்குள் வருபவர்களுடனான தொடர்பு முக்கியமானதாக ஆகிறது. அவர்களின் எண்ணங்களும் தேவைகளும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். அவ்வாறு நான் வாசகர்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டு எழுதிய முதல் நூல் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம். அத்தகைய ஒரு நூல் அதற்கு முன்பு இருக்கவில்லை. அதற்குப்பின்னரும் அப்படி ஒரு நூல் உருவாகவில்லை.
1990 களில் சுபமங்களா, இந்தியா டுடே போன்ற இடைநிலை இதழ்கள் வழியாக உள்ளே வந்த வாசகர்கள் நவீனத்தமிழிலக்கியத்தை அறிய விரும்பினார்கள். அவர்களுக்காக எழுதப்பட்ட அந்நூல் இன்றுவரை தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டு வருகிறது.
அந்நூலைத் தொடர்ந்து அதேபோன்ற பலநூல்கள் என்னால் எழுதப்பட்டன. வணிக இலக்கியம் எழுத்தை அறிமுகம் செய்வது. வாசிப்பின் வழிகள் வாசிப்பதற்கான வழிகளை அறிமுகம் செய்வது எழுதும் கலை மற்றும் எழுதுக ஆகிய நூல்கள் எழுதத்தொடங்குபவர்களுக்கான நூல்கள், ஆனால் வாசகர்களுக்கு இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்பவையும்கூட
அதேபோன்று இப்போது இளம் வாசகர்களுக்கான நூல்களுக்கான தேவை இருப்பதை உணர்கிறேன். என் வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்காக நூல்கள் வாங்க விரும்புகிறார்கள். அக்குழந்தைகள் அறிவுநிலையில் மேம்பட்டவர்கள், மொழித்திறனில் அதாவது தமிழ் வாசிப்பதில், பின்தங்கியவர்கள். அவர்களுக்கான நூல்கள் தேவையாகின்றன. அவர்கள் எதிர்கால வாசகர்கள். உண்மையிலேயே சென்ற பத்தாண்டுகளில் அப்படிப்பட்ட பலநூறு இளம் வாசகர்கள் உள்ளே வந்துள்ளனர்.
1998ல் என் மகன் அஜிதனுக்கு 7 வயதாக இருந்தபோது அவன் வாசிப்பதற்காக நான் எழுதிய நூல் பனிமனிதன். இன்றுவரை தமிழில் தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டு வரும் நூல் அது. அதைத் தொடர்ந்து அதே களத்தில் எழுதப்பட்ட நூல் வெள்ளிநிலம். இரு நூல்களும் சிறுவர்களுக்கான சாகசக்கதைகள். எளிய சொற்றொடர்களில், குறைவான சொற்களுடன் எழுதப்பட்டவை.ஆனால் பனிமனிதன் மானுடப்பரிணாமம் பற்றிய முழுமையான அறிவியல் சித்திரத்தை அளிப்பது – பெரியவர்களுக்கான நூல்களில்கூட அத்தகைய முழுச்சித்திரம் இருப்பதில்லை. வெள்ளிநிலம் மதங்களின் உருவாக்கம், பரிணாமம் பற்றிய ஒரு பெருஞ்சித்திரத்தை அளிப்பது.
அதைத் தொடர்ந்து நான் உடையாள் நாவலை எழுதினேன். அது ஓர் அறிவியல்புனைகதை – குழந்தைகளுக்கானது. ஆனால் மெய்யியல் உள்ளடக்கம் கொண்டது. ஓர் உருவமே உலகென ஆகும் படிமம் அதிலுள்ளது. குழந்தைக் கதையில் மெய்யியல் அமையமுடியும் என்பதை பனிமனிதனிலேயே கண்டுகொண்டேன். அதன் முழுமை இந்நூலில் உள்ளது.
இந்நூல்கள் இப்போது ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளன. பனிமனிதன் இவ்வாண்டே ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக ஷியாமளா ஹரிகோவிந்த் மொழியாக்கத்தில் வெளியாகும். ஆப்ரிக்காவில் பெரும்பாலும் வாழ்ந்தவரான ஷியாமளா இந்நூலை ஆப்ரிக்காவில் கல்வி கற்ற தமிழ் வாசிக்கத்தெரியாத தன் மகனுக்காக மொழியாக்கம் செய்தார். மகன் அதை மிக விரும்புவதை உணர்ந்தபின் வெளியிடலாமா என்று கேட்டார். என் இலக்கிய முகவர் வழியாக பதிப்பக ஆசிரியர்குழுவிடம் அது சென்றது. நல்ல மொழியாக்கம் என்பதனால் உடனடியாக ஏற்கப்பட்டது. சியாமளா இப்போது வெள்ளிநிலம் மொழியாக்கம் செய்கிறார், அதன்பின் உடையாள். அவை விரைவில் சர்வதேசப்பதிப்புகளாக வெளியாகும்.
இந்நூல்களின் வாசகர்களையே நான் இன்று அடிக்கடி புத்தகக் கண்காட்சிகளில் காண்கிறேன். பதின்வயதுகளில் இருப்பவர்கள், தீவிரமாக வாசிப்பவர்கள். அவர்களைப்பார்ப்பதே நிறைவளிப்பது. அவர்களுக்கான நூல்கள் இலக்கியத்திற்கு ஒரு தலைமுறையையே கொண்டுவரும் அழைப்புகள்.