அன்புள்ள ஜெ,
ஒரு கேள்வி. அல்லது இரண்டு கேள்வி. விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு எப்படி நூல்களை தெரிவுசெய்கிறீர்கள்? என்ன அளவுகோல்? விஷ்ணுபுரம் இலக்கியவிழாவுக்கு எப்படி விருந்தினர் தேர்வு நடைபெறுகிறது? விஷ்ணுபுரம் குழுமத்தின் உறுப்பினர்கள்தான் அதில் இடம்பெறுவார்களா?
சாகித்யன்
அன்புள்ள சாகித்யன்,
நல்ல பெயர். இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என நினைக்கிறேன். தொடக்கமே வம்புகளில் இருந்து நிகழவேண்டும் என்பதில்லை. நம்பிக்கையும் கனவும் கொண்டு தொடங்கலாம். வம்புகளை உருவாக்குபவர்கள் ஏற்கனவே தோற்றுப்போனவர்கள், படைக்கமுடியாதவர்கள், ஆகவே கசப்பு நிறைந்தவர்கள். அவர்களிடமிருந்து சொற்களைப் பெற்றுக்கொண்டால் உங்களுக்கு அக்கசப்புதான் வளரும். செயலாற்றுவதற்கு முற்றிலும் எதிரான உணர்வு அக்கசப்புதான்.
எச்சூழலிலும் இலக்கியம் போன்ற அகவய நிகழ்வுகளுக்கு அதற்கான நெறிகள் இருக்குமே ஒழிய வெறும் வேண்டியவர் வேண்டாதவர் என்னும் அளவுகோலின்படி எந்த இலக்கிய அமைப்பும் இயங்க முடியாது. அந்த வகையான செயல்பாடு அரசியல்கட்சிகளின் அமைப்புகளுக்கு மட்டுமே இயல்வது. ஏனென்றால் அவற்றிற்கான ஆர்வலர்கள் அரசியல் சார்ந்த ஈர்ப்பால் அல்லது அதிகாரம் சார்ந்த விழைவால் ஒன்றுகூடுபவர்கள். அவர்கள் தங்களைச் சார்ந்தவர்களை மட்டுமே முன்வைத்துச் செயல்படமுடியும்.
பிற அமைப்புகள் ஓர் இலட்சியவாதத்தை முன்வைக்கவேண்டும், அதைக் கடைப்பிடிக்கவேண்டும். ஏனென்றால் அதை நம்பியே ஆயிரக்கணக்கானவர்கள் வந்துகூடுகிறார்கள். லட்சக்கணக்கில் நன்கொடை அளிக்கிறார்கள். சுயநலக்குழு ஒன்றுக்கு எவரும் நிதியளிக்க மாட்டார்கள். எவரும் வந்து கூட மாட்டார்கள். இலக்கிய ஆர்வலர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக முட்டாள்கள், நீங்கள் பயங்கரப் புத்திசாலி என்னும் நம்பிக்கையை நீங்கள் கொள்ளவேண்டிய தேவை இல்லை.
எங்கள் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களில் எல்லா தரப்பினரும் உண்டு. ‘ஏதேனும் வகையில் இலக்கியத்திற்குப் பங்களித்தவர்கள், இலக்கியமென்னும் இயக்கம் மீது நம்பிக்கை கொண்டு செயல்படுபவர்கள் அனைவருமே எங்களவர்’ என்பதே எங்கள் கொள்கை. அந்த அடிப்படையிலேயே விருந்தினர் அழைக்கப்படுகின்றனர். எங்கள் அமைப்பு பற்றி தொடர்ச்சியாக கசப்பைப் பரப்புபவர்களைக்கூட அழைத்துள்ளோம். ஒரே ஒரு நிபந்தனை உண்டு. தங்கள் கசப்புகளால் வாசகர்களை அவமதிப்பாகப் பேசுபவர்களை எந்நிலையிலும் நாங்கள் ஏற்பதில்லை. அவர்கள் இலக்கியத்திலேயே இல்லை என்பதே எங்கள் அளவுகோல்.
விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு நான் பொறுப்பல்ல, அதில் என் ஆலோசனை அல்லது பங்களிப்பு என ஏதுமில்லை. என் நூல்களுக்கான அட்டை அல்லது வடிவமைப்பு பற்றிக்கூட நான் கவனிப்பதில்லை. நூல்கள் வெளிவந்த செய்தியையே நான் விழாக்களில் அந்நூல்களைப் பார்த்தே தெரிந்துகொள்கிறேன். என்னை அறிந்தவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியும். நான் மட்டுமே செய்யக்கூடுவனவற்றை மட்டுமே செய்வதும் எஞ்சிய அனைத்துப் பணிகளையும் உரியவர்களிடம் விட்டுவிட்டு கூடுமானவரை விடுபட்டு இருப்பதும்தான் என் வழக்கம். எனக்கு எழுத்துக்கும் பயணத்துக்குமான பொழுதே முக்கியமானது.
விஷ்ணுபுரம் பதிப்பகம் இப்போது என் நூல்களையே முதன்மையாக வெளியிடுகிறது. என் நூல்கள் அனைத்தையும் முழுமையாக வெளியிடுவதென்பதே இப்பதிப்பகத்தின் நோக்கம். இன்னும் பல நூல்கள் மறுபதிப்பாக வரவேண்டியுள்ளன. ஆயினும் பதிப்பகத்தின் நிர்வாகிகள் தங்களுக்கு முக்கியமென தோன்றிய நூல்களை வெளியிடுகிறார்கள். விஷால்ராஜாவின் சிறுகதைத் தொகுதியான திருவருட்செல்வி, லோகமாதேவியின் ஆய்வுநூலான சாகே போதையின் கதை, ராஜகோபாலனின் நிர்வாகவியல் நூலான ஆட்டத்தின் ஐந்து விதிகள், அழகிய மணவாளன் மொழியாக்கம் செய்த நூலான நாவலெனும் கலைநிகழ்வு போன்றவை வெளியாகியுள்ளன. இன்னும் நூல்கள் வெளிவரக்கூடும்.
விஷ்ணுபுரம் பதிப்பகம் பிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான நூல்களை விற்கிறது. நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சுஷீல்குமார், செல்வேந்திரன் என பல படைப்பாளிகளின் நூல்களை விற்றுவருகிறது. அந்நூல்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் விருதுபெறும் படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய நூல்களும் வெளியாகின்றன.
விஷ்ணுபுரம் விழாவில் தொடர்ச்சியாக நூல்கள் வெளியாகிவருகின்றன. அந்நூல்களையும் நாங்கள் முன்வைத்துவருகிறோம்.
ஜெ
2024 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவில் வெளியான நூல்கள்.