சித்தாந்தம் இணைய இதழ்
உளம் கனிந்த ஆசிரியருக்கு,
“சிறைப்பட்டு கிடக்க எவருக்கும் உரிமை இல்லை. அது முன் நகரும் வாய்ப்புகள் அனைத்தையும் அளித்த வல்லமைக்கு நாம் செய்யும் சிறுமை” என்ற தங்களின் வாக்கியம் எப்பொழுதும் எனது பலகையில் எழுதப்பட்டிருக்கும். அவ்வாக்கியம் எப்பொழுதும் என்னை நேர்மறை பாதையில் கொண்டு செல்பவை. சைவசித்தாந்தம் கற்றுக்கொள்ளும் தருணத்தில் என்னுள் ஒரு விடுதலையை உணர்ந்துள்ளேன். சைவத்துக்கு பங்களிப்பாற்றுவதை பற்றி என்னிடமும், முத்துமாணிக்கத்திடமும் தனிப்பேச்சில் சில ஆலோசனைகள் கூறீனிர்கள்.
அதன் பலனாக தமிழகத்தில் உருவான, நாம் கொண்டாடப்பட வேண்டிய, சைவ சித்தாந்திற்கென ஒரு பிரத்யேகமான “ சித்தாந்தம்” என்ற இணைய இதழை ஐனவரி 1 2025 முதல் தொடங்கவுள்ளோம்.
நான் மரபார்ந்த சித்தாந்த வகுப்புகளுக்கு செல்லும் போது வயதானவர்களே அதிகமாக இருப்பர். இளைஞர்களை காணவே முடியாது. சித்தாந்தம் எல்லோருக்குமானது அல்ல என்பதும் அடிக்கடி நான் கேட்பது. மேலும் சைவசித்தாந்தம் சொற்பொழிவாக கிடைக்கும் அளவிற்கு எழுத்தில் கிடைப்பதும் இல்லை. இதில் சிறுமாற்றத்தையாவது நாங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். ”பேசாத நாளெல்லாம் பிறவா நாளே”,இதன்மூலம் எங்களுக்கும் கற்றுக் கொண்டே இருக்கும் வாய்ப்பு அமையும் என்ற பேராசையும் கூட.
ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை அவருடைய காலத்தில் சித்தாந்த தீபிகாவை தொடங்கும் பொழுது அவ்விதழின் நோக்கத்தை குறிப்பிட்டிருப்பார். அதைப் படிக்கும் போது இக்காலகட்டத்தில் இவ்விதழின் அவசியத்தை உணர்ந்தேன். இவ்விதழ், சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கைகள், கட்டுரைகள், தொடர்கள் மற்றும் சைவசித்தாந்த அறிஞர்களின் பங்களிப்பு, நேர்காணல்கள், முக்கியமான சைவசித்தாந்த நூல்களை நவீன மொழிநடைக்கு மறுஆக்கம் செய்தல் என பலவாறாக திட்டமிடப்பட்டுள்ளது.
எப்பொழுதும் உங்கள் சொல்லும் செயலுமே எங்களுக்கு ஊக்கம்.. இவ்விதழ் அ.வே சாந்தகுமார சுவாமிகளின் ஆசிகள் மற்றும்
தங்களின் ஆசிகளுடன் தொடங்குவதை நல்லூழாக கருதுகிறோம்.
பிரியமுடன்
செ.பவித்ரா
உ. முத்துமாணிக்கம்.