சார் வணக்கம்.
நான் சிறிய அளவில் புத்தகக் கடை நடத்தி வருகிறேன்..அறம் சிறுகதை தொகுப்பில் உள்ள சோற்றுக் கணக்கு சிறுகதையால் உத்வேகம் கொண்டு 2019 முதல் 2024 வரை தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு 100 க்கும் அதிகமான எளியோர்களுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி உணவு கொடுத்து வருகிறோம்.
தொடங்கியதில் இருந்து இது வரை ஒரு நாள் கூட உணவு வழங்குவதை நிறுத்தவில்லை.
என் மனைவி வித்யா தினசரி சமைக்கிறார்.பாக்கெட் செய்கிறார். நான் கொண்டு போய் கொடுக்கிறேன். நாள் ஒன்றுக்கு அவரின் ஐந்து மணி நேரத்தை இதற்கு ஒதுக்கி சலிப்பு இல்லாது செய்கிறார்.
உங்களின் ஒரு சிறுகதை எங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாகியது. நன்றிகள்.
சுதாகர். ஆரணி
அன்புள்ள சுதாகர்,
அறம் தொகுதி வெளிவந்தபோது கொஞ்சம் காலத்தில் தேங்கிவிட்டிருந்த பழைய நவீனத்துவகால வாசகர்கள் அதை மிகையுணர்ச்சி என்றும் பிரச்சாரம் என்றும் சொன்னார்கள். அவர்கள் வறண்ட உணர்ச்சிகளுடன், எதிர்மறை மனநிலையை, சுருக்கிச் சொல்லும் நவீனத்துவ அழகியலில் தேங்கியவர்கள். அதன்பின் பின்நவீனத்துவம் வந்தது. அது கட்டற்ற உணர்ச்சிகளை, உன்னதமனநிலைகளை முன்வைத்தது. அறம் அதையும் கடந்த அடுத்தகட்ட படைப்பு. இன்றைய வரையறையின்படி அது டிரான்ஸ்மாடர்ன் படைப்பு.
அதில் எந்த இடத்திலும் உணர்ச்சிகரமான சித்தரிப்புகள் இல்லை. அது எந்த கருத்தையும் வலியுறுத்தவுமில்லை. அது வெறுமே நிகழ்வுகளை நுணுக்கமாகச் சொல்லிச் செல்கிறது. மானுட மனம் வழியாக உணர்ச்சிகளைப் பதிவுசெய்துகொண்டே செல்கிறது. ஆனால் அதன் பேசுபொருள், அது எழுப்பும் தத்துவார்த்தமான வினாக்கள் அறம் சார்ந்த ஓர் ஆழ்ந்த தேடலை உருவாக்குகின்றன. பின்நவீனத்துவச் சூழலின் அறம் என்ன என்பதே அதன் கேள்வி.
அக்கேள்வி எளிமையாக வாழ்க்கையின் வழியாக இலக்கியத்திற்கு வரும் எவரையும் எளிதில் சென்றடைவதுதான். ஆகவேதான் அறம் ஆண்டுக்கு பதினைந்தாயிரம் பிரதிகளுக்குமேல் விற்றுக்கொண்டிருக்கிறது. தமிழின் மிக அதிகமாக விற்ற இலக்கிய ஆக்கமாக உள்ளது. தெலுங்கிலும் மலையாளத்திலும் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் வாசிக்கப்படுகிறது. உலகவாசகர்களை நோக்கிச் செல்கிறது.
அறம் கதைகள் இந்நூற்றாண்டின் வெவ்வேறு களங்களை தொட்டுச்செல்கின்றன. கலை, இலக்கியம், நிர்வாகம், அரசியல் என பல களங்களில் இன்று எதைநம்பி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என உசாவுகின்றன. அந்தக்கேள்வி பல்லாயிரம்பேரிடம் இருந்தமையால்தான் அவர்கள் அக்கதைகளுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறார்கள். அதிலிருந்து விடைகளைக் கண்டடைகிறார்கள்.
சோற்றுக்கணக்கு அவ்வகையில் மிகமுக்கியமான கதை எனக்கு. இன்றும் உலகின் மூன்றில் ஒருபங்கினர் பட்டினி கிடக்கும் சூழலில் அக்கதை ஓர் உலகளாவிய அறத்தை முன்வைக்கிறது. அக்கதை எனக்கு இன்றுமிருக்கும் பல கெத்தேல்சாகிப்களை அறிமுகம் செய்தது. புதிய கெத்தேல்சாகிப்களை உருவாக்கியது – உங்களைப்போல
உங்களுக்கும் துணைவிக்கும் என் வணக்கங்கள். வாழ்வு பொலிக.
ஜெ