நான் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் கோவிட் தொற்று காலகட்டத்தில் எழுதிய 136 கதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். தமிழில் பலர் வாழ்நாள் முழுக்க எழுதிய கதைகளை விட அவை அதிகம் என்று சொன்னேன்.
அப்போது என் இடதுசாரி நண்பர் (உங்கள் மேல் கடுமையான கசப்பு கொண்டவர்) ‘ஒரு கதை எழுதணுமானா அதுக்குண்டான தவம் வேணும். இன்ஸ்பிரேஷன் வரணும். அப்பதான் அது இலக்கியம். தினசரி ஒரு கதை எழுதினா அது வெறும் கிராஃப்ட். அதிலே ஆன்மா இல்லை’ என்று ஆரம்பித்து வசைபாடினார்.
அவர் அப்படித்தான் சொல்வார் என்று தெரியும். ஆனால் என்ன ஆச்சரியமென்றால் அவர் அப்படிச் சொன்னதை அங்கிருந்த வேறு நண்பர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் சிலர் அவ்வப்போது வாசிப்பவர்கள். பெரிய வாசகர்களெல்லாம் இல்லை. ஆனால் அவர்களின் உள்ளங்களில் இந்தவகையான மனப்பதிவு இலக்கியம் பற்றி உள்ளது.
நான் இதைப்பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். ஒரு கதை உருவாவதற்கு ஒரு நீண்ட காத்திருப்பு தேவையா? இன்ஸ்பிரேஷன் வருவது கதையை எழுதுவதற்கு அவசியமா? அல்லது தேவையானபோது எழுதலாமா?
நான் கதைகள் எழுத முயன்றுகொண்டிருக்கும் இளம் வாசகன். என் அறிதலுக்காகவே இதைக் கேட்கிறேன்.
அருண் வசந்தன்
அன்புள்ள அருண்,
பொதுவாக இலக்கியம் வாசிப்பவர்கள், எழுதுபவர்கள் எவரும் இலக்கியம் இப்படித்தான் எழுதப்படும், இப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் அறுதியாக ஏதும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் இலக்கியம் ஓர் அகவெளிப்பாடு. அகம் எப்படி வெளிப்படும், எவ்வகையில் நிகழும் என்றெல்லாம் எவரும் முன்னரே வகுத்துவிடமுடியாது. எந்தவகையான வரையறை அளிக்கப்பட்டாலும் அந்த வரையறையை இலக்கியம் உடனே மீறிச்செல்லும்.
ஒரு படைப்பிலக்கியத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, அகவெளிப்பாடு. இரண்டு, வடிவம்.
அகவெளிப்பாடு என்பது ஒருவகை கனவு போல என்று ஒரு வசதிக்காகச் சொல்லலாம். தற்செயல்போல நிகழ்வது, கனவு காண்பவரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது அது. கனவுகாண்பவரின் ஆழுள்ளம் கனவில் வெளிப்படுகிறது. ஆனால் அது மிகச்சிக்கலானது. நேரடியாக அது வெளிப்படலாம். எதிர்வினையாகவும் அது வெளிப்படலாம். உதாரணமாக, ஒரு கோழையின் கனவில் அவர் அஞ்சி நடுங்குவதுபோலவும் வெளிப்படலாம். உச்சகட்ட வன்முறை வெறியாட்டம் போடுவதாகவும் அவர் வெளிப்படலாம். அதை வரையறைச் செய்ய முடியாது.
கனவுக்கு வடிவம் இல்லை. ஆனால் இலக்கியத்திற்கு வடிவம் உண்டு. ஏனென்றால் இலக்கியம் மொழியில் நிகழ்கிறது. மொழி புறவயமான ஒரு கட்டமைப்பு கொண்டது. கனவில் தொடர்புறுத்தல் இல்லை, இலக்கியத்தின் அடிப்படையில் இன்னொருவருடன் தொடர்புறுத்தல் என்னும் அம்சம் உண்டு. கனவு ஒரு மனிதரில் தொடங்கி அவரில் முடிவது. இலக்கியப் படைப்பு என்பது பண்பாடு என்னும் ஒட்டுமொத்தத்தில் ஒரு பகுதி. இலக்கியம் என்னும் பெரிய அமைப்பில் ஒரு பகுதி. ஆகவே அதற்கு புறவயமான ஒரு வடிவக்கட்டமைப்பு உண்டு, அது மாறிக்கொண்டே இருக்கும், புதியபுதிய வடிவங்களை தேடிச்செல்லும். ஆனால் வடிவமென ஒன்று எப்போதுமிருக்கும்.
இதுதான் இலக்கியம் பற்றிய ஒரு புரிதல். இப்படிச் சொல்லலாம். இலக்கியம் என்பது முற்றிலும் புறவயமான வடிவம் என்பதில் முற்றிலும் அகவயமான எழுத்தாளனின் உள்ளம் வெளிப்பாடு ஒரு நிகழ்வு. ஒரு வைரம் போல என நான் உருவகிப்பதுண்டு. வைரம் பருவடிவப் பொருள். ஒரு கல். ஆனால் அதனுள் ஒளி புகுந்து அதன் பட்டைகளுக்குள் பிரதிபலித்து பிரதிபலித்துப் பல்லாயிரம் காதம் பயணிக்கிறது. அதனுள் ஒளி நிறைந்திருக்கிறது, ஒளி அதில் நடனமிடுகிறது. வைரம் என கையில் வைத்திருப்பது ஒளியைத்தான். ஒளியை அள்ளி வைத்திருப்பதனால்தான் அந்தக் கல்லுக்கு அத்தனை மதிப்பு.
எழுத்து என்பது கனவு நிகழ்வதுபோலத்தான். ஏன் நிகழ்கிறது, எவ்வண்ணம் நிகழும், எப்போது நிகழும் என்று சொல்லவே முடியாது. காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் கனவை நாம் பயிலமுடியும், நிகழ்த்திக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஆழ்ந்து ஈடுபட்டிருங்கள். அது சார்ந்த கனவை அடைவீர்கள். உளவியலில் அவ்வண்ணம் கனவை உருவாக்கி, எந்த வகையான கனவுகள் வருகின்றன என்று பார்த்து உள்ளத்தை ஆராயும் ஒரு வழிமுறை உண்டு. அதேபோல இலக்கியத்தையும் உருவாக்கிக் கொள்ளமுடியும். அதற்கான ஒரே வழிமுறை இலக்கியத்துக்குள்ளேயே இருத்தல் என்பதுதான்.
நான் நிறையவே எழுதியவன், ஏனென்றால் எப்போதும் இலக்கியத்திலேயே இருக்கிறேன். இப்போதல்ல, நினைவறிந்த நாள் முதலாக. ஒவ்வொரு நாளும் அதிலேயே விழித்தெழுகிறேன், துயில்கிறேன். ஆகவே எனக்கு இலக்கியமெனும் கனவு எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எழுதுவதற்கான கருக்கள் என் உள்ளத்தில் முண்டியடித்துக்கொண்டேதான் உள்ளன.
இளம்படைப்பாளிகளுக்கு அப்படி அகத்தில் கருக்கள் நிறைந்திருக்கும், நிறையவும் எழுதுவார்கள். ஏனென்றால் அப்போது உள்ளம் இலக்கியத்திலேயே இருக்கும். பின்னர் திருமணமாகும், வேலைப்பளு கூடும், உலகியல் அலைக்கழிப்புகள் உருவாகும். விளைவாக இலக்கியம் அகன்றுபோகும். அந்தக் கனவு நிகழலாமலாகும்.
தமிழ்ச்சூழலில் இது அதிகபட்சம் ஐந்தாண்டுகளில் நிகழ்ந்துவிடுகிறது. புதுமைப்பித்தன் எழுதவந்த 1935 ஆண்டில் ஒரே ஆண்டில் மட்டும் பதினைந்து கதைகள் வெளியாகியுள்ளன. அதாவது அன்றைய இதழியல் சூழலில் எழுதிக்குவித்தால் மட்டுமே அவ்வாறு கதைகள் வெளியாகமுடியும். மௌனி எழுதியது அதிகபட்சம் இரண்டே ஆண்டுகள்தான், முப்பதுக்கும் மேற்பட்ட கதைகள். இலக்கியத்துள் இருக்கும் ஆண்டுகளிலேயே அதிகம் எழுதுகிறார்கள்.
உலகப்பெரும்படைப்பாளிகள் அனைவருமே நிறைய எழுதியவர்கள்தான். குறைவாக எழுதிய இலக்கியமேதை என எவரையும் நான் வாசித்ததில்லை. ஏனென்றால் அவர்கள் இலக்கியமென்னும் தவமே தங்கள் வாழ்க்கையெனக் கொண்டவர்கள். பால்ஸாக் 51 வயது வரை மட்டுமே வாழ்ந்தார், அவர் எழுதிய பக்கங்கள் என் எழுத்தை விட இரு மடங்கு. அன்றைய காலகட்டத்தில், கையால் எழுதி, நகலெடுத்து, அச்சுக்கோத்து, பிழைதிருத்தி பதிப்பிக்கவேண்டியிருந்த சூழலில் அது மூச்சடைக்கச் செய்யும் பெரும்சாதனை. அதில் சில ஆண்டுக்காலம் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். வெறிகொண்டு, பைத்தியம்போல எழுதிக்குவித்திருக்கிறார். நாட்கணக்கில் ஆடையில்லாமல் தனியறையில் நின்றுகொண்டு எழுதுவார் என்கிறார்கள்.
இலக்கியத்துள் இருந்துகொண்டே இருப்பதனால் என் எழுத்தின் அளவு அதிகம் – அதன் ஆழமும் வீச்சும் மேலும் அதிகம். நான் எழுதிய சிலகதைகள் உலகின் எந்த மொழியில் எந்த எழுத்தாளர் எழுதியவை என்றாலும் இலக்கியச் சாதனைகளே. ஒருவர் அவற்றில் ஒன்றிரண்டை எழுதிவிட்டு மறைந்தாலும் வரலாற்றில் இருப்பார். என் நாவல்களை எழுதும்காலகட்டத்தில் நான் அவற்றின் கனவுலகுக்குள் வாழ்ந்திருக்கிறேன், வெளியுலகமே இல்லாமலிருந்திருக்கிறேன்.
கோவிட் அத்தகைய ஒரு காலம். என் வெளியுலகம் மேலும் சிறிதாகியது. அதைவிட ஒவ்வொரு நாளும் சாவுச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பின் வழிகாட்டிகளில் ஒருவர் நான். அதுதான் தமிழிலக்கியவாதிகளுக்கு இன்றிருக்கும் ஒரே அமைப்பு. ஆகவே ஒவ்வொருநாளும் உதவிக்கோரிக்கைகள் வந்துகொண்டிருந்தன. லட்சக்கணக்கான ரூபாய் நிதி திரட்டி அளித்தோம். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவத்திற்கு உதவிகள் செய்தோம்.
ஒவ்வொரு நாளும் காலையில் அந்த சாவுச்செய்தி, மருத்துவச் செய்திகளுடன் கண்விழிப்பேன். ஒருமணிநேரம் அந்த பணிகளை முடித்துவிட்டு எழுத ஆரம்பிப்பேன். என் புறவுலகை மூடிவிட்டு அகத்துக்குள் செல்வதே எனக்கான தப்பும்வழியாக இருந்தது. அவ்வாறுதான் ஒவ்வொரு நாளும் எழுதினேன். கதைகளை மட்டும் எழுதவில்லை, அந்நாட்களில் விஷ்ணுபுரம் நண்பர்கள் நாளும் இணையம் வழி சந்தித்துக்கொண்டோம். இலக்கியம் பேசினோம். நாடகங்கள் நடத்தினோம். நான் இருநூறுக்கும் மேற்பட்ட வாசகர்களுடன் தனிப்பட்ட முறையில் இணையம் வழியாக உரையாடவும் செய்தேன்.
அந்நாட்களின் உச்சகட்ட தீவிரமே அன்று சூழ்ந்திருந்த சாவின் இருளில் இருந்து என்னை காப்பாற்றியது. உலகமெங்கும் அப்படித்தான். இருளில்தான் பெரும் தாகத்துடன் ஒளியைப் பற்றிக்கொள்கிறார்கள். இலக்கியம் பேருருக்கொண்டு எழுவது பிற அனைத்தும் மானுடனைக் கைவிடும் தருணங்களில்தான்.
அந்த காலகட்டத்தில் என் அகத்தே இருந்து கதைகள் வந்துகொண்டே இருந்தன. தட்டச்சு செய்வது மட்டுமே என் பணி. பல கதைகள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக என் அகத்தில் புதைந்து கிடந்தவை. உதாரணமாக திபெத்தை மையமாக்கிய கதைகள். அவை தங்கப்புத்தகம் என்னும் நூலாக உள்ளன. நாயக்கர் ஆட்சிக்காலக் கதைகள் படையல் என்னும் நூலாக உள்ளன. திருவிதாங்கூர் ஆட்சிக்காலக் கதைகள் ஆயிரம் ஊற்றுக்கள் என்னும் நூலாக உள்ளன, இக்கதைகள் என் மிக இளமையில் என் அம்மாவிடமிருந்து நான் கேட்டவை. அவை இலக்கியமாக அறுபதாண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.
இந்தக் கதைகள் அந்தக் காலகட்டத்தில் உலகமெங்கும் எழுதப்பட்ட இலக்கியப்படைப்புகளில் முதல்நிலையில் இருக்கின்றன. அவற்றின் மொழியாக்கங்கள் இன்று உலக இலக்கிய இதழ்களில் வெளியாகிக்கொண்டே உள்ளன. இலக்கிய விமர்சகர்களின் பாராட்டுக்கள் வந்துகொண்டே உள்ளன. ஔசேப்பச்சன் துப்பறியும் பத்துலட்சம் காலடிகள் ஐஸ்வரியா மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது– அதை மொழியாக்கம் செய்வதற்கெ ஒரு நிதியுதவி கிடைத்துள்ளது. அக்கதைகளின் மாதிரி மொழியாக்கமே அந்த நிதியுதவியை ஈட்டியளித்தது. இன்னும் பத்தாண்டுகளில் அவை எல்லாமே சர்வதேசப்பதிப்புகளாக உலக இலக்கிய வாசகர்களைச் சென்றடையும்.
தமிழில் இக்கதைகள் பல திரைப்படங்களுக்கு வாங்கப்பட்டுள்ளன, திரைப்படங்களாகியுள்ளன. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இந்த கதைகளால் நான் பணம் ஈட்டியிருக்கிறேன்.இவற்றில் சிலவற்றின் மலையாள மொழியாக்கத்தில் வெளியாகி பலபல பதிப்புகளைக் கடந்துள்ளன. தெலுங்கிலும் கன்னடத்திலும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
தமிழில் இக்கதைகள் இதற்குள் பல பதிப்புகள் வெளியாகிவிட்டன. இவற்றின் பெருக்கத்தாலேயே பலகதைகளை வாசகர்கள் தவறவிட்டிருக்கக்க்கூடும். பெண்களின் உலகைச் சொல்லும் தேவி போன்ற கதைத்தொகுதிகள், நுண்ணிய உறவுச்சிக்கல்களைச் சொல்லும் பொலிவதும் கலைவதும் போன்ற கதைத்தொகுதிகள், இனிமையும் கொண்டாட்டமும் நிறைந்த கிராமிய வாழ்க்கையின் சித்திரங்களான ஆனையில்லா போன்ற தொகுதிகள். வன்முறையின் அழகியலைச் சொல்லும் ஐந்து நெருப்பு, சாகசக்கதைகளின் தொகுதியான எழுகதிர், மெய்யான மனிதர்களைச் சித்தரிக்கும் இரு கலைஞர்கள்.
இக்கதைகளை இணையத்தில் வாசித்திருக்கலாம். ஆனால் நூல்களாக வாங்கி வாசிப்பவர்கள் அடையும் அனுபவம் வேறிட்ட ஒன்று. ஏனென்றால் இவை ஒரே கதைக்களம், கதைக்கரு சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. ஆகவே நூல்களை வாசிக்கையில் ஒரு கதை பிற அனைத்துக் கதைகளாலும் பொருளேற்றம் பெறுவதைக் காணலாம்.
இக்கதைகளில் பெரும்பாலானவை தமிழிலக்கியத்தின் சாதனைகள், உலக இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இலக்கிய ஆக்கங்கள். ஒரு நல்ல வாசகன் உள்ளே நுழைந்து நுழைந்து தன் அகத்தை, தன் அகமேன நிலைகொள்ளும் பண்பாட்டையும் வரலாற்றையும் கண்டடைய வழியமைப்பவை. பல கதைகள் ஆன்மிகமான தேடல்கொண்டவர்கள் தங்கள் தவத்தை தாங்களே கண்டடையத் தூண்டுபவை. அவ்வாறுதான் அவை வாசிக்கப்படுகின்றன, என்றும் வாசிக்கவும்படும்.
என் எழுத்துக்களை இன்று நான் எழுதி நிலைநிறுத்தவேண்டிய அவசியமில்லை. அவற்றுக்கு உருவாகி வந்துகொண்டே இருக்கும் வாசகர்களை கண்டுகொண்டிருக்கிறேன் – இந்தியாவிலெங்கும். இவற்றை எழுதுவது உங்களைப் போல எழுத முனையும் எழுத்தாளர்களுக்காக மட்டுமே. கலை என்பதை உங்கள் அகத்தே தேடி கண்டடையுங்கள். அப்படித் தேட கலைப்படைப்புகளை நாடுங்கள். இக்கதைகளை எளிய வாசகனாக நின்று வாசியுங்கள். இவை உங்கள் கனவுகளை திறக்கச் செய்வதை, அகத்தை உலுக்குவதை, அழியாத கேள்விகளை உருவாக்குவதை உணர்வீர்கள். அங்கிருந்து உங்கள் எழுத்தை தொடருங்கள்.
மெய்யாகவே கலையை உருவாக்க எண்ணும் ஒருவர் கலையிலேயே ஊறிக்கிடக்கவேண்டும். அதற்கு மெய்யான கலையை வாசிப்பதே ஒரே வழி. நான் அவ்வாறுதான் பல்லாண்டுகள் வாழ்ந்துள்ளேன், இப்போதும் அப்படியே. எழுதுவேன், அல்லது வாசிப்பேன். ஒருபோதும் கலையைப் பற்றிய சில்லறை வம்புகளை, கோட்பாட்டு விவாதங்களைக் கவனிக்க மாட்டேன். கலையை காயடிக்கும் சக்திகொண்டவை சில்லறை வம்புகளும் உள்ளீடற்ற கோட்பாட்டு விவாதங்களும். அவை பெரும்பாலும் கலையை உருவாக்க முடியாத, கலையை அறியவும் திராணியற்ற எளிய உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.
இலக்கியப் படைப்பின் வடிவத்தைக்கூட இலக்கியத்திலிருந்தே கற்றுக்கொள்ளுங்கள். இலக்கிய வடிவங்களை நாம் இலக்கியப்படைப்புகளை ஆழ்ந்து ரசிப்பதன் வழியாக தன்னிச்சையாகக் கற்றுக்கொள்கிறோம். நாம் அகத்தூண்டல் அடையும்போது அவை ‘தன்னிச்சையாக’ நம் கையில் வந்தமைகின்றன. அந்தவகையான இலக்கியவடிவங்களுக்கே இலக்கியத்தில் மதிப்பு. ‘செய்யப்படும்’ வடிவங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவை வெறும் விளையாட்டுக்கள், சிலருக்கு அவற்றில் ஆர்வமிருக்கலாம்.
அத்தகைய கனவை அகத்தே விரித்துக்கொள்ள இச்சிறுகதைத் தொகுதிகள் போல உதவும் பிற படைப்புகள் இல்லை. கலைடாஸ்கோப் போல இவற்றை கணந்தோறும் உருமாற்றி வண்ணங்களின் முடிவின்மைக்குள் நுழைய முடியும். முழுமையாகவே உங்களை ஆட்கொண்டு உள்ளே அமரச்செய்யும் ஆற்றல்கொண்டவை இக்கதைகள். அறிவார்ந்தும் ஆன்மிகமாகவும் நீங்கள் செல்லும் எல்லா பயணங்களிலும் உடன்வருபவையும்கூட
ஜெ