அறம், Stories of the true, மாணவர்கள்.

அறம் அமெரிக்கக் குழந்தைகள்.

அன்புள்ள ஜெ

அறம் அமெரிக்கக் குழந்தைகள் கட்டுரையை வாசித்தேன். சென்ற பெங்களூர் விழாவில் உங்கள் Stories of the True தொகுப்பை என் பெண்ணுக்கு வாங்கிக்கொடுத்தேன். நீங்கள் அதில் கையெழுத்திட்டீர்கள். அப்போது அந்நூல் உலகப்பதிப்பாக அமெரிக்காவில் எஃப்.எஸ்.ஜி பதிப்பகம் வெளியீடாக வரவிருக்கிறது என்று சொன்னீர்கள். என் மகள் அதற்குப்பிறகுதான் அதில் ஆர்வம் காட்டினாள். இந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் மேல் மதிப்பில்லாதவளாகவே அவள் அது வரை இருந்தாள். போகும் வழியிலேயே புரட்டிப்பார்த்தாள். எஃப்.எஸ்.ஜி பதிப்பகம் பற்றி தேடிப்பார்த்தாள்.

நூலை அவள் இரண்டே நாளில் வாசித்துவிட்டாள். அவளுடைய அனுபவத்தில் அதுபோல ஒரு புத்தகத்தை வாசித்ததே இல்லை. அவள் வாசித்ததெல்லாம் சயன்ஸ்பிக்‌ஷன் கதைகள், பேண்டஸிகள் மட்டும்தான். “It is so true” என்று மட்டும்தான் சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு தெரியாத இந்திய யதார்த்தம் ஒன்று மண்டையில் அடிவிழுந்ததுபோல தெரியவந்தது. இப்படி உண்மையை அப்பட்டமாக எழுதமுடியும் என்பதே அவளுக்கு அப்போதுதான் தெரிந்தது. நான் அவளிடம் “இதுதான் உண்மையில் இலக்கியம் என்பது” என்று சொன்னேன்.

இன்று நம் குழந்தைகள் ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கிறார்கள். அதிகமும் அமெரிக்காவில் தயாராகும் ரெடிமேட் ஜூவனைல் எழுத்துக்கள். அவை ஃபாரெக்ஸ் மாதிரி. குழந்தைகளுக்குச் சீக்கிரமே திகட்டிவிடும். அடுத்தகட்ட வாசிப்புக்கு அவர்கள் வருவதற்கு Stories of the True மிக உதவியான நூல். நேரடியானது, ஆனால் மிகவும் ஆர்ட்டிஸ்டிக் ஆனது. யானைடாக்டரே நல்ல உதாரணம். ஒரு குழந்தைக்கதை அல்லது நீதிக்கதை போல இருக்கிறது. ஆனால் அதிலுள்ள காடு வர்ணனையும் சரி, புழுக்களுக்கும் யானைக்குமான அனாலஜியானாலும் சரி மிகச்சிறந்த இலக்கியம். 

Stories of the True குழந்தைகளைச் சீண்டும். தீவிரமாக வாசிக்கவைக்கும். நிறைய யோசிக்கச் செய்யும். நம் இந்திய அப்பர்மிடில்கிளாஸ் குழந்தைகள் இன்று இந்தியாவின் உண்மையான பிரச்சினைகளான சாதி, வறுமை, ஏற்றத்தாழ்வு என எதையுமே அறியாமல் வாழ்கிறார்கள். அந்த உண்மைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல்லும். அதே சமயம் உயர்ந்த ஐடியலிஸத்தையும் நம்பிக்கையையும் அவர்களுக்கு அது அளிக்கும். ஒரு குழந்தைக்கு இன்றைக்கு அளிக்கவேண்டிய சிறந்த பரிசு இதுதான்.

கார்த்திகா பிரபாகர்

பிகு: Stories of the True அமெரிக்கப் பதிப்புக்கு வாழ்த்துக்கள்.

Stories of the True நூலை அமெரிக்க வாசகர்கள் இப்போதே முன்பதிவுசெய்துகொள்ளலாம். ஆகஸ்டில் நூல் வெளிவருமென அறிவிக்கப்பட்டுள்ளது.  இணைப்பு

முந்தைய கட்டுரைபுத்தகவிழா, தமிழ்த்தாய் வாழ்த்து
அடுத்த கட்டுரைஇரண்டு ‘டிரிப்யூட்டு’கள்