இரண்டு வெவ்வேறு எழுத்தாளர்கள் ‘இலக்கியம் எழுதுவதனால் என்ன பயன்?’ என்றும் ‘யார் வாசிக்கிறார்கள்?’ என்றும் விரக்தியுடன் எழுதியிருப்பதை அனுப்பி ஓரிரு நண்பர்கள் உண்மையிலேயெ தமிழில் இலக்கியநூல்கள் விற்கிறதா என்று கேட்டிருந்தார்கள். அப்படிக் கேட்டவர்களில் பெரும்பான்மையினர் முகநூலிலேயே வாழ்பவர்கள்.முகநூலிலேயே வாழ்பவர்கள் சிலர் ‘இப்பல்லாம் யாரும் அச்சுநூலையே வாசிக்கிறதில்லை’ என்று எழுதியிருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். முகநூல் ஒரு சிறு பெட்டி. அதற்குள் வாழ்பவர்களுக்கு அதுவே உலகம். அதற்குள் உள்ள யதார்த்தத்தை அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
முதலில் புத்தகம் விற்பனையாவதைப் பற்றிய சோர்வு. 1990 வரை தமிழில் ஆண்டுக்கு இருநூறு இலக்கியநூல்கள் வெளிவந்தால் ஆச்சரியம். மிகச்சில பதிப்பகங்களே இலக்கியநூல்களை வெளியிட்டன. ஒரு நூல் பதிப்பகத்திற்குச் சென்று அச்சேறிவர மூன்றுநான்கு ஆண்டுகளாகும். ஐந்தாறு ஆண்டுகளாவது சாதாரணம். பதிப்பகத்தின் விற்பனை – முதலீடு திரட்டுதல் சார்ந்தே அந்த முடிவு எடுக்கப்படும். ஆகவே பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். இலக்கிய நூல்கள் 600 பிரதிகள் அச்சிடப்படும். ஐந்தாண்டுகள் வரை ஆகும் அவை விற்றுத்தீர. அதாவது ஆண்டுக்கு நூறு பிரதிகள்.மிகச்சில நூல்கள் மட்டுமே நூலக ஆணைபெற்று 400 பிரதிகள் அச்சிடப்படும். அது ஒருவகையில் லாட்டரி அடிப்பதுபோல.
அன்றைய எழுத்தாளர்கள் அனைவருமே 200 பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்களில் எழுதினர். அதிகபட்சம் இலக்கியவாசகர்களே தமிழில் 1000 பேர்தான். அவர்களுக்கு மட்டுமே சுந்தர ராமசாமி அல்லது அசோகமித்திரன் பெயர் தெரியும். அன்று தனிநபர்கள் நூல்கள் வாங்குவதென்பது அனேகமாக இல்லை. அதாவது பணம்கொடுத்து தமிழ் நூல்களை வாங்கும் வாசகர்கள் மொத்தமாக தமிழகம் முழுக்க ஐம்பதுபேர்கூட இல்லை. அன்றைய பொருளியல்சூழல் ஒரு காரணம். அதைவிட அப்படி வாங்கிப்படிக்கவேண்டும் என்னும் கருத்தே அன்று இல்லை.
அன்றைய நூல்வெளியீடு முழுக்கமுழுக்க நூலகங்களை நம்பித்தான். அரசு நூலகங்கள் தனியாக குறைந்த விலையில், பக்கத்துக்கு இவ்வளவு என அவர்களே முடிவுசெய்த விலையில், நூல்களை வாங்குவார்கள். ஓராண்டுக்குள் அந்தப் பணம் கிடைக்கும். அது மொத்தமாகக் கிடைப்பதனால் பதிப்பகத்தார் முண்டியடித்தனர். மற்றபடி அதில் லாபவிகிதம் மிகக்குறைவு. கல்விச்சாலை நூலகங்களில் வாங்கப்படுவதை நம்பியே நூல்வெளியீட்டு வணிகம் நிகழ்ந்தது.
கல்விச்சாலையில் நூல்களை வாங்குவதில் ஒரு வழிமுறை அன்றிருந்தது. அன்று இன்றிருப்பதுபோல அதில் கமிஷன் ஊழல் இல்லை. ஆனால் அவர்களுக்கு நவீன இலக்கியம் பற்றி ஒன்றுமே தெரியாது, பெயர்களே அறிமுகமில்லை. அவர்கள் பெரும்பாலும் வாங்கியவை பழந்தமிழ் இலக்கிய நூல்கள், தமிழறிஞர்களின் நூல்கள். அந்நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களே வணிகவெற்றியுடன் திகழ்ந்தன. உதாரணம் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ் வாழ்க என்னும் முகப்பு வாசகத்துடன் நூல்களை வெளியிட்டவர்கள் அவர்கள்.
அதன் பிறகு அன்று அதிகமும் நூலகங்களால் வாங்கப்பட்ட நூல்கள் அன்று வணிக இதழ்கள் வழியாகப் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர்களின் நூல்கள். கல்கி, சாண்டில்யன், அகிலன, நா.பார்த்தசாரதி. அவர்களின் நூல்களை வெளியிட்ட வானதி பதிப்பகம் போன்றவை வெற்றிபெற்ற பதிப்பகங்கள். இலக்கியநூல்களை வெளியிட்டவை மிகச்சில பதிப்பகங்களே. கலைஞன் பதிப்பகம் ஓரிரு நூல்களை வெளியிட்டுள்ளது.
இலக்கிய நூல்களை வெளியிடுவதற்காக வாசகர் வட்டம் என்னும் பதிப்பகத்தை காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி நஷ்டம் அடைந்து நிறுத்திக்கொண்டார். சி.சு.செல்லப்பா தனது எழுத்து சிற்றிதழ் சார்பாக நூல்களை வெளியிட்டு அவரே கல்விநிலையங்கள் தோறும் கொண்டு சென்று விற்றார். நகுலன், நீல பத்மநாபன் போன்ற பலரின் இலக்கிய நூல்களை நாகர்கோயில் நீதிமன்ற முகப்பிலிருக்கும் ஜெய்குமாரி ஸ்டோர்ஸ் என்னும் புத்தக்கடை வெளியிட்டுள்ளது. இருநூறு பிரதிகள் அச்சிடப்படும்.
பின்னர்தான் மீரா அன்னம் பதிப்பகத்தை தொடங்கினார். அவர் கல்லூரி ஆசிரியராக இருந்தமையாலும், மதுரை பற்கலைக் கழக ஆசிரியர் சங்கச் செயல்பாட்டாளர் என்பதனாலும் மட்டுமே அவரால் கல்வித்துறைக்குள் நவீன இலக்கியநூல்களைக் கொண்டுசெல்ல முடிந்தது. அவர் தாக்குப்பிடித்தார். பல்வேறு அயல் நிதியுதவிகளால் க்ரியா பதிப்பகம் நூல்களை வெளியிட்டது. நர்மதா பதிப்பகம் சிறிதுநாள் இலக்கியநூல்களை வெளியிட்டு நின்றுவிட்டது.
இச்சூழலில்தான் அன்றைய எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். அவர்கள் சோர்வடைந்தனரா என்றால் அவ்வப்போது சோர்வு இல்லாமல் இல்லை. முழுமையாக எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தனர் என்பதன் தனிமை அவர்களை வாட்டியது. ஆனால் பெருங்கனவுகளுடன் அவர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். அவர்களின் எழுத்துக்கள் இன்றும் வாழ்கின்றன.அதன்பின் சூழல் மாறியது. தனியார் கல்விநிலையங்கள் பெருகின. பற்கலைக்கழக மானியக்குழுவின் நூலகத்தொகை வரத்தொடங்கியது. அத்துடன் 1992 பொருளியல் சீர்த்திருத்தங்களுக்குப் பின் உயர்நடுத்தர வர்க்கம் பெருகி வாங்கும் சக்தி வளர்ந்து நூல்களை வாங்கிப்படிக்கும் ஒரு வட்டம் உருவானது. இணையம் உருவாகி நூல்களை விளம்பரப்படுத்த முடிந்தது. புத்தகக் கண்காட்சிகள் உருவாயின.
இன்றைய எழுத்தாளர்களுக்கு குறைந்தபட்ச அடையாளம் என்பது உள்ளது. அவர்களுக்கு தங்களை வெளிப்படுத்த இணைய ஊடகம் உள்ளது. நூல்கள் எளிதில் வெளியாகிவிடுகின்றன. அவர்கள் பேசுவதற்கான மேடைகள் ஏராளமாகவே உள்ளன. அவர்கள் அவர்களைவிட பலமடங்கு படைப்பூக்கம் கொண்ட சாதனையாளர்களான தங்கள் முன்னோடிகளை விட புகழுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் இன்று எளிதாக நூல்கள் வெளிவருவதனால் நூல்களின் எண்ணிக்கை மிகுதி. நூல்களை கவனிக்கவைப்பது கடினமாகியுள்ளது. இன்னும் இன்னும் நூல்விவாதங்கள் வழியாகவே நூல்களை கவனிக்கவைக்க முடியும். அத்துடன் ஓர் ஆசிரியர் மேல் வாசகனுக்கு நம்பிக்கை வரவேண்டும். அந்த ஆசிரியரின் சிந்தனையுடன் அவன் சேர்ந்து சிந்திக்கவேண்டும். ஓர் ஆளுமையாக ஆசிரியன் திரண்டு வரவேண்டும்.
அப்படியென்றால் இந்தச் சோர்வு எங்கிருந்து வருகிறது? முதன்மையாக அச்சோர்வு வருவது முகநூலில் திளைப்பதனால். அங்கே இலட்சியவாதத்திற்கு இடமில்லை, அது அளிக்கும் நம்பிக்கையும் இல்லை. நேர்மாறாக ஒருவரை ஒருவர் சோர்வூட்டிக்கொள்ளும் களமாக அது உள்ளது. எல்லா நம்பிக்கைகளையும் நோக்கி எள்ளி நகையாடுபவர்கள், வெவ்வேறு களங்களில் தோற்றுப்போனவர்கள் கையாலாகாதவர்கள் கூடியிருக்கும் மாபெரும் திண்ணை அது. லைக்குகளாலும் ஷேர்களாலும் நட்பழைப்புகளாலும் புகழை அளவிட்டுக்கொள்ளும் மனநிலை அங்கே உள்ளது. அங்குள்ள வெற்றி என்பது அதுதான். தன்னை வெளிப்படுத்துவதன் நிறைவும், இணையுள்ளங்களிடம் பகிர்வதன் மகிழ்வும், அறிவியக்கமென்னும் பெருக்கில் இணைந்திருப்பதன் பெருமிதமும்தான் இலக்கியத்தை இயக்கும் விசைகள். அவற்றுக்கு அங்கே இடமில்லை.
எண்ணிப்பாருங்கள், அங்கே இலக்கியத்தை முன்வைப்பவர் எவர்? ஆண்டு முழுக்க அங்கே பேசப்படுவது சினிமாவும் கட்சியரசியல் வம்புகளும்தான். ஓர் ஆண்டுமுழுக்க வெளியாகும் சினிமாக்களின் டிரெயிலர் முதல் வசூல் வரை விவாதிக்கும் ஒருவர் ஆண்டு முடிவில் நாலைந்து நூல்களை வெளியிட்டு வாசகர்கள் பெருகிவந்து வாங்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது? எழுத்தாளன் என்றும் எழுத்தாளனாகவே வாழவேண்டும். சினிமாவையும் அரசியலையும் இரவு பகலாகப் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாளன் இங்கிருக்கும் சினிமாவெறியையும் அரசியல்மூடத்தனத்தையும் வளர்க்கிறான். அவை இலக்கியத்துக்கே எதிரானவை. அதன்பின் நம்பிக்கையிழக்கிறான். இலக்கியத்தை, வாசகர்களை வசைபாடுகிறான்.
சரி இலக்கிய நூல்கள் விற்கின்றனவா? நான் எப்போதும் சொல்லிவருவதே. நேற்றைய காலகட்டத்தை விட பல மடங்கு விற்கின்றன. தமிழில் ஒரே ஒரு இலக்கிய எழுத்தாளருக்காக ஒரு பதிப்பகம் நடக்கமுடியும், ஆண்டுக்கு சாதாரணமாக ஒரு கோடிரூபாய்க்கு மேல் அது விற்பனைசெய்ய முடியும் என்று நேற்றைய இலக்கியமேதைகளிடம் சொல்லியிருந்தால் திகைத்திருப்பார்கள். ஆனால் தமிழகத்தின் மக்கள் தொகை, படித்தவர்களின் எண்ணிக்கை, கல்விநிலையங்களின் பெருக்கம் ஆகியவற்றை வைத்து பார்த்தால் இந்த விற்பனை மிகக்குறைவு. கேரளத்துடன் ஒப்பிட்டால் மிகமிகக் குறைவு. நாம் செல்லவேண்டிய தொலைவு மிகுதி.
ஏன் நூல்கள் விற்கின்றன? ஏன் விற்காமலாகின்றன? அதை புரிந்துகொள்ளவே முடியாது. என் நூல்களில் ஏழாம் உலகம் ஆழ்ந்த பாதிப்பைச் செலுத்தும் நூல், அதன் ஆங்கில மொழியாக்கமான The Abyss மிகச்சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கிறது. சர்வதேசப்பதிப்பு வெளிவரவுள்ளது. ஆனால் தமிழில் விற்கவில்லை. எங்கள் நூல்களில் மலர்த்துளி, குமரித்துறைவி, மைத்ரி, மருபூமி, காடு, இரவு, சங்கசித்திரங்கள் ஆகியவை தொடர்ச்சியாக விற்றுக்கொண்டே இருப்பவை.அது எதிர்பார்க்கத்தக்கதுதான். ஆனால் கதாநாயகி நினைத்த அளவு விற்கவில்லை. நான் நல்ல நூல் என நினைக்கும் ஈராறு கால்கொண்டு எழும் புரவி விற்கவில்லை. நினைத்தே இராத அளவுக்கு இலக்கிய வாசிப்பு பற்றிய நூல்கள் விற்கின்றன. இதெல்லாம் வாசகர்களின் ரசனை,தேவை சார்ந்தது.

நாங்கள் எந்த நூலையும் குறைந்த பிரதிகள் அச்சிடுவதில்லை. அது தாளின் தரத்தையும் அச்சின் தரத்தையும் குறைத்துவிடும். என் வாசகர்கள் பெருந்தொகை கொடுத்து வாங்கும் நூல்கள் நீண்டகாலம் வைத்திருக்க விரும்புகிறார்கள். அத்துடன் அதிகப்பிரதிகள் அச்சிட்டால்தான் விலையும் கட்டுப்படியாகும்.ஆகவே அச்சிட்டு ‘ஸ்டாக்’ வைத்துத்தான் விற்கிறோம். அவை விற்றுக்கொண்டே இருக்கின்றன. எங்கள் பதிப்பகத்தின் முதன்மைவிசையே அறம்தான். அதன் ஆண்டு விற்பனை பற்பல ஆயிரம் பிரதிகள். ஆறுமாதத்திற்கு ஒரு முறை அச்சிட்டுக்கொண்டே இருக்கிறோம்.
தமிழில் இதுவரை நிகழ்ந்ததிலேயே மிகப்பெரிய பதிப்பு முயற்சி என்பது வெண்முரசு முழுப்பதிப்புதான். அரசும் பற்கலைக்கழகங்களும் வெளியிடும் கலைக்களஞ்சியங்களைவிடப் பெரிய நூல்தொகை அது. அச்சிட்டு ஒரு பெரிய கொடவுன் நிறைய அடுக்கி வைத்திருந்தோம். அவையும் விற்றுக்கொண்டே இருக்கின்றன. தமிழில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நூலை வாங்க பலர் இருக்கிறார்கள். எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் மொத்தநூல்தொகையையும் வாங்கும் வாசகர்களை சந்திக்கிறேன். நேற்று வெண்முரசு ஒரு குடும்பம் மொத்த நூல்களையும் வாங்கினார்கள் என்று படம் அனுப்பியிருந்தனர். அந்தப்படத்தில் இருந்தவர்களைப் பார்த்தேன். அவர்கள் மிகச்சிறுபான்மையினர். அவர்களுக்காகவே இலக்கியம் எழுதப்படுகிறது. ஆயிரமாண்டுகளுக்கு முன் கம்பனும் அவர்களைப்போன்ற சிலரை நம்பியே எழுதினான். வரவிருக்கும் படைப்பாளிகளும் அவர்களை நோக்கியே எழுதுவார்கள்.