நெல்லை

மார்ச் பத்தாம்தேதி நானும் கிருஷ்ணனும் தங்கமணியும் கல்பற்றா நாராயணனும் பேருந்தில் கிளம்பி திருநெல்வேலிக்குச் சென்றோம். என் வீட்டில் இடப்பிரச்சினை — மாடி கட்டி முடியவில்லை– என்பதனால் அவர்களை அருகே லாரன்ஸ் லாட்ஜில் தங்கவைத்திருந்தேன். ஏழுமணிக்கு நான் சென்று அவர்களைக் கூட்டிக்கொண்டு கிளம்பினேன். ஒருநாள் தங்கலுக்கான பயணம். காலமாகி விட்ட மடிக்கணினியின் பையையே சிறந்த கைப்பையாக பயன்படுத்த முடியுமென கண்டுபிடித்தேன்.

ஒன்பதரைக்கு பேருந்துநிலையம் சென்றோம். அங்கேயே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு ஒரு மாருதி ஆம்னி டாக்ஸியை அமர்த்திக்கொண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்குச் சென்றோம். ஏற்கனவே யுவன் சந்திரசேகர் வந்துவிட்டான் என்று அ.ராமசாமி சொன்னார். நாங்கள் சென்று பல்கலை விருந்தினர் அறையில் முகம் கழுவி தயாரானபோது நிகழ்ச்சி தொடங்கிவிடது.

அரங்குக்குச் சென்றபோது ஜெயலலிதா என்ற பேராசிரியை கன்னட இலக்கியத்தில் தொல்காப்பிய இலக்கணத்தின் தாக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அதன்பின்னர் கல்பற்றா நாராயணன் பேசினார். அவரது பேச்சை நான் தமிழாக்கம் செய்தேன்.ஆஸ்கார் பரிசுவிழா நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புடன் பேச ஆரம்பித்தார், கல்பற்றா நாராயணன். ஆஸ்கார் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாய்மொழியாகிய தமிழில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்றார். மலையாளியாகிய ரசூல் பூக்குட்டி ஓம் எனும் மௌனத்தின் ஒலியை உலகுக்களித்த நாடின் பிரதிநிதியாக நின்று பேசுவதாகச் சொன்னார். இரண்டும் இரண்டு மனநிலைகளைக் காட்டுகின்றன

ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மொழிசார்ந்த சுயத்தின் குரலை அங்கே முன்வைத்தார். தன் நாட்டு மக்களிடம் உரையாடினார். மாறாக ரசூல் இன்னும் பெரிய ஒரு தேசிய சுயத்தை தன்னுடையதாக முன்வைத்தார். அதை உலகுக்குச் சொல்ல முயன்றார். இரண்டு அணுகுமுறைகளும் இருவருடைய இயல்புக்கும் பண்பாட்டுப் பின்புலத்துக்கும் உகந்தவையே. ஒரு ஒலிநிபுணருக்கு ஓம் என்பது முக்கியமானது. ஓர் இந்திய கணிதவியலாளர்  எப்படி பூஜ்யத்தின் நாடாக இந்தியாவைக் காண்பாரோ அதைப்போன்றது அது. ஆகவே மலையாளியாகவும் ஒலிநிபுணராகவும் ரசூல் அவர் கூறவேண்டியதையே  கூறினார்

ஆம், ரஹ்மான் தான் சொல்லவேண்டியதைச் சொன்னார். ரசூல் அங்கு சொல்லவேண்டியதைச் சொன்னார். இந்தவேறுபாடு தமிழுக்கும் மலையாளத்துக்கும் நடுவே உண்டு. தங்கள் சுயத்தை இன்னும் பெரிய சுயங்களுடன் இணைத்துப் பெரிதாக்குபவர்கள் மலையாளிகள். தேசியவாதிகள் கேரளத்தில் இருப்பதுபோல எங்கும் இல்லை. உலகளாவ விரிவதற்கான முயற்சியை எப்போதுமே கொண்டவர்கள். அதன் நன்மைகளும் தீமைகளும் மலையாளக் கவிதைகளில் உண்டு

மலையாளக்கவிதை தன்னுடைய அனைத்து கூறுகளையும் வெளிப்பாதிப்புகளில் இருந்தே பெற்றுக்கோண்டது. துஞ்சத்து எழுத்த்சானின் பாடல்களில் கேரள நாடார் சுயம் இருந்தது. பின்னர் அது சம்ஸ்கிருதம் மூலம் விரிவாக்கம் பெற்று இந்திய சுயத்தை தன்னுடையதாக்கியது. பின்னர் இடைச்சேரி கோவிந்தன் நாயர் முதலியோரின் மீண்டும் கேரளசுயம் திரும்பிவந்தது. நவீனக்கவிதையில் அது பின்னகர்ந்து ஓர் உலகளாவிய சுயம் முன்னுக்கு வந்தது.

மலையாளக் கவிதை தன்னுடைய மண்ணின் தனித்துவத்தை மட்டுமே சார்ந்து நின்றிருந்தால் அது தன் வரலாற்று ஆழத்தில் உள்ள சங்ககால கவிதையியலை அடையாளம் கண்டுகொண்டிருக்கும் என்றும் அதன்மூலம் தமிழ் கவிதை சங்ககாலச் செவ்வியலில் இருந்து பெற்றுக்கோண்ட சிறப்புகளை தானும் பெற்றுக்கோண்டிருக்கும் என்றும் சொன்ன கல்பற்றா நாராயணன் இப்போது அந்தச் செவ்வியல்தன்மைகளை அது ஐரோப்பியக் கவிதைகளைச் சார்ந்தே உருவாக்கிக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

அடுத்துபேசியவர் யுவன் சந்திரசேகர். சங்கக் கவிதைகளின் இயல்பு உரையாடல் சார்ந்தது என்றார். கதைமாந்தர் தங்களுக்குள்ளும் வாசகர்களை நோக்கியும் உரையாடுவதே சங்கக் கவிதைகளின் தனித்தன்மை. அந்த உரையாடல் என்ற அம்சத்தையே நவீனக் கவிதை சங்க செவ்வியலில் இருந்து பெற்றுக்கொண்டது. நவீனக்கவிதையில் உரையாடல் மென்மையாகவும் தீவிரமாகவும் நடந்தபடியே இருக்கிறது. கவிதைகளுக்குள் மட்டுமல்லாமல் கவிதைகளுக்குள்ளும் உரையாடல் நிகழ்கிறது.

”வண்ணத்துப்பூச்சி தன் காலில்
காட்டை சுமந்து செல்கிறது”

என்ற தேவதச்சனின் கவிதைக்கு பதில் போலிருக்கிறது ராஜசுந்தர ராஜனின்

”ஒரு பறவை இட்ட எச்சத்தின்
நிழலில் இளைப்பாறுகிறோம்
நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கின்றபடியால்”

என்ற கவிதை. அப்படி ஏராளமான கவிதைகளைச் சொல்ல முடியும்” என்றார்

கடைசியாக நான் உரையாற்றினேன். என்னுடைய உரையில் இந்திய தத்துவசிந்தனை பரப்பில் சங்ககால இலக்கியமரபின் பங்களிப்பு என்ன என்பதை ஆராய்ந்திருந்தேன்[கட்டுரை பிற்பாடு வெளிவரும்]

சாப்பிட வரும்போது ஒரு பேராசிரியர் என்னிடம் ”நான் கடவுள் பார்த்தேன், எனக்கு ஒருசந்தேகம்” என்றார். ”சொல்லுங்கள்”என்றேன். ”ருத்ரன் பிச்சைக்காரர்களைக் கொல்கிறான். அப்படியானால் பிச்சைக்காரர்களை எல்லாம் கொல்வதுதான் சமூகத்தீர்வா?” என்றார்

”சரி, ருத்ரன் அந்தப்பிச்சைக்காரர்களை எல்லாம் இணைத்து பிச்சைக்காரர்சங்கம் ஒன்றை தோற்றுவிக்கிறான். அவர்களை திரட்டி பல போராட்டங்களில் ஈடுபடுகிறான். அவர்கள் உரிமைகளை அவர்களுக்கு பெற்றுத்தருகிறான். அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையை உருவாக்கி அளித்துவிட்டு காசிக்கே திரும்பிவிடுகிறான் — இப்படி இருந்தால் சரியாக இருக்குமா?” என்றேன்

”ஆமா சார்…இது  சரியான முடிவு” என்றார். ”அது உங்கள் கதை. அதை நீங்கள் எடுங்கள்” என்றுவிட்டு நகர்ந்துவிட்டேன். என்ன சொல்ல?

மதியச்சாப்பாட்டுக்குப் பின்னர் இன்னும் ஓர் அரங்கு. அது வழக்கமான கல்விப்புலம் சார்ந்த பேச்சு. மாணவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான விஷயங்கள். ஆகவே அவர்களுக்கும் ஏதேனும் கேட்க இருந்தது. பெரும்பாலும் சங்கப்பாடல்களின் திணை, துறைகளை பகுப்பது அவற்றின் வைப்புமுறை ஆகியவற்றைச் சார்ந்தது. பேராசிரியர் மாதையன் விரிவாகவே பேசினார். என்னருகே இருந்த கிருஷ்ணன் ”கிட்டத்தட்ட பூச்சிகளை இனம்கண்டு பட்டியலிடுவதைப்போலவே இருக்கிறது” என்றார்.

தமிழில் சங்க இலக்கியங்கள் விரிவாக பதிப்பிக்கப்பட்டதும் அவற்றை அடையாளம் கண்டு அட்டவணைப்படுத்துவதுதான் அறிவுலகத்தின் சவாலாக இருந்தது. சங்கப்பாடல்களை விரிவாக பகுத்து அவற்ற்¢ன் உள்ளாக்கம் உருவம் ஆகியவற்றின்  அடிப்படையில் அவற்றை  அடையாளம் காண்பதும் அவற்றை எந்த காலகத்தில் எந்தெந்த இலக்கண வரைய¨றைக்குள் இருத்தலாம் என்ற ஆராய்ச்சி அது. அனந்தராம ஐயர் முதல் ஔவை துரைசாமிப்பிள்ளை வரை இருதலைமுறைக்காலம் அந்த ஆராய்ச்சி மிக விரிவாகவே நடந்தது. அவற்றில் பல ஆராய்ச்சிகளை மாபெரும் வாழ்நாள் பணிகள் என்று சொல்லவேண்டும்.

ஆனால் அதற்குப்பின் வந்தவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் பயின்ற அதே செயல்பாடுகளையே இன்றுவரை சலிக்காமல் தொடர்ந்துவருகிறார்கள். ஆனால் முந்தைய தலைமுறையினர் சங்கப்பாடல்களை வரையறைசெய்வதில் அசலான ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள் என்றால் இவர்கள் அந்த ஆராய்ச்சியை மீண்டும் நகல் செய்கிறார்கள். சங்ககாலப் பாடல்கள் மீதான ஆராய்ச்சி என்பது இன்று உ.வே.சாமிநாதய்யர் முதல் மு.வரதராஜனார் வரையிலானவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை ஒட்டி மீண்டும் அடையாளப்படுத்துவதாக மட்டுமே சுருங்கிவிட்டது. அந்த அளவுக்கேனும் பண்டைய இலக்கியங்களில் ஆர்வமும் பயிற்சியும் உள்ள பேராசிரியர்களே மிகமிக அபூர்வம் என்று ஆகிவிட்டிருக்கிறது.

நடுவே சிறிதளவேனும் ஆராய்ச்சி முன்னகர்ந்தது என்றால் அது கைலாசபதி,நா.வானமாமலை,கா.சிவத்தம்பி ஆகியோரின் செல்வாக்கால் மார்க்ஸிய பொருளியல் ஆய்வுச்சட்டகம் சங்ககால இலக்கியத்தின் மீது பிரயோகிக்கப்பட்டதைத்தான் சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் இலக்கியத்தை வாழ்க்கையின் நேரடிப்பிரதிபலிப்பாக கானும் ‘பிரதிபலிப்புவாத’ கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே மிக எளிமையான சமன்பாடுகளை உருவாக்கினார்கள். மருதநில மக்கள் போருக்குப் போகவில்லை ஏனென்றால் அவர்கள் விவசாயம்செய்தார்கள், பாலை நில மக்கள் சுரண்டப்பட்டார்கள், முல்லைநிலத்தில் புஞ்சை வேளாண்மை நிகழ்ந்தது என்பதுபோல பாடல்களில் உள்ள குறிப்புகளை ஒட்டி ஊகங்களுக்கு வரும் முறை அது.

இன்றைய பேராசிரியர்களில் மிகச்சிறுபான்மையினரான சிலர் சங்க இலக்கியம் சார்ந்து இந்த அளவுக்கு பொருளியல் சமூக சித்தரிப்புகளை உருவாக்க முயல்கிறார்கள். அந்தவகையில் அவ்வப்போது சில ஊகங்களும் கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. ஆனால் கலை ஒருபோதும் காலகட்டத்தை இயந்திரத்தனமாக பிரதி எடுப்பதில்லை. ஒரு காலகட்டம் மறைந்த பின்னர் அக்காலகட்டத்தின் வாழ்க்கைக்கூறுகள் குறியீடுகளாக ஆகி கலையில் மேலும் நெடுங்காலம் நீடிக்கும். இன்றைய நடனத்தில் ராஜா ராணி வருவது அதைப்போன்றதே. ஐவகை நிலப்பிரிவினைகளும் , அங்குள்ள மக்களும் வாழ்க்கைமுறைகளும் சங்கப்பாடல்கள் எழுதப்பட்ட காலகட்டத்தின் நேரடிச் சமூகச்சித்தரிப்புகள் அல்ல. அவை அதற்கும் நெடுங்காலம் முன்பத்திய ஒரு வாழ்க்கை முறை அழகியல்படுத்தப்பட்டு கலையில் நீடித்ததன் அடையாளங்கள்.

இன்று சங்ககாலப்பாடல்களை இந்திய மொழியின் பிற இலக்கியங்களுடன் ஒப்பிடுவது, உலக இலக்கியங்களுடன் ஒப்பிடுவது அதன்மூலம் புதிய கோட்பாடுகளை உருவாக்குவது முதலியவை இன்றியமையாதவை. சங்க அழகியலை இன்றுள்ள புதிய அழகியல் மொழியியல் கொள்கைகளின் ஒளியில் ஆராய்வது அவசியம். சமூகவியல் மானுடவியல் தளங்களில் உருவாகியுள்ள புதிய சிந்தனைகளை சங்கப்பாடல்களின் மீது பயன்படுத்துவதும் தேவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்கலை ஆய்வுகளைக் கவனித்து வருபவன் என்றமுறையில் நம் ஆய்வுகள் தேங்கி கூறியதுகூறலாக சுருங்கிவிட்டிருப்பதையே உணர முடிந்தது. அதையே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும் கண்டேன்

உதாரணமாக கன்னட இலக்கியம் பற்றிய் ஆய்வில் திணைப்பிரிவினை, துறைப்பிரிவினை போன்றவை கன்னட பண்டைய இலக்கியத்தில் இல்லை என்று ஜெயலலிதா அவர்கள் சொன்னார்கள். கன்னட இலக்கியமே பன்னிரண்டாம் [அல்லது பதிமூன்று] நூற்றாண்டுக்குப் பின்னர் இதிகாசங்களின் நாட்டுமொழி மொழியாக்கங்கள் வழியாக உருவாகிவந்த ஒன்று. அந்த மொழியாக்கங்களில் உள்ள அகத்துறைச் சித்தரிப்புகளை இயந்திரத்தனமாக சங்கப்பாடல்களுடன் ஒப்பிட்டுச்சென்றார் ஜெயலலிதா.

ஆனால் கன்னடமொழி சங்ககாலத்தை கன்னட பண்பாட்டுன் ஒப்பிடவேண்டுமென்றால் கன்னடத்தின் மூலமொழிகளில் முக்கியமானதாகிய பிராகிருத மொழியுடன் ஒப்பிடவேண்டும். சங்கத்தமிழின் காலகட்டத்தில் அங்கே புழங்கியது பிராகிருதமே. இதைப்பற்றிய தகவல்களை டாக்டர் கெ.எம்ஜார்ஜ் போன்றவர்கள் எழுதி தமிழிலேயே கிடைக்கும் இந்திய இலக்கியம்: ஒப்பாய்வு போன்ற நூல்களில் காணலாம். பிராகிருத மொழியின் பல படைப்புகளை மு.ஜெகன்னாத ராஜா  தமிழாக்கம் செய்திருக்கிறார்.

கதாசப்தசதி போன்ற பிராகிருத நூல்களின் அகத்துறைப்பாடல்கள் சங்க அழகியலுக்கு மிக நெருக்கமானவை.  அவை திணைத்துறைப் பகுப்பு இல்லாதவை, ஆனால் திணைத்துறை அடையாளங்கள் அவற்றில் தெளிவாகவே உள்ளன. முனைவர் மதிவாணன் ஆந்திரநாட்டு அகநாநூறு’ என்ற பேரில் அவற்றை திணை- துறை வகுத்து தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஒருவராவது இந்தத் தளத்தில் கேள்விகேட்பார்களா என்று எதிர்பார்த்தேன். இல்லை.

ஆனால் நம் பல்கலைக் கழகச் சூழலின் ஆக்கப்பூர்வ மாற்றம் ஒன்று உள்ளது. புதிதாக உருவாகி வந்திருக்கும் தலித் குரல் என அதைச் சொல்வேன். சங்க காலத்தை சாதிப்பிரிவினையும் சுரண்டலும் இல்லாத ஒரு பொற்காலமாகச் சித்தரித்தது நம் திராவிடக் கருத்தியல். அதை பொதுப்புத்தியில் நிலைநாட்டவும் அவர்களால் முடிந்தது. சாதிப்பிரிவினையை ஆரியர்களான பிராமணர்களே தமிழுக்குக் கொண்டுவந்தார்கள் என்று சொல்லிச் சொல்லி நிறுத்தியிருந்தார்கள்.

ஜார்ஜ். எல். ஹார்ட் , கமில் சுவலபிள் போன்ற பல மேலைநாட்டு ஆய்வாளர்கள் சங்ககாலப்பாடல்களை முன்வைத்து சங்கசமூகம் தீவிரமான சாதிப்பிரிவினைகளும் ஒடுக்குமுறைகளும் நிலவிய ஒரு சமூகம் என்றும் அந்த பிரிவினைகள் அவர்களின் பழங்குடி சாந்த இறந்தகாலத்தில் இருந்து வந்தவை என்றும் சொல்லியிருய்ந்த ஆய்வுகள் பொருட்படுத்தப்பட்டதே இல்லை. தொண்ணூற்றி ஒன்றில் ஒரு மேடையில் சாதிப்பிரிவினை சங்க காலத்தின் முக்கியமான இயல்புகளில் ஒன்று என்று நான் சொன்னபோது என்னை அடிக்க மேடை நொக்கி தமிழார்வலர் பாய்ந்து வந்தார்கள். பிற மேடைகளில் நான் ஜார்ஜ் எல் ஹார்ட்டை மேற்கோள் காட்டி ஒதுங்கிவிடுவேன். ஆயிரம் இருந்தாலும் அமெரிக்கர்!

இப்போது மேடைகளில் தலித் ஆய்வாளர்கள் இந்த பொற்காலக்கனவை கிழித்து போடும்போது அவையில் எதிர்க்குரலே இல்லை. சங்ககாலத்தின் சாதிப் பிரிவினைகள், தொல்காப்பியத்தின் இழிசினர் வரையறைகள், தொழும்பர், வரைவின்மகளிர், உரிமைமாக்கள் போன்ற அடிமை முறைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறார்கள். அவர்கள் அனைவரிலும் பேரா.ராஜ் கௌதமனின் நூல்களின் தெளிவான பாதிப்பு உள்ளது.

மாலை கருத்தரங்கு முடிந்ததும் சற்றே ஓய்வெடுய்த்தோம். நான் காந்திமதியம்மையை ஓர் எட்டு பார்த்துவருவோம் என்றேன். யுவன் சந்திரசேகர் நான்குவருடம் கோயில்பட்டியில் வாழ்ந்தவன் .அவன் அம்மையையும் வீட்டுக்காரரையும் பார்த்ததே இல்லை. நான் ஆச்சரியபப்டேன் ”டேய் நான் அஞ்சு வருஷம் ராமநாதபுரத்திலே இருந்தேனே. எனக்கு ராமலிங்கத்தையே தெரியாதே”என்றான். கல்பற்றா நாராயணன் நெல்லைக்கு முதல்முறை.

 

 

கோயிலுக்கு ஆறரை மணிக்குப் போய்ச்சேர்ந்தோம். நல்ல கூட்டம்தான். ஆனால் நெல்லையபப்ர் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை விட பெரிது. ஒரு திருவிழாக் கூட்டமே தாங்கும். கோயில் நுழைவில் விதானத்தில் உள்ள மரச்சிற்பங்கள் மிக நுணுக்கமானவை. ஆனால் கீழே முழுக்க கடைகள். நின்று மேலே பார்க்க முடியாது. மேலும் அவற்றில் நிறைய பாலியல் சிற்பங்கள் இருப்பதனால் பார்க்க ஆரம்பித்தால் கடைக்காரர்கள் துரத்தி விடுகிறார்கள்.

கோயிலுக்குள் சென்று சிற்பங்களைப் பார்த்தோம். அர்த்த மண்டபத்தின் தூண்கள் தூண்கொத்துகளாக மிகச்சிக்கலான சிற்ப அமைப்புடன் செய்யப்பட்டவை. ஒரு தூண் என்பது ஒன்றுக்குள் ஒன்றாகச் செறிந்த ஏராளமான தூண்கள் அடங்கியது. அந்த அழகும் சரி அதை உருவாக்கிய தொழில்நுட்பமும் சரி மிக சாதாரணமானவை என்று கருதிய ஒரு அய்யர் வழக்கம்போல அர்த்த மண்டபத்தின் மீது நின்று ”தட்டிப்பாருங்கோ நவரச சத்தம் வரும்” என்று ‘நுட்பத்தை’ சொல்லிக் கொடுக்க மந்தைகள் பைசாவாலும் பிற பொருட்களாலும் தட்டி சிவன்கோயிலை இடிக்கும் புண்ணியத்தை தேடிக்கொண்டிருந்தன.

மரத்தால் ஆன கோயில்களில் இருந்து கல்தளிகள் உருவானதனை இந்த மண்டபத்தின் அழகியலில் காணலாம். ஒரு மரக்கட்டுமானத்தை அப்படியே கல்லில் திருப்பிச் செய்தது போல உத்தரங்கள் பட்டிகைகள் கொண்ட மேற்கூரை. கன்னங்கரிய சிற்பங்கள். உள்ளே சென்று நெல்லையபப்னை தரிசனம் செய்தோம்.

பக்கவாட்டில் கோவிந்தராஜபெருமாள் சன்னிதி இருந்தது ”பெருமாளா? இது சிவன் கோயில்தானே?” என்றான் யுவன். ”நாயக்கர் காலத்து பெருமாள்கோயில்களில் சிவனும் சிவன் கோயிலில் பெருமாளும் இருப்பார்கள்…அவர்கள் உருவாக்கிய மத இணைப்பு அது” என்றேன். அறை நிறைத்து பள்ளிகொண்ட கன்னங்கரிய திருமேனியை தரிசித்து வந்தோம். ஆதி நெல்லையபப்ர் இலிங்க வடிவில் சற்று ஆழமான ஒரு சிறு கோயிலுக்குள் இருக்கிறார். பாண்டியர்கள் எடுத்துக்கட்டுவதற்கு முன்பு இருந்த சின்னஞ்சிறு சிவன்கோயில் அது.

 

 

கோயிலுக்கு வெளியே கிட்டத்தட்ட ஒரு குன்றுபோல உயரமான கோயிலுகுள் இருக்கும் தட்சிணாமூர்த்தி நெல்லையப்பர் கோயிலின் சிறப்புகளில் ஒன்று. ராவணன் கைலாய மலையை தூக்கமுயல்வதாக உள்ள  ஆளுயரச் சிற்பம் நெல்லையின் தனிச்சிறப்புக்களில் ஒன்று. அதேபோல கேரளபாணி கூரை கொண்ட தாமிர சபை. அதற்குள் நுட்பமான சிறிய மரச்சிற்பங்கள் செறிந்த உட்கூரை உள்ளது.

 

 

காந்திமதியம்மன் கோயில் போகும் வழியில்  குளக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குளத்தில் கோபுரத்து விளக்குகள் தளதளத்தன. நல்ல குளிர்ந்த காற்று. கோபுரம் விளக்குகளுடன் இருண்ட வானில் எழுந்து நின்றது. நெருக்கமான நண்பர்களுடன் அத்தகைய ஓர் இடத்தில் அமர்ந்திருப்பது மனதை நெகிழச்செய்தது ”ஏன் யுவன் நாம இப்ப இங்க இருப்பதை மறக்கவே மாட்டோம்னு தோணுது இல்லை?” என்றேன். ”ஆமா. நானும் அதைத்தான் நெனைச்சேன். கெழவாடிகளா ஆனதுக்கு அப்றம் நெனைச்சு நெனைச்சுஅழப்போறோம்” என்றான்.

காந்திமதியம்மனை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வெளியே வந்தோம். எதிரே சரவண பவனில் சாப்பிட்டோம். நான் குழிப்பணியாரம் சாப்பிட்டேன். சிற்றுண்டி சுவையாக இருந்தது என்றார் கல்பற்றா நாராயணன். பிறகு நெல்லை அல்வா வாங்கிக்கொடுத்தேன். ஒரு பெரிய ஆட்டோ ரிக்ஷா வந்தது. எட்டுபேர் ஏறலாம். நூறு ரூபாய்க்கு அதை பேசி  அமர்த்திக்கொண்டு பல்கலைகழகம் வந்தோம். வசதியான அறை. குளிர்சாதன வசதி. விரைவிலேயே தூங்கிவிட்டோம்

 

 http://www.tamilkural.com/tamilkural/index.php?option=com_content&view=article&id=2115:2008-08-02-18-38-43&catid=71:rkaflliufs&Itemid=322

http://kaalapayani.blogspot.com/2008/03/blog-post_22.html

http://www.tamilhindu.com/albums/?kpgp=2&album=taoyGC

 

http://www.aaraamthinai.com/samugam/oorvalam0203/ag/ag19oorvalam.asp

முந்தைய கட்டுரைபகடி
அடுத்த கட்டுரைமுஞ்சிறை:கடிதங்கள்