விழாவும் கனவும் – யோகேஸ்வரன் ராமநாதன்

அன்பின் ஜெ.

பத்தொன்பதாம் தேதி இரவு, மகிழுந்தில் இருந்து இறங்கி, ஹெச்.ஆர் ரெசிடென்சி அறைக்கு செல்லாமல் எதிரே இருந்த டீக்கடைக்கு சென்றேன். சென்ற வருட விழாவின் போது, “பால் தீர்ந்து போய்விட்டது” என்ற காரணம் சொல்லி, இலக்கிய வாசகர்களின் தேநீர் விழைவை சில மணி நேரம் நீடிக்க வைத்த டீக்கடைக்காரரிடம்,  சனி,ஞாயிறு இரு நாளும் அவ்வாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தோம்.

சனிக்கிழமை காலை , “வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம்” குழு மந்திரமூர்த்தி- “வாசகசாலை” கார்த்திகேயன் இருவருடனான முதல் அரங்குக்கே முழு அரங்கமும் நிரம்பியது.  ஞாயிற்றுக்கிழமை,  விழாவிற்கு முன்பான விவேக் ஷான்பேக் வரை ஒவ்வொரு விருந்தினரும் தங்கள் இயல்பில் அரங்கை எதிர்கொண்டார்கள்.

இந்திய அளவில் நடைபெறும் இலக்கிய திருவிழாக்களில் தனக்கான தனித்தன்மையுடனும், தீவிரத்துடனும் நடைபெறும் விழா என்பதை அனேக நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.விவேக் ஷான்பேக் அரங்கில், வாசக நண்பர் ஒருவர், தனது கேள்வியை கன்னடத்தில் கேட்டு ,விவேக் அவர்கள் அதற்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லி, சுனில் கிருஷ்ணன் அதை தமிழில் அரங்கிற்கு சொன்னது ஒரு உதாரணம்.

2024ம் ஆண்டுக்கான ”விஷ்ணுபுரம்” விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டி  வாழ்த்து  தெரிவிக்க நேரில் சென்ற விஷ்ணுபுரம் நண்பர்கள் வேஷ்டி கட்டிய தேவதைகளாக தெரிந்ததை பகடியாய் விவரித்தபடி தனது அமர்வில், உடல்நிலை அளிக்கும் இடரை மீறி இலகுவாக பதில் அளித்தார் இரா, முருகன்.

”மீன்காரத் தெரு”  நாவல் மூலம் தனக்கு வந்த இடர்கள் குறித்து பகிர்ந்து கொண்ட கீரனூர் ஜாகீர் ராஜா. தனது முதல் படைப்பு அச்சில் வெளியாக பத்து வருட காலத்திற்கு மேல் ஆனதையும், தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகள், புத்தகங்கள் கொண்டு வருவதை இலகுவாக ஆக்கி இருப்பதையும், “இப்பல்லாம் ஒன்னுக்கு பத்து  அட்டைப்படம்  தயார் செய்துகொண்டுதான் எழுதவே ஆரம்பிக்கிறாங்க”  என்ற ஆதங்கத்தையும் குறிப்பிட்டார்.

பெற்றோர் மறைந்தபின் தான் பெற்ற வெறுமையும்,விழாவில் கலந்து கொள்ள தயங்கியதையும், அமர்வு தன்னை செயலூக்க பாதைக்கு மீள வைத்திருப்பதை உணர்ச்சிகரமாக குறிப்பிட்டார் “வாசகசாலை” கார்த்திகேயன்.“வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம்” குழு சந்திக்கும் சவால்கள், அவற்றை முன்நகர்த்தி செல்லும் விதங்கள், கூடுகைகளில் எழுத்தாளர்கள் கலந்துகொள்வது அளிக்கும் நன்மைகள்  குறித்து பகிர்ந்து கொண்டார் மந்திரமூர்த்தி.

தங்களது துறை சார் படைப்புகள், அலுவலக  சூழலில் அவை எதிர்கொள்ளப்படும் விதம் குறித்து லாவண்யாவும், மயிலனும் பகிர்ந்து கொண்டார்கள். விழாவில் கலந்து கொள்வது  “ஒரு நாள் விடுப்பு” என்பது மட்டுமே தன்னுடைய அலுவலகம் அறிந்த தகவல் என்பதை மயிலன் குறிப்பிடுகையில், அதுவும் ஒருவகையில் நல்லதுதானே என்று நினைத்துக் கொண்டேன். குடும்பத்தில் முன்னோர் ஈடுபட்ட சித்துவிளையாட்டுகளை பற்றியும், அவை தன் படைப்புகளில்  கொண்டிருக்கும் தாக்கம் குறித்தும்  விவரித்தார் சித்ரன்

மொழிபெயர்ப்பு பணியில், தான் சந்திக்கும் சிக்கல்களை,அவற்றை கையாலும் விதத்தை,தனது நிதானமான பேச்சில் வெளிப்படுத்திய தென்றல் சிவக்குமார்.பரந்து விரிந்த கூவம் ஆற்றுப்படுகையில் இருந்த ஒருவரை, அடுக்ககம் ஒன்றில் அடைபடச் செய்யும் குடியேற்றமும்,இந்த ஹரிசாண்டல் டூ வெர்டிகல் மைகிரேஷன் ஏற்படுத்தும் வாழ்வியல் மாறுதல்கள் குறித்தும் விரிவாக பேசிய தமிழ் பிரபா.

Everydayness குறித்த விவேக் ஷான்பேக் அவர்களின் கருத்துகள்.வேற்றுமொழி பேசும் மாநிலம் ஒன்றில், தனது படைப்புகள் குறித்த கூர்மையான அவதானிப்புகள் வந்தபடி இருப்பதை, புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்தார்.

தேவதேவனை வழியனுப்ப ரயில்நிலையம் செல்கையில் , பிளாட்பாரத்தில், தண்டவாளம் ஒன்றை ரெண்டாக அறுத்துக்கொண்டு இருந்தார்கள், இரும்பை அறுக்கும் பெரும் சத்தத்திற்கு இடையில், அருகிலுள்ள கல் இருக்கை ஒன்றில் அமர்ந்து  பாதி மழுங்கிய பென்சில் ஒன்றை எடுத்து குறிப்பெடுக்க ஆரம்பித்தார் தேவதேவன். வெப்பம் சற்றே மிகுந்த நிலப்பரப்பில், தனக்கான ஆரண்யத்தை உருவாக்கிக் கொண்டதற்கான காரணங்களை விவரித்த கயலில் அமர்வு நினைவில் வந்தது.இருநாள் விழாவில் செயலூக்கம் பெற்று ,அகம் மலர்ந்து விடைபெற்றுச் செல்லும் வாசகர்களில் மீண்டும் மீண்டும் காண்பது  மனநிறைவை தரும் விசயம்.

முந்தைய வருடங்களில், விழாவுக்கும், அமர்வுகளுக்குமான பிரேம் ஆஃப் ரெபரென்ஸ்க்கு முற்றிலும் சம்மந்தம் இல்லாத கேள்விகளை கேட்டு, அமர்வுகளின் ஒத்திசைவை சீர்குலைக்கும் மைக்பிடுங்கிகளை அடையாளம் காண்பது சற்றே சவாலாகத்தான் இருக்கும்.  கேள்வி கேட்டு முடித்தபிறகே தெரியவரும். பிறகு, கேள்வியின் பாதியிலேயே இனம் காணப்பட்டு மட்டுறுத்தப்படுவர். இப்போதெல்லாம் மைக் வேண்டும் என்று கேட்பவர்களை பார்த்தவுடனேயே  தெரிந்துவிடும்.  ”கேள்விகள் விருந்தினரின் படைப்பு சார்ந்து இருத்தல் வேண்டும். பிறவற்றை அமர்வு முடிந்தபின்  விருந்தினரை சந்தித்து கேட்டுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தவுடன் புன்சிரிப்போடு மைக் வேண்டாம் என்று மறுத்துவிடுவர்.

மெய்க்களம் குழுவினர் நண்பர் நரேன் இயக்கத்தில் அரங்கேற்றிய வாள் மற்றும் கழுமாடன் நாடகங்கள் அவையினருக்கு புதிய திறப்பு. இவ்விரு நாடகங்களுக்கான முதல் ஒத்திகையின் போது உடன் இருந்தேன். வண்டிச்சக்கரத்தில் அழுத்தி வைக்கப்படும் களிமண், அழகான குடமாய் அடிதட்டி எடுக்கப்படுகையில்,பாண்டம் செய்பவர்  முகத்தில் தெரியும் திருப்தி,அரங்கேற்றத்திற்கு பின் மெய்க்களம் குழு நண்பர்களிடம் தென்பட்டது. புதிய பரிமாணம் ஒன்றினை மெய்க்களம் குழு ஆரம்பித்து வைத்திருக்கிறது.

மூன்று சரடுகளாக, இரா.முருகனின் கதையுலகை போலவே மாய-எதார்த்த வடிவில், ஆவணப்படத்தில் படைப்புத்திறனை அழகாய் வெளிப்படுத்திருக்கும்  அகரமுதல்வன் .  அகரமுதவனிடம்  அலைபேசி எண் பெற்று, ஆவணப்படத்தில் பங்காற்றிய  தெருக்கூத்து கலைஞர் மூர்த்தியிடம், ஆவணப்படத்தில் அவரது சிறந்த பங்களிப்புக்கான வாழ்த்துகளை தெரிவித்தேன். கட்டைக்கூத்துக் கலையை  “கட்டைக்கூத்து குருகுலம்” என்ற பெயரில் ஒருங்கிணைத்து நடத்திவரும் ராஜகோபால் அவர்களிடம் 14 வருடங்கள் முறையாக குருகுலகல்வி முறையில் பயின்று, தற்போது முழு நேர கட்டைத்கூத்து கலைஞராக காஞ்சிபுரம் அருகில் சீமளம் என்ற கிராமத்தில் இருக்கிறார்.

தற்போது கட்டைக்கூத்துக் கலையை கற்றுக்கொள்ளும்  நபர்கள் மிகக் குறைவு என்று ஆதங்கப்பட்டவரிடம், ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் கற்றுத்தருவீர்களா என்று கேட்டதற்கு, மகிழ்ச்சியுடன் இசைந்துள்ளார். குறிப்பிட்ட அளவு நபர்கள் ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருக்கும்/தேர்வு செய்யும் இடத்திற்கு சென்று பயிற்றுவிக்கவும் தயாராக இருக்கிறார். மூர்த்தி தொடர்பு எண் : +91 86678 78194.

விழா நிகழ்வில் கூட்டு புகைப்படம் எடுக்க, விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் மேடையில் கூடுவது  வழக்கம். வருடா வருடம் எண்ணிக்கை அதிகமாகியபடி இருக்கிறது. இவ்வருடம் மேடைக்கு கீழேயும் நிற்கும் அளவிற்கு நண்பர்கள் குழுமி இருந்தார்கள்.

அரங்கில் அனைத்து தளத்திலும் வைக்கப்பட்டு இருந்த பேனர்களில் வாசகர்கள் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தார்கள். உங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் நீள் வரிசை.  அடுத்த வருடம் உங்களின் புகைப்படத்துடன் கூடிய பிரத்யோக பூத்  வைக்கலாமா என்று  குவிஸ் செந்திலிடம்  ஆலோசிக்க வேண்டும்.

“கர்ணன் கூர்ந்துநோக்கி குழந்தை சிறுவாயைத் திறந்து நகைத்துக் கொண்டிருந்ததைக்கண்டு சிரித்தான். துச்சளை சிரித்தபடி “மகிழ்கிறான்,இவர்களுடன் இருப்பதுபோல் அவன் வாழ்க்கையில் உவகை மிகுந்த தருணங்கள் வேறெங்கும் வாய்க்கப்போவதில்லை” என்றாள். “விண்ணிலேயே இருக்கிறான், மண்ணுக்கு இறங்க விழைவற்றவன்போல” என்றான் கர்ணன்.

வெண்முரசில் துச்சளை தனது மகவுடன் அஸ்தினபுரி நகர்புகும் நிகழ்வில் வரும் வரிகள்.

 

விழாவில் இருநாட்களும் நமது விஷ்ணுபுர நண்பர்கள் கைகளில் இருந்து கைகளுக்கு மாறிச் சென்றபடியே இருந்தாள் ஜெயபைரவி. ஜெயபைரவியின் வீடுதாண்டிய முதல் பயணம் விஷ்ணுபுர விழாதான். ஜெயபைரவியும்,மானஸாவும், விஷ்ணுபுர நண்பர்கள் கைகளிலும்,மடிகளிலும், சிறுவாய் திறந்து நகைத்தபடி  இருந்ததை கண்டபோது,மேற்கண்ட வெண்முரசு வரிகளே நினைவில் வந்தன.

இரா. முருகன் அமர்வில், ஹாகுல் அமீது கப்பல் எந்திர அறை செயல்படும் விதம் குறித்த துல்லியமான தகவல்கள் உங்களுக்கு எவ்வாறு தெரியும் என்று எழுப்பிய கேள்விக்கு, அதற்கான தரவுகளை தேடி, ஆங்கில இதழ் ஒன்றில் கண்டதை சொன்னார்.  கூடவே, தேடிக் கைகொள்வோம், இல்லையென்றால் உருவாக்குவோம் என்ற சொற்றொடரையும்  சிரிப்பலையின் ஊடாக குறிப்பிட்டார்.

”விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்” என்னும் மையச்சாலையில் இருந்து, கலை,இலக்கிய,பண்பாட்டு முன்னெடுப்புகளுக்கான கிளைச்சாலைகள் உருவாகியபடி இருக்கின்றன.

“அனைத்துக் களங்களிலும் எங்கள் செயல்திட்டம் என்பது நுண்ணலகு சார்ந்தது. அடிப்படைக்களத்தில், சிறிய அளவில் நீடித்த செயல்பாடு என்பது எங்கள் நடைமுறை. அதுவே காந்தி காட்டிய வழி” – விழா குறித்தான உங்களின் பதிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

ஆம்… செயல்திட்டம், மாநில சாலையில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையாக மாறி, தற்போது சர்வதேச சாலையாய் மாறிவருகிறது.

நித்யவனத்திற்கும்-நியூயார்க்குக்கும் இடையே சர்வதேச சாலையாய் உருவாகிக்கொண்டு இருக்கும்  ”நவீன தமிழ் இலக்கியத்திற்கான சர்வதேச மாநாடு”  குறித்த திட்டத்தை , உங்களின் வாழ்த்துரையில் பகிர்ந்து கொண்டீர்கள்.

உலகெங்கிலும் இருக்கும் தமிழிலக்கிய வாசகர்கள் செய்ய  வேண்டியது, அவ்வாறான கிளைச்சாலைகளை தேடிக் கைகொள்வதும், இல்லையெனில் உருவாக்குவதும்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.

 

முந்தைய கட்டுரைஇனித்தல் – கடிதம்
அடுத்த கட்டுரைசு.சண்முகசுந்தரம்