அண்மையில் ஜெயதேவன் என்னும் கவிஞர் இப்படி எழுதியிருந்தார்.
ஜெயமோகனை எடுத்துக் கொண்டால் தேவதேவனை உச்சி மீது வைத்து மெச்சுகிறார். அவர் பார்வைக்கு தேவதேவனை தாண்டி வேறு கவிஞன் இனிதான் பிறக்க வேண்டும் போல..
எஸ்.ராமகிருஷ்ணன் என்னடாவென்றால் தேவதச்சனையே தூக்கிப் பிடிக்கிறார். வேறு கவிஞர்களை அவர் கொண்டாடுவதே இல்லை. இதுதான் இன்றைய கவிதை மதிப்பீடு சூழல்.
தேவதேவனை மட்டும் நீங்கள் கொண்டாடுவதன் காரணம் என்ன?
கே.கிருஷ்ணராஜ்
அன்புள்ள கிருஷ்ணராஜ்,
இன்றைய இலக்கிய விவாதமே முகநூலுக்கு எதிரான போர் என்று சொல்லத்தக்கது. அரைகுறைப் புரிதல்கள், திரித்தல்கள், அக்கறையில்லாத மனப்பதிவுகள் இப்படி கொட்டிக்கொண்டே இருக்கையில் இலக்கியத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதும் பேசுவதும் மிகப்பெரிய அறைகூவல்.
நீங்கள் கேட்டதற்கான பதிலை கூகிளில் ஒரே ஒருமுறை தேடினாலே கண்டடைந்துவிடமுடியும். தமிழில் இன்றுவரை எழுதிய எல்லா நல்ல கவிஞர்கள் பற்றியும் மிக விரிவாக நான் எழுதியிருக்கிறேன். கவிதை பற்றி மிக அதிகமான பக்கங்கள் ஆய்வும் மதிப்பீடும் எழுதிய விமர்சகன் நானே. கவிதைவிமர்சனம் மட்டுமே ‘உள்ளுணர்வின் தடத்தில்’ என்ற பெயரில் நூலாகியுள்ளது. அதில் தமிழின் முதன்மைக்கவிஞர்கள் பற்றி விரிவான கட்டுரைகள் உள்ளன. இவை தவிர தேவதச்சன், அபி குறித்த தனி நூல்கள் உள்ளன. ஈழக்கவிஞர்கள் பற்றிய கட்டுரைகள் ஈழ இலக்கியம் என்னும் நூலில் உள்ளன. பிற்காலக் கவிஞர்கள் பற்றி தொகுக்கப்படாத கட்டுரைகள் ஏராளமாக உள்ளன.
முகநூலர்கள் எதையும் வாசிப்பதில்லை. கூகிளையே பயன்படுத்துவதில்லை. அவர்கள் தேடுவதுகூட முகநூலுக்குள்ளேயேதான். அவர்களுடன் விவாதிப்பதே சலிப்பூட்டுவது. ஆனால் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
இலக்கியத்தில், கவிதையில் மெய்யான ஆர்வமுள்ளவர்கள் உள்ளுணர்வின் தடத்தில் உட்பட நான் கவிதை குறித்து எழுதிய நூல்களையும் கட்டுரைகளையும் வாசிக்கலாம். நவீனக்கவிதை என்றால் என்ன, அதன் சாதனையாளர்கள் எவர், அவர்களின் கவியுலகுக்குள் நுழைவதற்கான வழி என்ன என்பதை உணர்வதற்கு அவை உதவும். அவை சிக்கலான மொழியில் எழுதப்பட்ட ஆய்வுகள் அல்ல. கவிதைகளைக் குறித்து கவிதைக்கு நிகரான மொழியில் எழுதப்பட்டவை, சிறந்த வாசிப்பனுபவம் அளிக்கும் இலக்கியப்படைப்புகள்.
*
கவிதை என்னும் வடிவின் எளிமை காரணமாகவே அதை எழுதுவோர் பலநூறுபேர் இருப்பார்கள். அனைவரும் கவிஞர்கள் அல்ல. அனைவரையும் கவிஞர் என ஏற்பவருக்கு கவிதை என்றால் என்ன என்றும் தெரியாது. அவ்வாறு ஏற்பது கவிஞர்களை அவமதிப்பது. கவிதை என்பது ஒரு நீண்ட அகத்தேடலின் மொழிவெளிப்பாடு. அதையே எண்ணித் தவமியற்றினால்கூட அரிதாகவே அமைவது. நல்ல வாசகன் நல்ல கவிதைக்காக தேடிக்கொண்டே இருப்பவன். கண்டடைதலின் பரவசத்தையே அவன் வெளிப்படுத்துகிறான். எளிதில் நிறைவடைபவன் கவிதைக்கான வாசகன் அல்ல.
கவிதையின் பிரச்சினை என்னவென்றால் ‘சாதாரணமான’ கவிதைக்கும் ‘நல்ல’ கவிதைக்குமான வேறுபாட்டை நல்ல கவிதைவாசகன் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதுதான். நல்ல கவிதை வாசகர் மிகச்சிலரே. பிறருக்கு எல்லாமே கவிதைதான். கவிதையின் பேசுபொருள், மொழியமைப்பு சார்ந்து ஓர் எளிய வாசிப்பு அவர்களிடமிருக்கும். ஏற்கத்தக்க ஒரு கருத்து நல்ல மொழியமைப்புடன் முன்வைக்கப்பட்டாலே அது நல்ல கவிதை என அவர்கள் எண்ணிக்கொள்வார்கள். அவர்களை நான் நிராகரிக்கவில்லை, ஒரு சூழலில் கவிதையை வாசிப்பவர்களே கொஞ்சம் அரியவர்கள்தான். ஆனால் நல்ல கவிதைவாசகன் அதற்கும் அப்பால் செல்லும் தேடல் கொண்டவன்.
கவிதையின் இன்னொரு சிக்கல் முந்தையகாலக் கவிதைகளின் மீட்டல் அடுத்தகாலக் கவிதைகளில் நீடிக்கும் என்பதும், பலசமயம் எளிய வாசகர்களுக்கு அதுவே போதுமானது என்று தோன்றிவிடும் என்பதும்தான். இசையிலும் இப்பிரச்சினை உண்டு. நல்ல வாசகர் புதியது என்ன என்று மட்டுமே பார்ப்பார், முந்தைய கவிதைகளின் மீட்டலை எதிர்மறை அம்சமாகக் கருதுவார். முந்தையகாலக் கவிதைகளை ஆழ்ந்து வாசித்துவிட்டே அவர் புதியது தேடி மீண்டும் வாசிக்கிறார் என்பதே காரணம்.
நல்ல கவிதைக்கான தேடல் கொண்ட வாசகன் தன் அளவுகோல்களை விரித்துக் கொள்வதில்லை, காலப்போக்கில் அது சுருங்கிக்கொண்டேதான் செல்லும். அவனுடைய இலக்கிய ரசனை இரண்டு வகைகளில் எல்லைகளைக் குறுக்கிக்கொள்ளும். ஒன்று, ஒரு மொழிச்சூழலின் மிகச்சிறந்ததை மட்டுமே அவன் ஏற்பான். இரண்டு, தன்னுடைய சொந்த ரசனை, சொந்தத் தேடல் சார்ந்து மிகத்தீவிரமானவற்றையே ஏற்பான். எந்த நல்ல வாசகனுக்கும் அவனுக்கு மிக அணுக்கமான, அவன் ஆத்மாவுடன் உரையாடும் அந்தரங்கமான படைப்பாளிகள் சிலர் இருப்பார்கள். இல்லையென்றால் அவன் நல்ல வாசகன் அல்ல.
கவிதை குறித்து எழுதும் இலக்கிய விமர்சகன் தேர்ந்த ரசிகன் என்பதற்கும் அப்பால் உலக இலக்கிய மரபு குறித்த அழகியல்புரிதலும், தன் சூழல் பற்றிய இலக்கிய வரலாற்று அறிவும் கொண்டவன். ஆகவே அவன் தன் தேர்வுகளை ஒட்டுமொத்தமான கவிதையழகியலிலும் வரலாற்றிலும் வைத்துப் பார்ப்பான். ஆகவே ஒவ்வொரு கவிஞரையும் அவருடைய அழகியல் தனித்தன்மை, வரலாற்றில் அவருக்கு இருக்கும் இடம் ஆகியவற்றைக்கொண்டே மதிப்பிடுவான். அவ்வாறுதான் முற்றிலும் பொதுத்தன்மைகள் அற்ற பிரமிள், அபி, சு.வில்வரத்தினம், ஞானக்கூத்தன், தேவதச்சன், தேவதேவன், சேரன் ஆகியவர்களை ஒரே சமயம் பெருங்கவிஞர்கள் என்று கொள்ளமுடிகிறது.
எந்த இலக்கிய விமர்சனமும் துல்லியமான நிராகரிப்பையே தன் அடித்தளமாகக் கொண்டிருக்கிறது, அதன்மீதுதான் ஏற்புகள் கட்டமைக்கப்படுகின்றன.
ஜெ