வழிவழியாக வந்தமைவோர்

அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்கள் வெளிவந்துகொண்டிருந்தபோது நான் உங்களுக்கு சில கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன். அந்நாவல்களைச் சுருக்கவேண்டும், எடிட் செய்யவேண்டும் என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன். சிலவற்றுக்கு நீங்கள் பதில் சொன்னீர்கள். பலசமயம் எதிர்வினை இல்லை. வெண்முரசை நான் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்தவரை அபிப்பிராயங்கள் சொல்லியிருக்கிறேன். இப்போது பார்க்கையில் என்னுடைய அபிப்பிராயங்களில் பெரும்பகுதி அன்றைய முகநூல்சூழலில் பேசப்பட்டவை, இலக்கியவாசகர்கள் என நான் நம்பியவர்கள் சொன்னவை ஆகியவற்றை ஒட்டி எழுதப்பட்டவை என்று தெரிகிறது.

அன்று எழுதிய ஒரு கடிதத்தில் (எனக்கு அல்ல, ஆனால் எனக்கான பதில் என்று அதை எடுத்துக்கொண்டேன்) நீங்கள் இப்படிச் சொன்னீர்கள். ஓர் இலக்கியப்படைப்பு எதிர்காலம் நோக்கிப் பேசுகிறது. அன்றுவரை இருந்த எல்லைகளை கடந்து செல்கிறது. ஆகவே சமகால வாசகர்களின் கருத்துக்கள் எவ்வகையிலும் அதற்கு முக்கியமல்ல. சமகாலத்திலுள்ள அழகியல் கொள்கைகளும் கருத்துக்களும் அதை எந்த வகையிலும் கட்டுப்படுத்தக்கூடாது” அன்றைக்கு நீங்கள் திமிராகப்பேசுவதாக தோன்றியது. அதை முகநூலிலும் அப்போது எழுதினேன்.

இப்போது பார்க்கையில் அது எந்த அளவுக்கு முக்கியமான புரிதல் என்ற வியப்பு ஏற்படுகிறது. அன்று ஒலித்த குரல்களுக்கெல்லாம் ஐந்தாண்டுகளுக்குள்ளாகவே எந்த மதிப்பும் இல்லாமலாகிவிட்டிருக்கின்றது. நான் விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்தேன். உங்களைச் சந்தித்து ஒரு வார்த்தைப் பேசிவிட்டுப் போகவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். நான் சந்தித்த இளம்வாசகர்கள் பலர் வெண்முரசை தீவிரமாக வாசித்திருந்தார்கள். பலர் வெண்முரசு எழுதி முடிக்கப்பட்ட பிறகு இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தவர்கள். கொரோனா காலகட்டம் பலரை இலக்கியத்திற்குள் கொண்டுவந்துவிட்டிருக்கிறது. சிலரிடம் நான் அன்றைய விவாதங்களைப் பற்றிச் சொன்னேன். ஒருவர் ’பூமர் முட்டாள்கள்’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி சிரித்துவிட்டுச் சென்றுவிட்டார். இன்னொருவர் ‘அவர்களெல்லாம் அவர்களின் காலகட்டத்திற்குள் சிறைப்பட்டவர்கள்’ என்று ஆங்கிலத்தில் சொன்னார். தமிழ் சரியாகப்பேசத் தெரியாத தலைமுறை வெண்முரசு படிக்கிறதென்பதே ஆச்சரியம்தான்.

நான் உங்களிடம் வெண்முரசு பற்றிய என் அனுபவத்தைச் சொன்னேன். அதை எழுதும்படிச் சொன்னீர்கள். ஆகவே இதை எழுதுகிறேன். என் அப்பாவுக்கு வயது 76. சென்ற ஆண்டு அவருக்கு கான்ஸர் கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆகவே அவருக்கு ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. வாழ்நாள் முழுக்க கடும் நாத்திகராக இருந்தவர். ஆனால் முதுமையில் மிகப்பெரிய ஒரு வெறுமையை உணர்ந்தார். என்னிடம் ஒருநாள் மனம் விட்டு பேசியபோது அவர் அதைச் சொன்னார். “அவ்ளவுதானான்னு இருக்கு” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். “ஒண்ணுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை” என்றார்.

நான் அதை என் நண்பரிடம் சொன்னேன். அவர் அப்பாவுக்கு வெண்முரசு வாசிக்கக்கொடுக்கலாம் என்று சொன்னார். அவருடைய அம்மா யூடியூபில் ஒரு சோதிடர் சொன்னார் என்று வெண்முரசின் ஒரு நாவலை வாசிக்க ஆரம்பித்தாராம். அதிலிருந்து அப்படியே வாசித்துக்கொண்டே இருக்கிறார் என்றார். “முடிஞ்சிரும்னு பயமா இருக்கு” என்று அம்மா சொன்னதாகச் சிரித்துக்கொண்டே சொன்னார். அம்மாவின் வாழ்க்கையில் எல்லா வெறுமையையும் வெண்முரசு போக்கிவிட்டது என்று சொன்னார். நான் என் அப்பாவுக்கு வெண்முரசு ஒரு செட் வாங்கிக்கொடுத்தேன். அவர் ஆரம்பத்தில் வாசிக்கவில்லை. அவர் இலக்கியம் எதையும் வாசிப்பவர் அல்ல.

ஆனால் பேசிப்பேசி எப்படியோ வாசிக்க ஆரம்பித்தார். இப்போது கார்கடல் வாசித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உலகமே மாறிவிட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். முகம் ஒளிபெற்றுவிட்டது. உற்சாகமாக அதைப்பற்றியே பேசுகிறார். அவர் உணர்ந்த அந்த வெறுமை இல்லை. வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய ஒரு பேச்சின்போது “நம்ம வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்னு கேட்டா பதில் இல்லை. ஆனா அர்த்தம்னு ஒண்ணு இருக்குன்னு தோணுது. அதான் வெண்முரசு சொல்றது” என்றார்.

அவர் வெண்முரசு பற்றி பேசுவதைப் பார்க்கையில் இலக்கியத்தில் இந்த அளவுக்கு வாழ்க்கைநுட்பங்களும் வரலாற்றுக்குறிப்புகளும் உள்ளனவா என்ற பிரமிப்புதான் ஏற்படுகிறது. அப்படியென்றால் நானெல்லாம் எதைத்தான் வாசித்தேன் என்ற சலிப்பு உருவாகிறது. மூத்த தலைமுறையினரும் வாசிக்கிறார்கள், இளைய தலைமுறையினரும் வாசிக்கிறார்கள், அந்நாவல் வெளிவந்தபோது சமகாலத் தலைமுறையினரில் ஒரு சாரார் மட்டும் ஏன் அதை உள்வாங்க முடியவில்லை?

ஒரு நாவல் ஒரு வாசகனின் வாழ்க்கையையே மாற்றியமைக்கிறது என்றால் அதுதான் கிளாஸிக் என புரிந்துகொள்கிறேன். என் அப்பாவுக்கு நான் அளித்த மிகப்பெரிய பரிசு அந்நாவல்கள்தான். இப்போது இலக்கியத்தின் சிறு வட்டத்தை விட்டு அது தன்னுடைய பெரிய அளவிலான வாசகர்களைக் கண்டடைந்துவிட்டது. அது இனிமேல் என்றென்றும் வாழும். அதன்முன் மிகச்சிறியவனாக உணர்கிறேன். இன்று அதை அறிஞர்கள் வாசிக்கிறார்கள். சாமானியர்களும் வாசிக்கிறார்கள். அதைப்பற்றி நான் உங்களுக்கு ‘ஆலோசனை’ சொல்லவந்ததை எண்ணி கூச்சப்படுகிறேன். அதைத்தான் உங்களிடம் சொல்லவந்தேன். நன்றி.

கே.

அன்புள்ள கே,

’சமகால’ இலக்கியவாசகர்களில் இரண்டுவகை உண்டு. பலர் தொடக்ககால வாசிப்புடன் நின்றுவிடுபவர்கள். தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் கூட தாங்கள் வாசித்த சிறந்த படைப்புகளில் சிலவற்றில் உறைந்துவிடுவார்கள். அதையே மீண்டும் மீண்டும் எதிர்பார்ப்பார்கள். மிகச்சிலரே மேலும் மேலுமென தேடிச்செல்பவர்கள், புதியவற்றுக்காக விடாய் கொண்டிருப்பவர்கள்.

எந்த இலக்கியச் சூழலிலும் அழகியல் சார்ந்த, கருத்தியல் சார்ந்த ஒரு பொதுப்புரிதல் உருவாகி நிலைகொண்டிருக்கும். பெரும்பாலான வாசகர்கள் அந்த பொதுப்புரிதலுக்கு உள்ளேயே வாழ்வார்கள். உண்மையில் அவர்கள் பாமரர்களாக இருந்து பல படிகள் மேலேறித்தான் அந்தப் பொதுப்புரிதலுக்குள் வந்து சேர்கிறார்கள். ஆகவே அதுவே உச்சமென எண்ணிக்கொள்வார்கள்.

அந்தப் பொதுப்புரிதல் நிலையானது அல்ல. ஒரு தலைமுறைக்குள் அது மாறிவிடுகிறது. உதாரணமாக, கு.அழகிரிசாமி காலகட்டத்தில் விழுமியங்களை முன்வைப்பது இலக்கியம் என நம்பப்பட்டது. ஜி.நாகராஜன் விழுமியங்களை உடைப்பதும் மறுப்பதும் இலக்கியம் என ஏற்கவைத்தார். இலக்கியம் நிலைகுலைவை அளிக்கவேண்டும், முரண்படவேண்டும், கலகம் செய்யவேண்டும் என்றெல்லாம் பொத்தாம்பொதுவாகச் சொல்லப்படுவன எல்லாமே அந்தந்த காலகட்டத்துப் பொதுப்புரிதல்கள்தான்.

சாமானிய எழுத்தாளன் தன் காலகட்டத்துப் பொதுப்புரிதலின் வட்டத்திற்குள் தானும் நின்று எழுதுகிறான். ஆகவே அவன் உடனடி ஏற்பு பெறுகிறான். நான் தன் நூல்களின் பின்குறிப்புகளிலும் முன்னுரைகளிலும் ‘வாழ்க்கையின் அபத்தத்தைச் சொல்லும்படைப்புகள் இவை’ ‘இப்படைப்பு வாசகனை கலைத்துவிளையாட அழைக்கிறது’ என்பதைப்போன்ற வரிகளை வாசிக்கையில் புன்னகைத்துக் கொள்வேன். சூழலிலுள்ள பொதுப்புரிதலை நோக்கி அவ்வரிகள் எழுதப்பட்டுள்ளன. ஒருவகை வணிகவிளம்பரங்கள்தான்.

நல்ல படைப்பு தன் காலகட்டத்தின் அழகியல், கருத்தியல் பொதுப்புரிதலை மீறிச்செல்லும். ஆகவே சமகாலப் பொதுவாசகனுக்கு அது அயலாக, பிடிபடாததாக, பிழையானதாக எல்லாம் தெரியும். என்னுடைய எல்லா படைப்புகளுக்கும் அந்த சமகாலத்து வாசிப்பின் எதிர்ப்பு இருந்துள்ளது. சுந்தர ராமசாமி காலகட்டத்தின் ‘கட்டுப்படுத்தப்பட்ட மொழி – கச்சித வடிவம் – பிரக்ஞைபூர்வமான வெளிப்பாடு’ என்னும் பொது ‘இலக்கணத்தை’ அறுதியான ஒன்றாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு விஷ்ணுபுரம் திகைப்பூட்டுவதாகவே இருந்தது. நாவலில் தத்துவம் எதற்கு, அது நாவலா புராணமா என்றெல்லாம் பேசப்பட்டது. இருபதாண்டுகளுக்குள் அதன் வாசகர்கள் வந்தமைந்தனர். அந்த வினாக்களும் வியப்புகளும் அப்படியே வழக்கொழிந்தன.

எந்த எழுத்தாளரும் சமகால இலக்கியவாசகர்களை ஒரு பொருட்டாக எண்ணலாகாது என்று நான் எப்போதும் சொல்லிவருவது அதனால்தான். சமகாலப் பொதுப்புரிதலில் நிலைகொள்வதனாலேயே அவர்களால் ஒரு புதிய படைப்பை உள்நுழைந்து அறிய முடிவதில்லை. அப்படைப்பை தங்களை நோக்கி இழுக்க, தங்கள் அளவுகோல்களைப் போட்டுப்பார்க்க முயல்கிறார்கள். அவர்கள்தான் படைப்பை வாசிக்கையிலேயே மானசீகமாக ’எடிட்’ செய்தபடி வாசிப்பவர்கள். ‘கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாம்’ என எந்த நல்ல படைப்பைப் பற்றியும் சொல்பவர்கள்.

புதிய இலக்கிய ஆக்கத்தின் நல்ல வாசகர்கள் மூன்று வகையினரே. ஒரு சாரார் தேர்ந்த வாசகர்கள், எப்போதும் புதியபடைப்புகளுக்காக தேடிக்கொண்டிருப்பவர்கள், புதிய படைப்பை நோக்கி தங்களை இயல்பாக முன்னகர்த்திக் கொண்டுசெல்லும் ஆற்றல்கொண்டவர்கள். இரண்டாம்சாரார்,  எந்த இலக்கியமுடிவுகளும் இல்லாமல் வாசிக்கமுற்படுபவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமே வாசிப்பதற்கான அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்கள். படைப்பு தன் ஆற்றலால் அவர்களுக்கு தன்னை அளிக்கும். மூன்றாம் வகையினர், உருவாகி வரும் அடுத்த தலைமுறை வாசகர்கள்.

இம்மூன்று தலைமுறையினருக்கும் வெண்முரசு தன்னை விரிவாக்கிக்கொண்டே இருப்பதையே இப்போது காண்கிறேன். அதன் அழகியல்நுட்பங்களும், பண்பாட்டுக்கூறுகளும் இன்றைய வாசகர்களால் மீண்டும் மீண்டும் கண்டடையப்படுகின்றன. அவர்களில் அது புதியதாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நவீன இலக்கியம் என்னும் சிறிய சூழலுக்குள் வெறுமே வடிவவேடிக்கைக்காகவோ அறிந்த கொள்கைகளை கண்டடைவதற்காகவோ வாசிக்கப்படும் எளிய நூலாக அது இன்று இல்லை. பல்லாயிரம் வாசகர்களின் வாழ்வின் பகுதியாக உள்ளது. இந்தியப்பண்பாடு அவர்களிடம் உரையாடும் வாசலாக உள்ளது. வாழ்வின் பொருளையும் பொருள்கடந்த முழுமையையும் உணர்த்தும் மெய்யியல்பயணமாகவும் உள்ளது. செவ்வியலின் வழி அதுவே

ஜெ.

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : [email protected] 

Phone 9080283887)

வெண்முரசு விவாதங்கள் இணையப்பக்கம்

தன்னிலிருந்து வெளியேறுதல்

முந்தைய கட்டுரைசு.சண்முகசுந்தரம்
அடுத்த கட்டுரைWhat is more to offer?