விஷ்ணுபுரம் விழா, நிறைவும் உறுதியும்

வணக்கம் ஜெ

திருவிழாவுக்குப் போனியா?’ என்று கேட்டால் உற்சாகத்துடம்ம்ம்ம்…’ என்று சொல்வோம், ‘திரும்பி வந்தியா?’ என்று கேட்டால் அதையே களைப்புடன் சொல்வோம் என்று என் பாட்டி ஒவ்வொரு விசேஷத்துக்கு ஊர் சென்று திரும்பும்போதும் சொல்வார். விஷ்ணுபுரம் விருது விழா மட்டும் அடுத்து வரும் ஆண்டு முழுக்க எப்போது கேட்டாலும் அதே உற்சாகத்தைக் கொண்டுவருவதை உணர்ந்திருக்கிறேன். பாட்டியிடம் சொல்ல முடியாத இடத்துக்கு அவர் சென்றுவிட்டார், ஆனால் பார்த்துக்கொண்டிருப்பார். இம்முறை விருந்தினராகச் சென்று வந்ததில் இன்னும் ஒருதுளி கூடுதல் உற்சாகத்துடன்ம்ம்ம்சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

கோவையில் இறங்கியது முதல் மீண்டும் ரயில் ஏறுவது வரை, ஒரு சின்ன அசௌகரியமும் இல்லாமல் பார்த்துக்கொண்ட விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு மிக்க நன்றி. அமர்வு குறித்த பதட்டம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்தப் பதட்டம் எங்குமே உபயோகப்படவில்லை! மனநிறைவையும், இன்னும் சொல்லப்போனால் மனமலர்ச்சியையும் கொடுத்த அமர்வு. அனைத்து அமர்வுகளும் எப்போதும் போல, சிறப்பாக, சுதந்திரமாக அமைந்திருந்தன.

சொல்முகம் குழுமம் பூபதி துரைசாமி விவேக்கை கௌரவிக்கிறார்.

விருது பெறும் எழுத்தாளருக்கான ஆவணப்படம் திரையிடப்பட்டபோது, திரைக்குப் பின்னிருந்து சடசடத்து வந்த ஒரு புறா அந்த வெண்திரையின் உச்சியில் படம் முடியும்வரை தொற்றியிருந்தது, திரையின் காட்சிகளுக்கும் சொற்களுக்கும் வேறொரு வசீகரத்தைக் கொடுத்தது. இரா.முருகன் அவர்கள் உடல்நிலை நலிவுற்று இருந்தபோதும், பெரும் உணர்ச்சித் ததும்பலுடன் இருந்தபோதும், ஏற்புரையில் மிக இயல்பாக செய்தித்தாள் வாசிப்பதைப் பற்றி, ‘ஒரே பேப்பர்தானே தெனமும்…’ என்று அவர் பாணியில் சொன்னபோது, அதுவரை அடைத்துக் கிடந்த தொண்டை விடுபட்டு உரக்கச் சிரித்தபடி கைதட்டினோம்.

விருதுச் சிற்பமும், மடலும், பணப்பரிசும் கொடுக்கப்பட்டபோதெல்லாம் அவர் உணர்ச்சிக் குவியலாகத் தொய்ந்தபோது, ஒவ்வொரு முறையும் அருகிலிருந்த எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இரா.முருகன் அவர்களின் கைகளைப் பற்றிக்கொண்டு, அந்தச் சூழலைச் சமன் செய்தார். அந்தப் பொறுப்பேற்புக்குத் தனி அழகு வந்துவிடுகிறது. விழாவின் அத்தனை மகிழ்ச்சியுடன், இந்த அழகையும் அடுத்த ஆண்டுக்குள் கொண்டு செல்கிறேன்

சுருதி டிவி கபிலனுக்கு மரியாதை

வீடு திரும்பியபிறகும் நலம் விசாரிக்கும் விஷ்ணுபுரம் நண்பர்களின் பொறுப்புக்கும், அத்தனை உழைப்புக்கும், அவ்வளவு அன்புக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். இதனைச் சாத்தியப்படுத்தும் உங்களுக்கு நன்றி ஜெ. இன்னொரு முறை அழுத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன்.. வாழ்தல் இனிது!

நன்றி

தென்றல்.

விஜய் சூரியன் நூலை பெற்றுக்கொள்கிறார்

 

அன்புள்ள ஜெ

பெரும் மனநிறைவுடன் விஷ்ணுபுரம் விருதுவிழாவிலிருந்து திரும்பி வந்தேன். நான் இதுவரை கலந்துகொண்ட இலக்கியவிழாக்களில் இதுவே தலைசிறந்த விழா. இதற்கு முன்பு ஜெய்ப்பூர் இலக்கிய விழா, மும்பை கேட்வே இலக்கிய விழா, பெங்களூர் இலக்கியவிழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். இலக்கியவிழாக்களிலெல்லாம் மேலோட்டமான பேச்சுக்களே இருக்கும். உணவு மிகமிக விலையுடன் இருக்கும். சுவையாகவும் இருக்காது. தங்குமிடம் நாமே ஏற்பாடு செய்யவேண்டும். ஆனாலும் படிப்பு, வேலையின் நிமித்தம் கலந்துகொள்வோம். பத்தில் ஒரு அரங்கில்தான் ஏதாவது உருப்படியாகப் பேசப்படும். 

விஷ்ணுபுரம் விழாவில் மயிலன் சின்னப்பன், சித்ரன், கீரனூர் ஜாகீர் ராஜா அரங்குகள் சிறப்பாக இருந்தன. ஆனால் உச்சம் என்பது தமிழ்ப்பிரபா அரங்குதான். அவருடைய தலித் அரசியலை எந்த வகையான செயற்கையான பாவனைகளும் இல்லாமல், எந்தவகையான கோஷங்களும் இல்லாமல் மிக இயல்பாகவும் தீவிரமாகவும் முன்வைத்தார். தமிழிலக்கியத்தின் விரிவும் அவருக்குத் தெரிந்திருந்தது. தன்னம்பிக்கையும் இருந்தது. அவரை பார்ப்பதே மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது.

விஷ்ணுபுரம் விழாவின் உபசரிப்பு ஏற்பாடுகளும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. உணவு மிகநன்று. ஆறுவேளை விருந்து என்றுதான் சொல்லவேண்டும். அரங்கு நிறைந்திருந்தது. கேள்விகேட்டவர்கள் அனைவருமே நூல்களையெல்லாம் படித்துவிட்டு வந்திருந்தார்கள். இதெல்லாம் இலக்கியவிழாக்களிலே காணக்கிடைக்காத விஷயங்கள். ஒருவர் வாழைப்பழம் கொண்டுவந்து அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தார். அத்தகைய அர்ப்பணிப்புள்ள வாசகர்களை வேறெங்கும் நான் கண்டதில்லை. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடத்தப்படும் விழாக்களை விட இங்கே இருக்கும் உண்மை பெரியது.

அத்துடன் இரவு நிகழ்ந்த இரண்டு நாடகங்களுமே நெஞ்சை உலுக்குவனவாக இருந்தன. அழுத்தமான உள்ளடக்கம் கொண்ட நாடகங்கள். அவற்றை தடுமாற்றங்கள் ஏதுமில்லாமல் உணர்ச்சிகரமாக நடித்தார்கள். விழா முடிந்தபின் விஷ்ணுபுரம் அமைப்பு முழுக்க மேடையில் கூடி எடுத்துக்கொண்ட போட்டோ மிகுந்த நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் திரும்பினேன். வாசிக்கவேண்டும் ஏதாவது செய்யவேண்டும் என்னும் உறுதி மனதில் இருந்தது.

எம்.கல்பனா 

அமைப்பாளர் கே.வி.அரங்கசாமி

அன்புள்ள ஜெ

விழாவில் உங்களைச் சந்தித்ததும் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் மிகுந்த நிறைவான விஷயம். இந்த ஆண்டில் நான் அடைந்த நிறைவு அதுதான். இந்த ஆண்டு முழுக்க உங்கள் காணொளிகளை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் அளிக்கும் வெளிச்சங்கள் வாழ்க்கை பற்றிய தேவையற்ற சஞ்சலங்களை இல்லாமலாக்கிவிடுகின்றன. விஷ்ணுபுரம் விழாவில் வந்து திரண்ட கூட்டத்தில் ஏராளமானவர்கள் என்னைப்போலவே உணர்ந்தனர் என்பதைக் கண்டேன். மிகச்சிறந்த ஓர் அனுபவம். நன்றி.

எம். பிரபாவதி

 

முந்தைய கட்டுரைWestern Philosophy class experience – Literature and Western Philosophy as foundations for my scientific pursuit
அடுத்த கட்டுரைமின்சாரத் தந்தி விடு தூது