படங்கள் மோகன் தனிஷ்ம், ஆனந்த்குமார்
ஆசிரியருக்கு வணக்கம்.
மீண்டும் ஒரு விருது விழா மிக சிறப்பாக நடத்தி முடித்தோம்.இது பதினைந்தாவது வருடம்.ஆண்டுதோறும் விழா பெரிதாகி கொண்டே போகிறது.ஐம்பதாயிரம் ரூபாய் விருது தொகையில் தொடங்கி இப்போது 5 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
முதல் வருடம் திரைப்பட இயக்குனர் மணி ரத்னம் தன் செலவில் வந்து சென்றதாக குறிப்பிட்டீர்கள்.ஒரே ஒரு அறையில் நண்பர்களுடன் தங்கி தயிர் சாதம் வாங்கி உண்டதை பழைய பதிவில் பார்த்தேன். கன்னட மூத்த எழுத்தாளர் ஷான் பேக் தன் உரையில் எதையும் துவங்கி விடுவார்கள். ஆரம்ப கட்ட ஆர்வம் மூன்றாண்டு வரை இருக்கும் பின்னர் செயிலிழந்து போகும்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். மூத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பதை கடந்து 15 ஆண்டுகளாக செய்து வருவது ஒரு சாதனை என்றார்.சமீபத்திய Stories of the true(அறம் சிறுகதை) ஆங்கிலத்தில் வாசித்தபின் ஜெயமோகனை வாசிக்காமல் உலக இலக்கியம் முழுமை பெறாது என்பதை குறிப்பிட்டார். உங்கள் செயலூக்கத்தை மெச்சினார்.
உங்கள் உரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மேடையில் தமிழ் விக்கி அறிவிப்பு வெளியிட்டு அது எப்படி செயல்படுகிறது என்பதை சொல்லி விட்டு புத்திய அறிவிப்பை சொன்னீர்கள்.2026 இல் அமெரிக்காவின் நியூயார்க் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு .எப்போதும் பெருங்கனவில் , பெரிய செயல்களை சிந்தித்து அதை செய்து முடிப்பவர் நீங்கள்.அதற்கான நண்பர் கூட்டம் இன்று உங்களுடன் உள்ளது.எதையும் சாதிப்பவர் நீங்கள்.
டிசம்பர் மாதம் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள நான் காத்திருப்பது ஒரு வருடம். ஒவ்வொரு ஆண்டும் விழா முடிந்து ஒரு மாதத்திற்கு பின் என் காத்திருப்பு துவங்கும் .இவ்வாண்டு என்னால் வர இயலாத சூழல் முதல் நாள் விழாவுக்கு வந்திருந்த நண்பர்கள் என்னை போனில் அழைத்து கொண்டே இருந்தார்கள்.யாருக்கும் பதில் சொல்ல வில்லை. ஏன் வரவில்லை என கேட்டால் பொட்டி கரைந்து விடுவேன் என தெரியும்.
விழா நாளன்று மட்டும் கலந்து கொள்வது என உறுதியாக முடிவெடுத்து. இரவில் ரயில் ஏறி ஞாயிறு காலை வந்து சேர்ந்தேன்.விழா முடிந்து குழு புகைப்படம் எடுத்தபின் விரைந்து பஸ் ஏறி நாகர்கோவில் வந்து சேர்ந்தேன்.இந்த விழாவில் உலகெங்கிலுமிருந்து வாசகர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.ஸ்வீடன் அன்பரசி, கவிஞர் லண்டன் ராஜேஷ், கத்தார் மூர்த்தி…. நீளும் பட்டியல் அது.
இரு தினங்கள் 500 பேருக்கு தங்க இடமும் 6 வேளை உணவும் வழங்கியது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். மிகச்செலவேறிய இந்த விழாவிற்கு பொருள் தான் பெரும் ஆதாரம் .அதை 500₹ முதல் லட்சங்கள் வரை உலகம் முழுவதும் இருந்து அனுப்பிய உங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் சார்பாகவும்,விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விழா அமைப்பாளர் சார்பாக நன்றி சொல்கிறேன்.
ஷாகுல் ஹமீது,
(கப்பல் காரன்)