இரா.முருகன், சுஜாதா- ஒரு விவாதம்

விழா படங்கள். மோகன் தனிஷ்க்

சுஜாதா – தமிழ் விக்கி

இரா.முருகன். தமிழ் விக்கி

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு முதன் முறையாகவிஷ்ணுபுரம்விருது விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் எழுதுவது. ஒரு இலக்கிய விழாவை இவ்வளவு கட்டுக் கோப்புடன் ஒருங்கிணைத்து, வருடா வருடம் நடத்தி இலக்கியவாதி ஒருவருக்கு விருது வழங்குவது தமிழ் சூழலில் ஒரு இமாலய சாதனை என்று சொல்லலாம். இம்முறை விருது பெற்ற இரா. முருகன் அவர்களை அவர் எழுதத் துவங்கிய காலத்தில் இருந்துஅரசூர் வம்சம்நவீனம் எழுதிய வரை நான் வாசித்து வருகிறேன். அவர் எழுத்து நடை சுஜாதாவை அடியொற்றி  இருப்பதை ஆவணப் படத்தில் அவரே ஒப்புக் கொண்டு உள்ளார்.

ஆனால் நீங்கள் உட்பட பலரும் சுஜாதாவின் எழுத்தை அங்கீகரிக்க ஏனோ தயக்கம் காட்டுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள்விஷ்ணுபுரம்எழுதிய நேரத்தில் மெய்ப்பு பார்க்க அவரை அணுகிய பொழுது மறுத்து விட்டதை அவரே பதிவும் செய்து உள்ளார். நிச்சயமாக அதன் பொருட்டு நீங்கள் சுஜாதாவை மதிப்பீடு செய்யவில்லை என்று நம்புகிறேன்.

சுஜாதாவும் தன்னால் பேரிலக்கியம் படைக்க இயலாது என்று ஒப்புக் கொண்டவர்தான். இருப்பினும் அவருக்கு அதில் மனவருத்தம் இருந்தது. இதன் பொருட்டுதான் இயன்ற வரை தமிழின் இலக்கியவாதிகள், கவிஞர்கள் பலருக்கு வெளிச்சம் பாய்ச்சியவர். அதற்கான முதலீடு அவரது பிரபல்யம் மட்டுமே. நீங்களும் அதை விஷ்ணுபுரம் விருது விழாவின் மூலம் மிக விரிவாக கடந்த பதினைந்து ஆண்டுகளாக செய்து வருவது அறிந்து எனக்கு மகிழ்ச்சியே. நேற்று நீங்கள் பேசிய பொழுது உங்கள் எதிர்கால திட்டமாக அமெரிக்க தேசத்தில் பல எழுத்தாளர்களை அழைத்துச் சென்று விழா நடத்த இருப்பதாக சொன்னது நடைபெற வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன்

R. பார்த்திபன்

அன்புள்ள பார்த்திபன் அவர்களுக்கு,

பொதுவாக இலக்கியவிவாதங்கள் செய்வதற்கு ஒரு நிபந்தனை, ஒரு மரபு உண்டு. அது என்ன பேசப்பட்டுள்ளது, எழுதப்பட்டுள்ளது என்பதை நேரிடையாக முழுமையாக வாசித்து அறிந்தபின் பேசவேண்டும் என்பதுதான். ஆனால் அது இன்று கிட்டத்தட்ட இல்லாமலாகிவிட்டது. பலர் முகநூல் போன்றவற்றில் எவரேனும் எதையேனும் எழுதுவதை வாசித்துவிட்டு விவாதம் செய்கிறார்கள். கட்டுரைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் வாசித்துவிட்டுப் பேசுகிறார்கள். மேலோட்டமான பொதுவான மனப்பதிவுகளை ஒட்டி பேசுகிறார்கள். குறைந்தபட்சம் கூகிள் செய்துகூட பார்ப்பதில்லை.

ஆகவே மிகப்பெரும்பாலும் எளிமையான பற்றுகள் மட்டுமே வெளிப்படுகின்றன. அவை பலசமயம் சாதிமதம் சார்ந்தவை. அந்தப் பற்றுகள் மிகையுணர்ச்சிகளாகவும் வசைகளாகவும் பதிவுசெய்யப்படுகின்றன. அது இலக்கியவிவாதம் அல்ல. வெறும் முகநூல் காழ்ப்பு மட்டுமே. முகநூலின் மனநோய்ச்சூழலில்  ஈடுபடுவது ஒரு மாபெரும் வெட்டிவேலை. ஆகவேதான் பெரும்பாலான விவாதங்களை தவிர்க்கிறேன்.

உங்கள் கடிதம் விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்த ஒருவரால் எழுதப்பட்டது என்பதனால் சுருக்கமான தொடக்கப் புரிதலை மட்டும் அளிக்கிறேன். சுஜாதா எழுபது எண்பதுகளில் வணிக இதழ்களில் எழுதிய நட்சத்திரம். அன்றைய நவீன இலக்கியச் சூழல் என்பது வணிக எழுத்துக்கு நேர் எதிரானது மட்டுமல்ல முற்றிலும் எதிர்ப்பு மனநிலை கொண்டதும்கூட. விகடனில் எழுதியவர் என்பதனால் ஜெயகாந்தனையே அவர்கள் முழுமையாக நிராகரித்தார்கள். சுஜாதா அவர்களின் பார்வையிலேயே இல்லை. சுந்தர ராமசாமி சுஜாதா பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள் (வணிகக்கேளிக்கை எழுத்தின் நாயகன் என்று அவரை மதிப்பிடுகிறார் சுரா)

எண்பதுகளின் இறுதியில் எழுதவந்த நான் ஜெயகாந்தனை ஓர் இலக்கியச் சாதனையாளராகவும், சுஜாதாவை தவிர்க்கமுடியாத எழுத்தாளராகவும் முன்வைத்தேன். அது ஒரு தொடக்கம். அதன்பொருட்டு நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறேன். இலக்கியவிமர்சகனாக சுஜாதாவின் இலக்கிய இடம் பற்றி பேசிய முதற்குரல் என்னுடையது. என் முதல் சிறுகதைத் தொகுதியாகிய திசைகளின் நடுவே முன்னுரையிலேயே சுஜாதாவை என் முன்னோடிகளில் ஒருவராக குறிப்பிட்டிருக்கிறேன். அதுவும் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது.

ஆனால் நவீன இலக்கியவிமர்சனம் என்பது எவரையும் புகழ்ந்து ஏத்துவது அல்ல. குறைநிறைகளுடன் மதிப்பிடுவது. மிகச்சரியாக ஒருவரின் பங்களிப்பை மதிப்பிட்டு வரலாற்றில் பொருத்திக்காட்டுவது. நான் என் முன்னோடிகளான சுந்தர ராமசாமி முதலிய அனைவரையுமே அப்படித்தான் மதிப்பிட்டிருக்கிறேன். சுந்தர ராமசாமி அவருடைய முன்னோடியாகிய க.நா.சுவையும் புதுமைப்பித்தனையும்கூட அவ்வாறுதான் மதிப்பிட்டிருக்கிறார்.  அதுவே இலக்கிய மரபு. இன்றைய முகநூல்சழக்கர்கள் அதையெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை – ஆனால் உங்களைப்போன்ற இலக்கிய வாசகர்கள் அறிந்தாகவேண்டும்.

அந்த வகையிலேயே நான் சுஜாதாவை விரிவாக மதிப்பிட்டிருக்கிறேன். அவர் வாழ்ந்த காலம் வரை அவருக்கு மிக அணுக்கமானவனாக, அடிக்கடிச் சந்திப்பவனாகவே இருந்தேன். என் முதல் நாவல் முதல் நான் எழுதிய எல்லா படைப்புகளையும் பாராட்டி பரிந்துரைத்துக்கொண்டேதான் அவரும் இருந்தார். எனக்கு மிக அதிகமான அறிமுகத்தை உருவாக்கி அளித்தவர் அவரே. அவருடன் அடுத்த தலைமுறை இளைஞனுக்குரிய அணுக்கமும் எனக்கிருந்தது.

(உயிர்மை அரங்கில் ஒரு வாசகர் ஏராளமான நூல்களை அவர் கையெழுத்திடுவதற்காக அவர் தலைமேல் எடுத்துவந்தார். நான் ‘பாத்து, தலைமேல் விழுந்தா அப்டியே ஆசாரியன் அடி சேந்துரப்போறார்’ என முணுமுணுத்துவிட்டு வந்தேன். பாம்புச்செவி அவருக்கு. அடுத்தவாரம் அதைக் குறிப்பிட்டு நையாண்டியாக எழுதியிருந்தார்.அதுதான் கடைசிச் சந்திப்பு என நினைக்கிறேன்)

ஆனால் அதற்கும் அவர் மீதான கறாரான விமர்சனத்தை நான் முன்வைப்பதற்கும் சம்பந்தமில்லை. அவருக்கும் அது தெரியும். அவருடைய நடையை அதன் குறைநிறைகளுடன் மதிப்பிட்டேன். தமிழின் தலைசிறந்த narrator -‘சித்தரிப்பாளர்’ அவரே என்று எழுதினேன். ஆனால் அவர் ஒரு ஸ்டைலிஸ்ட்- அத்தகையோர் தங்கள் நடைக்குள் சிக்கிக்கொண்டவர்கள். எல்லா எழுத்தும் ஒரே நடை, எல்லா கதைமாந்தரும் ஒரே பேச்சுமுறை கொண்டிருக்கும். அவருடைய ஶ்ரீரங்கம் கதைகள் உட்பட பல சிறுகதைகள் தமிழின் சிறந்த நவீனச் சிறுகதைகளின் பட்டியலில் வருபவை. ஆனால் அவருடைய நாடகங்களே அவருடைய இலக்கியச் சாதனைகள். அவை டென்னஸி வில்லியம்ஸ், யூஜின் ஓநீல் வகையான யதார்த்தபாணி நாடக இலக்கியங்கள். விரிவாகப் பலமுறை இவற்றை எழுதியுள்ளேன்.

இந்த மதிப்பீட்டை அன்றைய சிற்றிதழ்ச்சூழலில் முன்வைத்து வாதிட்டு நிறுவினேன். இத்தகைய மதிப்பீடு எதுவும் அவருக்கு அவர் அதிகம் வாசிக்கப்பட்ட வணிகவாசிப்புச் சூழலில் அமைந்ததும் இல்லை. அவருக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு என்னுடையதே என அவர் சொல்லியுமிருக்கிறார். இன்றும் தமிழ் நவீன இலக்கியச் சூழலில் சுஜாதா பற்றிய என் கருத்தை முழுமையாக நிராகரிப்போர் பலர் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன்.

நவீன இலக்கியம் சார்ந்த விமர்சன நோக்கு இப்படித்தான் இருக்கமுடியும். அதையே நான் முன்வைக்கிறேன். சுஜாதாவின் எழுத்தில் மிகப்பெரும்பகுதி எளிமையான வணிகக்கேளிக்கை ஆக்கங்களே. ( அவற்றில் கணிசமானவை மேற்கத்திய வணிக எழுத்துக்களின் தழுவல்களும்கூட). வணிகக்கேளிக்கை எழுத்துக்குரிய மேலோட்டமான நகைச்சுவை, பாலியல் மீறல், அரட்டைத்தன்மை என எல்லாவற்றையும் அவர் திட்டமிட்டுக் கையாண்டார். அவற்றை வாசித்துவிட்டு நாக்கைச் சுழற்றி நொட்டை விட்டு ‘சுஜாதா இலக்கியமேதை, வாத்தியார்’ என்றெல்லாம் புளகாங்கிதம் அடையும் பெருந்திரள் உண்டு. அந்தக் கும்பலுக்கு நேர் எதிரான ஓர் இயக்கமாகவே நவீன இலக்கியம் அன்றுமின்றும் உள்ளது. அவர்கள் மீதான முழுநிராகரிப்பு என்னிடமும் உண்டு.

சுஜாதாவின் வணிக எழுத்தை நிராகரிக்காமல் அவருடைய இலக்கியப் பங்களிப்பை நவீன இலக்கிய வாசகன் மதிப்பிட மாட்டான். அவருடைய வணிக எழுத்தை நிராகரிக்கத் தெரியாத வாசகனுக்கு இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது. உண்மையில் அவனால் சுஜாதாவின் நல்ல படைப்புகளையும் அடையாளம் காணத்தெரியாது. அவனுடைய ‘செக்கேது சிவலிங்கமேது’ என்று தெரியாத பார்வை சுஜாதாவையே அவமதிப்பது. சுஜாதாவுக்கும் அத்தகைய வாசகர்கள் மேல் எத்தகைய மதிப்பும் இருந்ததில்லை. அவர்களைச் சந்திக்கவே அவர் விரும்பியதில்லை. ஆனால் அவர் மேல் விமர்சனம் கலந்த பார்வை கொண்ட என்னைப்போன்ற அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுடன் மிக அணுக்கமாக இருந்தார்.

சுஜாதாவின் எழுத்தில் மட்டுமல்ல எதிலும் எது வணிக எழுத்து, எது இலக்கியம் என்று பிரித்துக் காட்டுவதுதான் இலக்கிய விமர்சகனின் பணி. அந்தப் பிரிவினையை அறிவதே இலக்கியவாசகனாக ஆவதன் முதற்படி. அத்தகைய வாசகர்களை உருவாக்கும்பொருட்டே எல்லா விமர்சனங்களும் நிகழ்கின்றன.  அந்த விமர்சனம் சுஜாதா மீதும் பிற வணிக எழுத்துக்கள் மீதும் என்றும் இருந்துகொண்டேதான் இருக்கும். இலக்கிய அறியாமை கொண்டு வணிக எழுத்திலேயே தேங்கிப்போன   வாசகர்களின் சீற்றமோ, கொக்கரிப்போ எவ்வகையிலும் இலக்கியத்திற்குப் பொருட்டு அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைசிவா கிருஷ்ணமூர்த்தி
அடுத்த கட்டுரைYoga for Insomnia