நவீனத் தமிழிலக்கியத்தை உலகுக்குக் கொண்டுசெல்லுதல்

என் நூல்கள் அமெரிக்கவெளியீடாக…

அன்புள்ள ஜெ

மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் அவர்கள் தமிழிலக்கியத்தை உலக அரங்குக்குக் கொண்டுசெல்வதில் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் முக்கியமான பங்குண்டு, அதை மறக்கலாகாது என்று ஒரு பதிவுபோட்டிருக்கிறார். உங்கள் கவனத்திற்கு…

சபரிகுமார்

அன்புள்ள சபரிகுமார்,

திரு கல்யாணராமன் சொல்வது உண்மைநான் இன்னும் கொஞ்சம் கூர்மையாகவே அதைச் சொல்வேன். ’மொழிபெயர்ப்பாளர்களுக்கும்’ அல்ல ‘மொழிபெயர்ப்பாளர்களுக்கு மட்டுமே’ தமிழிலக்கியத்தை உலக அரங்குக்குக் கொண்டுசெல்வதில் முதன்மையான பங்களிப்பு உள்ளது. அடுத்தபடியாக இலக்கிய முகவர்களுக்கு. இலக்கியவாதிகள் இதில் செய்யத்தக்கப் பங்களிப்பு ஏதுமில்லை என்பதே யதார்த்தம்.

சரியான இலக்கிய ஆசிரியரைத் தெரிவுசெய்வது, நல்ல மொழிபெயர்ப்பை உருவாக்குவது, சரியானபடி அம்மொழியாக்கத்தைக் கொண்டுசெல்வது, தொடக்ககட்ட புறக்கணிப்புகளால் சலிப்படையாமலிருப்பது ஆகியவை இன்று எந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அவசியமானவை. அத்தகையோரால்தான் நவீன தமிழிலக்கியம் தன் எல்லைகளைக் கடந்துசெல்லமுடியும்.

நான் பலமுறை முன்னரும் எழுதியதுண்டு, தமிழகத்தில் முந்தைய தலைமுறையில் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் குறைவு. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தவர்கள் இங்கே தமிழ் தெரியாதவர்களாகவும், நவீனத்தமிழிலக்கியம் பற்றிய அறிமுகமே இல்லாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தாங்களே எதையாவது எழுதி பிரசுரித்துக்கொண்டிருந்தனர். அவற்றுக்கு எந்த வாசகமதிப்பும் உருவாகவுமில்லை.

அந்த தலைமுறையில் முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ்.ராமஸ்வாமி. ஆனால் அவருடைய மொழியாக்கங்கள் கல்வித்துறை எல்லையைக் கடக்கவில்லை. வசந்தசூர்யா, ஜானகி வெங்கட்ராமன் என பலர் மொழியாக்கங்களைச் செய்துவந்தாலும் கல்யாணராமன் தன் மொழியாக்கங்கள் வழியாக ஒரு பாதையை தொடங்கினார் என்று சொல்லலாம்.

கல்யாணராமன் மொழியாக்கத்தில் வெளிவந்த அசோகமித்திரனின் நூல்கள் பற்றி பால் ஸகரியா, ஜெர்ரி பிண்டோ, அர்விந்த் அடிகா ஆகியோர் எழுதிய குறிப்புகள் வழியாகவே நவீனத் தமிழிலக்கியத்தின் புதுமை, செறிவு, ஆழம் ஆகியவை இந்தியச்சூழலில் அறிமுகமாயின. அதுவே இந்திய அளவில் நம் மீது கவனம் விழுவதற்கான முகாந்திரமாகியது.

அதுவரை நம்மைப் பற்றிய இளக்காரமான பார்வையே இந்தியச்சூழலில் இருந்தது. காரணம் இங்கிருந்து இந்தியச்சூழலில் சென்று நின்றவர்கள் எளிய வணிக எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும்தான். அவர்கள் சர்வதேச இலக்கியவிழாக்களின் மேடைகளில் ஒடுங்கி அமர்ந்திருப்பதை, கைகூப்பி தவழ்வதை, அல்லது செயற்கையாக பாவனை செய்வதைக் கண்டு நான் கூசியிருக்கிறேன்.

(சக்கரியா அல்லது ஜெர்ரிபிண்டோ எழுதியவற்றை எழுத நமக்கு ஆங்கிலமொழியில் எழுதும் இலக்கியவிமர்சகர்கள் இல்லை என்பதும் ஓர் உண்மை. அத்தகைய ஓர் அணி உருவாகும்போதுதான் நம் இலக்கியம் ஏற்பு பெறும்.)

தொடர்ந்து அனிருத்தன் வாசுதேவன், நந்தினி கிருஷ்ணன் போன்ற இளையதலைமுறை மொழிபெயர்ப்பாளர்கள் உருவானார்கள். அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது.

இன்று நமக்கு நிறைய இளையதலைமுறை மொழிபெயர்ப்பாளர்கள் தேவை. அத்தகைய புதிய மொழிபெயர்ப்பாளர்களின் ஒரு பெரிய அணியையே நாங்கள் கண்டடைந்து முன்வைத்துள்ளோம். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தலைமுறையில் இருந்தும். அவர்களின் படைப்புகள் சர்வதேச இதழ்களில் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. சர்வதேசப்பதிப்பகங்களால் தொடர்ச்சியாக ஏற்கப்படுகின்றன. தமிழில் முன்னர் நிகழாதது இது.

ஓர் எழுத்து சர்வதேச அளவில் சென்றுசேர்வதில் உள்ள சிக்கல்கள் பல. மேலைநாட்டுப் பதிப்பகங்களில் நிராகரிப்பு விகிதம் மிகமிக அதிகம். ஆகவே தரமான படைப்பு என்றால் வெளியீடு அமைந்துவிடும் என்பதில் எந்த உறுதிப்பாடும் இல்லை. அதில் ஒரு தற்செயல் உள்ளது. எவரோ ஒருவருக்கு நம் எழுத்தின்மேல் ஈடுபாடு வரவேண்டும்.

என் வரையில் இரண்டு அமெரிக்கப் பதிப்பக ’எடிட்டர்’களின் கவனம் பெற்றதுதான் அந்த தற்செயல். தமிழென்றால் என்னவென்றே அறியாத அவர்களில் ஒருவ என்னை ‘இன்று எழுதும் உலக இலக்கிய மேதைகளில் ஒருவர்’ என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த மதிப்பே முன்னெடுக்கும் விசை – ஆனால் அவ்வண்ணம் கவனம் பெறுவது முழுக்க முழுக்க தற்செயல்தான். ஐரோப்பிய அமெரிக்கப் பதிப்புக்களம் அவ்வளவு பிரம்மாண்டமானது.

இரண்டாவது சிக்கல் இன்னும் பெரியது. நம் படைப்புகள் அங்கே சென்று சேர்ந்தால் மட்டும் போதாது – அவை அங்கே வாசிக்கப்படவேண்டும். ஓர் இலக்கியப்படைப்பை வாசிப்பதற்கு அந்த படைப்பு உருவான கலாச்சாரச்சூழல் அறிமுகமாகியிருக்க வேண்டும். இல்லையேல் அப்படைப்புக்குள் நுழைவதும் அதன் நுட்பங்களை அறிவதும் வாசகனால் இயலாது.

என் படைப்புகள் இரண்டுமுறை அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பு அமைப்பு (ALTA) விருதுக்கு இறுதிப்பட்டியலுக்குச் சென்றன. சர்வதேச அளவில் பல ஆயிரம் நூல்களில் இருந்து அவை இறுதி ஆறுக்குள் சென்றன. ஆனால் தெரிவு செய்யப்படவில்லை. எவை தெரிவுசெய்யப்பட்டன என்று பார்த்தோம். வியட்நாம், ஸ்பானிஷ் படைப்புகள். ஸ்பானிஷ் பண்பாட்டுச்சூழல் அமெரிக்காவின் பண்பாடேதான். வியட்நாம் போரிலிருந்தே அமெரிக்கர்களுக்கு அப்பண்பாடு நன்கு அறிமுகமானது. ஆனால் தமிழ் என்னும் மொழி இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. நம் பண்பாடே அறிமுகமில்லை. அந்த தடை சாதாரணம் அல்ல.

அதைக் கடப்பதற்கு அவசியமானது நம் இலக்கியம், நம் பண்பாட்டைப்பற்றி ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக எழுதும் இலக்கிய எழுத்தாளர்கள். நான் சொல்வது அசட்டுப்பெருமிதங்களை எழுதுவதையோ, எளிய இனவாத மொழிவாத மதவாத அரசியல்படைப்புகளை முன்வைப்பதையோ, அரசியல்சரிகளை பேசுவதையோ அல்ல. மெய்யான நுண்ணுணர்வுடன், அங்குள்ள இலக்கியவாசகர் மதிக்கும்படி எழுதுவதை. இங்குள்ள நவீன இலக்கியத்தை அறிந்தவர்களே அதைச்செய்யமுடியும். அங்கே பிறந்து வளர்ந்தவர்கள் இன்னும் தீவிரமாகச் செய்யமுடியும்.

அத்துடன் இங்கிருந்து ஏராளமான படைப்புகள் அங்கே வெளியாகவேண்டும். என்  Stories Of The True மற்றும் THE ABYSS  ஆகியவை அங்கே வெளியாகின்றன. அவை தன்னந்தனிப் படைப்பாக நின்று ஓர் அமெரிக்க வாசகனுக்கு பொருள்படவேண்டும். ஆனால் கொரியாவிலிருந்து வரும் ஒரு படைப்புக்கு அதற்கு முன் வெளியான ஐநூறு கொரியப் படைப்புகள் அமெரிக்க வாசகர்தளத்தில் உருவாக்கிய ஒரு பண்பாட்டு வெளி கிடைக்கிறது. அது நுட்பமாக வாசிக்கப்படும். இதுவே வேறுபாடு.

ஆகவே நம் இலக்கியத்தைப்பற்றி, பண்பாட்டைப்பற்றி நாம் நுட்பாமாகவும் ஆழமாகவும் பேசவேண்டியுள்ளது. நம் படைப்புகள் ஏராளமாக வெளியாக வேண்டியுள்ளது. அதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளையே முன்னெடுக்கிறோம்.

அத்துடன் அறுதியான ஒன்று உண்டு. இந்திய அளவில் வெளியாகும் ஒரு தமிழிலக்கிய மொழியாக்கத்தை இந்தியா முழுக்க பரவி வாழும் ஆங்கிலம் வழி வாசிக்கும் தமிழர்கள் முதன்மையாக வாங்கவேண்டும். அதேபோல ஒரு நவீனத் தமிழிலக்கிய மொழியாக்கத்தின் சர்வதேசப் பதிப்பை அமெரிக்காவில் வாழும் ஆங்கிலம் வழி வாசிக்கும் தமிழர்கள் ஏராளமாக வாங்கவேண்டும். அந்த விற்பனையே அடிப்படைக் கட்டுமானம். அது பதிப்பாளர்களுக்கு ஓர் உறுதிப்பாட்டை வழங்குகிறது. அவர்கள் மேலும் தமிழ் மொழியாக்கங்களை வெளியிடுவார்கள்.

மலையாள, வங்க மொழிகளில் இருந்து வெளிவரும் ஆங்கிலமொழியாக்கங்கள் முதன்மையாக மலையாளிகளாலும் வங்காளிகளாலும் கணிசமான எண்ணிக்கையில் வாங்கப்படுகின்றன. ஆகவேதான் அவை தொடர்ச்சியாக வெளியாகின்றன. அமெரிக்கச் சூழலில் கொரியா, துருக்கி, வியட்நாம் , ஜப்பான் போன்ற பல மொழிகளில் இருந்து வரும் நூல்களின் முதன்மை வாசகர்கள் அங்கே வாழும் அந்த புலம்பெயர் மக்களும் அங்கே பிறந்து வளர்ந்த அம்மொழி மக்களும்தான்.

ஆனால் இன்றுவரை மொழியாக்கம் செய்யப்பட்ட தமிழ்ப் படைப்புகளைப் பொறுத்தவரை இந்தியச்சூழலில் அது நிகழவில்லை. இங்கிருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற எந்தப் படைப்புகள் அடுத்தடுத்த பதிப்புகள் வெளியாகியுள்ளன, இப்போதும் கிடைக்கின்றன என்று மட்டும் பாருங்கள் நிலைமை புரியும். நாம் நம் நூல்களை வாங்கி நம் அடுத்த தலைமுறைக்கு அளித்தாகவேண்டும் – அது ஒரு மாபெரும் பண்பாட்டுச் செயல்பாடு. மெய்யாகவே சற்றேனும் தமிழ்ப்பற்றும் பண்பாட்டுணர்வும் இருந்தால் செய்யவேண்டியது அது மட்டுமே. முகநூல் சழக்கும், ஒருவரை ஒருவர் வசைபாடி மகிழ்வதும் பண்பாட்டுப்பற்று அல்ல.

அத்தகைய ஒரு வாசிப்பை அமெரிக்கச் சூழலில் உருவாக்கவேண்டும் என்பதே விஷ்ணுபுரம் அமைப்பின் கனவாக உள்ளது. தமிழ்மக்களின் பொதுவான உளநிலையை அப்படி எளிதாக மாற்றமுடியாது என அறிவோம். ஆனாலும் சில வழித்திறப்புகளை உருவாக்கியுள்ளோம் – அது மொத்த தமிழிலக்கியத்துக்கும் பயனுள்ளதாக அமையும் ( அமெரிக்காவில் வெளியாகும் Stories Of The True நூலுக்கு இப்போதே முன்பதிவுசெய்யலாம். மேக்மில்லன் பதிப்பக இணைப்பு )

இலக்கியத்தை ‘எடுத்துச் செல்வதில்’ இலக்கியவாதி செய்யத்தக்கது ஒன்றே. தன் படைப்புகளுக்குக் கிடைக்கும் கவனத்தை மொத்தத் தமிழிலக்கியத்திற்கும் கொண்டுவர முயலவேண்டும். அமையும் மேடைகளில் தன்னையும் தன் படைப்பையும் மட்டும் முன்வைக்காமல் நவீனத்தமிழிலக்கியத்தை முன்வைக்கவேண்டும்.

அத்துடன் ஒன்று உண்டு. இந்தியச் சூழலிலும், வெளிநாட்டுச்சூழலிலும் தமிழிலக்கியம் என்பது ஒருவகையான பாமரத்தனமான களம் என்னும் உளப்பதிவு உள்ளது. இங்கிருந்து வரும் நல்லபடைப்புகள்கூட ‘நேர்மையான பதிவுகள்’ என்ற அளவிலேயே அவர்களால் மதிப்பிடப்படுகின்றன.உண்மையில் நவீனத் தமிழிலக்கியத்தின் அறிவுக்களம், குறிப்பாக நம் அழகியல்நோக்கு இந்தியச்சூழலில் எந்த மொழியிலும் இல்லாத தீவிரம் கொண்ட ஒன்று. இதை நான் இந்திய இலக்கியவிழாக்களில் திரும்பத் திரும்பக் காண்கிறேன்.

ஆகவே நாம் இலக்கியமேடைகளில் அறிவார்ந்த நிமிர்வுடன் தோன்ற வேண்டியிருக்கிறது. நேரடியாக அரங்கினருடன் பேசவேண்டியுள்ளது – ஆம், ஆங்கிலத்தில்தான் பேசியாகவேண்டும். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் போலிப்பணிவு நம் மொழிச்சூழலுக்கு இழிவுசேர்ப்பது என உணரவேண்டும். எளிய அரசியல்சரிகளை ஒருபோதும் பேசலாகாது, கோட்பாட்டுத்தெளிவுடன் அழகியல் பார்வையை முன்வைக்கவேண்டும். அது மட்டுமே இன்றைய எழுத்தாளன் செய்யவேண்டியது.

அதற்கும் அப்பால் சிலவற்றை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் செய்கிறது – மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குவது முதல் சர்வதேச மாநாடுகள் ஒருங்கிணைப்பது வரை. வருங்காலத்தில் இலக்கிய இதழ்களும் பதிப்பகங்களும் கூட எங்களால் உருவாக்கப்படலாம். நாங்கள் ‘எங்கள்’ படைப்புகளை முன்வைக்கவில்லை, ஒட்டுமொத்த தமிழிலக்கியத்தை முன்வைக்க எண்ணுகிறோம்.

ஆனால் அவை எழுத்தாளனாக தனிமனிதர் எவருடைய பங்களிப்பும் அல்ல. திறன்வாய்ந்த இலக்கியச் செயல்பாட்டாளர்களால் அவை நிகழ்த்தப்படுகின்றன. அவர்கள் அடைவது தனிப்பட்ட முறையில் ஏதுமில்லை – முக்கியமானதும் தேவையானதுமான ஒன்றை நிகழ்த்துகிறோம் என்னும் மனநிறைவைத் தவிர.

ஜெ

முந்தைய கட்டுரைஞானபோதினி
அடுத்த கட்டுரைஅஞ்சலி: எம்.டி.வாசுதேவன் நாயர்