கடிதங்கள்

அன்புள்ள ஜெ:

சமீபத்தில் மிகவும் ரசித்து படித்த எழுத்து இது.. http://venuvanamsuka.blogspot.com/2009/03/blog-post_12.html . முன்பே படித்திருப்பீர்கள். இருந்தாலும்.

இது நீங்கள் எழுதிய ‘வலி’ கட்டுரைக்கு மறுபுரம் போல எனக்குத் தோன்றியது. எந்த முரண்பாடும் இல்லாமல் இரண்டையும் ஒரே தளத்தில் வைத்து வாசிக்க முடியும். Self-mockery, பகடி, பின்நவீனத்துவக் கொண்டாடம் என்று என்னன்னவோ சொல்கிறோம். அதையெல்லாம் தாண்டிய ஒரு குழந்தைத்தனம், வாழ்ந்து பார்த்த முழுமை இந்தக் கட்டுரை முழுவதும் பரவிக்கிடக்கிறது.  இதே போன்ற அனுபவத்தை சமீபத்தில் ‘பாத்துமாவின் ஆடு’ முன்னிரையைப் படிக்கும் போது அடைந்தேன்.

சுகாவைப் அடுத்த தடவை பார்க்கும் போது மிகவும் கேட்டதாகக் கூறவும்.

அன்புடன்,
அரவிந்த்

அன்புள்ள அர்விந்த்

ஆம், அதை நான் அப்போதே படித்துவிட்டென். மிகச்சிறந்த கட்டுரை. சுகா அபூர்வமான நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். கொஞ்சம் தொட்டாற்சிணுங்கி — அதை பொறுத்துக்கொள்ளலாம்.

இப்போது சினிமா வேலையில் பிஸியாக இருக்கிறார். உங்களுக்குத் தெரிந்த அழகிகள் இருந்தால் தெரிவிக்கலாம். அவர் பார்க்கத் தயாராக இருக்கிறார். ஆறுமாத பயிற்சி உள்ளது.

ஜெ

888

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
பழுப்பு நிறப் புகைப்படம் தொகுப்பில் பல கதைகளை விரும்பிப் படித்த ஞாபகம். பரவலாக வாசிக்கப்படும் உங்கள் தளத்தில் அவரைப் பற்றிய எழுதியதன் மூலம் அந்தத் தொகுப்பை பலர் படிப்பார்கள் என்பதில் மகிழ்ச்சி.
இத்தகைய  அறிமுகங்களுக்கு நன்றி.

இதைத்தவிற இன்னொன்று. (இதை ஓராயிரம் பேர் சொல்லக்கேட்டு உங்களுக்கு அலுப்பாய் இருக்கக்கூடும்.) உங்கள் ஆழமான அதே சமயம் விரிவான வாசிப்பையும், தெளிவான எழுத்தையும் பார்த்து வியக்கிறேன்.

உங்கள் கதைகள் சிலவற்றைத் தான் படித்திருக்கிறேன், நாவல்கள் இன்னும் இல்லை. 2 வருடம் முன்பு ‘உற்றுநோக்கும் பறவை’யை படித்துவிட்டு கிட்டத்தட்ட 80% தகவல்களோடு அந்தக் கதையை அப்படியே பல பேருக்கு சொல்லியிருக்கிறேன். 2 வருடம் கழித்து அதே போல ஒரு நண்பருக்கு கதையை என்னால் விவரிக்க முடிந்ததை பார்த்தபோதுதான், நன்கு சொல்லப்பட்ட ஒரு கதை படிப்பவன் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதை உணர முடிந்தது. அதை உங்கள் சிறந்தவற்றில் ஒன்று என்று கூட நீங்கள் எண்ணமாட்டீர்களாக இருக்கும்.ஆனால், நான் ரசிப்பதற்கு உங்கள் படைப்புகளைப் பற்றிய உங்கள் அபிப்ராயத்தைப் பற்றிய பிரக்ஞை தேவையில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன் !

நண்பர்கள் பலர் உங்களுக்கு எழுத முனைந்து, எப்படி எழுதினாலும் சரியாக வராது என்று drafts-ஆகவே வைத்து எரிந்துவிட்டார்கள். மறக்கப்படுவது உறுதி என்று ஏற்றுக்கொண்டு  இதை எழுதுகிறேன்.


Celebrity – AK Ramanujan
I will pass from his mind


As an image from a mirror
Then why was I
So clever

அன்புடன்
பிரபு ராம்

அன்புள்ள பிரபு ராம்

நன்றி. பாஸ்கர் சக்தி குறித்த என் கட்டுரை அறிமுகமல்ல, அவர் என்னைவிடபிரபலமென்று நினைக்கிறேன். அது ஒரு எளிய வாழ்த்து, அவ்வளவுதான்.

உற்றுநோக்கும்பறவை என்னகதை என்றேநினைவுக்கு வரவில்லை. நன்றாகத்தான் இருக்கும், நான் எழுதியதாயிற்றே.

ஜெ

*****

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,

உங்கள் நலம் அறிய ஆவல் சார். சு.ரா. நினைவின் நதியில் என்ற புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு படித்தேன். இதன் சில பக்கங்கள் தாண்டும் போதே ஜே. ஜே. சில குறிப்புகளுடன் என்னை அறியாமல் ஒப்பிட தோன்றுகிறது. ஆமாம் சார், இது கட்டுரை நூல் அல்ல;  இதன் வடிவத்தை  என்னால்  ஒரு நாவலாகத்தான் எடுத்துக்கொள்ள முடிந்தது. இந்த புத்தகத்திலிருந்து நான் எடுத்து கொண்ட விஷயங்களுக்கு முடிவில்லாத பட்டியல் போடலாம். சு.ரா. அவர்களை நான் அவருடைய “இவை என் உரைகள்” என்ற புத்தகத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதுவும் நீங்கள் சொல்வது மாதிரி ஆத்மார்த்தமான மனதுக்கு நெருக்கமான மேடை பேச்சுகளின் தொகுப்பு அந்த புத்தகம். அந்த புத்தகம் என்னை ரொம்பவே வசிகரித்தது. அதன் மூலம் நான் அவரின் “ஒரு புளியமரத்தின் கதை” மற்றும் “ஜே.ஜே.சில குறிப்புக்கள்” நாவல்களை வாசித்து இருக்கிறேன். அந்த நாவல்களில்  உள்ள நுண்மையான  அங்கதம் (ஆரம்ப நிலை வாசகனாக  அதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது) நான் ரொம்ப ரசித்தது. ஆனால் எழுதியவரின் ஆளுமை சரமாரியாக பாதித்தது. அதற்கு அடுத்து இநத புத்தகம் (நாவல்).
எவளவு நெகிழ்வான கணங்கள், உரையாடல்கள், முக்கியமாக சில நேரங்களில் சிரித்து விட்டேன்.

அதில்  சில பகுதிகள் :

இநத புத்தகத்தை எழுதிக்கொண்டு இருக்கும்போது என் மனைவி என்னை சாப்பிட அழைக்கும்போது நண்பர்களில் புலம்பல்கள் இது எல்லாம் மட்டும்தான்  என்னை சு.ரா. இறந்து விட்டார் என்று தொந்தரவு படுத்துகிறது.
நான் இருக்கும் வரை அவரும் இருப்பார் என்று தான் நினைத்து கொண்டு அதை அடிநாதமாக வைத்து தான் நான் செயல்பட்டேன்.
அவர் பிறந்த நாள், நண்பர்கள்  சந்திப்பில்  அம்மன் கோவில் வரை சென்று திரும்பியது . (இதற்கு ஸ்பெஷல் அக ஒரு கிரேட் சொல்லிகொல்கிறேன்)

ஏனெனில் நான் உங்களை விட பெரிய எழுத்தாளன்;, ரொம்ப தன்னடக்கம் தான்
காந்தி பற்றிய சுரா மதிப்பீடு, நித்திய சைதன்யா யதி பற்றிய உரையாடல் சுருக்கம் இரண்டையும் நான் முக்கியமாக நினைகிறேன்.
உங்களுடையே சு. ரா. மிக அழகாக ஆளுமையாக வெளிப்பட்டு இருக்கிறார்.
அவர் இதில் சொல்லியது.: “ஒரு நல்ல கருத்துக்கு அடையாளம் அதை ஏற்பதல்ல விவாதிப்பதே

யோசிச்சு பார்த்த அத தான் நீங்க அவர்கிட்ட பண்ணி கொண்டு இருந்து இருக்கிறீர்கள் . அவரது படைப்புக்களை அணுகுவதற்கு இது எனக்கு  ரொம்ப உதவியாக இருக்கும். மிகவும் நன்றி ஜெயமோகன் மற்றும் சு. ரா விற்கு; நீங்கள் எல்லாம்தான் முழுமையாக வாழ்கிறீர்கள் என்று பொறாமையாக இருக்கிறது . எவ்வளவு சந்திப்பு, எவ்வளவு அனுபவம்

Regards
dineshnallasivam
சார் அப்புறம்
யதியை பற்றி தமிழ் இல் ஏதானும் புத்தகம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
“ஊமைச் செந்நாய் ”  எந்த மாத உயிர்மை இதழில் வந்துள்ளது? (உங்கள் தளத்தில் இநத சிறுகதை   உள்ளது. என்ன பன்றது சார், அருமையான டெக்னாலஜி இன்டர்நெட்டில் எழுதுவது மற்றும் உடனே படிப்பது. ஆனால் ரொம்ப நேரம் வாசிப்பது physical ஆக கஷ்டமாகவும் விலகலாகவும் உள்ளது.)


Regards
dineshnallasivam

அன்புள்ள தினேஷ்

நன்றி.

சுரா என் வாழ்க்கை வழியாகக் கடந்துசென்ற ஒரு நதி…. நதிக்கரை நாகரீகம்!!
நம்மை சந்திப்பவர்கள் நம்மைஉருவாக்குகிறார்கள்…

நித்யா எழுதிய இருநூல்கள்தமிழில் கிடைக்கும். 1. குருவும்சீடனும்– ஞானத்தேடலின் கதை. எனி இந்தியன் பதிப்பகம், சென்னை  2. அனுபவங்கள் அறிதல்கள். தமிழினி பதிப்பகம்

ஜெ

*****

திரைப்பாடலில் ராகங்கள்

ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

குருகுலமும் கல்வியும்

நித்ய சைதன்ய யதி

கனவின் கதை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஒருநாள்
அடுத்த கட்டுரைபகடி