சிதைவதும் ஒளிர்வதும் – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

விவேக் ஷான்பேக் தமிழ் விக்கி

1

1984 நாவலில் கதைசொல்லி சர்வாதிகார சமூகத்தில் அரசு பணியிலுள்ள ஒருவன் அவன் வாயிலாக எதிர்கால சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் நாவல். பொ.யு. 1949 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. எழுதப்பட்டபோதே உலகளாவிய கவனம் பெற்றது. வெளிவந்த சில ஆண்டுகளிலேயே தமிழில் க.நா.சு மொழிபெயர்த்திருந்தார். இன்று இந்நாவல் வாசிக்கப்படுவதற்கு முதன்மை காரணம் சமகால அரசியல் சர்வாதிகாரத்தை துல்லியமாக சித்தரிக்கும் என்பதாலே.

1984 நவீனத்துவ நாவலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு. நவீனத்துவத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் இந்நாவலில் இருப்பதைப் பார்க்கலாம். ஒன்று தனி மனித வாழ்க்கை வழியாக் பெருஞ்சித்திரத்தை உருவாக்கும் தன்மை. நவீனத்துவ காலகட்டத்திற்கு முன்பிருந்த நவீன செவ்வியல் காலகட்டத்திற்கு எதிரான அம்சம் இது. அன்று உலகளாவ எழுதப்பட்ட அனைத்து முக்கியமான நாவல்களும் தனிமனித வாழ்க்கை, அகம் சார்ந்த படைப்புகளே அதிகம் எழுதப்பட்டன. இது நவீன செவ்வியல் காலகட்டத்தில் நிலைகொண்டிருந்த ஒட்டுமொத்த மானுட லட்சியம், சிந்தனைக்கு எதிரான போக்கு. இப்படி சொல்லலாம் ஒரு கூழாங்கல்லைக் கொண்டு அதனை திருப்பி திருப்பி பார்த்து ஒட்டுமொத்த மலையை அறியும் முயற்சியே நவீனத்துவ நாவல்களின் லட்சிய வடிவம்.

இரண்டு, மேற்சொன்னதற்கு துணை நிற்கும் அம்சமான குறியீட்டு தன்மை.  கூழாங்கல் சிறிதாய் இருப்பதே அழகு. நவீனத்துவ நாவல்கள் பக்க அளவில் சிறியவை என்பதாலே இந்நாவல்கள் சிறுகதையை போல் படித்து முடித்தபின் வளரும் தன்மை கொண்டவை. உலகின் சிறந்த படைப்புகள் அனைத்திலும் இந்த இரண்டு அம்சங்களும் நிச்சயம் இருக்கும். தமிழில் இதற்கு சிறந்த உதாரணம் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’.

நவீனத்துவ கன்னட  இலக்கியத்தின் முகமென அறியப்படுபவர் யூ.ஆர். அனந்தமூர்த்தி அவரது சமஸ்காரா நாவல் அவ்வடிவின் சிறந்த எடுத்துக்காட்டு. எழுத்தாளர் ஜெயமோகன் சமஸ்காரா நாவலைப் பற்றிக் குறிப்பிடும் போது, ”அரசியல் அதிகாரம் வழியாக உண்மையான சமூக மாற்றம் சாத்தியமா, நேர்மையும் கொள்கையும் சமரசமற்று இயங்குவதற்கான இடத்தை கட்சி அரசியலும் அதிகார அரசியலும் கொண்டுள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பி, விசாரித்த நாவல் ‘சமஸ்காரா’”  என்கிறார்.

அதே அழகியல் வடிவத்தின் இன்றைய கன்னட முகமாக உலகளாவ அறியப்படுபவர் எழுத்தாளர் விவேக் ஷான்பேக்.

விவேக் ஷான்பேக் எழுதிய இரண்டு நாவல்களும் (காச்சர் கோச்சர், சகீனாவின் முத்தம்) தமிழில் கே. நல்லதம்பி மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. இரண்டு நாவல்களும் மேற்சொன்ன வடிவல் கச்சிதமாக பொருந்திப் போகும் படைப்புகள். நவீன குடும்பம் என்ற அமைப்பில் உள்ள அடிப்படை குரோதத்தையும், வன்மத்தையும் சித்தரிப்பவை. ஆனால் அதன் வாயிலாக இந்திய சமூகம் அதிலுள்ள முரண் அது வீழும் தருணம் என்ற ஒட்டுமொத்த பார்வையை அடைய முயல்கிறார்.

2

விவேக் ஷான்பேக்கின் நாவல்களில் எழும் கேள்விகளை அவரது சிறுகதைகள் மூலம் அறிய முயல்வது ஒரு வழி. ஷான்பேக்கின் ஒரு கதையில் (நம்ம படிகே நாவு, தமிழில்: நம் வழியிலேயே நாம்) பாயக்கா என்ற கதாபாத்திரம் ஹேராவதியை விட்டு வெளியே சென்றதில்லை. ஹேராவதியை விட்டு ஒரு முறை தன் மகன் வீட்டுக்கு சென்ற போது அங்கே பூட்டிய வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த குழந்தைகளை தன் வீட்டில் அழைத்து வைத்ததில் கலவரமாகிவிடும் போலீஸ் கேஸ் வரை அந்த பிரச்சனை நீளும் அதன் பின் தன்னால் ஹேராவதியில் எங்கும் வாழ முடியாது என முடிவு செய்து ஊர் திரும்பி விடுவாள்.

ஊரில் அவளுக்கு இருக்கும் செல்வாக்கு அங்குள்ள எல்லோரும் அறிந்தது. ஒருமுறை அவ்வூர் பால்காரனை போலீஸ்காரர்கள் பிடித்து சென்ற போது அவனுக்காக போராடி அவளே மீட்டு வருவாள். ஊருக்கு ரோடு இல்லாத போது கவுன்சிலரை தெரு எல்லையில் நிறுத்து உள்ளே வரவிடாத படி செய்துவிடுவாள். அவன் செல்வாக்கு இறங்குவதைக் கண்டு ஹேராவதிக்கு புது ரோடு வரும். அவள் அண்டை வீட்டுக்காரியான கமலம்மாவை மகனும் மருமகளும் கொடுமை படுத்துவது கண்டு அவளை தன்னுடன் அழைத்து வைத்துக் கொள்வாள். மகன் ஊராரை கூட்டி பாயக்கா வீட்டுக்கு வந்து முறையிடுவான். காளியம்மா வந்த அழைத்துச் செல் என்பாள் பாயக்கா. சொல்லடி வரமாட்டேன் என்று என காளியம்மாவிடம் கூறுவாள். ஆனால் கமலம்மா அவன் என் ரத்தமும் சதையும் தானே அவன் என்னை கொடுமைப்படுத்தினால் படுத்தட்டும் என அவனுடன் சென்றுவிடுவாள். பாயக்கா திகைத்துப் போய் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

பாயக்கா சென்ற நிலப்பிரபுத்துவ யுகத்தின் கடைசி முகம் அவளோடு அந்த ஊரே குடும்பமாக வாழ்ந்த கட்டமைப்பு அகன்றது. இங்கிருந்து ஷான்பேக்கின் காச்சர் கோச்சர் நாவலுக்கு ஒரு கோடிழுக்கலாம்.

பெங்களூரில் வாழும் மேல் நடுத்தர குடும்பத்தின் கதை. நடுத்தர குடும்பமாக இருந்தவர்கள் கதை சொல்லியின் சித்தப்பாவின் முயற்சியால் மேல் நடுத்தரமானவர்கள். ஆனால் அதனூடே ஒரு நேர்த்தியான வாழ்க்கை சூழலுக்குள் சென்றிருப்பார்கள். நேர்த்தியென்றால் அனைத்திலும் அத்தனை நேர்த்தி. அவ்வீட்டிற்கு வரும் மருமகள் காச்சர் கோச்சர் என்னும் பொருளில்லாத கலைத்துப்போட்ட சொல்லை தன் தம்பியுடன் சேர்ந்து பயின்றிருப்பாள். அவளால் ஒட்டவே முடியாத உலகம் அவள் சென்று சேர்ந்த இடம். அங்கே அனைவரும் உணவு மேசையில் சித்தப்பாவை மறுத்து பேசாமல் சாப்பிடுபவர்கள். ஒரு முறை அவருக்கு எதிராக எதிர்த்து பேசிய மருமகள் அதன் பின் என்னவானாள் என்ற கேள்வியோடு அந்நாவல் முடியும்.

பாயக்காவிலிருந்து காச்சர் கோச்சர் கதாபாத்திரங்கள் ஒரு தலைமுறையின் வீழ்ச்சி. நவீன குடும்பத்தில் இத்தனை வன்மங்களும், குரோதங்களும் எங்கிருந்து எழுகின்றன? குடும்பம் என்ற அமைப்பு நவீன உலகில் பொருளியலால், அரசால், வர்க்கத்தால் எவ்வண்ணம் சிதைகிறது? தன்னுடைய தன்னகங்காரத்தை பேணிக்கொள்ள கையில் ரத்தக்கறை கொண்டிருக்கும் மனிதர்களின் அறம் தான் என்ன? என்ற கேள்வியுடன் நிறைவடையும் நாவல் காச்சர் கோச்சர்.

ஷான்பேக் எழுத்தில் குடும்பம் என்ற கட்டமைப்பின் மீதும் அதற்குள் எதிரீடும் அங்கார மோதல்கள் மீதும் அங்கிருந்து நாம் கற்பனையே செய்ய முடியாத வன்மங்களின் மீதுமான கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கிறது.

ஜாமீன் சாஹேப் (சிறுகதை) தன் தந்தையை ஒரு கேஸிலிருந்து காப்பாற்ற முதல்முறையாக போலீஸ் ஸ்டேஷன் செல்கிறான். அதில் கிடைக்கும் வெற்றியே அவனுக்கு போதையாகி விடுகிறது. சட்டத்தின் அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்து கொள்கிறான். ஜாமீன் சாஹேப்பாக தன் கிராமத்தில் மாறுகிறான். அதன் வழியே தன் பொருளியல் லாபங்களை ஈடேற்றிக் கொள்கிறான். கிராமத்தில் அதன் வழியே அவனுக்கு ஒரு அதிகாரம் நிலை கொள்வதைக் காண்கிறான். அதுவே அவனுக்கு போதையாகிறது. தன் இளமைக்கால தோழி மீனாட்சிக்கு எதிராக அவளை கொடுமை செய்யும் அவளது கணவனை காப்பாற்றுகிறான். தன் பால் மனம் மாறாத குழந்தைப்பருவத்தில் அவளுடன் குச்சிகளால் வீடு கட்டி விளையாடியவன் பின் ஒரு கட்டத்தில் இறுதி இலக்கை எட்டும் கோலி விளையாட்டில் எப்படி வெல்வது என்பதை மட்டும் சிந்தனை செய்பவன் ஆகிறான்.

3

மேலே முதலில் சொன்ன வடிவ அழகியலையும், இரண்டாவது பகுதியில் சொன்ன ஷான்பேக்கின் எழுத்தில் வெளிப்படும் குடும்பம் என்ற அமைப்புக்குள் இருக்கும் வன்மங்களின் கூட்டுத் தொகை ஆகிய இரண்டையும் கொண்டே அவரது சகீனாவின் முத்தம் நாவலை புரிந்துக் கொள்ள முற்படுகிறேன்.

’சகீனாவின் முத்தம்’ என்ற தலைப்பு ‘காச்சர் கோச்சர்’ போல் நினைவில் நிறுத்தும் பொருள் அளிக்க முடியாத தலைப்பு அதற்கு நாவலில் தன்னியல்பாகவே ஒரு காரணத்தையும் குறியீட்டு தன்மையையும் உருவாக்குகிறார் எழுத்தாளர்.

கசக்கும் பாகற்காய் சுவையாவது போல, சுவாரஸ்யமின்மையும் ஒரு அழகியல் சுவையென ஆக்குகிறார் எழுத்தாளர். இலக்கியத்தில் எழுதக் கூடாத எழுதால் சலித்துவிடக்கூடிய அன்றாடம் என்றொன்றுள்ளது. அவை நம் அன்றாட வாழ்வில் நடப்பவற்றை அப்படியே அவ்வண்ணம் எழுதுவது. இந்நாவலில் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் வெங்கட் என்னும் ஐடி ஊழியனின் வாழ்க்கை. அவனது மனைவி விஜி, மகள் ரேகா. அவர்கள் அதுவரை சந்திக்காத எதிர்பாராத ஒரு சூழல் ஆனால் அதற்குள்ளும் அவர்களின் அன்றாட நிகழ்வுகள் அதிலிருக்கும் தொய்வுகள், நீட்டி முழக்கும் தன்மை நாவலில் அப்படியே காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் ஆசிரியர் சுவாரஸ்யமாக்கும் ஒரு மர்ம முடிச்சை நாவல் நெடுக கையாள்கிறார். அதுவே இவ்வகைமைக்குள் அடங்கும் எழுத்தில் சிறந்த கதாசிரியன் எழுதியது என்பதை காட்டுகிறது.

லட்சியவாதம் மனிதர்களை கட்டி எழுப்பும் அடிப்படை விசையாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துக் கொண்டிருக்கிறது. அதன் பொருட்டு அதற்காக தன் தலைக்கொடுக்க மனிதர்கள் ஒரு திரளாக வந்து முன் நிற்கின்றனர். வீர யுக காலத்தில் போர் ஒரு சிறந்த உதாரணம். அந்த யுகத்தில் இந்தியாவில் போரின் பொருட்டு அரசனின் பொருட்டு தன் தலையை முன்கொடுத்தவர்கள் கோடானு கோடி பேர். போரில் வெல்லுதல் பொருட்டு ஒருவனை நவகண்டம் கொடுப்பது நம் மரபில் பெருமை கொள்ளப்பட்ட ஒரு விஷயம்.

அந்த அதே மனநிலையை நவீன யுகத்தில் சித்தாந்ததிற்காக தன்னை பலி கொடுத்தவர்களின் பட்டியலை எண்ணிச் சொல்ல முடியாது. சுதந்திரத்திற்கு பின்பு இந்தியாவில் எழுந்த மாபெரும் அலையென்பது கம்யூனிசம். அதன் வழியே எழுந்து வந்த நக்சல் இயக்கம்.

நாவலில் கதைச் சொல்லி வெங்கட்டின் தாய் மாமனான ரமணன் தன் கிராமத்தில் பத்தாவது தேறிய முதலாமவன், அவனே படிப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியே பெங்களூர் சென்றவன். அங்கிருந்து ஹைதராபாத். அனைத்து கல்வியிலும் முதலில் தேறியவன். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் கம்யூனிசம் அவன் மண்டையில் தொற்றிக் கொள்கிறது. அங்கிருந்து நக்சல் இயக்கம் அதன்பின் என்னவானான் என்பது ஊரில் யாரும் அறியாதது அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது கூட தெரியவில்லை. அவன் சென்ற இடத்தில் எதை சாதித்தான், தன் லட்சியத்தின் பொருட்டு எதை வென்றான் என எதுவும் நாவலில் சொல்லப்படவில்லை.

ஆனால் அவனது அப்பா வழி சொத்தான செழித்த விவசாய நிலத்தை வெங்கட்டின் அப்பா பராமரித்துக் கொள்கிறார். அப்படியே அதனை உரிமையாக்கிக் கொள்கிறார். வெங்கட்டின் அம்மா ரமணனின் நிலத்தை அவனிடம் கொடுத்துவிடும் படி வேண்டுகிறாள். அவர் மறுக்கிறார். அவன் கிராமம் திரும்பினால் கொடுத்துவிடுகிறேன் என்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்கும் மனமில்லை. தன்னோடே வைத்துக்கொள்ள தம்பியின் உதவியும் அவருக்கு இருக்கிறது. இறுதியாக ரமணன் கடிதமொன்று வருகிறது. தன் நிலத்தை தன்னுடன் வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு கொடுத்துவிடும்படி எழுதுகிறான். அக்கடிதம் ஒரு விழாவில் சபை நடுவே வாசிக்கப்படுகிறது. ஆனால் முழுவதாக படிக்கும் முன் வெங்கட்டின் அப்பாவும், சித்தப்பாவும் அதனை பறித்து சென்றுவிடுகின்றனர். அந்நிலம் இறுதி வரை வெங்கட்டின் சித்தாபாவின் கையிலேயே உள்ளது.

மேலே சொன்ன லட்சியவாதியான ரமணன் குடும்பம் என்ற அமைப்பின் முன் எங்கே தோற்கிறான்? நாவலில் வரும் வெங்கட்டின் மகள் ரேகாவும் அதே புரட்சி கொண்டிருக்கிறாள். அதனையே வெங்கட்டின் மனைவி விஜியிடம் சொல்லி புரிய வைக்கிறாள். ஆனால் அனைத்து லட்சியங்களும் குடும்பம் என்ற நடைமுறை வாழ்வில் தோற்று மனிதர்கள் தன் நலம் கொண்டவர்களாக மட்டுமே எஞ்சுகிறார்கள். அதற்காக போலி லட்சியங்களையும், அடையாளங்களையும் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் மேல் சூடிக் கொள்கிறார்கள்.

வெங்கட்டின் வாழ்வில் வெற்றியென நினைப்பது மேல் தள வர்க்கத்தின் மோஸ்தரை தன்னுள் கொண்டிருப்பது அங்கே செல்லத் துடிப்பது மட்டும். அவன் வாழும் உலகில் அனைவரும் அங்கே அந்நிலைக்கு விரும்புபவர்களாக மட்டுமே உள்ளனர். எதிரில் வெளியே இருப்பவர்கள் அவர்கள் இந்த அமைப்பால் தோற்கடிக்கப்பட்டு காலம் தோறும் வெளியேற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

நாவல் முடியும் போது எழும் ஒரே கேள்வி குடும்பம் என்ற சுயநலமிகளின் கூட்டமைப்பில் மனிதர்கள் கொண்டுள்ள லட்சியவாதத்தின் பொருள் தான் என்ன? அவை ரமணனிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம் போல எங்கோ சொல்ல முடியாத ஒரு சக்தியால் நடைமுறையில் களவாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த களவாடல் வழியாகவே மனிதர்கள் தன் நலத்தை செவ்வன பேணிக்கொள்கின்றனர்.

மனிதன் தான் என்ற ஒற்றை விசை கொண்ட சுயநல பேணி மட்டும் தானா? அவனுக்கு அதற்கு மேல் கொண்ட விசையும், கனவும், லட்சியமும் ஒன்றேனும் நடைமுறையில் சாத்தியமில்லையா? அல்லது நாம் உருவாக்கி வைத்திருக்கும் குடும்பம் என்ற இவ்வமைப்பு பாயக்கா முதல் மீனாட்சி, ரமணன் வரை ஒவ்வொருவரையாக அதிலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறதா?

மனித குலம் இத்தனை நோய்மையானது தானா? அப்படியென்றால் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் நம்மை குடும்ப என்ற அமைப்பில் கடத்தி வந்த சக்தி  எது என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்வியை வைத்து விவேக் ஷான்பேக்கின் படைப்புலகத்தை வரையறை செய்ய முயற்சிக்கிறேன்.

இதனை இப்படி புரிந்துக் கொள்ள முயல்கிறேன் விவேக் ஷான்பேக் குடும்பத்தில் உள்ள கட்டுக்கடங்காத வன்மத்தையும், குரோதத்தையும் தன் காச்சர் கோச்சர், சகீனாவின் முத்தம் நாவல்களில் எழுதிய அதே காலகட்டத்தில் தமிழில் மகத்தான குடும்பத்தின் மகத்துவத்தை பேசும் அல் கிஸா நாவல் அஜிதனால் எழுதப்பட்டது. அவை மண் மேல் நிகழ்ந்த லட்சிய குடும்பத்தின் இருப்பை சொன்னவை. ஷான்பேக் கண்ட உணர்ந்த உண்மைக்கு நேர் எதிரான ஒன்று.

இரண்டும் குடும்பம் என்ற அமைப்பின் மீதான கேள்வியையே முன்வைத்தன. ஆனால் முற்றிலும் நேர் எதிரான கோணத்தில். மனிதன் எத்தனை மகத்தான ஒரு சொல் என மாக்சிம் கார்க்கி சொன்ன அதே யுகத்தில் ஜி. நாகராஜன் ‘மனிதன் எத்தனை மகத்தான சல்லிப்பயல்’ என்றார். இரண்டு பக்கங்களும் ஒன்றிணைந்தது தானே ஒரு நாணயம்.

முந்தைய கட்டுரைசஞ்சீவனி குறிப்புகள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைசித்ரனின் எல்லைக்கோடுகள்- சந்திரசேகர் எம்