சித்ரனின் எல்லைக்கோடுகள்- சந்திரசேகர் எம்

இரண்டு நகர்வுகள் – க.அருண்

மயிலன் – சி.பழனிவேல்ராஜா

லாவண்யா சுந்தரராஜன் படைப்புகள்- கமலதேவி

கீரனூர்க்காரர்- சுரேஷ் பிரதீப்

மயிலன் சின்னப்பன் பற்றி கமலதேவி

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் அரங்கில் இன்று தங்கள் இருப்பை நிறுவிக்கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகள் பங்குகொள்வதும் அவர்கள் மீதான தொடர்வாசிப்பும் விவாதமும் நிகழ்வதும் வரவேற்புக்குரியவை. இந்த அரங்கிற்கு அறிவிக்கப்பட்ட பிறகுதான் நான் சித்ரன் என்னும் பெயரையே கேள்விப்படுகிறேன். (அந்த அளவுக்கு நாம் குறைவாகவே இலக்கியவாதிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்) தமிழ்விக்கி பதிவில் அளிக்கப்பட்டிருந்த மூன்று குறிப்புகளும் அவரைப்பற்றிய நல்ல ஒரு தொடக்கத்தை அளித்தன. சித்ரன் இன்றைய சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்னும் எண்ணம் உருவானது.

இன்றைய எழுத்தாளர்கள் பலர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோடு வழியாகச் செல்கிறார்கள் என நினைக்கிறேன். கடந்தகால எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்குள் வாழ்ந்தவர்கள். இடம்பெயர்ந்தாலும்கூட அவர்களின் மனம் நிகழ்வது அந்த நிலத்தில்தான். உதாரணம் நீங்கள் அல்லது நாஞ்சில்நாடன் அல்லது சோ.தர்மன். நகரம் சார்ந்த எழுத்தாளர்களுக்குக் கூட தெளிவான நிலம் இருந்தது. உதாரணம், அசோகமித்திரன். அவர் வடசென்னையைப் பற்றி எழுதவே இல்லை. தமிழ்ப்பிரபாவுக்குக் கூட சிந்தாதிரிப்பெட்டை இருக்கிறது. ஆனால் இன்றைய எழுத்தாளர்களில் பலருக்கும் நிலம் இல்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊரில் பிறந்து வாழ்ந்தாலும்கூட அவர்களுக்கு அது அக அடையாளமாக இல்லை. ஒரே நிலத்தை எழுதும் படைப்பாளிகளுக்கு நிலம் ஒரு பின்னணி மட்டும் அல்ல. அது அவர்களின் படிமங்களின் தொகுப்பாகவும் உள்ளது. இன்றைய எழுத்தாளர்கள் பலருக்கு நிலம் அப்படி அகத்தில் படிந்து படிமங்களாக உருவாகி வருவதில்லை. அவர்கள் எழுதும் பல களங்களில் ஒன்று மட்டுமே அவர்களின் நிலம். ஆகவே அவர்கள் நிலத்தை புறவயமாகவே எழுதுகிறார்கள். அவர்களின் கதைகள் அந்நிலங்களில் நடைபெறுகின்றன. கூடவே அந்நிலத்தை விட்டு விலகியும் செல்கின்றன. புதிய நிலங்களை நோக்கி விரிகின்றன. அல்லது கற்பனைநிலங்களில் நிகழ ஆரம்பிக்கின்றன. நிலத்தை ஏற்றும் நிலத்தை மறுத்தும் ஒரு நடனம் இக்காலக் கதையாசிரியர்களின் கதைகளில் உள்ளது.

சித்ரனின் கதைகளில் இந்த அம்சத்தை பார்த்தேன். அவரை காரைக்குடியில் வாழ்பவர் என புரிந்துகொள்கிறேன். பலகதைகள் காரைக்குடியில் நிகழ்கின்றன. ஆனால் காரைக்குடியின் எழுத்தாளராக அவரைச் சொல்லமுடியவில்லை. செட்டிநாட்டு யதார்த்தம் அவர் கதைகளில் இல்லை. பொற்பனையான் போன்ற கதை நிகழும் களம் என்பது ஒரு அந்தரநிலமாகவே உள்ளது. ஏராளமான நுணுக்கமான நிகழ்வுகளைச் சொல்லிச்செல்லும் சித்ரனின் கதையுலகம் வழியாக ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச்சித்திரம் வருவதில்லை. செட்டிநாடோ காரைக்குடியோ திரள்வதில்லை. அவை அவர் உருவாக்கும் மொழிசார்ந்த பரப்புகளாகவே உள்ளன. அவற்றின் நில அடையாளமானது மேலோட்டமானதுதான். அவர் ஒரு மெல்லிய கோடுவழியாகவே கடந்துசெல்கிறார் என நினைக்கிறேன்.

அதேபோன்ற இன்னொரு எல்லைக்கோடு யதார்த்தம்- மீயதார்த்தம் என்னும் இடம். முந்தையகால எழுத்தாளர்களில் யதார்த்தம் மீயதார்த்தம் என்னும் பாகுபாடு இருந்தது. அவர்களின் சிலகதைகள் யதார்த்தபாணியிலும் சில கதைகள் மீயதார்த்த பாணியிலும் அமைந்திருந்தன. சிலசமயம் இரா.முருகனைப்போல இரண்டையும் திட்டமிட்டுக் கலந்தார்கள். ஆனால் இன்றைய எழுத்துக்களில் பல இரந்டு எல்லைகளையும் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டே இருப்பதைக் காணமுடிகிறது. சித்ரனின் கதையுலகம் பெரும்பாலும் யதார்த்தமானது. மெல்லிய குரலில், ஒருவகையான விலக்கமும் தயக்கமுமாக அன்றாடக்கதைகளைச் சொல்லிச்செல்கிறார். ஆனால் பொற்பனையான், விசும்பின் மொழி போன்றகதைகளில் மீயதார்த்தம் அந்த கதையுலகுக்குள் ஊடுருவுகிறது. அது ஒரு சரிகைத்தீற்றல் போல இக்கதைகளுக்கு ஒரு வசீகரத்தை அளிக்கிறது. மீயதார்த்தத்தை ஒருவகையான படிம உலகம் அல்லது அகவுலகம் என்று எடுத்துக்கொள்ளாமல் கதை என்னும் தனி யதார்த்தத்தின் இயல்பான ஒரு பகுதியாகவே இவர்கள் பார்க்கிறார்களோ என்னும் எண்ணம் உருவாகிறது. ஓர் இளைஞனின் வாழ்க்கையில் எப்படி மு.க.ஸ்டாலின் இயல்பாக இருக்கிறாரோ அப்படித்தானே முகமூடி மாயாவியும் இருக்கிறார்கள்.

சித்ரனின் புனைவுலகம் இன்றைய இளைஞர்களின் உள்ளம் இந்த மண்ணில் நிகழ்ந்தாலும் இதனுடன் ஒட்டாமல் ஓர் அந்தரங்கவெளியை உருவாக்கி அங்கே தன்னை நிகழ்த்திக்கொள்கிறது என்பதற்கான ஆதாரமாக உள்ளது. கூர்ந்து வாசிக்கவேண்டிய படைப்பாளியாகத் திகழ்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சந்திரசேகர் எம்.

சித்ரன் தமிழ் விக்கி

கனாத்திறம் உரைத்த காதை காணொளி

பொற்பனையான் வாசிப்பு 

சீர்மையின் நுதல்விழி சுனில்

முந்தைய கட்டுரைசிதைவதும் ஒளிர்வதும் – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
அடுத்த கட்டுரைமார்த்தா மால்ட்