அன்புள்ள ஜெ
சேலம் புத்தகக் கண்காட்சியில் நீங்கள் ஒரு வாசகருடன் ஊமைச்செந்நாய் கதை பற்றி உரையாடிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தேன். ஊமைச்செந்நாயின் கதை இந்தியாவின் கதையின் உருவகம் என்று நீங்கள் சொன்னபோது அவரைப்போலவே நானும் ஆச்சரியப்பட்டேன்.
அந்த யானையை நீங்கள் இந்தியாவின் உருவகமாகவே அமைத்திருக்கிறீர்கள் என்று சொன்னீர்கள். அப்படியென்றால் துரை யார், ஊமைச்செந்நாய் யார் என்றெல்லாம் என் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. நான் அந்தக்கதையை ஒரு வேட்டைக்கதையாகவும் ஒரு பழிவாங்கும் கதையாகவும்தான் வாசித்திருந்தேன்.
என் கேள்வி என்னவென்றால் இந்தக் கதை மிகப்புகழ்பெற்ற ஒன்று. ஓரளவு இலக்கியவாசிப்புடையவர்கள் எல்லாருமே இதை வாசித்திருப்பார்கள். ஆனால் இந்தக் கோணத்தில் எவரும் எழுதியதில்லை. நான் எவர் பேசியும் கேட்டதில்லை. அப்படியென்றால் இந்தவகையான வாசிப்புகளுக்குச் செல்வது எப்படி?
நவநீதன்
அன்புள்ள நவநீதன்,
தமிழ்ச்சூழலில் நமக்கிருக்கும் முக்கியமான சிக்கல் என்னவென்றால் நமக்கு சரியான பொருளில் இலக்கியவிமர்சகர்கள் கிடையாது என்பதுதான். இங்கே இலக்கியம் பற்றிய பேச்சு என்பது மிகமிகமிகக் குறைவு. இலக்கியம் பற்றிய குறிப்புகளை எவரேனும் முன்வைத்தாலே அதுவே பெரிது என எண்ணிக்கொண்டிருக்கிறோம். நுணுக்கமான வாசிப்பும், வழிநடத்தும் வாசிப்பும் இங்கே எதிர்பார்க்கத்தக்கவையாக இல்லை.
இங்கே இலக்கியம்பற்றிப் பேசுபவர்கள் பெரும்பாலானவர்கள் இரண்டு வகையினர். கல்வியாளர்கள் முதல் வகை. அவர்களுக்குக் கல்வித்துறை சார்ந்த ஒரு பகுப்பு முறை உள்ளது. அது படைப்பின் உள்ளடக்கத்தில் மேலோட்டமாக ஓங்கித்தெரியும் அம்சங்களைக்கொண்டு அவற்றை வெவ்வேறு அடையாளங்களுக்குள் பொருத்தி வகைப்படுத்துவது என்ற அளவிலேயே உள்ளது.
இரண்டாம் வகையினர், அரசியல்விமர்சகர்கள். அவர்களில் உயர்நிலையினர் அரசியல்நோக்குடன் படைப்பின் குறியீட்டமைப்பை, உணர்வமைப்பை ஆராய்பவர்கள். அத்தகையோர் இங்கே அறவே இல்லை என்றே சொல்லவேண்டும். இங்குள்ளவர்கள் கீழ்நிலை அரசியல்விமர்சகர்கள். அவர்களுக்கு படைப்பு கூட முக்கியம் அல்ல. படைப்பாளியே முக்கியம். அப்படைப்பாளிக்கு என்ன அரசியல் அடையாளம் உள்ளது என்பது மட்டுமே அளவுகோல். அந்த அடையாளமும் இவர்கள் அவன் மேல் போடுவதாகவே இருக்கும். அந்த இலக்கியவாதி இவர்களின் அதிகார அரசியல் ஆட்டங்களை ஆதரிக்கிறானா, உடன்நிற்கிறானா என்ற அடிப்படையில் அவனை நம்மவன் – பிறன் எனப்பிரித்து அந்த அடையாளத்தைச் சுமத்துகிறார்கள். அவர்களால் இலக்கியப்படைப்பை வாசிக்கவோ உள்வாங்கவோ முடியாது.
இந்த இரண்டு நிலைகளுக்கு அப்பால் இங்குள்ள இலக்கியவிமர்சனம் என்பது படைப்பாளிகள் தாங்களே எழுதிக்கொள்வது. அழகியல் விமர்சனத்தை முன்னெடுத்தவர்கள் சி.சு.செல்லப்பா, க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரை பெரும்பாலும் இலக்கியவாதிகளே. ஆனால் இந்த தலைமுறையில் அத்தகைய விமர்சகர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். படைப்பிலக்கியமும் இலக்கியவிமர்சனமும் தொடர்ந்து செய்பவனாக நான் ஒருவனே இன்றிருக்கிறேன்.
இச்சூழலில் எப்படைப்பின்மீதும் நுணுக்கமான வாசிப்பு உருவாவதில்லை. விவாதம் வழியாக வாசிப்பு முன்னகர்வதுமில்லை. இது இன்றைய சூழலின் மிகப்பெரிய குறைபாடுதான். இதைக் கடக்க இலக்கியவாதிகள் தனிப்பட்ட காழ்ப்புகளைக் கடந்து அழகியல்ரீதியான விமர்சனத்தை ஒட்டுமொத்தமாக முன்னெடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
ஊமைச்செந்நாய் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது திருவனந்தபுரம் கனகக்குந்நு கொட்டாரத்தில் இருக்கும் ஒரு பெரிய யானைத்தந்தம். அதுதான் கேரளவரலாற்றின் மிகப்பெரிய யானைத்தந்தம் என்று சொல்லப்படுகிறது. யானைத்துப்பாக்கி என்னும் பெரியவகை துப்பாக்கி இந்தியாவுக்கு வந்த ஆண்டிலேயே அந்த யானை கொல்லப்பட்டது. அந்த துப்பாக்கியும் அங்கேயே உள்ளது. கதையின் தொடக்கமே அந்த யானையும் அந்த துப்பாக்கியும்தான்.
அதைச்சுற்றி நிகழும் கதையில் நேரான யதார்த்தச்சித்தரிப்பு உள்ளது. ஆனால் அந்த யானை மட்டும் ஒரு மாயத்தன்மையுடன் இருப்பதை, புராணத்திலும் கனவிலுமாக அது திகழ்வதை அக்கதையை வாசிக்கையில் எளிதில் உணரலாம். அதுவே அந்த யானை ஓர் உருவகம் என்பதைக் காட்டும். நல்ல வாசகன் அந்த உருவகத்தை தன் அகத்தே வளர்த்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட வாசிப்பில் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் இணைந்து துலங்கி வரும்.
அத்துடன் ஒரு வாசகன் அதன் ஆசிரியனையும் நுணுக்கமாக அறிந்திருக்கவேண்டும். என் படைப்புலகில் யானை எப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது வாசகனுக்கு நினைவுக்கு வந்தாகவேண்டும். யானையின் வெவ்வேறு உருவக வடிவங்கள் என் படைப்புலகில் உள்ளன. அவற்றிலிருந்து விரிந்து வருவதாகவும் இந்தக் கதையிலுள்ள யானை உள்ளது.
வாசகர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல் வழியாக அந்த வாசிப்புவிரிவை அடைய முடியும். ஒரு கதையில் வாசிப்பாக முன்வைக்கவேண்டியது இந்த நுண்தளங்கள்தான். ஆனால் இங்கே கதைகளைப் பற்றி எழுதுபவர்கள் திரும்பத் திரும்ப கதைச்சுருக்கத்தை எழுதிவிட்டு, எந்தெந்த பகுதிகள் பிடித்திருக்கின்றன அல்லது பிடிக்கவில்லை என எழுதி முடித்துவிடுகிறார்கள். அல்லது சிலர் கதை எப்படி இருந்திருக்கவேண்டும் என ஆசிரியருக்குச் சொல்லமுயல்கிறார்கள். வணிகசினிமாவைப் பார்த்துக் கருத்து சொல்லும் அதே மனநிலையுடன் இலக்கியப்படைப்புகளை வாசிப்பதன் விளைவு இது.
ஒரு வாசகன் எழுதவேண்டியது அவன் ஓர் இலக்கியப்படைப்புக்குள் சென்ற பயணம் பற்றியே. இன்னொருவர் தன் வாசகப்பயணம் பற்றி எழுதலாம். அப்படி பல வாசிப்புகள் இணைகையில்தான் கூட்டு வாசிப்பு உருவாகிறது. கூட்டுவாசிப்பே ஒரு படைப்புக்கு அணுக்கமானதாக மெல்ல ஆகிறது. ஒரு தனிவாசகன் , அவன் எத்தனை நுணுக்கமானவனாக இருந்தாலும் ஓர் இலக்கியப்படைப்பை மதிப்பிட்டு கருத்துச்சொல்லும் தகுதி கொண்டவன் அல்ல. அவனுடையது மதிப்பீடு அல்ல, அபிப்பிராயம் மட்டுமே. மேலோட்டமான வாசகன் தன்னை நுகர்வோன் என நிறுத்திக்கொள்வதனால்தான் அவன் அபிப்பிராயம் சொல்கிறான். வாசகன் படைப்புடன் நிகழ்த்தவேண்டியது ஓர் அந்தரங்கமான உரையாடலை. அந்த உரையாடலின் வழித்தடத்தையே அவன் எழுதுவான். இன்னொருவனுடன் பகிர்ந்துகொள்வதே நோக்கம். அப்படிப்பட்ட பகிர்வுகள் இணைந்து ஒரு சமூகத்தின் மொத்தவாசிப்பு உருவாகிறது.
ஊமைச்செந்நாய் ஒரு நாவலாக மலையாளத்தில் மாத்ருபூமி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு பல பதிப்புகள் கண்டுள்ளது. அங்கே அதன்மீதான வாசிப்பு இந்த தளத்திலேயே நிகழ்ந்தது
ஜெ
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)