இன்றைய நாடகங்களில் ஒரு முக்கியமான முன்னகர்வு என்பது ஒப்பனை மற்றும் அரங்க அமைப்பைத் தவிர்ப்பதுதான். நாடகத்தை ‘நம்பவைப்பதற்காக’த்தான் ஒப்பனையும் அரங்க அமைப்பும் தேவைப்பட்டன. கதைமாந்தரும், களமும் அவ்வாறு ‘புனையப்பட்டன’. ஆனால் அவை செயற்கையானவை என பார்வையாளர்களுக்கு உடனே தெரிந்துவிடுகின்றன. அவற்றை அவர்கள் கற்பனை வழியாகவே கதைமாந்தர் என்றும், களம் என்றும் ஆக்கிக்கொள்கிறார்கள். அவ்வாறென்றால் ஒப்பனையில்லாமல், வெறும் அரங்கிலேயே அக்கற்பனையை நிகழ்த்திக்கொள்ளலாமே. கதைமாந்தரையும், கதைக்களத்தையும் பார்வையாளரிடம் குறிப்பிட்டு அவர்களைக் கற்பனைசெய்யச் சொன்னாலே போதுமே?
அந்த அடிப்படையில் உருவான நாடகங்களை சர்வதேச நாடகவிழாக்களில் நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஐரோப்பிய நாடகங்களும் ஈரானிய நாடகங்களும் அந்த வகைமையில் மிகமிக முன்னகர்ந்துள்ளன. அவ்வடிவை தமிழில் நிகழ்த்துவதற்கான முயற்சியை முன்னெடுக்கும்பொருட்டு கோவை நண்பர்கள் நரேன் முன்னெடுப்பில் மெய்க்களம் என்னும் நாடகக்குழுவை உருவாக்கியுள்ளனர். அதன் சார்பில் வாள், கழுமாடன் என்னும் இரு குறுநாடகங்கள் 21 டிசம்பர் 2024 அன்று கோவை விஷ்ணுபுரம் விருதுவிழா அரங்கில் (எழுத்தாளர் சந்திப்பு நிகழும் சிறிய மேடையில்) இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இரவுணவுக்குப்பின்னர் நிகழவிருக்கின்றன.
நம் நாடக அரங்கில் இரண்டுவகை நாடகங்களே இன்றுள்ளன. ஒன்று வேடிக்கையும் விளையாட்டும் கொண்ட சபா நாடகங்கள் அல்லது கேளிக்கை நாடகங்கள். இன்னொன்று, வெவ்வேறு நிதியுதவிகளுடன், பார்வையாளர்களைப் பற்றிய கவலை இல்லாமல் நிகழ்த்தப்படும் உத்திச்சோதனை நாடகங்கள். இவை குறியீட்டுத்தன்மை கொண்ட காட்சியமைப்புகள், உருவகச்சொற்றொடர்கள் மட்டுமே கொண்டவை. காட்சியனுபவத்தை மட்டுமே உத்தேசிப்பவை. இந்நாடகங்கள் மூன்றாவது வகைமை எனலாம். இவை இலக்கியத்தின் நீட்சியாக நாடகக்கலையைப் பார்ப்பவை. இலக்கியத்தை நிகழ்த்திப்பார்க்கும் நோக்கம் கொண்டவை. இலக்கியம் உருவாக்கும் அடிப்படைவினாக்களையும் பிரச்சினைகளையும் முன்வைக்கும் முயற்சிகள்.
நாடகங்கள்
- வாள்
- கழுமாடன்
விஷ்ணுபுரம் நிகழ்வில் நாடகங்களைப் பார்க்க அனைவரையும் வரவேற்கிறோம்.