விஷ்ணுபுரம் விழா:இன்றைய அமர்வுகள்,நாடகங்கள்

விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கும் முதல்நாள் காலை முதல் நிகழும் இலக்கிய அரங்குகளுக்கும் நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ளவேண்டும் என வேண்டுகிறேன்.

20 இரவே விருந்தினர்கள் வரத்தொடங்கிவிட்டனர். இரா.முருகன் வந்துவிட்டார். தேவதேவன் வந்துவிட்டார். வெவ்வேறு நண்பர்கள் வந்து அறைகளில் தங்கியிருக்கின்றனர்.

இன்று டிசம்பர் 21 காலை 10 மணிக்கெல்லாம் அமர்வுகள் தொடங்கும். மூத்தபடைப்பாளிகளுடன் இளம்படைப்பாளிகளும் அரங்குகளைப் பகிர்ந்துகொண்டு வாசகர்களுடன் உரையாடுகிறார்கள். இரண்டு நாட்களில் நவீன தமிழிலக்கியத்தில் என்ன நிகழ்கிறதென்று ஒரே வீச்சில் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் இது.

இந்த அரங்குகள் கேள்விபதில் வடிவில் அமைந்திருப்பதனால் நீண்ட சொற்பொழிவுகள் உருவாக்கும் சலிப்பு இல்லாமல் மிகுந்த தீவிரமும், உற்சாகமும் கொண்ட இலக்கிய அனுபவங்களாக அமைந்துள்ளன என்பதை தொடர்ச்சியாக பங்கேற்ற வாசகர்கள் பதிவுசெய்துள்ளனர்.

இலக்கியப்படைப்புகளை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்கூட இங்கே நிகழும் புதிய எழுத்துக்களை, புதிய சிந்தனைகளை அறிந்திருக்க முடியாத சூழல் உள்ளது. இந்த அமர்வுகள் வழியாக கிடைக்கும் திறப்புகள் தொடர்ச்சியாக தமிழிலக்கிய இயக்கத்துடன் இருப்பதற்கான தூண்டுதலாக அமைகின்றன. இளம்படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இத்தகைய வாய்ப்பு இன்று வேறெங்குமில்லை.

இன்றைய அமர்வுகளில் மந்திரமூர்த்தி அழகு, கயல், வாசகசாலை கார்த்திகேயன், தென்றல் சிவக்குமார், சித்ரன், தமிழ்ப்பிரபா , மயிலன் சின்னப்பன், லாவண்யா சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். நாளை நிகழும் அமர்வுகளில் கீரனூர் ஜாகீர்ராஜா, விவேக் ஷான்பேக், இரா.முருகன், கே.சச்சிதானந்தன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

கோவை மெய்க்களம் நாடகக்குழுவின் சார்பில் வாள், கழுமாடன் என்னும் இரு குறுநாடகங்கள் 21 டிசம்பர் 2024 அன்று கோவை விஷ்ணுபுரம் விருதுவிழா அரங்கில் (எழுத்தாளர் சந்திப்பு நிகழும் சிறிய மேடையில்) இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இரவுணவுக்குப் பின்னர் நிகழவிருக்கின்றன.

விஷ்ணுபுரம் விழாவில் ஒரு நாடகமுயற்சி 

 விஷ்ணுபுரம் விருந்தினர்கள்

முந்தைய கட்டுரைமார்த்தா மால்ட்
அடுத்த கட்டுரைமதமும் ஞானமும்