நீர்வழிப்படும் புணை -(அரசூர் நாவல்கள் ) –  சக்திவேல்

1

சித்திர மாச உச்சி வெயிலில் மசக்கையான மருமகள்கள் உறங்க போக, பத்மாவதி கிரைண்டரில் ரெண்டு கிலோ மாவு அரைத்து போட்டு,  ஃப்ரிஜ்ல் எடுத்து வைத்து விட்டு, வெளி வாசல் படியில் டேபிள் ஃபேனை போட்டு கொண்டு உட்கார்ந்தாள்.

நம்ம குமாருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுதெடி,  முக்கு வீட்டு பெரியவரு மகனுக்கு இருக்கறது போல அஞ்ச அக்காளுகளா இருக்காளுங்க நம்ம தம்பிக்கு, இருக்கறது எட்டு அண்ணனுங்க… நீ தான்  பத்மா அக்காளா அவனுக்கு ஒத்தாசையா இருக்கணும்.

குணவதி வெளி திண்ணையில் அமர்ந்து பத்மாவிடம் சொல்லிவிட்டு கேட்டை திறந்து கிளம்பி சென்றாள். உள்ளேயிருந்து பெரிய மருமகள் சுகுணாவின் குரல், என்ன அத்தை அங்கே தெருவ வெறிச்சு பாத்திட்டிருங்கீங்க… ?

எங்கம்மா வந்து பேசிட்டு போச்சு, எங்க தம்பிய பாத்துக்க சொல்லுச்சு என பத்மா சொல்ல, பாட்டி போன வருஷம் இறந்து போயிட்டாங்க… என்ன சொல்றீங்க என கேட்டாள் சுகுணா. நினைவு வந்தவளாய் பத்மா ஆமா ஆமா என வாய்க்குள்ளே சொல்லிய படி பின்கட்டுக்கு எழுந்து சென்றாள்.

நேத்து இந்த மாதிரி எங்கம்மா வந்து சொல்லுச்சுடி, மருமவ கிட்ட வேற ஏது பாக்காமா சொல்லி, அவ என்ன ஏதுன்னு கேட்குறா… போன காலத்துக்கு அசந்தா அத்தைக்கு கிறுக்கு சொல்லிடுவாளுங்க என தன் சிநேகியும் அத்தை பெண்ணுமான கமலாவிடம் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தாள் பத்மா.

இது போன்ற ஒரு சம்பவத்தை வெவ்வேறு தருணங்களில் நம் உறவுக்காரர் வழி கேட்ட அனுபவம் அநேகமாக பலருக்கு இருப்பதே. அல்லதே நமக்கேவும் நடந்திருக்கும். இவ்வகையான யதார்த்தத்துடன் இணைந்த மாயத்தன்மை வாய்ந்த அம்சத்தை தான் அரசூர் வம்சம் நாவலில் நுழையும் வாசகன் முதலில் எதிர்கொள்கிறான். இலக்கியத்தில் இது மாய யதார்த்தம் என பெயர் சூட்டப்பட்டு லத்தீன் அமெரிக்காவிலிருந்து பின்நவீனத்துவத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது என வரலாறு கூறினாலும் அத்தகைய விஷயங்களின் துணையை பெரிதாக நாடாமலேயே இரா.முருகனின் உலகத்திற்குள் செல்ல முடிகிறது. மேற்கத்திய அழகியலாக பரவலாக்கம் பெற்றாலும் நம் தனி வாழ்வு தொட்டு, விக்ரமாதித்தன் கதை என பலவகையிலும் இம்மண்ணுக்குரிய அம்சங்களை எடுத்து கொண்டு அரசூர் வரிசை நாவல்கள் நகர்கின்றன.

விக்ரமாதித்தன் கதைகளை நினைவில் கொள்வது, பலவகையிலும் இரா.முருகனின் மாய யதார்த்தத்தை புரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. அங்கே வேதாளம் விக்ரமனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும், வெவ்வேறு பொருள்களான திரைச்சீலை, தலையணை, விளக்கு என ஒவ்வொன்றிலும் புகுந்து பேசி இளவரசியரை விக்ரமன் மேல் காதல் கொள்ள செய்யும். ஒரு நவீன வாசிப்பில் அந்த பொருள்களை எல்லாம் இளவரசியரின் அகம் கொள்ளும் நிலைகளின் உணர்வு நிலைகளின் வெளிப்பாடு என கற்பனை செய்து கொள்ள முடியுமென்றால் அதே விஷயத்தை இரா.முருகனின் உலகத்துக்கு பொருத்தி கொள்ளலாம். அரசூர் நாவல் உலகத்தில் வரும் முன்னோர்கள் பேசுவதும் பனியன் சகோதரர்கள் படம்பிடித்து பழுக்காத்தட்டு இசையை விற்பதும் மயில்கள் பிரிட்டனின் கார்டெல்லில் ஆடுவதும் எடின்பரோவில் கரிய கழுகு பறவைகளும் அவற்றை பார்க்கும் கதை மாந்தர்களின் மனநிலைகளை காட்டுவதாக அமைகின்றன. இந்த குறியீட்டு அர்த்தத்தை அளிக்கும் பொருட்கள் மனிதர்களின் இருப்பு, இரண்டு வாழ்க்கை நிலையில் உள்ள மனிதர்களுக்கு இருவேறு அர்த்தங்களை வழங்குவது இந்நாவல்களின் பிரத்யேக அம்சம். உதாரணமாக அரசூர் வம்சம் நாவலில் எதிர்காலத்தில் இருந்து வரும் கிராமஃபோன் இசை, ராஜாவுக்கு பழுக்காத்தட்டு ஒப்பாரியாகவும் சங்கரனின் அண்ணனும் மனநிலை பிறழ்வுக்கு அருகில் இருப்பவனுமான சாமிநாதனுக்கு தேவ கீதமாக இருப்பதை சொல்லலாம். இந்த தன்மை அரசூரின் அடுத்த பாகமான விஸ்வரூபத்தில் கச்சிதமாக பொருந்தி வந்திருப்பதை காண்கிறோம்.

 

2

 

இனி, அரசூர் நாவல்களின் கதைக்களத்தையும் அதன் வழியாக எழுந்து வரும் வாழ்க்கை பார்வைக்கும் செல்வோம். இக்கதை உலகத்தை பொறுத்தவரை வாசகன் ஒரு பார்வையாளன் மட்டுமே, முன்பின்னாக அடுக்கப்பட்ட அத்தியாயங்கள், ஒரு வம்ச கதையினை வாய்வழியாக கேட்டு ஒருவர் அடையக்கூடிய புரிதலையே முயன்று உருவாக்கி கொள்ளும்படி கூறுகின்றன. கிட்டத்தட்ட தோல்பாவை கூத்துக்காரர் ஒருவர் அத்தனை கதாப்பாத்திரங்களையும் தன் கையில் வைத்து கதை சொல்லி போகையில் கேட்கும் அனுபவத்தையே நாவல் வாசிப்பினூடாக அடைகிறோம். ஒவ்வொருமுறையும் கதை மாந்தரின் பெயர் குறித்து இன்னார் இன்னாரிடம் இவ்வண்ணம் சொல்லினார் என்றும் கவனமாக மேற்கோள் குறிகளை தவிர்ப்பதுடனூடாகவும் இரா.முருகன் இச்சுவையை சாத்தியப்படுத்துகிறார். இது செவ்வியல் கதை மரபு கொண்ட பங்கேற்பு அம்சத்தை நீக்கிவிட்டு பார்க்க மட்டுமே செய்கிறது. ஆற்றில் இறங்கி குளித்து அகல ஆழங்களை உணர்வதற்கு மாறாக கரையில் நின்று பார்வையின் பரப்பு விஸ்தீரணத்தை பார்த்து வரும் ஆ என்ற வியப்பொலியை ரத்து செய்துவிட்டு அட, இவ்வளவு தான், இவ்வளவே தான் என்ற முதுகிழவரின் கொட்டாவி விட்டு சப்புக்கொட்டும் உணர்வை அளிக்கிறது.

மேலும் பார்வையின் பரப்பாக விரியும் கோணம் இக்கதை மாந்தர்களின் வாழ்க்கையை எதிர்கொள்ளும் முறைக்கு உவமானமாக அமைந்தும் விடுகிறது. அதே நேரம் இரா முருகனின் அணுகுமுறையையும் விளக்குகிறது. ஒரு கதை என்பது தொடக்கம் – சிக்கல் – தீர்வு என்ற கட்டமைப்பை கொண்டிருக்கிறது. தீர்வு பகுதிகள் பண்டைய நீதி கதைகளில் திட்டவட்டமாக முன்வைக்கப்படும் போது நவீன இலக்கியம் தீர்வின் பல சாத்தியங்களை திறந்து காட்டுவதாக தன்னை உருமாற்றம் செய்து கொள்கிறது. சிக்கல் என்ற அம்சம் கதைகளில் எப்போதும் எக்காலத்தும் மாறததாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நிகழ்வுகளின் வழியாக உருவாகும் அனுபவத்தின் தன்மைகளை அறிய முற்படுவதையே இலக்கியத்தில் சிக்கல் என்று காண்கிறோம். அப்படி ஒரு அனுபவம் எழுத்தாளனால் தேர்வு செய்யப்படும் அது அவனது கற்பனையாலும் வாழ்க்கை பார்வையாலும் செறிவூட்டப்படுகிறது. குறிப்பிட்ட அப்பிரச்சினை குறித்து சாத்தியமான பல திசைகளிலும் சிக்கலுக்குரிய அனுபவத்தை விரித்தெடுக்கிறான். இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம்.

அசோகமித்திரனின் விமோசனம் கதையினை எடுத்து கொண்டால், சென்னையின் மத்தியதர வர்க்க ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் இளம் தம்பதியருக்கிடையில் ஏற்படும் ஊடலால் கணவன் தன் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டது என கருதி சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறான். முடிவில் அப்பெண் தனியாக தன் இளம் பிள்ளையுடன் வாழத் துவங்குகிறாள்.  அக்கதையின் நிகழ்வுகள் என்று பார்த்தால் இவ்வளவு தான்.  இச்சம்பவத்தை தொடும் அசோகமித்திரன் என்ற கலைஞனின் கண், அங்கிருந்து ஆண் – பெண் உறவின் விரிசலின் எல்லை, பெண்ணுக்கான விடுதலை என பல தளங்களுக்கு தன்னை உயர்த்தி கொள்கிறது. ஆனால் அக்கதைக்குள் இருப்பது போன்ற மத்தியதர வர்க்கப் பெண்ணின் நினைவுகளில் அந்த விஷயம் அவ்வளவு விரிவாக விரிய போவதில்லை. அவளை பொறுத்தவரை, வீட்டுக்காரன் ஓடிப்போய் விட்டான், சில நாள் தவிப்பாக இருந்தது, அப்புறம் தன் கையை தனக்கு உதவி என வாழ்ந்தாகி விட்டது என்றவாறு இருப்பதற்கே வாய்ப்பு மிகுதி. நினைவுகளின், அறிதல்களின் இன்பதுன்ப சுமையை முடிந்தவரைக்கும் குறைத்து எடையற்று ஒரு கைப்பிடியாக வைத்து கொள்ள விரும்புவதே சாமானியர்களின் வழக்கம். இதனால் தான் நாம் அசோகமித்திரனை சாமானியர்களை தொடும் அசாதாரணத்தை எழுதியவரென்கிறோம்.

இப்போக்குக்கு மறுதரப்பாக, சாமானியர்களின் கண் வழியாகவே அவர்களின் வாழ்க்கையை காட்டுவதையும் அத்தியாயங்களை ஒன்றுடனொன்று கோர்ப்பதன் வழியாக எழுதப்பட்ட வரலாற்றின் மீது உடைவை உண்டாக்கி பெருமிதங்களை, விழுமியங்களை கேள்விக்கு உள்ளாக்கும் புனைவுலகமாக இரா.முருகனின் அரசூர் வம்ச வரிசை நாவல்கள் இடம்பெறுகின்றன. ஒருவகையில் இரா.முருகனையே நாம் சரியான அர்த்தத்தில் சாமானியர்களை எழுதியவர் என வரையறுக்கலாம் என தோன்றுகிறது. சாமானியர்களின் கண் வழியாக வாழ்க்கை எழுதும் போது முதலில் காணாமலாவது சிக்கல் என்ற அம்சம் தான். அவர்களது வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை என்பதல்ல இதன் பொருள். பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு ஆசுவாசப்பட வேண்டுமே தவிர, அவற்றின் ஊற்றுமுகங்களை பல்பரிமாணங்களை தேடி அறிவது அங்கு பொருட்டல்ல. பிழைத்து கிடந்து மூவேளை சோறும் பிள்ளைக்குட்டியும் இரவுக்கு ஒரு துணையும் என வாழ்ந்து செத்தால் போதும். சுகஜீவனம் சொர்க்க பிராப்தி என்ற கொள்கை. நீர்ப்பூச்சி போல வாழ்க்கையை கடக்கும் இவர்களை பிரதிநிதித்துவப்படுத்தவது சரியாக உயர்தர மத்தியதர வாழ்க்கைமுறை தான். இந்நாவல் வரிசையில் வரும் முதல் தலைமுறை சங்கரன் முதல் மூன்றாம் தலைமுறை சின்ன சங்கரன் வரை அப்படியான நிலையில் இருந்தாலும் சங்கரன் காலத்தில் இருந்த புகையிலை கடை வியாபாரம் என்ற நிலையற்ற தன்மை, சின்ன சங்கரன் காலத்தில் மத்திய அரசு ஊழியர் என்று நிலைத்தன்மையை அடைவது தவிர பொருளாதார உறுதி கொண்டது.  இன்னொரு இழையாக வரும் அம்பலப்புழை குடும்பத்தின் ஜான் கிட்டாவய்யர் கொண்டு கொச்சு தெரிசா வரைக்குமும் இதனை பொருத்தி கொள்ளலாம். மூன்றாவது குடும்பமான வைத்தியநாதனின் வாரிசு வழியில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இதே தான் கதை.

ஓரளவு நிலையான பொருளாதார கொண்ட, சிக்கலற்ற வாழ்க்கை கதைகளில் சொல்ல எஞ்சியிருப்பது என்ன ? சிக்கலாகும் தருணங்களை கடந்து வரும் சாமானியர்களின் உளநிலையை சொல்ல பரந்த களம் உருவாகி வருகிறது. எப்படி உயர் அழுத்த மின்சாரம் போல் வாழ்க்கையை நிலைகுலைய செய்யும் அனுபவங்களை பட்டும்படாமலும் தாவித்தாவி கடக்கிறார்கள் காட்ட முடியும். யதார்த்தம் போலவே அதன் மீது ஊடுருவும் மாய அனுபவங்கள் தாவித்தாவி தப்பித்து கடந்து வரும் அம்சத்தை மிக சிறப்பாக காட்டுகின்றன. நாம் பார்த்திருப்போம், சிலருக்கு பேய் பிடித்திருப்பதாக சொல்லப்படும் – அவருள் பேய் இருக்கும் குறிப்பிட்ட காலம் வரை அவரது நடத்தைகளில் வித்தியாசம் புலப்படும் – பின்னர் சாமியோட்டப்படும். சகஜ நிலைக்கு வந்து எதுவுமே நிகழாதது போல எல்லோரும் இருப்பர். இத்தகைய அனுபவங்களில் பங்குபெற்றவர்களை கேட்டால் ஒரு விளங்க முடியாமையை தெய்வம் என்ற மாயத்தின் மூலம் அவர்கள் பதிலீடு செய்து உள்ளச்சமனிலையை அடைவதை காணலாம். அவர்களுக்கு உளவியல், சமூகவியல், இலக்கியம், ஆன்மீகம் என அவ்வனுபவத்தை ஆராய விருப்பம் கிடையாது. தப்பித்தோமா, அலுங்கல் குலுங்கல் இல்லாமல் வாழ்வு நகர்ந்தால் போதும். அந்த மனிதர்களிடம் விளங்கியும் விளங்காமலும் என கனவு போன்ற குழப்ப சித்திரமே வாழ்க்கை குறித்து நீடிக்கும். அதனை மாய யதார்த்தவாதம் என்ற கருவியை கொண்டு அத்தகு மனநிலைகளை காட்டிவிடுகிறார் இரா.முருகன். இவரது கதைக்கூறலின் இன்னொரு பண்பான சிதறலான கூறுமுறையை இத்தன்மையை காட்ட மிக பயனுள்ள வடிவம்.  இந்நாவல்களை படித்து முடிக்கையில் நீர்த்துளி ஒன்று தரையில் பட்டு சிதறி எந்த ஒழுங்கும் இல்லாது ஒழுங்கற்ற ஒழுக்காக முடிவு எட்டாப்படாத பொருள் அளிக்காத தன்மையை உணர முடிந்தது.

மறுபக்கம் சிதறி பரந்த தன்மை மாயத்துடன் இணைந்து வருகையில் வரலாறு என்றும் வம்ச வழக்கம் என தொடரும் மதிப்பீடுகள் ஒன்றையொன்று சந்தித்து கொள்ளும் போது ஏற்படும் முரண்பாடுகளை, ஏற்புகளை, அபத்தங்களை காணவும் வழிசெய்கிறது. அது சாய்கோணத்தில் ஆற்றுநீர் மேல் எறியப்படும் தட்டையான கூழாங்கல் தத்தித் தத்தி சென்று அக்கரையை அடைவது போல இருக்கிறது.

3

பின்நவீனத்துவ அழகியலை கொண்டிருக்கும் அரசூர் நாவல்கள் வரலாற்றையும் அவ்வழகியல் நெறி சார்ந்து தோக்கி அமைகின்றன. இதன்படி இந்நாவல்கள் எப்படி சிதறிப்பரந்து விரிந்து மையமற்ற தன்மையுடன் நோக்கமின்மையை பறைசாற்றி கொண்டிருப்பது போல வரலாற்றையும் விழுமியங்களை மதிப்பற்று அன்றாட சம்பவங்களின் பின்னணியில் வைத்தே அணுகுகின்றன. அரசூர் வரிசை நாவல்களை பொறுத்தவரை தனிமனிதர்களின் அன்றாடத்திற்குள் நுழையும் வரலாறே பேசப்படுகிறது. இது எழுதப்பட்ட ஆய்வு ரீதியான நவீன வரலாற்றெழுத்துக்கு மாறாக அதன் இடைவெளிகளில் ஒரு சம்பவம் நிகழ்ந்த காலத்தில் அது எப்படி இருந்திருக்கும். சாமானிய தளத்தில் அந்நிகழ்வு எதிர்கொள்ளப்பட்டிருக்க சாத்தியமான முறையை எழுதி காட்டி அதன் மேல் கேள்விகளை எழுப்புகிறது. அத்தனை உறுதியான விழுமியங்கள் ஏதும் இல்லை என காட்டியபடியே செல்கிறது.

 

4

அரசூர் வம்சம் நாவல் வரிசையை எடுத்து கொண்டால் வம்சம் என்ற சொல்லுக்கு நாம் தரும் அர்த்தங்களில் இருந்து தான் தொடங்க வேண்டி இருக்கிறது. வம்ச வரிசையை கேட்கும் போது முதலில் சொல்லப்படுவதும் நமக்கு கிடைக்கப்பெறுவதும் பெருமித உணர்வு. நம் வம்சம் எப்படிப்பட்டது என ஆரம்பித்து ஆண்ட பரம்பரை கதையோ அல்லது அடிமைப்பட்டு கிடந்து மீண்டெழுந்த வீர பிரதாபமோ உணர்ச்சிகர பிரச்சாரமாக கிடைக்கிறது. தனியே வீட்டு பெரியவர்களின் சொற்களின் மட்டுமல்ல, சங்கம் வைத்து கட்சி கட்டி வளர்க்கப்படும் உணர்வு அது. சமூகமாக மிகை பெருமிதங்களில் திளைக்கும் மனநிலை மீதுதான் நாசூக்காக முதல் கல் விட்டெறியப்படுகிறது. பிரிட்டீஷார் பென்ஷன் வாங்கி கையாலாகாத ஜமீன்தார் ராஜாவிடம் அவரது ராணி பக்கத்து வீட்டு புதுப்பணக்கார பையன் மாடியில் இருந்து என்னை பார்க்கிறான் என முறையிடுவதில் ஆரம்பிக்கிறது அரசூர் வம்சம். இந்த சமூக விமர்சனத்தன்மையும் நிலை நிறுத்தப்பட்ட வரலாற்று மொழிதலுக்கும் இலக்கிய போக்குக்கும் மாற்றான உலகத்தையே இரா.முருகன் தன் புனைவுலகாக கொண்டிருக்கிறார்.

இந்த கண்ணோட்டத்தில் வாசித்து எடுக்கையில் அரசூரில் ராஜா வரும் பகுதிகளை வீழ்ச்சியடைந்த அல்லது சாமானியர்களின் பார்வையில் தானும் ஒரு அற்ப ஜந்துவாக தெரியும் அரசின் உருவகமாக வாசித்து எடுக்கலாம். நாவலில் ஓரிரவு குதிரை வண்டியில் ஊர்வலம் சென்று மட்ட மல்லாக்க ஊரார் சிரிக்கும்படிக்கு சுமந்து வரப்படும் ராஜாவின் காட்சி நல்ல உதாரணம். அப்படி விவஸ்தைக்கெட்ட ஆட்சியாளர்களை சமகாலத்திலும் பார்க்க கிடைக்கிறது தான். ராஜாவின் பக்கத்துவ வீடான புகையிலை கடைக்காரர் சுப்ரமணிய ஐயரின் வீடு பற்றி எரியும் போது கமுக்கமாக வீட்டில் படுத்தப்படிக்கு அபான வாயு தொல்லையை பற்றி சிந்தித்தப்படி நித்திரை செல்பவர் ராஜா. ஐயர் மனு எழுதிப்போட்டு பிரிட்டீஷ் துரையை வரவழைத்து விசாரிக்கையில் செய்யாத குற்றத்திற்கு பாதி மாளிகையை – அப்படி சொல்லப்படும் பழைய கல்கட்டிடம் – புகையிலை கிட்டங்கியாக குத்தகைக்கு விடநேரும் அதிகாரமற்றவர். ராஜா அன்றைக்கிருந்த நோய்த்துப்போன இந்திய பாரம்பரிய நிர்வாக அமைப்பின் பிரதிநிதி.

பக்கத்து வீட்டுக்காரன் என குறிப்பிடப்படும் சுப்ரமணிய ஐயரின் குடும்பத்தின் கதையையே அரசூர் வரிசை நாவல்களின் மைய பரம்பரை சரடு. ஐயரின் மகன் சங்கரனும் அவனுக்கு மனைவியான பகவதிக்குட்டியின் பெண் வம்ச வழியும் நான்கு தலைமுறைகளுக்கு பின் வாழ்ந்து போதீரே நாவலில் சங்கமிக்கும் போது நாவல் வரிசை நிறைவு பெறுகிறது. அரசூர் வம்சம் நாவலில் சங்கரன் – பகவதிக்குட்டியை பெண் பார்த்து திருமணம் நடத்தி இல்லறம் நடத்தி ஆண்டுகள் சில கழிந்து மகன் பிறந்து விளையாட்டு பருவத்தில் பள்ளிக்கு செல்வதுடன் கதை முடிகிறது. இக்கதைக்கு குறுக்கு நெடுக்குமாக ராஜாவின் கதையும், மனப்பிறழ்வு கொண்ட அண்ணன் சாமிநாதனின் வாழ்வும் மரணமும், சுப்பம்மா கிழவி, சுந்தர கனபாடிகள், ஜோசியர் அண்ணாசாமி ஐயங்கார், சங்கரனின் மெட்ராஸ் பயண அனுபவங்கள், மெட்ராஸில் தூரத்து உறவினான வைத்தியநாதனின் குமஸ்தா வாழ்க்கை, சங்கரனின் கப்பல் பயண வியாபார அனுபவங்கள் என பின்னல் விரிகிறது.

மறுமுனையில் பகவதிக்குட்டியை மையம் கொண்டு அவளது மூன்று அண்ணன்மாரும் அண்ணிகளும், மூன்றாவது அண்ணன் கிட்டாவய்யன் ஜான் கிட்டாவய்யனாக கிறிஸ்தவத்திற்கு மாறுவது, சாவக்காட்டு பிராமணனின் ஏழையாக இருந்து புதையல் கிடைத்து புதுப்பணக்காரனாவது, வயசனின் அந்தரத்தில் பறக்கும் சாகசங்கள், வெடிவழிப்பாட்டு காரனின் துண்டான விரல் ஒன்றுக்கு நான்காய் முளைத்து வளருவது, பிஷாரடி வைத்தியர் மருத்துவம், சாமிநாதனின் குருக்கள் பெண் – பகவதியை பார்ப்பது என எதிர்புரி ஒரு பின்னல். இரண்டின் இணைவுடன் அரசூர் வம்சம் நிறைவு பெறுகிறது.

இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்டிருந்தாலும் ஒற்றை கதை சரடில் கோர்க்கப்படாமல் சிதறலான தன்மையில் இணைக்கபடுகிறார்கள். விளைவாக சில பகுதிகளை நீக்கி விட்டால் கூட அப்படி ஒரு பகுதியின் இழப்பு உணரப்படுவதில்லை. அதே நேரம் வாசிப்பவனாக ஒன்றுடனொன்று இணைத்து கொண்டால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமானமான அந்தஸ்து கொண்டவர்களின் வாழ்க்கைகளை காண்பதன் வழியாக அவை ஒன்றையொன்று பாதிப்பதை காண முடிகிறது.  எப்பகுதியை வெட்டி எடுத்தாலும் பெரிதாக இழப்பில்லை என்ற நெகிழ்வை உண்டாக்கும் சிதறல் கதைக்கூறு முறை, எல்லா சம்பவங்களுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளித்து விக்ஷேத்தன்மையை காலி செய்து எட்ட நின்று எட்டி பார்க்கும் உணர்வை அளிக்கிறது.

மரபாக வைதீக செய்ய வேண்டிய பிராமண குடும்பத்தில் பிழைப்பின் பொருட்டு சுப்ரமணிய ஐயரின் அப்பா, புகையிலை வியாபாரத்தில் இறங்குகிறார். சுப்ரமணிய ஐயர் அவ்வியாபாரத்து நிலைநிறுத்துகிறார். சங்கரன் வியாபாரத்தை பெருக்கி நிலைத்தன்மையை அடைகிறான்.

சங்கரனின் அண்ணன் சாமிநாதன் வேதம் படிக்கிறான். தன்னை விட முந்நூறு வயது மூத்த பெண்ணை மந்திரத்தால் கட்டி சம்போகத்திற்கு அழைத்து மன பிறழ்வு கொண்டவன் என்று பிறரால் எண்ணப்படுபவன். சங்கரனின் குடும்பம் கைவிட்ட மரபான வைதீகத்தின் தரப்பாக, சாமிநாதனை பார்க்க இடம் இருக்கிறது. முந்நூறு வயது பெண்ணை அழைத்தல் என்பதை தன் காலத்திற்கு ஒவ்வாத மரபான விஷயங்களை கைக்கொண்டதாக பார்க்க இடமிருக்கிறது. இதனை வலுவாக்க சாமிநாதன் கேட்கும் பழுக்காத்தட்டு இசை எனப்படும் கிராமஃபோன் விற்கும் பனியன் சகோதரர்களுடான சாமிநாதனின் பழக்கமும் இணைந்து கொள்கிறது. நிகழ்காலத்தில் கால் நிலைக்காது, வருங்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையில் பயணிப்பவன் என்று சாமிநாதனை சொல்லலாம். ஒருபக்கம் வேதமும் மறுபக்கமும் ஆங்கில அறிவும் பெற்று, சுப்ரமணிய ஐயரின் வீட்டுமாடியில் தனியாக வசிக்கும் சாமிநாதன் தன் குடும்பத்தினருக்கு புரியாத விஷயங்களை பேசுவதால் பிறழ்வு கொண்டவனாக எண்ணப்படுகிறான் என்பது ஒரு கோணம். மறுபக்கம், தனக்கு உணவு கொண்டுவரும் கணவன் ஓடிப்போன சுப்பம்மா கிழவியிடம் தகாத வகையில் காமம் சார் அத்துமீறலில் ஈடுபடுவது அப்பிறழ்வை யதார்த்தத்தில் நிறுவவும் செய்கிறது.

அதேநேரம் சாமிநாதனை சங்கரனின் இரட்டை ஆளுமையாக, மறைவில் இருக்கும் அகமாக பார்ப்பதற்கான வாய்ப்பை புதுமனைவி பகவதியை சாமிநாதன் குருக்கள் பெண்ணை அழைப்பது போல ஊஞ்சலில் ஆடியவாறு சம்போகத்திற்கு அழைக்கையில் தன்னை சாமிநாதனாக உணரும் சங்கரனின் எண்ணத்தை வெளிப்படுத்துவதனூடாக நாவல் ஏற்படுத்தி தருகிறது.  இதற்கு நிகரானது சங்கரன் எரிந்த வீட்டில் தன் அண்ணன் சாமிநாதனின் அறையை நோக்கிய மாடிப்படியில் பாதி வரை ஏறி உடைந்து போன படியில் அந்தரத்தில் நிற்கும் தருணம். அச்சம்பவத்தை எதிர்கொள்ள முடியாமல் பாதி வழியில் நின்று திரும்பும் சங்கரனையே அங்கு பார்க்கிறோம். எனவே தான் உடனடியாக சென்னப்பட்டணம் வந்து வியாபாரத்தை பெருக்க தீவிரமாக ஈடுபடுகிறான். இறப்பின் தீவிரத்தில் இருந்து தப்பித்தலாக வியாபாரத்தில், லௌகீக வாழ்வில் முழுமூச்சாக தன்னை செலுத்தி கொள்கிறான். சங்கரன் என்றில்லை நாவல் வரிசையில் வரும் பலரும் தீவிர கணங்களில் நீர் மேல் இலையென நழுவியபடி இருக்கிறார்கள். இரா.முருகனின் உலகத்தில் இருந்து தீவிர கணங்களின் மேலான அறிதலுக்கு பதிலாக வாசகன் தன் தப்பித்தல்களின் முயற்சிகளை நினைவோட்டி பார்த்து கொள்ளலாம்.

சென்னைக்கு செல்லும் சங்கரனில் முதன்மையாக இரண்டு நிகழ்வுகள் முக்கியமானவை. இரவில் ராவுத்தருடன் சென்று கப்பலில் ஏறி வியாபாரம் செய்யும் தருணம் அரசூர் வம்சம் நாவலின் சிறந்த அத்தியாயங்களில் ஒன்று. இரவு வெள்ளைக்காரிகளுடன் களியாடி மயங்கி எழுந்து முஸ்லீம் குப்பாயத்தில் இருக்கும் சங்கரன், தஸ்தகீர் ராவுத்தர் கூப்பிட்டவுடன் வேலைக்கார அடியாளாக மாறி வெள்ளையரிடம் கையெழுத்து வாங்கி தாள்களை சும்மாடு கட்டி தலைமேல் கட்டி வைத்து கொள்வது ஒருவனின் அடையாளம் என்பது எத்தனை எளிதாக களைந்து வீசப்படக்கூடியது என்பதை காட்டும் சிறப்பான பகுதி. குலம், கோத்திரம் என்ற பெருமிதங்கள் தப்பி ஓடுகையில் துண்டிக்கப்பட்ட பல்லிவால் போல என தோன்ற செய்யும் பகுதி அது.  அடையாளங்களின் இத்தகு உள்ளீடின்மையை அரசூர் வம்சம் நாவலின் தொடர்ச்சியான விஸ்வரூபத்தில் இடம்பெறும் மகாலிங்கய்யனின் வாழ்க்கை வழியாக விரிவாக காண்கிறோம்.

சென்னையில் வைத்தியநாதனின் வீட்டில் தங்கும் சங்கரனின் அனுபவங்களும் சுவாரஸ்யமானவை. ஒரு வியாபாரியும் துறைமுகத்தில் வேலை பார்க்கும் கிளர்க் குமஸ்தனும் பரஸ்பரம் தங்கள் உயர்வுகளை நாசூக்காக வெளிப்படுத்தி கொள்வதும் நவீன வாழ்க்கைக்கு மாறி கொண்டே பழைமையின் சாயல்களை ஒப்புக்கு செய்யும் சடங்குகளின் வழியே காண முடிகிறது.  நவீன உள் வருவதன் அம்சமாக காலை நேரத்து காப்பி குடியையும் ஒத்தை தர்பையுடன் சூரிய கிரகணத்தில் சாந்தி பரிகாரம் செய்வதையும் காட்டும் பகுதியை சொல்லலாம். அதற்கு அடுத்த வரும் சங்கரனின் இரவு கப்பலேற்றம் கூறப்படுவது, பொருளாதார நிலையும் இருக்கும் சூழலும் மனிதரின் அடையாளங்களை ஒன்றுமில்லாக்குவதோ அல்லது உள்ளீடிடற்ற ஒன்றாக மாற்றுகையில் மனிதர்கள் மேற்கொள்ளும் பாவனைகளை காட்டும் நுண்பகடி என்றே சொல்ல வேண்டும்.

நகரத்திற்கு சென்று தொழில் நுணுக்கங்களை கற்று வரும் சங்கரனுக்கு துணையான பகவதி அம்பலப்புழையில் கேரள கிராமத்தில் இருக்கும் வாழ்க்கையும் காட்டப்படுகிறது. பகவதி தன் மூத்தார் சாமிநாதன் மந்திரத்தால் கட்டிவைத்து இழுத்த குருக்கள் பெண்ணை அம்பல தொழச்சென்று ஆவி ரூபமாக சந்திக்கிறாள். குருக்கள் பெண்ணை பகவதி சந்திக்கும் தருணம் கனவும் நினைவும் கலந்த மயக்கத்தருணமாகவே காட்டப்படுகிறது. ஒருவகையில் அச்சந்திப்பை பகவதிக்கு வீட்டின் மறைவான உண்மைகள் தெரியவருவதன் அதிர்ச்சி என்று அர்த்தப்படுத்த வாய்ப்புண்டு. வெடிவழிப்பாட்டுக்காரனின் துண்டுப்பட்ட விரல்கள் வளருவதை தாக்கப்பட்டதால் ஏற்பட்ட வன்மத்தின் வளர்ச்சியாகவும் பகவதியை நோக்கி வருவதை பழி தீர்க்கும் முயற்சி என்றும் கற்பனை செய்து கொள்ள இடமுண்டு. இதன் விளைவாக ஒருவாரம் காய்ச்சலில் இருக்கையில் தன் சொந்த வீட்டில் இருக்கும் உறவு மீறல் சார்ந்த அம்சங்களை மயக்க நிலையில் கண்டு தெளிவதாக வருகிறது. பகவதியின் இளவயது அனுபவமான இது, பிற்பாடு வரும் நாவல்களில் பகவதி வாழ்ந்த முதிர்ந்த காலத்தில் நினைவு கூறலாக கூட வருவதில்லை. நினைவுகூர விரும்பாத கெட்ட கனவை போல அந்நினைவை மறந்துவிடுகிறாள் பகவதி.

பகவதி தாக்கப்படுவதற்கான காரணமாக அமைந்த மூன்றாம் அண்ணனின் கிட்டாவய்யன் மாமனார் வயசன் அந்தரத்தில் பறந்து தோட்டத்திலும் கொடி மரத்திலும் மூத்திரம் கழிப்பது அவர்களின் குடும்பத்தின் பிரிவினைக்கு மறைமுகமான காரணமாக உள்ளது. அரசூர் வம்சம் நாவலில் மாய அம்சம் யதார்த்தத்துடன் கச்சிதமாக இயைவது வயசன் கதாப்பாத்திரத்தில் தான். தரையில் கால் பாவாமல் நடக்கிறான் என்பதே வயசனின் பறத்தலுக்கான விவரணை. கால் பாவாமல் நடத்தல் ஒருவருக்கு சித்தம் தெளிவில்லை என தெரிவிக்க பயன்படுத்தப்படும் சொல்லாட்சி. இங்கே வயசனுக்கும் அப்படி தான் இருக்கிறது. அவர் கொடிமரத்தின் மேல் பறந்து மூத்திரம் கழிப்பது, ஊரின் பொது நடைமுறைகளுக்கு எதிராக செய்யும் செயல்கள் என்ற வாசிப்பை கொடுப்பது,, ஊருக்கு எதிரான செயலை சாமானியர்கள் அவமரியாதைக்குரிய இழி செயல்களாக, புத்தி கெட்ட நடவடிக்கைகளாக எடுத்து கொள்ளப்படுகின்றன. அன்றாடத்திலேயே அவன் புத்தி கெட்ட பயங்க என்று அப்படிப்பட்டவர்களை திட்டுவதை காணலாம். மிக எளிய விஷயமான இதனை மாயம் மூலம் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன ? என்ற கேள்விக்கு பொதுவாக அத்தகு விஷயங்களை மறைத்து மறைத்து சொல்லிக்கொள்ளாமல் இருக்கவே மனிதர்கள் விரும்புகிறார்கள். இன்னொரு பக்கம், இப்படி மாயத்தை சேர்ப்பது அத்தகைய பாசாங்கான நடவடிக்கைகள் மேல் பரிகசிக்கும் சிரிப்பை வீசுகிறது.

வயசனின் மருமகனான கிட்டாவய்யனின் கதை அடுத்து வரும் நாவல்களின் வரிசைக்கு முகாந்திரமாக விரிவாக தொடங்கி வைக்கப்படுகிறது. கிட்டாவய்யன் சமையல் செய்து போடும் தேகண்ட பிராமணனில் இருந்து ஜான் கிட்டாவய்யனாக மாறி ஓட்டல் வைத்து சொத்து பிரிப்பதுடன் அரசூர் வம்சம் நாவலில் அவனது கதை நிறைவடைகிறது. கிட்டாவய்யனில் முக்கியமானது சாவக்காட்டானை ஏழையாக அடித்து புறத்தாக்கியதும் அதே சாவக்காட்டு மனிதன் புதையல் பணம் கிடைத்து செல்வந்தனாக அவனிடம் கும்பிடு போடும் நிலையே முக்கியமானதாகும். கப்பலில் கரைந்தழியும் சங்கரனின் அடையாளங்கள் போலவே ஜான் கிட்டாவய்யனும் நடந்து கொள்கிறான். நகரமோ, கிராமமோ ஊரில் பெருமிதமும் உள்ளே பிழைப்புக்காக அலைச்சலுற்று சந்தர்ப்பவாதிகளாக இருப்பதை காட்டுவதாக அமைகிறது. ஒருவகையில் சமூகத்தின் புறச்செயல்பாடுகளின் மேல் மனம் போடும் போலி பாவனைகளை கூறுவதாக அரசூர் வம்சத்தின் பெரும்பான்மை கதாபாத்திரத்தின் இயல்பாக இருக்கிறது. ஒரு தருணத்தில் ஒருவருக்கு தோன்றும் முதல் கணத்துக்கு எண்ணத்திற்கு அப்பால் கதைமாந்தரின் உரையாடல் நேரடியாக நகர்த்தப்படுவதில்லை. அதற்கப்பால் நுட்பமான அக இயக்கத்தை சொல்ல வருகையில் மாயம் செய்யும் மூத்தோர்களும் முத்தக்குடி பெண்டுகளும் தேவதைகளும் பலரும் வந்து சேர்கிறார்கள். இத்தன்மை அரசூர் வம்சம் நாவலில் தேவைக்கு அதிகமாக திகட்டுமளவுக்கு இருப்பதையும் பின்வரும் வரிசை நாவலில் கதை மாந்தர்களின் கனவுகளை குறிப்பதற்கு மட்டுமே என்று அளவுடன் கச்சிதமாவதை அவதானிக்க முடிகிறது.

பகவதியின் அம்பலப்புழை குடும்பம் ஒருபக்கம் என்றால் சங்கரனின் அரசூரில் ராஜா உடன் பேசும் முன்னோரையும் வருங்காலத்தில் இருந்து பனியன் சகோதரர்களையும் புஸ்தி மீசை கிழவன் மருதையனின் இறப்பும் கவனிக்க வேண்டியவை. அசம்பாவிதமான மரணத்தை சந்திக்கும் சாமிநாதனுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. புஸ்தி மீசை கிழவனின் இறப்பு கோலகலமாக கொண்டாடப்படுகிறது. பெரியவரின் இறப்பு, ராணிக்கு தான் அப்பாவின் இழப்பாக துக்கப்பட இருக்கிறது. ராஜா முதல் குடும்பத்தினர் வரைக்கும் சந்தோஷம் களைக்கட்டுகிறது. கிழவனின் இறப்பில் நன்றாக சாப்பிட்டு, பனியன் சகோதரர்களை கூப்பிட்டு புகைப்படம் எடுப்பதும் வேலைக்கார பெண்ணை வடிவாக நிற்க வைத்து ஃபோஸ் கொடுக்க நிற்க வைத்து லகரி செய்வது என இறப்பையும் அது குறித்த சடங்குகளையும் ஒரு கௌரவ பாராட்டலாக ஆக்கி கொள்ளும் மனநிலையாக காட்டும் பகுதியாக அதனை வாசிக்கலாம்.

அப்பனாரின் இறப்புக்கு போன இழவில் தான் ராணிக்கு சன்னதம் வந்து பக்கத்து புகைவீட்டிற்கு தீ வைப்பதை பற்றி பேச்செடுத்து ராஜாவை அதிர்ச்சியடைய வைத்து சப்பாடு நெஞ்சுக்குள் இறங்காது ஊவா முள்ளாக நிற்க வைக்கிறாள் ராணி.  ராஜாவுக்கு ராணி மேல் சந்தேகம் இருந்தாலும் தீ வைத்ததற்கு ராணி பொறுப்பல்ல என முன்னோர் சொல்வதும் பற்றாக்குறைக்கு பகவதியுடன் சிநேகமாகும் ராணியை பார்க்கையில் அந்த ஐயம் எந்த தாக்கத்தையும் நாவலுக்குள் ஏற்படுத்தவில்லை. அதே நேரம் ராணியின் மிடுக்குக்கு குறைவுமில்லை.

ராஜாவுடன் பேசும் முன்னோர்கள் மரபின் குரலாகவும் அவர்கள் கள்ளுத்தண்ணி கேட்பதும் ராஜா கொடுக்காமால் இருப்பதும் மாறிவரும் சூழ்நிலையில் முன்னோரின் குரல்கள் மதிப்பற்று போவதை காட்டுவதாக வாசிக்கலாம். பனியன் சகோதரர்களும் பழுக்காத்தட்டு இசையும் வருங்காலத்தில் இருந்து வருவது சுவாரஸ்யமான கதையாடலாக நின்று பெரிதாக வளர்ச்சியடையவில்லை என தோன்றுகிறது.

சங்கரனின் குடும்பத்தில் இருந்து தனித்தனியாக வந்து உதிரியாக மறையும் சுப்பம்மா கிழவி முக்கியமான கதாப்பாத்திரம். கணவன் ஓடிப்போன விதவையாகாத இரண்டாம் நிலையில் இருக்கும் சுப்பம்மாவின் வாயில் முத்தக்குடி பெண்டுகள் இறங்கி குளிக்கும் பெண்டீரை ஒளிந்திருந்து பார்க்கலாகுமா ? என்ற கேள்வியும் வாரணம் ஆயிரம் பாடி பகவதியை வாழ்த்தி பாடுவதும் குருக்கள் பெண் அம்பலப்புழை ஆலயத்தில் வந்து மன்றாடுவதும் வெவ்வேறு வகையில் மையக்கதையை பிளந்து செல்கிறது. மூத்தகுடி பெண்டுகள் என்பதை சுப்பம்மா சொல்வது அவளது ஒறுக்கப்பட்ட சுதந்திரத்தின் மறு வெளிப்பாடாக காண வாய்ப்புண்டு. அதே நேரம் ஜோசியர் மூலம் யந்திரம் வைப்பது தன் மன இச்சைகளுக்கும் சமூக கட்டுப்பாட்டின் அழுத்தங்களின் இருந்து விடுபடவும் என்றும் வாசித்து கொள்ளலாம். ஒருகட்டத்தில் அவற்றின் அழுத்தம் தாளாமல் சுப்பம்மா காசிக்கு சென்று ஹரித்வார் அடைவதுடன் அவளது கதை முடிகிறது.

சுப்பம்மா சாமிநாதனின் இறப்பால் நோய்வாய்ப்பட்ட கல்யாணி அம்மாளை பார்த்து கொள்ள நின்றுவிடும் போது சுப்ரமணிய ஐயரின் வாயில் வெளிப்படும் மூத்தக்குடி பெண்டுகள் பெண்களின் அந்தரங்க உலகத்திற்குள் நுழைந்துவிட்ட ஆணின் செயல்பாடு எனவும் படிக்க இடம் தருகிறது. அதற்கு வலுசேர்ப்பதற்காக சங்கரன் முதல் ஜோசியர் வரை அனைவரும் கொட்டக்குடி தாசியை நோக்கி  செல்வது அமைகிறது. இறுதியில் கல்யாணி அம்மாள் இறப்பதற்கு முன் புது மருமகளிடம் வாய்ச்சதும் வந்ததும் எல்லாம் அலையப்பட்டதுகள் என சொல்லிவிட்டு போகிறாள்.

அரசூர் வம்சத்தில் வெறும் தாசியாக வரும் கொட்டக்குடி மோகனவல்லி அடுத்த நாவலில் கொட்டகுடி மாதாவாக மக்களால் கொண்டாடப்படும் நிலைக்கு உயர்கிறாள். பற்றாக்குறைக்கு ஜோசியருக்கு வெண்பா எழுதி தரும் அவளது தமிழறிவு, நம் பெருமித உணர்வுகளில் மேல் வீசப்பட்ட சூரை தேங்காய் போல் பல் இளிக்கிறது.

இவர்கள் இல்லாது வைதீகம் செய்யும் சுந்தர கனபாடிகளின் வாழ்க்கை இரண்டு அத்தியாயங்களில் விலாவரியாக இடம்பெற்று மரபான வைதீகனின் ஏழ்மை நிறைந்த அக்கால நிலையை காட்டுவதாக அமைகிறது. மேலும் யந்திரங்கள், தேவதைகள் என வருவது எண்ணங்களின் அலைவுகள் என எடுத்துக்கொண்டாலும் வலுவாக இல்லை. அவை சுவையாக கதை நகர்த்துகின்றன அவ்வளவுதான்.

அரசூர் வம்சம் நாவலை பழைய பெருமிதங்களை உடைத்துவிட்டு முப்பாட்டன்மாரை யதார்த்தத்தில் அவர்களாக உலவவிட்டு, பிழைத்து வாழ்ந்து கிடக்க மனிதர் கொள்ளும் பாவனைகளின், செயல்களின், சஞ்சலங்களின் தொகுதியாக வரையறுத்து கொள்ளலாம்.

 

5

விஸ்வரூபம் அரசூர் வரிசை நாவல்களில் இரண்டாவதாக இடம்பெற்றாலும் வடிவ அளவிலும் கருப்பொருளை கையாளும் தன்மையிலும் முதன்மை இடத்தை பெறுவது. பிற நாவல்களை போலவே இதுவும் சிதறல் கதைக்கூறுமுறையில் வழங்கினாலும் சீர்மையின்மைக்குள் ஒரு சீர் வடிவம் திரண்டு வருகிறது. ஒரு துப்பறியும் கதையின் விறுவிறுப்பு கதைக்கட்டமைப்பு காரணமாக உருவாகி வருகிறது.

1857 இல் சிப்பாய் கலகத்திற்கு பின் ஆரம்பித்து ஏறத்தாழ 1876 வரையான ஆண்டுகளை அரசூர் வம்சம் நாவல் பேசுகையில் இருபது ஆண்டு இடைவெளிக்கு பின் விஸ்வரூபம் 1899 முதல் 1939 ஆம் ஆண்டு வரையான நாற்பதாண்டு காலத்தில் நிகழ்கிறது. 1939 ஆம் ஆண்டு அம்பலப்புழையில் ஓட்டல் வைத்திருக்கும் ஐயர் தன்னிடம் உள்ள குத்தகை நிலத்துக்கான பத்திரத்தை புதுப்பித்து கொள்ள நீலன் வக்கீல் குமஸ்தர் நடேசனை அணுகுகிறார். அப்பத்திரத்தை புது நகல் எடுக்கையில் பழைய மை காற்றில் கரைந்து விடுகிறது. அதன் இன்னொரு நகலை தேடி நடேசன் சென்னைக்கு பயணம் செய்கிறார். அப்பத்திரம் பகவதியின் மூத்த அண்ணன் குப்புசாமி அய்யனின் மகன் மகாதேவய்யன் தங்கள் குடும்ப சொத்து பங்கில் முறைப்படி தன் சித்தப்பா ஜான் கிட்டாவய்யன் மகன் வேதையனுக்கு 1899 ஆம் ஆண்டு எழுதி வைக்கிறான். எழுதி வைத்ததை சொல்வதற்கு வேதையனை சந்திக்க செல்லும் மகாதேவய்யன் அவன் மனைவி பர்வதவர்த்தினி, மகள் குஞ்ஞம்மிணியுடன் காணாமல் தொலைந்து போய் காலவெளியில் வெவ்வேறு மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். மகாதேவய்யனின் அம்மா விசாலக்ஷியின் அஸ்தி வைத்த ஸ்தாலி செம்பு முந்தைய வைத்தியநாதனின் மகன் மகாலிங்கய்யன் கையில் சேர்ப்பிக்கப்பட்டு கைமாறி சென்று இறுதியில் பகவதியின் கையால் கங்கையில் கரைக்கப்பட்டு பகவதியும் கங்கையில் இறப்பதுடன் நாவல் முடிவடைகிறது. நடேசன் பத்திரத்தை கண்டடையவில்லையென்றாலும் உரியவரான வேதையனை சந்தித்து குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்து நியாய உணர்வுடன் நடந்து கொள்ள ஐயர் விருப்பம் தெரிவிப்பதுடன் நாவலின் முதல் சரடு நிறைவுறுகிறது.

விஸ்வரூபம் நாவலில் விரிவான பயணம் மேற்கொள்ளும் மிக கவர்ச்சிகரமான ஆள் மகாலிங்கய்யன். நாவலின் மூன்றில் ஒருபங்கை நிறைத்து கொள்பவனும் அவனே. அரசூரில் சங்கரனின் சென்னப்பட்டணத்து உறவாக தலைக்காட்டி போகும் வைத்தியநாதனின் மூத்த மகன் மகாலிங்கய்யன். சிறுவயதிலேயே தறுதலையாக திரிந்து படிப்பு வரமால் ஊர்ச்சுற்றுகிறான். வைத்தியநாதனின் சிபாரிசில் சங்கரனின் நண்பர்கள் நடத்தும் புகையிலைக்கடையில் குமஸ்தா வேலைக்கு சேர்த்து விடப்பட்டு லலிதாம்பிகை என்ற ஏழை பிராமணப்பெண்ணை திருக்கழுக்குன்றத்தில் இருந்து மணமுடித்து வைத்துவிட்டு வைத்தியநாதனும் கோமதியும் பரலோகம் பிரவேசம் ஆகிறார்கள். தம்பி துறைமுகத்து ஹெட் கிளார்க்கான தம்பியான நீலகண்டனிடம் இருந்து சொத்து பிரித்து கொண்டு தனியாக வீடு வாசல் என வாழும் மகாலிங்கய்யன் தன் கட்டுக்கடங்கா காமத்தால் புயலில் அகப்பட்ட கட்டெறும்பு கணக்காக அலைகழிந்து சேற்று குட்டையில் அமிழ்ந்து சாகிறான். அந்த சாவுக்குள் மேற்கில் லண்டன் வரை ஒரு பயணமும் மேற்கொண்டு திரும்பியிருக்கிறான்.

நீண்ட பயணம் என்றாலே பற்பல விஷயங்களும் அற்புதமான வாழ்வறிதல் சாகசம் என பொது கற்பனைக்கு மாறாக மகாலிங்கய்யனின் மொத்த வாழ்க்கையும் அவன் பிறருக்கு எழுதி அனுப்பாமல் வைத்துள்ள கடிதங்களின் தொகையாக நமக்கு வாசிக்க கிடைக்கிறது. ஒவ்வொரு கடிதத்திலும் தான் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட நபரை அழைத்து பேசுகிறான். மகாலிங்கய்யன் போன்று தன்னை தவிர பிற எவரையும் ஒரு பொருட்டாக எண்ணாதவன், உறவுகளிடம் எப்படி தன்னை காண்பித்து கொள்ள ஆசைப்படுகிறான் என்பதன் வெளிப்பாடாக அப்பகுதிகள் அமைகின்றன.

மகாலிங்கய்யன் எழுதும் முதல் கடிதம் 1903 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் இருந்து பிரிட்டீஷ் துரைக்கு தன் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு சொல்லி தன்னை நிரபராதி என மன்றாடுவது. இந்த பகுதியில் மகாலிங்கய்யனின் பூர்வாசிரமாக லலிதாம்பிகையை திருமணம் செய்தது. உத்தியோக பணிகள், காம எண்ணம் பெருகுவதற்காக வைத்தியனினம் மயில் எண்ணை வாங்கி தடவி சம்போகத்தில் ஈடுபட்டதும், அது  லலிதாம்பிகைக்கு பிடிக்காமல் போக தெலுங்கு தாசியை வைத்து கொண்டதும் பிள்ளைப்பேறு வேண்டி ஜோதிட பரிகாரமாக திருக்கழுக்குன்றம் செல்ல முடிவெடுத்து, லலிதாம்பிகைக்கு வீட்டு விலக்காகி தனியாக பயணம் புறப்பட்டு வழியில் உடன் கோயிலுக்கு வந்த தெலுங்கு தேசத்து ரெட்டி கன்னியான கல்யாணியை பலவந்தமாக தூய்க்க முயன்று, அவள் விலகி சென்று தற்கொலை செய்ய, கொலைப்பழி சுமத்தப்பட்டு சென்னை மத்திய சிறையில் இருக்கும் மகாலிங்கய்யன் எழுதும் கடிதமாக உருப்பெறுகிறது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரும் கடிதம் குற்றத்தை ஒப்புச்சொல்லி சோகத்தை கிளர்த்தும்படிக்கு அப்பாவி தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு எதிர்வினை போல அக்கடிதப் பகுதியை மிகுந்த சுவாரஸ்யத்துடன், குதுகலத்துடன் வாசிக்க முடிகிறது. ஏனெனில் மகாலிங்கய்யன் எங்குமே தான் குற்றம் செய்தேன் என ஒப்புக்கொள்வதில்லை. தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் கொலை குற்றம் அபாண்டமானது என தெரிவிப்பவன், ஒரு பெண்ணை பலவந்தப்படுத்த முயற்சி செய்ததை இன்பமாக அனுபவித்து எழுதுகிறான். அதேநேரம் மகாலிங்கய்யனின் திட்டமிட்ட குற்றவாளியும் கிடையாது. சமய சந்தர்ப்பங்கள் அமைந்து வந்தால் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் காரியத்தில் ஈடுபடுபவன். அப்படியல்லாத உத்தமர்கள் எப்போதும் அபூர்வம் தான். எனவே இதனை வாசிக்கும் போது சிந்தித்து பார்த்தால் அவரவருக்குள் இருந்து வெளிவர சந்தர்ப்பம் பார்த்த மகாலிங்கய்யனின் தன்மையை கண்டுக்கொள்ள வாய்ப்புண்டு.

குற்றம் நிருபிக்கப்படாததால் ஏழாண்டுகளுக்கு விடுவிக்கப்படும் மகாலிங்கய்யன் தன் கடைக்கு வந்து பார்த்துவிட்டு, அவ்விடத்தில் கடையே இல்லாததால் வீட்டிற்கு புறப்பட்டு போய், வீடு இன்னொருவருக்கு தன் மனைவியால் வாடகைக்கு விடப்பட்டிருப்பதை அறிந்து, தன் சொந்த வீட்டிலேயே அந்நியனாக திண்ணையில் இரவு படுத்துறங்கி கௌரவமான வேலையுடன் லலிதாவை பார்ப்போம் என கங்கணம் கட்டிக்கொண்டு கங்காணி வேலைக்கு ஆப்ரிக்க தேசத்திற்கு புறப்பட்டு செல்கிறான். ஆப்ரிக்க தேசத்தில் இருந்து லலிதாம்பிக்கைக்கு மேற்காணும் தகவல்களையும்  பெண் தேடல் படலங்களையும் பிழைப்பின் வாதைகளையும் எழுதி அனுப்புகிறான். பாண்டிச்சேரியில் இருந்து கப்பலேறுவதற்கு முன்னிரவு மகாலிங்கய்யன் கனவுநிலையில் தன் பெற்றோருடன் பேசுவது இரும்பு நெஞ்சங்களிலும் சற்று ஈரம் தலைக்காட்டும் தருணங்களாலானது.  இன்னொன்று கங்காணி வேலையில் ஹெட் மஸ்தூராக இருக்கையில் அடிமை வேலைப்பார்க்கும் ஆப்ரிக்க பெண்ணை வக்கிரமான முறையில் தண்டித்துவிட்டு சற்றே அனுதாபப்படுவது. மற்றபடி அப்பகுதியில் அவனடையும் இன்னொரு தெலுங்கு பெண் கல்யாணியும் மணந்து கொள்ளும் ஆப்ரிக்க பெண் லாராவும் பற்றி மகாலிங்க ரெட்டி எழுதும் விஷயங்கள். சுய இன்ப நாட்டத்தை மட்டுமே பிரதானப்படுத்தி வாழும் ஒருவனின் அகவெளிப்பாடுகளாக இருக்கின்றன. மகாலிங்கய்யன் – மகாலிங்க ரெட்டி மாறியிருப்பதை முந்தைய வரியில் கவனித்திருக்கலாம். ஐயர் என்பது தன் மதிப்பை குறைத்து காட்டும் என்பதால் கங்காணி வேலைக்கு சேரும் போதே மகாலிங்கய்யன் ஐயனிலிருந்து ரெட்டியாக மாறிவிடுகிறான். இந்த அடையாள மாற்றத்தை முந்தைய நாவல்களின் சங்கரனின் கப்பலேற்றம், கிட்டாவய்யனின் வேத ஏற்றத்துடன் பொருத்தி கொள்ள முடியும். சூழ்நிலைகளும் காலமும் மாறாத மனித பண்புகளாக அவை நிலைபெறுகின்றன.

ஆப்ரிக்க தேசத்திற்கு கிளம்பி செல்கையில் மகாலிங்கய்யன் திருக்கழுக்குன்றத்தில் முதன்முதலில் பார்த்த, அம்பலப்புழைக்கு செல்லும் வழியில் தொலைந்து போன மகாதேவய்யனை மீண்டும் சந்திக்கிறான். அது முதல் மகாலிங்கய்யனின் இறப்பு வரைக்கும் உடன் வரும் மகாதேவய்யனை மகாலிங்கய்யனின் நிறைவேறா சுயம் என்றோ, அகம் கொள்ளும் எச்சரிக்கை உணர்வு என்றோ வாசிக்க இரு சாத்தியங்கள் உண்டு. திருக்கழுக்குன்றத்தில் மகாதேவய்யனை நிர்வாண பைத்தியக்கார கிறுக்கு கோலத்தில் தான் மகாலிங்கய்யன் சந்திக்கிறான். ஒருவகையில் மகாலிங்கய்யனும் எதை நோக்கி ஓடுகிறோம் என்ற தெளிவில்லாது பைத்தியக்கார காம கிறுக்குடன் நிர்வாணமாக ஓடி இளந்தவன். அம்பலப்புழை மலையாளத்து ஐயன் போலவே நிரந்தரமாக குடும்பம் இல்லாது சுற்றுபவன். அவனுடன் மகாலிங்கய்யன் பேசும் உரையாடல்களை தனக்குத்தானே நிகழ்த்தி விருப்பமில்லா அக உரையாடல் என்று வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு முடிவெடுத்தலுக்கு முன்னும் மலையாளத்து ஐயனின் எச்சரிக்கை சொற்கள் விழுவது மகாலிங்கய்யன் கேட்க விரும்பாத அவனது மனச்சாட்சியாகிறது.

ஆப்ரிக்க வாழ்க்கையில் இருந்து வைப்பாட்டி கல்யாணியால் ஆசைக்காட்டி ஏமாற்றப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டு கப்பலேறி முதல் உலகப்போரில் பங்கேற்று இந்தியாவுக்கு செல்ல வேண்டிய கப்பல் லண்டனுக்கு சென்றுவிட அங்கே பிச்சையெடுத்தபடி தனது அடுத்த கடிதங்களை ஆப்ரிக்க பெண் லாராவுக்கும் தனக்கும் பிறந்த மகன் வைத்தாஸ்க்கு எழுதுகிறான். என்னதான் நடந்தாலும் தன் தந்தை பெயரை விட ஒருவனுக்கு மனமில்லை என்பதை மகனுக்கு வைத்தாஸ் என பெயரிடும் மகாலிங்க ரெட்டி வழியாக அறிகிறோம். இந்த கடித பகுதியில் விசேஷ கவனம் செலுத்த வேண்டியது, மகாலிங்க ரெட்டி சொல்வது மேல் அல்ல, அவன் சொல்லாமல் தவிர்த்து விட்ட விஷயங்களின் மேல். வைப்பாட்டி கல்யாணியால் மோசம்போனது, வைத்தாஸின் லாராவுக்கும் தனக்குமான உறவின் நெருக்கம், லண்டனில் நடத்தும் பிச்சை வாழ்க்கை, அடுத்தக்கட்ட தொழில் தொடங்குதல் திட்டம் என விலாவரியாக சொல்பவன் முதல் உலகப்போரில் ஈடுபட்ட காலத்தை போனேன் வந்தேன் என்ற பாணிக்கு நான்கு வரிகளில் முடித்துவிடுகிறான். பெரிய விஷயங்கள் சாமனியரின் நினைவில் இருந்து முழுமையாக மறைந்து அன்றாடப் பிழைப்பு மட்டுமே கவனத்தில் இருக்கும் தன்மையை சுட்டுவதாக அமையும் குறிப்பு அது. துரைக்கும் துணைவிக்கும் எழுதும் போது இருந்த களியாட்ட மனநிலைக்கு மாறாக பொறுப்புள்ள நேர்மையான தந்தையின் மனச்சாட்சியின் சொற்களாக வைத்தாஸ் கடிதங்கள் தோற்றப்பெறுவதும் மகன்களிடம் தந்தையர் காட்டும் முகத்திற்கு ஒரு உதாரணம். வைத்தாஸ் கடிதங்களில் கவனிக்க வேண்டிய கடைசி விஷயம், ஆப்ரிக்க தேசத்தில் இருந்து தப்பியோடுகையில் பிணத்தின் கையிலிருக்கும் ரொட்டியை பீய்த்து தின்னும் ரெட்டியின் சித்திரம். மகாலிங்க ரெட்டியின் எழுத்தில் சிறிய சம்பவமாக வரும் இந்நிகழ்ச்சி, அடுத்தடுத்த நாவல்களில் விரிவான குறியீட்டு அர்த்தத்தை பெறுகிறது.

தெரிசாவின் கணவன் பீட்டர் மெக்கன்ஸியை கொல்ல ஜேம்ஸுக்கு துணைப்போனதாக குற்றம் சாட்டப்பட்டு பிரிட்டீஷ் சிறையில் இருக்கும் ரெட்டி, தன் பெற்றோருக்கு அவர்களை போலவே முதியவனான பிற்பாடு எழுதுகிறான். அழுகிறான். முன்பு போலவே குற்றம் நிருபிக்கப்படாததால் பத்தாண்டு சிறைக்கு வெளி வந்து கப்பல் பயணம் செய்கிறான். இந்தியாவுக்கு வந்து மீண்டும் ஒரு திருட்டு பழியில் மாட்டி சாக்கடை குழியில் விழுந்து மரிப்பதாக கனவிலும் தன் பழைய வீட்டு தூணை கட்டிப்பிடித்து காணாப்பிணமாக மரித்து போகிறான். கழுத்து வரை மூழ்கியுள்ள சேறு அவன் வாழ்க்கையை உணர்வதன் வெளிப்பாடாக நிற்கிறது.

விஸ்வரூபம் என்ற வார்த்தை நம் மனதில் எழுப்பும் சித்திரம் மிக பெரியது என்ற தோற்றத்தை என்றால், அது நாவலின் தலைப்பாக அமைந்து மகாலிங்கய்யனின் வாழ்க்கையுடன் பொருத்தி பார்க்கப்படும்போது அவ்வார்த்தைக்கு தலைகீழான அர்த்தமாக அன்றாட பிழைப்பும் சுகதுக்கமுமான வாழ்க்கையின் விஸ்வரூப தோற்றமாகிறது. இங்கே சொல்வது  போல நேர்க்கோட்டில் இல்லாமல் முன்பின் அத்தியாயமாக தான் நாவல் நெடுக மகாலிங்கய்யனின் கதை வருகிறது. இந்நாவலில் வரும் ஒவ்வொரு அத்தியாய தொடக்கமும் எந்த ஆண்டில் எம்மாதத்தில் நடக்கிறது என்று சொல்லப்பட்டு முன்பின்னாக அடுக்கப்பட்டிருப்பது வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் வெவ்வேறு தேசப்பகுதிகளில் வேறுவேறு வாழ்க்கை சூழ்நிலையில் இருக்கும் உறவினர்களான கதை மாந்தர்கள் செயல்படும் விதங்களை பார்க்க கிடைக்கிறது. அதன் மூலம் அடிப்படையான சில பொருத்தப்பாடுகளை வாசகன் தன்  போக்கில் கண்டுக்கொள்ள ஏதுவாகிறது.

ஆலப்புழையில் வசிக்கும் ஜான் கிட்டாவய்யனின் மகனான வேதையனின் வாழ்க்கையும் எடின்பரோவில் தேவ ஊழியம் செய்யப்போகும் மகளான தெரிசாவின் நிலையும் 1899 ஆம் ஆண்டில் வைத்து பக்கம்பக்கம் காட்டப்படுகின்றன. தேசங்கள் மாறினாலும் மாறாவிட்டாலும் நம் பண்புகள் ஒரே போல இருப்பதை பிரதிபலிக்கும் பகுதிகள் என்றும் ஒவ்வொரு அவருடைய வேர் பண்புகளுடன் எத்தனை ஆழமாக பிணைந்துள்ளார்கள் என்றும் வாசித்தெடுக்க முடிந்த பகுதிகள் அவை. இதனை வேதையன் மகாதேவய்யனை சந்திக்க செல்லும் பயணத்தை லண்டனில் இருந்து எடின்பரோவிற்கு தேவ ஊழியம் செய்யப்போகும் தெரிசாவின் பயணத்தை பார்க்கையில் துலங்கி வரும் சித்திரம் கிடைக்கிறது. கிறிஸ்தவனாக வளர்ந்த வேதையன் தன் அம்மா சிநேகாவால் ஆச்சாரமான பிராமண பையனாகவே வளர்க்கப்படுகிறான். அம்பலப்புழையில் தங்குபவன் ஒட்டலில் ஜாதிக்கு தனி வரிசை தனி இடம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டே அறை வாடகை எடுக்கிறான். கணவன் பீட்டர் ஆப்ரிக்க யுத்தத்தில் பங்குபெற சென்றால் எடின்பரோவில் தேவ ஊழியம் செய்யப்போகும் தெரிசாவின் துணைக்கு பீட்டரின் கசின் தாமஸ் உடன் வருகிறான். எந்நேரமும் தெரிசாவின் தன் கையில் வளைத்துப்போடும் முயற்சியிலேயே இருக்கும் தாமஸை தொலைவுடனே தெரிசா கையாள்கிறாள். ஆனால் எடின்பரோவில் முதல் நாள் தங்கியவுடன் தெரிசாவின் கனவில் காமம் பொங்கும் கறுப்பு பறவைகளும் அம்மா சிநேகாம்பாளின் எச்சரிக்கை வசவுகளும் வந்துபோகின்றன. இத்துடன் மகாலிங்கய்யனின் நிழல் தோற்றமாக மாறிப்போன மகாதேவய்யனை போல அவனது மனைவி பர்வதவர்த்தினியும் மகள் குஞ்ஞம்மிணியும் தெரிசாவின் நிழல் வாழ்வாக அவளுடன் எப்போதும் இருக்கிறார்கள். எனவே மேற்கே சென்ற தெரிசா கேரள நாட்டுப்பெண்ணின் மனநிலையை கைவிடுவதில்லை. மனிதர்கள் தங்கள் வேர்களுடன் மிக வலுவாக பிணைந்திருப்பதை காட்டும் பகுதிகள் தெரிசா வருபவை.

மகாலிங்கய்யனுக்கு நேர்மாறாக மிகுந்த ஒழுக்க சீலத்துடன் இருக்கும் தெரிசா உயிர்ப்புள்ள மாந்தர்களில் ஒருவர். சென்னையில் கல்லூரியில் படிக்கும்போது பீட்டரை காதலித்து மணம் செய்து லண்டன் சென்று குடியமர்ந்தவளின்  மத்திய கால வயதில் இருந்து முதுமை வரை காட்டப்படுகிறது. தன் இச்சைகளை பின்தொடராது கிறிஸ்தவத்திற்குள்ளும்  மரபாக வந்த பழக்கங்களுக்குள்ளும் தன்னை பாதுகாப்பாக வைத்து கொள்பவள். எடின்பரோ பயணத்தில் சந்திக்கும் தெரிசாவுடன் அவளது அகநிழல்களான பர்வதவர்த்தினியையும் குஞ்ஞம்மிடியையும் சந்தித்து விடுகிறோம். அவர்கள் பராரி கோலத்தில் தெரிசாவிடம் எப்போதும் பசிக்கிறது உணவு தாருங்கள் என யாசித்தவாறு இருக்கிறார்கள். அவர்களின் இருப்பை தெரிசாவின் மரபு மனதின் ஏக்கமாக, வாழ விரும்பி கைவிட்டுப்போன சாத்தியமாக, தனித்து விடப்பட்டதன் பரிதவிப்பாக புரிந்து கொள்ள முடிகிறது. பீட்டர் மெக்கன்ஸி இறந்து தன்னந்தனியாக வாடும் தெரிசா கடைசியாக ஒரு இரவில் மகாதேவய்யன், பர்வதவர்த்தினி, குஞ்ஞம்மிணி என மூவருக்கும் விருந்து தருகிறாள். ஆவி ரூபத்தில் இருக்கும் அவர்கள் சாப்பிட முடியாவிட்டாலும் ஏக்கத்துடன் திருப்திப்பட்டு கொள்கிறார்கள். வயதாகியும் வளரமால் இருக்கும் குஞ்ஞம்மிணி ஆவேசத்துடன் தன் வாழ்க்கையே அழிந்து போனதை முறையிடுகிறாள். அவ்விருந்து காட்சி ஒரு பேய்க்கதை போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. குஞ்ஞம்மிணி அந்த ஏக்கம், தெரிசாவின் மனக்குரல் தான். குஞ்ஞம்மிணியை தெரிசாவின் குழந்தைக்கான விருப்பம் என்றும் வாசிக்க இடமிருக்கிருக்கிறது. துயரகரமான அப்பகுதிகளை லகுவாக நகர்த்தி சென்றாலும் வலுவான தாக்கத்தை வாசகனுக்குள் ஏற்படுத்துகிறது.

தெரிசா தன் பயணத்திற்கு இடையில் இந்தியா வந்து தம்பி வேதையனின் மகள் தீபஜோதியின் கல்யாணத்தில் பங்கெடுக்கிறாள். அங்கே தன் அத்தை பகவதியையும் ஆவி ரூபமாக பெரியத்தை விசாலாக்ஷியையும் சந்திக்கிறாள். இந்தியாவில் இருக்கும் காலத்தில் ஏறத்தாழ இந்திய பெண்ணாகவே சேலையுடுத்தி பழக்கங்களை கடைப்பிடிப்பது மேலுள்ள வாசிப்புகளுக்கு இட்டு செல்கிறது.

தெரிசா லண்டனுக்கு செல்ல கேரளா – சென்னை – கல்கத்தா மார்க்கமாக பயணம் செய்து வழியில் நீலகண்டனின் வீட்டில் இருக்கும் தன் அஸ்தி நிறைந்த ஸ்தாலி செம்பை கங்கையில் கரைக்கும்படி விசாலாக்ஷி அத்தையால் கேட்டு கொள்ளப்பட்டு அது விலகி போய் இயலாமல் கப்பலேறி விடுகிறாள். விசாலாக்ஷியின் அஸ்தி என்பதை தெரிசாவை பொறுத்தவரை பிறந்த மண்ணுடனான அவளது உறவு நெருக்கம் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த பயணத்தை தெரிசா மேற்கொள்வது 1925  மேற்பட்ட காலத்தில். இந்த காலக்கட்டத்தை பற்றி வரலாறாக எழுதப்பட்ட விரிவான சித்திரம் ஒன்று நம்மிடம் இருக்கிறது. 1925 என்றவுடன் பொது நினைவில் தீவிரவாத தேசிய இயக்கங்களின் எழுச்சி, பாரதியின் வருகை, காந்தியின் செயல்பாடுகள், ஜஸ்டிஸ் கட்சி, சுயாட்சி, பூரண சுதந்திரத்திற்கான வேண்டுகோள் என நம் மூளையில் மின்னும் விஷயங்கள் எதுவும் தெரிசாவின் பயணத்தில் தடுப்பிடுவத்தில்லை. அவள் வாசிக்கும் பத்திரிக்கையில் கூட மருந்துக்கு இடம்பெறுவதில்லை. தெரிசாவை விட ஃபோர்ட் ஹெட் கிளர்க்கும் சாகசக்கார பொறுக்கி மகாலிங்கய்யன், – தன் அண்ணன் குறித்து மதிப்புக்குரிய நீலகண்டனின் நினைப்பு –  தம்பி நீலகண்டனின் வாழ்க்கை சம்பவத்தில் விரிவாக வருவதை பார்க்கிறோம். இவ்விடங்களில் திரும்ப திரும்ப வரலாறு அற்ற சாமானிய வாழ்க்கையை இரா முருகன் எழுதுவதை காண்கிறோம். நம் பெரியவர்களை கேட்டாலே இந்த விஷயம் பிடிபடுவது தான், என் தாத்தாவிடம் சுதந்திரம் கொடுத்த அறிவிப்பு பற்றி விசாரித்த போது கிடைத்த பதில், மிட்டாய் கொடுத்தார்கள் என்பது தான். மதிப்புமிக்க சுதந்திரம் இரண்டு நிமிட எச்சிலில் கரையும் மிட்டாயாக மாறி வரலாறு என்ற கதை வழியாக நாம் அடைந்திருக்கும் விஷயங்கள் அன்றாடத்தில் எப்படி உணர்கிறோம் என்று கேள்வியை எழுப்பி, வாழ்க்கை வசதிகள் பெருகி இருக்கிறது, பழைய பழக்கம் கழிந்து புதிய பழக்கங்கள் துளிர்த்துள்ளன என்பதற்கப்பால் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என உணர வைக்கின்றன.

நீலகண்டன் வாழ்க்கையை சிறந்த எடுத்துக்காட்டாக காணலாம், அவன் ஃபோர்ட் ஹெட் கிளார்க்காக வேலையில் இருக்கிறான். ஆங்கிலேய துரைக்கு கீழ் வேலை செய்யும் அவனது கவலைகள்  சம்சாரம் கற்பகத்துடன் சல்லாபித்து சங்கமிப்பது, சின்ன வெங்காய சாம்பார், துரைக்கு இறந்துவிட்டால் கிடைத்த லீவில் சீக்கிரம் வீட்டிற்கு சென்று குஷாலாக இருப்பது, நாயுடு நண்பன் ராமானுஜலுவை சந்தித்து வாய் அளந்து வடை தின்பது, செய்தித்தாளில் நாள் தவறாமல் எமனுக்கு பலியானவர்களின் புள்ளி விவரம் கண்டு திருப்தியுறுவது. இங்கே விடுதலை சுதந்திரம் போராட்டம் என்பது சிந்தையில் கூட எட்டிப்பார்ப்பதில்லை. இதே வாழ்க்கையை பலகோடி மக்களிடம் காணலாம். அவரவர் குறுகிய வாழ்வுக்கு அப்பால் வெளியே இருக்கும் பெரும் பிரவாகத்தை எவரும் எதுவும் கண்டுகொள்ள போவதில்லை என்ற எண்ணத்தையும் ஒரு சுய விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் அத்தியாயங்கள்.

நீலகண்டனின் வீட்டில் விசாலாக்ஷியின் ஸ்தாலி செம்பு வந்து சேர்வதும் வேடிக்கையான அபத்தம் கொண்டது. திருக்குழுக்குன்றத்தில் கைது செய்யப்படும் மகாதேவய்யனிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் செம்பு சிறை கிடங்கில் உருண்டு கிடந்து கோர்ட் குமஸ்தன் ராமானுஜலு நாயுடுவின் ஆபிஸில் கிடக்க,  நண்பனை பார்க்க வரும் நீலகண்டனின் கைக்கு மாறுகிறது, அச்செம்புடன் நடேசன் தேடிவரும் பத்திர நகல் அரசூரில் இருந்து தவறுதலாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நீலகண்டனின் கைக்கு மாறுவதை காண முடிகிறது.. இவை நடப்பது 1920 களின் இறுதியில். மகாதேவய்யன் போலவே குறியீட்டு அர்த்தத்தை பெற்றே நாவலில் உலவுகிறது.  விசாலத்தின் ஸ்தாலி செம்பை பகவதியின் கையில் கொடுக்கும் போது தான் நீலகண்டன் திருப்தி அடைகிறான். நண்பனிடம் ஸ்தாலி செம்பை பெற்று கொள்ளும்போது மகாதேவய்யனை சிறையில் இருக்கும் போது கூட பார்க்காத குற்றவுணர்வும் தன் பெற்றோர்கள் வைத்தியநாதனும் கோமதியும் இருந்தால் அப்படி நடந்து கொண்டிருப்போமா என எண்ணங்கள் எழுந்து வருத்தும் நீலகண்டனுக்கு காசி பிரயாணம் போக வரும் பகவதியிடம் ஸ்தாலி செம்பை ஒப்படைக்கும் போது திருப்தி அடைகிறான். அதனை தன் அம்மா இடத்தில் இருப்பவரை உபசரித்து, மனபாரத்தை இறக்கி வைத்ததன் விளைவு என்று புரிந்து கொள்ளலாம்.

தீபஜோதியின் திருமணத்தில் இருந்து தன் அண்ணி விசாலத்தின் நினைவு தொற்றிக்கொண்ட பகவதி செம்பை பெற்றுக்கொண்டு கரைச்சேர்க்கும் முயற்சியில் சங்கரனுக்கு தர்ப்பணம் செய்ய போன காசியில் விசாலாத்திற்கு முக்தி கொடுத்து தானும் ஜலசமாதி ஆகிறார். பகவதிக்கு விசாலம் அண்ணி, அம்மா இடத்தில் இருப்பவர். இறந்துவிட்ட அம்மா தன்னை கூப்பிடுவது இறப்புக்கான அழைப்பு என்றே பகவதிக்கும் ஸ்தாலி செம்பு விசாலாத்திற்கும் நடக்கும் உரையாடலை பொருள் கொள்ள முடிகிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக சங்கரன் இறந்த பின் அவனது இருப்பை நினைத்து வருந்தும் பகவதியின் இயல்பை சொல்ல வேண்டும்.

பகவதியுடன் துணைக்கு சாமிநாதனும் ராஜாவின் மகனும் நண்பனுமான மருதையனும் காசி பிரயாணம் செய்கிறார்கள். சாமிநாதன் தாசில்தாராக வேலைசெய்ய, மருதையன் மதுரை தமிழ் சங்க கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறான். இவர்களில் சாமிநாதன், நீலகண்டன் போல பிரிட்டீஷ் அரசு வேலை பார்ப்பவர்களில் ஆங்கிலேய அரசில் தங்களை மேலாண்மை செய்யும் துரைகளின் கசப்பு கொள்வதை தவிர, ஒட்டுமொத்தமாக அவர்கள் ஆங்கில அரசின் வழிப்பாட்டாளர்கள் என்றே சொல்ல வேண்டும். நீலகண்டனின் குரல் ஒலிக்கவிடப்படுவதால் அதனை நன்கு உணர முடிகிறது. சாமிநாதன், மருதையன் இருவரின் செயலையும் வர்ணிக்கும் ஆசிரியர் பிற அவர்களின் அகக்குரலை ஒலிக்க விடுவதில்லை. இதனால் அவர்களை மூன்றாம் மனிதரின் கோணத்தில் தான் சந்திக்கிறோம். விளைவாக தாசில்தார் பணியின் மேன்மையும் வழிபாடும் தான் இருப்பதை காண முடிகிறது. மருதையன் தமிழ் பேராசிரியர் என்றும் சாமிநாதனுக்கும் அவருக்கும் இடையில் நல்ல விவாதங்களும் புத்தகம் பற்றிய பேச்சு இருப்பது காட்டப்பட்டாலும் மதுரை தமிழ் சங்கம் பற்றியெல்லாம் மருதையன் பேசுவதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் என்பது தமிழ் மொழியின் சுவடிகள்  அச்சிக்கு வந்து பொருள் கொள்ளப்பட்டு நாம் இன்று காணப்பெறும் இலக்கிய மரபு தொகுக்கப்பட்ட காலம். அக்காலத்தில் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்த ஒருவர் படிப்பாளி என்று மட்டுமே அறியப்படுகிறார் என்பது ஒரு கோணம் எனில் மருதையனின் வைத்து பார்க்கையில் எல்லோரும் களத்தில் இறங்கி வேலை செய்தார்கள் என்பது போன்ற மிகை உணர்ச்சிக்கு எதிர்வினையாக அமைகிறது.

இப்படி செய்வதன் மூலம் வரலாற்றை சமகாலம் போலவே உணரும்படிக்கு மாற்றி அமைக்கிறார். சமகாலத்தில் வாழும் சாமானியரின் உள்ளம் என்பது அந்தந்த பொழுதுக்கான வாழ்க்கை நிகழ்வுக்கு அப்பால் சிந்திப்பது இல்லை. இவ்வியல்பை பெற்றுக்கொள்கையில் தன் பாரம்பரியம் குறித்த ஒரு சமநிலையை அடைகிறோம். இரா.முருகன் தன் புனைவுலகின் வழியாக உருவாக்கும் மைய உணர்வுகளில் ஒன்றிது.

 

வேதையன் தன் மகள் தீபஜோதியின் திருமணத்திற்கு அத்தையான பகவதி குடும்பத்தை அழைக்க வருகிறான். அப்போது தான் தன் பிரியமான அண்ணன் ஜான் கிட்டாவய்யனும் ஆண்டுகளுக்கு முன்பே காலமானதை அறிகிறோம். விஸ்வரூபம் நாவலின் தொடக்கத்திலேயே வந்து மரித்து போகும் கிட்டாவய்யனில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அவனது மனைவி சிநேகா போலவே மரபு பற்று. வேதையனுக்குள்ளும் அது செயல்படுகிறது. எனவே அம்பலப்புழையில் சந்தித்த துர்க்கா பட்டனை வீட்டோடு சேர்த்து கொள்கிறான்.

இவர்கள் அனைவரையும் இணைக்கும் சமகால சரடாக 1939 இல் இருக்கும் நடேசன் வக்கீல் இடம்பெறுகிறார். நடேசன் வக்கீல் காலையிலேயே பசியுடன் குளத்தில் குளித்து படியேறும் காட்சியுடன் தான் தரிசனம் தருகிறார். அவரது நிழலாக காணாமல் மகாதேவய்யனை இரவு சினிமா கொட்டகையில் அவனுக்கும் தனக்கும் சோறு வாங்கி தருகிறார்.  இங்கும் நடேசன் பசியில் வாடுவதற்கு காந்தியே காரணமாக அமைகிறார். காந்தியை பின்பற்றி வக்கீல்கள் வேலை நிறுத்தம் செய்ததால் வயிற்றுப்பாடு சிரமமாகி விடுகிறது. இச்சிறு தகவல் மட்டும் தான் வக்கீல் குமஸ்தா நடேசனுக்கு முக்கியமானது. 1939 இல் ஜம்னலால் பஜாஜ் கைது செய்யப்பட்டு அவரது பிரஜ்ஜா மண்டல் இயக்கம் தடை செய்யப்பட்டதெல்லாம் நடேசனின் தலை மேல் பறக்கும் தூசுகள். நடேசன் சென்னை சென்று பத்திர நகல் அரசூரில் இருக்கிறது என அறிந்து அங்கிருந்து உரிமையாளர் வேதையனின் கைக்கே சென்று சேர்ந்த விவரத்தை அறிந்து, ஐயருடன் வேதையனை சந்தித்து, நிலத்தை மேற்பார்வையிட போய், அது மயனமாய் கிடக்க, அங்கே அவர்கள் மாயத்துடன் சேர்ந்து விண்ணகம் புறப்பட்ட கதையுடன் விஸ்வரூபம் முடிவுறுகிறது.

நாற்பது ஆண்டுக்கால நீளமும் இந்தியா முதல் இங்கிலாந்து வரையான தூரமும் என பரந்து விரியும் விஸ்வரூபம் அப்பரப்பை சுருக்கி தனிமனிதர்களின் அகமான  குழி ஆடியில் பிரதிபலிக்க செய்து மிகச்சிறியது, இத்தனை எளிது என்ற உணர்வையும் உண்டுபண்ணி விடுகிறது.

 

6

அரசூர் நாவல் வரிசை அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே இரண்டையும் ஒரே நாவலாக வாசிக்குமளவுக்கு இடைவெளியில்லாமல் அமைந்துள்ளது. விஸ்வரூபம் முடிந்து இருபது ஆண்டுகளுக்கு பின் சுதந்திர இந்தியாவில் முந்தையவர்களின் மூன்றாம், நான்காம் வாரிசுகள் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ளும் விதத்தை 1956 முதல் 1967 வரையான பதினொரு ஆண்டுகளில் கூறி செல்கிறார்.

மகாலிங்கய்யனின் மகன் வைத்தாஸ் ஆப்ரிக்க நாட்டு தூதராக லண்டனில் அதிகாரியாக இருக்கிறான். அவனது மனைவி நந்தினி. வைத்தாஸ் இந்தியாவுக்கு வந்து பார்த்து சென்ற கேரளமும் கற்பனையும் கலந்து ஒரு நாவல் எழுதுகிறான். வைத்தாஸ் எழுதும் நாவலும் நாம் படிக்கும் நாவல் ஒழுங்கற்ற உடைந்த கண்ணாடி குவியலின் வடிவத்தில் வைத்தாஸின் அகத்தை அவன் வாழும் சூழலுக்கேற்ப பிரதிப்பலிக்கிறது. வைத்தாஸ் இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பொறுப்பேற்கிறான். சில நாட்களில் அவனது தேசத்தில் புரட்சி ஏற்பட்டு சர்வதிகார குழுக்களின் பூசல் நடைபெற துவங்குகிறது. அங்கே மாட்டி கொள்ளும் நந்தினி ஜனாதிபதியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்து செல்கிறார். வைத்தாஸ் லண்டனுக்கு தூதராக திரும்ப பணிக்கு செல்கிறான்.

சாமிநாதனின் மகன் சின்ன சங்கரன் தில்லியில் மத்திய அரசு வருவாய்த்துறை அலுவலகத்தில் அண்டர் செக்ரட்டரி பொறுப்பு வரை பதவி உயர்வு பெற்று வசந்தியுடன் ஒரு மகள் குட்டி பகவதியையும் தீபஜோதியின் பேத்தி கொச்சு தெரிசாவுடன் திருமணம் தாண்டிய உறவில் மருதையனையும் பெற்று கொள்கிறான். கொச்சு தெரிசா இரண்டாம் கணவன் மூசாபரை விட்டுவிட்டு இந்தியா வந்து குடியுரிமை பெற்று கிறிஸ்தவத்தில் இருந்து தாய் மதத்திற்கு திரும்பி ஹரித்வாரில் பிராயசித்தம் செய்கிறாள். நீலகண்டன் இறந்த பின் அவனது மனைவி கற்பகம் தன் முதல் மகன் பரமேஸ்வரனின் மனநிலை தவறிப்போன மராத்தி மருமகள் ஷாலினிக்கு பணிவிடை செய்து, அவள் இறந்த பின் வீடு திரும்புகிறாள். பரமேஸ்வரனின் மகன் தீலிப் தன் மினிஸ்டர் பெரியப்பா, பெரியம்மா தயவில் வேலைக்கு சேர்ந்து நிலையான வருமானத்தை ஈட்டவும் அகல்யாவை மணமுடித்து கொள்கிறான். இந்த கதைகள் ஒன்றுடனொன்று தொட்டும் விலகியும் பின்னி வருகையில் உருவாகும் சித்திரமே அச்சுதம் கேசவமும் வாழ்ந்து போதீரேவும்.

வைத்தாஸின் எழுதும் நாவலில் இருந்து அச்சுதம் கேசவம் தொடங்குகிறது. வசதிக்காக வைத்தாஸில் இருந்து இந்நாவல்கள் மேலான வாசிப்பை விரிக்கிறேன். வைத்தாஸின் நாவலில் லண்டனில் இருக்கும்போது அம்பலப்புழையும் கேரளமும் வருகிறது. அவனுடைய வேர்கள் என்னவென்று வைத்தாஸின் தேடலின் விருப்பம் என அப்பகுதியை வாசிக்க இடமுண்டு. அதுவே தில்லியில் இரண்டாண்டுகள் ஒப்புக்கு சப்பாணி தூதராக இருக்கையில் வீராவாலி என்கிற புனைவான காம தேவதையும் குஞ்ஞம்மிணியும் வைத்தாஸின் நாவலில் இடம்பெற்று அவனின் அந்தரங்க காம, உணர்வு துணைக்கான மற்றும் கைவிடப்பட்ட நிலையை பிரதிபலிக்கிறார்கள். லண்டனில் இருந்து எழுதும் வைத்தாஸ் அம்பலப்புழை குறித்து தான் கனவு காண்கிறான். அங்கே தனது பூர்விகத்தை கண்டுபிடிக்க ஒரு எண்ணம் உள்ளது. வீராவாலி வரும் அத்தியாயங்கள் கற்பனையான பெண்ணுடன் சுக தேடல்களும் அதற்காக வைத்தாஸ் தன்னுடைய அதிகாரி தோரணையை ரகசியமாக கழட்டி வைத்து விட்டு தில்லியில் அலைவதை குறிப்புணர்த்துகின்றன. மகாலிங்கய்யன் பிய்த்து தின்ன இறந்து போனவனில் கையிலிருந்த ரொட்டி சம்பவம் வைத்தாஸ் நாவலில் இடம்பெறுகையில் அவனும் மானசீகமாக ஒருமுறை இறந்து போய் நந்தினியுடனான தன் உறவு முறிந்ததை அறிகிறான். இச்சம்பவம் நந்தினி சர்வதிகார நாட்டின் ஜனாதிபதியாக இந்தியா வருகை தந்தபின் நடக்கிறது.

ஒரு தூதராக இந்திய அமைச்சரை எதிர்கொள்ளும் வைத்தாஸ்க்கு கிடைப்பது என்னவோ அதிர்ச்சி தான். கிட்டத்தட்ட அமைச்சர் வைத்தாஸை மாமா வேலை பார்க்கும்படி பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கிறார். பொதுவாக நம் அமைச்சர்களை பற்றி இப்படி பேச்சுண்டு. இதனை அப்படி எடுப்பதை விட வலிமை குறைந்த நாட்டை வலிவான நாடுகள் சுரண்டி கொள்ளையடித்து இழிவுப்படுத்தலாகவும் சேர்த்து பார்க்கலாம். அதே நாட்டில் சர்வதிகாரம் ஏற்பட்டு ஆயுத பலம் காட்டப்பட்டால் கலாச்சார உறவு ஏற்படுத்தி கொண்டு பண்பாடு வளர்க்கலாம் என நயப்பாக பேசுகிறார்கள். அப்போதும் புதிய அமைச்சரும் பழைய அமைச்சரின் நல்ல ஐட்டம் வேண்டுகோளை மறக்காமல் நினைவூட்டுகிறார்.

ஆட்சி கலைந்து இராணுவம் நாட்டை கைப்பற்றியவுடன் நந்தினி தான் வல்லுறவு ஆட்பட்டு கொலையாவோம் என கற்பனை செய்து மனமுடைகிறாள். ஆனால் அவளது வீட்டுச்சுவரில் ஆடும் மயில் இராணுவ அதிகாரிகளுக்கு அச்சத்தை உண்டுபண்ணி நந்தினிக்கு கடவுளின் மூத்த சகோதரி என்ற அடையாளத்தையும் மாற்ற முடியா சர்வதிகாரத்தையும் வீட்டு சிறையையும் பரிசாக அளிக்கிறது. மயில் ஒரு குறியீடாக இவ்விரண்டு நாவல் நெடுக வந்து சேர்கிறது. நந்தினி வீட்டு ஹாலில் இருக்கும் மயிலாடும் படம் லண்டனில் வைத்தாஸுடன் எடுத்தது. இந்தியா தேசத்தை சார்ந்த பெண் லண்டனில் படித்து ஆப்ரிக்க தேசத்துக்காரனை மணந்திருக்கிறாள். அவளது கணவன் இந்நாட்டின் தூதராக இந்தியாவுக்கு சென்றிருக்கிறான். அவனை வைத்து தங்கள் ஆட்சிக்கு வலுத்தேட நந்தினியை பாதுகாக்க வேண்டும் என மயில் வெவ்வேறு இராணுவ கணக்குகளாக, அச்சமூட்டும் அம்சத்தை பெற்று வளரும் குறியீடாகிறது. இக்கணக்குகளை மயில் எனும் போது அதன் மேல் மாந்தீரிகன் தன்மை கவிவது சம்பந்தப்பட்டவர்களே அவ்வாடலில் சர்வாதிகார அரசாங்கங்களால் துருப்பு சீட்டாக பயன்படுத்தப்படுவதையும் அதே நேரம் அச்செயல்பாட்டின் மூலம் மக்கள் மேல் அதிகாரத்தை உருவாக்க முடிவதையும் ஒருசேர அதிராமல் அவ்வளவு ஒன்றும் பெரிய விஷயமில்லை என்ற தொனியில் சொல்ல இயல்கிறது.

நந்தினிக்கு பின் நாட்டின் பிரதிநிதியாக வரும் சின்னஞ்சிறு பெண், கையில் இருந்து ரோஜா பூக்களை உருவாக்குவது வலிந்து உற்பத்தி செய்யப்படும் சர்வதிகார மென்மைகளை குறிப்பதாக வாசிக்க முடிகிறது. எனவே அவள் புரட்சி செய்கையில் நந்தினியே அவளை தீர்த்து கட்ட முடிகிறது. ஆரம்பத்தில் வைத்தாஸுக்காக ஏங்கும் நந்தினியின் தாபமாகவும் மயில் உருவம் கொள்கிறது. அதிகாரத்தில் ஏறியவுடன் வைத்தாஸை உதறி விடுகிறாள்.

கொச்சு தெரிசாவின் லண்டன் நகரத்திலும் மயில் ஆடும் விந்தை நிகழ்கிறது. அது அமேயர் பாதிரியாரால் கண்டித்து அனுப்பப்படுகிறது. கொச்சு தெரிசாவுக்கு அந்த மயில் மரபுக்கு திரும்புவதன் அழைப்பாக, தென்னிந்திய கேரளத்து அழகாக இடம்பெறுகிறது. அவளது முதல் கணவன் வைத்துள்ள கார் தண்ணீரில் ஓடுவதாக யாருக்கும் அடங்காததாக உள்ளது. அதனை கால்டெர்ல்லில் ஏற்படும் இயந்திரமயமாக்கத்தின் செல்வாக்கு என்று அமேயர் பாதிரியாரின் விளக்க ரீதியான எதிர்ப்பில் இருந்து வாசிக்க முடிகிறது.

கொச்சு தெரிசாவை பொறுத்தவரை இந்தியா வந்து மெல்ல மெல்ல தன் பூர்வ்வீக நிலத்தில் வீடும் கடையும் அமைத்து கேரளப்பெண்ணாக மாறி நிலைபெறுதலின் உண்டாகும் பரவசத்தை காண்கிறோம். ஒவ்வொரு அடியையும் நிதானமாக எந்த தடுமாற்றமும் இல்லாமல் எடுத்து வைக்கிறாள். முதல் முறை கேரள மண்ணில் உறங்கும் போது அவள் காணும் கனவில் தன் மூதாதை பாட்டி தெரிசாவாக தன்னை உணர்கிறாள். அச்சுதம் சேசவம் நாவலின் சிறந்த பகுதிகளில் ஒன்றது. அதற்கடுத்து சின்ன சங்கரனை சந்தித்து உறவு கொள்ளும் கலாச்சார இரவின் மாலை. உண்மையில் அந்த விழாவின் பின்னணியில் இப்படியான இருவேறு கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களின் உறவு அரும்புவது, பொது அர்த்தத்தில் கூறப்படும் கலாச்சார உறவின் மேல் வைக்கப்படும் நுண்பகடி தான். அடுத்து இறுதியாக ஹரித்வாரில் திராவிட சாஸ்திரிகளுக்கும் கொச்சு தெரிசாவிற்கும் நடக்கும் புன்னகைக்க வைக்கும் உரையாடல். பிராயசித்தம் என்ற மத மாற்றக்காரர்களின் அபத்தத்தை நேரடியாகவே சுட்டி காட்டுவது.

நந்தினியும் கொச்சு தெரிசாவையும் ஒரு நாணயத்தின் இருமுகங்களாக பார்ப்பதற்கான வாய்ப்பை இக்கதையாடலால் உருவாகிறது. கேரளத்தில் இருந்து லண்டன் படிக்க சென்று எளிய மனைவியாக இருப்பவள், அதிகாரத்தின் உச்ச படிநிலைக்கு தாவி ஏறுகிறாள். இங்கிலாந்து வளமான கடை நடத்தி வந்த கொச்சு தெரிசா எல்லாவற்றையும் உதறிவிட்டு தன் பூர்வீகமான மூன்றாந்தர உலகநாடான இந்தியாவில் புது வாழ்வை தொடங்குகிறாள்.

கொச்சு தெரிசாளுடன் சம்பந்தப்பட்ட சின்ன சங்கரன் மிக முக்கியமான கதாப்பாத்திரம். அவனுக்கு மனைவி வசந்தி இருக்கும் போது தெரிசாளை தேடி கொண்டதற்காக அல்ல. அப்படிப் பார்த்தால் இரா.முருகனின் அத்தனை ஆண் பாத்திரங்களையும் முக்கியமானவை என்று முத்திரை குத்தி ஆரத்தி எடுக்க வேண்டி வரும். இருந்தாலும் இரண்டு பெண்கள் என்பது நமக்கு புராணம் முதல் உருவாக்கப்பட்டு வணிக சினிமாவின் இரட்டை கதாநாயகியர் வரைக்கும் செல்கிறது. அப்படி எடுக்கப்படும் படங்கள் குறைவில்லாமல் ஓடி நிறைவது சின்ன சங்கரனின் இருப்பை நன்றாக நிருபிப்பது.  இப்படி பேசும்போது தான் சில விஷயங்களை, கொச்சு தெரிசாவின் லிவிங் இன் உறவை வைத்து கூற வேண்டியிருக்கிறது. ஒரு பெண் தேசம் விட்டு தேசம் வந்து குடிபுகும் இடத்தில் லிவிங் இன் உறவில் இருப்பது பெரிதாக பார்க்கப்படும் சமுதாயத்தில் மிக சகஜமாக ஒன்றுமே நிகழாதது அந்த இணைவை சொல்லி செல்கிறார். ஹரித்வாரில் சங்கரனின் ஊர் சொந்தங்களுக்கு அவ்விஷயம் தெரிந்து போனாலும் ஜோசியர் மனைவியை தவிர பிறர் பெரிதாக எண்ணுவதில்லை. ஒருபக்கம் வரைமுறை மீறாத உறவுகளின் மேன்மை சொல்லிக்காட்டப்படும் போதே மறு எல்லையில் பலாவித நெகிழ்வுகளுடன் வாழ்க்கை வழிந்தோடுகிறது.

சின்ன சங்கரன் மத்திய அரசின் வருவாய் துறையில் உயரதிகாரியாக இருக்கிறான். அங்கே அவனது பணிகள் குறித்து விவரிக்கும் பகுதி, நம் அரசு நிறுவனங்கள் அரசதிகாரிகளின் போக்கை நையாண்டி செய்வது தான். பெரிதாக வேலை இல்லாவிட்டாலும் நான்கு பைல்களில் இரண்டு தாள்களை சொருகி வீட்டுக்கு எடுத்து வருவதும் மணியானால் டீ குடிப்பதும் என ஜோராக கழியும் வாழ்க்கை. அப்பகுதியில் சங்கரன் யார் ஆட்சியில் உள்ளார், என்ன நலப்பணி திட்டம் என்றெல்லாம் எதுவும் பார்ப்பதில்லை. உச்சபட்சமாக செயலோயந்த கம்யூனிஸ்டாக பரமேஸ்வரன் தன் மனைவிக்கு வரவேண்டிய பென்சனை கேட்டு தர்ண போராட்டத்தில் ஈடுபட்டால் கண்டு கொள்ளாமல் எதிர் பத்திரிக்கை ஆபீஸ் சென்று சிநேகிதி பீடார் ஜெயம்மாவுடன் அரட்டை அடித்து தன் ஊரில் நடக்கும் மயில் கதை சொல்கிறான். சங்கரனுக்கு வரும்போது மயில் அரசு வேலையின் மாறா சுழற்சியின் சலிப்பில் இருந்து வெளியேறும் புரளியாக, சாவே நடக்காத ஊராக அரசூரை மாற்றுகிறான். அமைச்சர் ஆபிஸில் இருந்து மணியடித்தவுடன் பரமேஸ்வரனுக்கான வேலைகள் உருப்படியாக நடக்கின்றன. மற்றபடி சங்கரனின் உருப்படியான வேலை என்றால் நேரத்திற்கு சென்று தில்ஷித் கவுர் ஸ்வெட்டர் கழற்றி தனபார தரிசனம் வழங்குவது – அப்படியாக சங்கரனின் நினைப்பு, அது நமக்குள்ளும் இல்லாமலில்லை என ஒத்துகொள்ள வேண்டியிருக்கிறது..

சின்ன சங்கரன் தன் அப்பா சாமிநாதனுக்கு திதி கொடுக்க அரசூருக்கு சென்று கொட்டக்குடி மாதா வழிப்பாட்டாளர்களையும் பனியன் சகோதரர்களையும் கனவாக பார்ப்பதும் பகவதியின் டைரியை மருதையன் மாமா மூலம் வாசித்து உடன் எடுத்து செல்வதும் அவனது அக வாழ்க்கையை சொல்லும் சாவியாக மாறுகின்றன. அதன் பின் சங்கரனின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான சம்பவங்களின் போது பகவதியும் விசாலாக்ஷியும் குஞ்ஞம்மிணியும் இறங்கி வருகிறார்கள். அவனுக்கு முதல் குழந்தை பிறந்து தொட்டில் கிடந்து பெயர் சூட்டும் படல நாளில் பகவதி, விசாலாக்ஷி, குஞ்ஞம்மிணி மூவரும் சங்கரனின் கனவில் வலம் வந்து போகிறார்கள். அடுத்த குழந்தை பிறக்கப்போகும் செய்தியை சொல்லி போகிறார்கள். அது தெரிசா மூலமாக என்பது அப்போது சங்கரனுக்கும் தெரிவதில்லை. அதன் பின் தெரிசாவை கூடி வந்த பகுதியை அடுத்து பகவதியின் டைரியில் பாட்டன் சங்கரன் கொட்டக்குடி தாசி மோகனவல்லியை வைத்து கொண்ட கதையை பாட்டி கைப்புடன் சொல்லி முடிக்கும் பகுதியை வாசிக்கிறான். அடுத்து தில்லியில் தன் வீட்டில் வசந்தியுடன் செல்லம் கொஞ்சுகிறான். பகவதியின் அந்த அத்தியாயம் ஒரு வீட்டுப்பெண்ணின் அலைவுகளை படம்பிடித்து கொண்டு மிகச்சிறந்த அத்தியாயங்களில் ஒன்று. தான் ஏற்றுக்கொள்ள விரும்பாத உண்மை ஒன்றை, எத்தனை அடுக்கடுக்காக சுற்றி வளைத்து மனம் தனக்குத்தானே சொல்லி கொள்கிறது என்பதற்கான உதாரணமாக அவ்வாத்தியாயத்தை சொல்லலாம். பகவதி பாட்டி போல வசந்தி மன்னிக்க மாட்டாள் என சங்கரன் அறிகிறான். அவன் மானசீகமாக நூறாண்டுகளுக்கு முன் வாழும் விஷயத்தை உணர்த்துவதாக அமைகிறது.

சங்கரனிடம் பென்ஷன் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக மனு கொடுக்க வரும் பரமேஸ்வரன் தீவிர கம்யூனிஸ்ட். அன்றைக்கு உலகம் முழுக்க சோவியத் அரசால் உந்தப்பட்டு கம்யூனிஸம் ஒளிமிக்க இலட்சியவாதமாக இருந்த பொழுது, பரமேஸ்வரனும் அப்படி கட்சிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட எளிய இலட்சியவாதமிக்க மனிதர்களில் ஒருவர். ஆனால் அவர் கம்யூனிஸ்ட் என்ற முன்னோட்டுக்கு அப்பால் அத்தகு தளங்களுக்குள் நாவல் நுழைவதில்லை. அவரது மகன் தீலிப்புக்கு என்னவாக இருக்கிறார் என்ற அன்றாட தளத்தையே வாசகரின் பார்வைக்கு கொண்டு வருகிறார். மகனுக்காக ஏதும் சேர்த்து வைக்க தெரியாத, எந்த வெற்றியும் அடையாத விபத்தில் சிக்கி ஒரு கால் போன ஊன்றுகோல் வைத்த அப்பாவாகவே தீலிப்புக்கு அவர் தென்படுகிறார். பணமுடைக்கு பரணில் இருந்து அவரது புத்தகங்களை எடுத்து செல்லரித்தது போக மீதத்தை பழைய புத்தகம் விற்பவருக்கு கொடுக்கிறான். அந்த இலட்சியவாதம் ஒருவனின் பிழைப்புக்கு என வரும்போது செல்லரித்து போன ஒன்றாக உணரும் பார்வையை தீலிப் அடைகிறான்.

அப்பா மூலம் தீலிப்புக்கு கிடைக்கும் நல்லது என்றால் கவுன்சிலர் போட்டியில் மனு போட்டால் முன்னுரிமை கிடைக்க பெறுவதை சொல்லலாம். அது கட்சியின் நடைமுறை கணக்குகளை வைத்தே எடுக்கப்படுகிறது. இவனுக்காக அகல்யா அதை செய்யவில்லையென்றால் யாரும் வேண்டி அழைக்கப்போவதில்லை. அங்கும் கூட தீலிப் அம்மாவின் இறப்பு சடங்குக்கு பணம் தந்து மோதக் கவுன்சிலர் சீட்டை தன் மகளுக்கு வாங்கி விடுகிறார்.

தீலிப்பின் வாழ்க்கை மினிஸ்டர் பெரியப்பா கிருஷ்ணனும் பெரியம்மா சியமளாவையும் சார்ந்து இயங்கி ஒரு நிலைக்கு வருகிறது. அங்கே பெரியப்பாவின் மினிஸ்டர் பெரியப்பாவின் செயல்களும் தீலிப் கண் வழியாக, அதாவது அமைச்சரின் செயல்பாடும் அவரது மனைவியும் அர்ஜுன நிருத்த ஆய்வாளரின் நடவடிக்கைகள் குடிமகன் ஒருவனின் கண் வழியாக காட்டப்படுகிறது. ஒவ்வொரு முறையும் புதிய காவலர்கள் தீலிப்பை துரத்துவதும் பெரியப்பா பார்த்து உள்ளே அழைத்தப்பின் பதுங்கி பம்முவதில் தொடங்கி, ஆய்வாளர் பெரியம்மா ஒப்பு தேற்றிய ஆய்வை கொண்டு உலக பிரயாணம் வைப்பதும் காட்டப்படுகிறது. இடையில் நேரு இறந்தபின் பெரியப்பா எழுதும் நேரு நினைவுகள் அவரது தனி செயலர் கொங்கணி பெண்ணின் கொங்கையில் சங்கமிப்பதில் முடிகிறது.

தீலிப் உடன் நீலகண்டனின் இறப்புக்கு பின் கற்பகம் பாட்டி வற்புறுத்தலால் வந்து தங்கி மனம் பிறழ்ந்த மருமகளை பார்த்து கொள்கிறாள். அவளுக்கு மூத்த மகனோ மருமகளோ பெரிதாக எதுவும் உதவி விடுவதில்லை. ஒருவருக்கொருவர் உறவினர்களாக இருந்தாலும் அதிகார மனிதர்களுக்கிடையில் உண்டாக்கும் தொலைவும் அந்த தொலைவால் மாறிவிடாத அவர்களின் அன்றன்றைய சுய முன்னேற்ற கவலைகளும் இச்சைகளும் நிரம்பிய வெளியை தொடர்ச்சியாக கண்டு வருகிறோம். வாழ்ந்து போதீரே நாவலில் இவற்றின் ஊடாக இறந்து போன ராஜா, ராணி, புஸ்தி மீசை கிழவன் மூவரும் ஆவி ரூபத்தில் வந்து கேரள கலாச்சார விழாவில் சங்கரனையும் பிறரையும் பார்த்து செல்கிறார்கள். அந்த அத்தியாயத்தை வரலாற்றில் வேறொரு காலக்கட்டத்தில் இடம்பெறும் சாமானியர்கள் தங்களது வருங்காலத்தை கண்டால் செய்யும் எதிர்வினையாக வாசிக்க முடிகிறது. அதே போல இங்கிலாந்தில் வாழும் பகவதியின் தோழி நாராயணிக்குட்டியின் மகன் பத்மன் தங்கியிருக்கும் வீட்டிலு அதன் பூர்வீகர் ஆல்பர்ட் பிரபு ஆவியாக தற்கால மனிதர்களை எதிர்கொள்ளும் அத்தியாயத்தையும் குறிப்பிட வேண்டும்.

 

7

புணை என்பதற்கு வையாபுரிப்பிள்ளை தொகுத்த சென்னை தமிழ் பேரகராதியில் மூங்கில் என்ற அர்த்தமும் உள்ளது. கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற யாதும் ஊரே யாவரும் பாடலில் இடம்பெறும் நீர்வழிப்படுஊம் புணை என்ற வரியில் புணையை தெப்பமாக பொருள் கொள்ளுதலே மரபு. மூங்கில்கள் இணைத்து கட்டப்பட்ட தெப்பம் என்றாலும் தன் செல்வழி குறித்து தெப்பத்திற்கு சற்றேனும் கட்டுபாடு உண்டு. தனி மூங்கில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கடல் சேர்வதே. அதற்கு உள்ள ஓரே நிதி கடந்து செல்லுதல் மாத்திரமே. அது ஆழங்களை அறிவதில்லை. அலைகழிப்புகளில் இருந்து மேலேறி ஞானம் பெறுவதும் அலைகளில் ஒழுகி மறைகிறது.  வெள்ளத்தில் செல்ல செல்ல வடிவம் இற்று அழிந்து மறைந்து போகிறது. அப்படிப்பட்ட நீர்வழிப்படும் புணைகளின் உலகத்தையே இரா.முருகன் காண்பித்து தருகிறார். இந்த புணைகள் வானத்தையோ மின்னலையோ மற்றும் கணியன் சொல்லும் உயர்வான விண்ணகத்து தரிசனங்களை கண்டவை அல்ல. வெறுமே வெள்ளத்தில் மிதந்து செல்லும் மூங்கில்கள்.

 

முந்தைய கட்டுரைதத்துவக் காணொளிகள் எதற்காக?
அடுத்த கட்டுரைஎலிஸா மால்ட்