(4)
இரா.முருகனின் வரலாற்றுச் சித்திரம் 21ம் நூற்றாண்டில் உருவான முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை வெளிப்படுத்துகிறது. வரலாறு என்பது நம்மில் பொதுவாக பலர் எண்ணுவது போல எப்போதும் புறவயமான கட்டமைப்பு கொண்ட ஒன்றல்ல. மலைகளைப்போல மரங்களைப்போல வெளியே பருவடிவமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒன்றல்ல. அது நமது அகத்தின் வெளிப்பாடே. நமது நம்பிக்கைகள் கொள்கைகள் ஏற்புகள் ஆகியவற்றின் விளைவாகவே வரலாறு ஒவ்வொரு காலமும் கட்டமைக்கப்படுகிறது. இதைக் குறித்து விரிவாக பலரும் எழுதி உள்ளனர்.
வரலாற்றெழுத்து என்பது பொதுவாக மூன்று காலகட்டங்களைக் கொண்டதென்று கூறப்படுகிறது. தொல் வரலாற்றெழுத்து என்பது வரலாறு நிகழும் காலத்திலேயே அரசர்களாலோ அல்லது மதத்தாலோ அல்லது கல்வி நிலையங்களாலோ நேரடியாகப் பதிவு செய்யப்படுவது. அதை நிகழ்வுக்குறிப்புகள் (cronicles) என்றும் புகழ்மொழிகள் அல்லது மெய்கீர்த்திகள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். அரசரின் அல்லது ஓர் அமைப்பின், ஒரு நகரின் அன்றாடத்தை விரிவாகத் தொடர்ச்சியாகப் பதிவு செய்வது நாட்குறிப்புத் தன்மை கொண்ட வரலாற்று எழுத்து. திருவரங்கம் கோயிலொழுகு அல்லது ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு போன்றவை உதாரணமாக சுட்டிக்காட்டத்தக்கவை. வீரர்கள், சான்றோர்கள் போன்றவர்களின் செய்திகளையும் அவர்களின் மரபையும் விரிவாகப் பதிவு செய்வது புகழ்மொழி வரலாறு. இது பெரும்பாலும் வம்ச பரம்பரை செய்திகளால் ஆனதாக உள்ளது.
இவ்விரு கோணங்களிலுமே வரலாறு எப்போதும் தொல்காலங்களில் எழுதப்பட்டுள்ளது. நவீன ச்செவ்வியல் வரலாறு என்பது அதன் முன்னோடியாகிய கிப்பனின் ரோமப்பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற பெருநூல் வழியாகத் தொடங்கியதென்பார்கள். தமிழில் அதற்கான சிறந்த உதாரணமாக அமையத்தக்கவை நீலகண்ட சாஸ்திரி எழுதிய நூல்கள். இவை அதுவரைக்குமான தொல்லியல் தடயங்கள் நூல் சான்றுகள் மற்றும் புறத்தடயங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து வரலாற்றை ஒரு பெருமொழிபாக எழுதி உருவாக்குகின்றன. ராஜராஜ சோழனின் வரலாறு அல்லது ஒட்டுமொத்தமாக தமிழ் வரலாறு என்று இவை ஒரு பெருஞ்சித்திரத்தை உருவாக்குகின்றன. இந்த சித்தரிப்புகள் தனித்தனியாக எழுதப்பட்டாலும் மிகச்சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒட்டுமொத்த உலகப்பெருவரலாறாக ஆகும் தன்மை கொண்டவை. எந்நிலையிலும் உலக வரலாற்றின் ஒருபகுதியாக கால வரிசைப்படியும், பார்வையின் அடிப்படையிலும், சித்தரிப்புகளின் இணைப்புகள் வழியாகவும் தொகுக்கப்படத்தக்கவை. ஒன்றுடன் ஒன்று மிகச்சரியாக இணைந்துகொள்ளும் தன்மையே செவ்வியல் வரலாற்றின் மிகச்சிறந்த அம்சம் என்று சொல்லலாம்.
இவ்வாறு எழுதப்பட்ட செவ்வியல் வரலாறுகளே தேசங்களை உருவாக்கின. பண்பாடுகளை வரையறுத்தன. நவீன காலகட்டத்தில் மதங்கள் கூட செவ்வியல் வரலாறுகளாலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. இன்றைய மனிதனின் உள்ளமென்பது செவ்வியல் வரலாற்றால் உருவாக்கப்பட்டதென்று சொன்னால் மிகையில்லை. தமிழக வரலாறென்பது சங்ககாலம் முதல் இன்று வரையிலான ஒரு பெருமொழிபாக நமக்கு நீலகண்ட சாஸ்திரியிலிருந்து குடவாயில் பாலசுப்ரமணியம் வரையிலான பேரறிஞர்களால் தொகுத்து தரப்பட்டுள்ளது. அந்த ஒட்டுமொத்த வரலாற்றின் ஒரு சுருங்கிய வடிவம் இன்று தமிழ்கத்தில் ஓரளவு கல்வி கற்ற அனைவருள்ளும் வந்துள்ளது. நம்முடைய கல்வி முறை வழியாகத் தொடர்ந்து அது பயிற்றுவிக்கப்படுகிறது. அது அதிகார பூர்வ வரலாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதை நான் நம்முடைய பெருமிதமாக சுட்டுகிறோம். நம்முடைய குறைகளைக் கண்டடையவும் அதையே பயன்படுத்துகிறோம். நம்முடைய அடையாளத்தேடல்கள் அனைத்துமே அந்த வரலாற்றில் தான் சென்று முடிகின்றன. நம் விழுமியங்கள் அனைத்தும் அந்த வரலாற்றால் தான் சான்றுரைக்கப்படுகின்றன, நிறுவப்படுகின்றன.
மூன்றாவதான வரலாற்று எழுத்து என்பது நவீனத்துவ காலத்தை ஒட்டியது அது சமூகவியல் வரலாறு, அரசியல் வரலாறு, பொருளியல் வரலாறு என வெவ்வேறு வரலாற்று எழுத்துகளை செவ்வியல் வரலாற்றெழுத்திலிருந்து தனியாக வளர்த்து பிரித்து விரிவாக்கிக்கொள்வது என்ற வகையில் திகழ்ந்தது. அதிகமும் 18-19ம் நூற்றாண்டின் அண்மைக்கால வரலாற்றிலேயே பொருளியல் வரலாற்றையும் சமூகவியல் வரலாற்றையும் விரித்தெழுதும் போக்கு உருவாயிற்று. அவ்வகையில் முனைவர் அ.கா.பெருமாள், ஆ.சிவசுப்ரமணியன் போன்ற முன்னோடிகளும் அவ்வரிசையில் மிகத்திறன் வாய்ந்த வரலாற்றாசிரியரான ஆ.இரா.வெங்கடாசலபதியும் தமிழில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இந்த வரலாற்றெழுத்து பழைய வரலாற்றெழுத்தின் அடிப்படைகளை மறுக்காமல் விரிவாக்குவதன் வழியாக அதைக் கடந்து செல்வதாகும். தமிழ் பெருவரலாற்றின் ஒரு பகுதியிலேயே ஆ.இரா.வெங்கடாசலபதி சித்தரிக்கும் பின்னி ஆலைப்போராட்டமோ வ.உ.சி கப்பலோட்டிய வரலாறோ வந்து இணைந்து கொள்கிறது. ஆகவே செவ்வியல் வரலாற்றைக்கொண்டு இதைப் புரிந்துகொள்ள முடியும். இதைக்கொண்டு செவ்வியல் வரலாற்றை விரித்தெடுத்துக்கொள்லவும் முடியும்.
உலகெங்கும் நவீனத்துவ வரலாறு மிக ஆழ்ந்த கருத்தியல் செல்வாக்கை செலுத்தியிருக்கிறது குறிப்பாகப் புனைவிலக்கியத்தை மிகப்பெரிய அளவில் நவீனத்துவ வரலாறு ஊடுருவியிருக்கிறது என்றே சொல்லலாம். நவீனத்துவ வரலாற்றின் உச்சம் என்றோ அடுத்தகட்டத்திற்கான தொடக்கமாக அமைவது என்றோ ரணஜித் குகா போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட விளிம்புநிலை வரலாற்றை சொல்லலாம். அது வரலாற்றை பெருமரபுகளால் முற்றிலும் ஒதுக்கப்பட்ட புறநடையாளர்களின் வரலாற்றை எழுதுவதனூடாக வரலாற்றுக்கு ஒரு மாற்றுச்சித்திரத்தை உருவாக்குவது. வரலாற்றில் எப்போதும் பொருட்படுத்தப்படாதவர்களாகிய ஒடுக்கப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள், மாற்று பண்பாடு கொண்ட மக்களின் வரலாற்றை அவர்களின் வாழ்வு முறைகளைக் கொண்டும் தொன்மங்களைக் கொண்டும் மீட்டுருவாக்கம் செய்வது இது. தமிழகத்தில் நாட்டாரியல் வலுப்பெற்ற து ஓரளவுக்கு நிகழ்ந்தது, அருந்தததியர் வாழ்வு பற்றிய மார்க்கு எழுதிய நூலும் கரசூர் பத்மபாரதி திருநங்கையர் பற்றியும் நரிக்குறவர்கள் பற்றியும் எழுதிய நூல்களும் ஒருவகையான வரலாறுகளே. அவை மரபான வரலாற்றின் மீதான வலுவான ஊடுருவல்கள் மறுப்புகள். அவற்றையும் நவீனத்துவ வரலாற்றின் உச்சகட்ட வெளிப்பாடுகள் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் அவையே பின்நவீனத்துவ கால புதிய வரலாற்று முறை ஒன்றிகான தொடக்கத்தையும் உருவாக்கின
பின் நவீனத்துவ வரலாறு என்பது ஒருவகையில் வரலாறு மறுப்பே. எல்லா வரலாறும் புனைவே என்றும், வரலாறு என்பது ஒரு பெருங்கதையாடல் என்றும், வரலாற்றுக்கு எதிரான செயல்பாடே வரலாற்றை சரியான வகையில் கையாள்வதாக ஆகமுடியும் என்றும் கூறுவது. வரலாறு வாழ்க்கையை ஒருகுறிப்பிட்ட முறையில் தன்னை கட்டி எழுப்பி முன்வைக்கிறது எனில் அக்கட்டமைப்பை குலைப்பதே வரலாற்றை பயன்படுத்துவதும் கையாள்வதுமாகும் என்று பின் நவீனத்துவர்கள் சொல்கிறார்கள். எல்லாவகையான பெருங்கதையாடல்களை மறுப்பதும், பெருங்கதையாடல்களை சிறு உபகதைகளாகவும் உள்முரண்களாகவும் சிதைத்துப்பார்ப்பதும் அதன் வழி.
ஏனெனில் பின்நவீனத்துவம் என்பது எல்லாவகையான பெருமொழிபுகளையும் நிராகரிக்கிறது. தொகுத்து பெருஞ்சித்திரத்தை உருவாக்குவது என்பது பேரதிகாரத்தை உருவாக்குவதாகவே அது பொருள்கொள்கிறது. அறிவுச் செயல்பாடென்பது எப்போதுமே ஆதிக்கச்செயல்பாட்டுக்கு அல்லது தொகுப்புச் செயல்பாட்டுக்கும் எதிரானதாகவே இருக்கும் என்று அது வரையறை செய்கிறது. அதிகாரம் ஆதிக்கம் ஆகியவை மனிதனுடைய இயல்பால் தன்னியல்பாக உருவாகிவரக்கூடியவை. அறிவுச் செயல்பாடென்பது திட்டமிட்டு அதற்கு எதிராக நிலைகொள்வதாக இருக்கவேண்டும் என்று பின்நவீனத்துவம் வரையறை செய்கிறது ஆகவே தனக்கு முந்தைய எல்லாவகையான வரலாற்று உருவகங்களையும் பின் நவீனத்துவம் நிராகரிக்கிறது. அதைச் சிதைப்பதும் கலைப்பதுமாக தனது விளையாட்டு வரலாற்றை எழுதிப்பார்க்கிறது.
பின்நவீனத்துவ வரலாறு என்பது தமிழ் வரலாற்றுத்துறையில் அநேகமாக எந்த செல்வாக்கையும் செலுத்தவில்லை. இத்தனைக்கும் தமிழ்ச்சூழலிலேயே பின்நவீனத்துவம் சார்பான ஒரு வரலாற்றெழுத்திற்கு மிகத்தொன்மையான ஒரு முன்னோடி நிகழ்ந்திருக்கிறார். பின்நவீனத்துவக் கருத்துகள் இங்கு அல்லது எங்கும் உருவாவதற்கு மிக நெடுங்காலம் முன்னரே அவர் அதற்கான ஒரு முன்வரைவு ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். பண்டித அயோத்திதாசர் இந்திய வரலாறென்பதே இந்துக்களால் ,உயர்சாதியினரால் உருவாக்கப்பட்ட ஒரு பெரும்புனைவே என்று கண்டடைகிறார். அதற்கு நிகராக ஒரு மாற்று வரலாற்றை அல்லது ஒரு மாற்றுப்புராணத்தை செவ்வியல் நூல்களிலுள்ள தரவுகளைப் பயன்படுத்தியும் அதனுடன் கற்பனைகளை இணைத்துக்கொண்டும் தான் உருவாக்குகிறார். அவருடைய இந்திரர் தேச சரித்திரம் ’ என்ற நூல் ஒரு பின்நவீனத்துவ மாற்றுக் கதையாடல் என்று சொல்லலாம்.
அத்தகைய மாற்று வரலாறுகளை மிகப்பெரிய அளவில் திரும்ப உருவாக்கும் முயற்சிகள் எதுவும் தமிழில் அல்லது இந்திய அளவிலேயே எதுவும் நிகழவில்லை. ஏனெனில் அதற்கு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைகளிலிருந்து தரவுகளை மிகப்பெரிய அளவில் சேர்க்கவேண்டியிருக்கிறது. அவற்றை தமிழ் மரபிலக்கியத்திலும் தொல்லியல் சான்றுகளிலுள்ள தரவுகளுடன் இணைத்து ஒருபெரும் சித்திரத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதை இன்றைய சூழலில் தனிநபர் ஒருவர் முழுமையாக செய்து முடிப்பது இயலாது. இவ்விரு பணிகளும் அறிவுத்தளத்தில் ஏற்கனவே விரிவாக நிகழ்ந்துவிட்டிருந்தால் அவற்றைக்கொண்டு ஒரு புதிய வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் அவ்வாறான பணிகள் தலித் ஆய்வுகள் தளத்தில் இப்போது தான் மிகத்தீவிரமாக நிகழ்ந்து வருகின்றன. எதிர்காலத்தில் அவர்களின் ஆய்வுகளும் நாட்டாரியல் தரவுகளும் பிறவும் இணைந்து ஒரு மாற்று வரலாற்று நிகழ்வு இங்கு நிகழ்ந்தால் வியப்பதற்கில்லை.
ஆனால் தரவுகளை நம்பத்தேவையற்ற புனைவிலக்கியத் தளத்தில் வரலாற்றில் மறுப்புவரலாறு மிக எளிதாக இயல்வதாகியது. வரலாற்றை கற்பனையின் துணை கொண்டு ஊடறுத்தும் சிதைத்தும் மாற்றி அடுக்கியும் மாற்று வரலாற்றை உருவாக்குவது தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு கோணத்தில் நிகழ்ந்தது. ஒரு வகையில் விஷ்ணுபுரம் இந்திய வரலாற்றையும் இந்திய தத்துவ வரலாற்றையும் ஒட்டுமொத்தமாகவே முற்றிலும் புதிய கோணத்தில் திருப்பி எழுதும் புனைவுதான். அது விஷ்ணுவிலிருந்து புத்தருக்கும், அங்கிருந்து பழங்குடி தெய்வத்துக்கும் திரும்பிச்செல்லும் ஒரு தலைகீழ் வரலாற்றுருவாக்கத்தை மேற்கொண்டிருக்கிறது. கொற்றவை அவ்வாறே தொல்அன்னை நோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மிக விரிவான கோணத்தில் வெண்முரசும் அவ்வாறே. மகாபாரதப் பெருங்கதையாடலில் விடப்பட்டுள்ள புள்ளிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி எழுதப்பட்ட மறுபுனைவு அது.
வரலாற்றை அவ்வாறு புனைவுகளினூடாக ஊடறுப்பதை ரமேஷ் பிரேதன், பா.வெங்கடேசன் ஆகியோர் தங்கள் நூல்களினூடாக நிகழ்த்தினர். பிறிதொரு வகையில் அதையே கோணங்கி தனது பாழி பிதுரா போன்ற நூல்களில் செய்திருக்கிறார். வரலாற்றை வெறும் மொழி வெளிப்பாடாகவே பார்த்து அந்த மொழியைச் சிதைத்து கலைத்து அடுக்குவதனூடாக இன்னொரு வரலாற்றை உருவாக்குவதற்கான முயற்சி என்று கோணங்கியின் நாவலை வரையறுக்கலாம்.
இந்த வரிசையில் சமகால வரலாற்றை முழுமையாகவே கலைத்து ஒரு கலவைப்பெருஞ்சித்திரமாக ஆக்கியவர் என்று இரா.முருகனைக் கூறலாம். அவ்வகையில் பின்நவீனத்துவ வரலாற்றுச் சித்திரங்களில் மிக முக்கியமானதும் மிக முதன்மையானதும் இரா.முருகனின் புனைவுலகமே. விஷ்ணுபுரம் முதல் வெண்முரசு வரையான நாவல்களில் வரலாற்றை தத்துவக்கோணத்தில் மறுஆக்கம் செய்வதென்பது ஒரு பின்நவீனத்துவக்கூறு என்றாலும் அப்போக்கு செவ்வியல் அழகியலுக்குள் தன்னை முழுமையாக நிறுத்திக்கொள்கிறது. பின்நவீனத்துவத்தை கடந்து ஒரு மறுதொகுப்புக்கும் அதனூடாக புதிய விழுமிய உருவாக்கத்திற்கும் செல்கிறது என்ற வகையில் மீநவீனத்துவம் அல்லது ட்ரான்ஸ் மாடர்னிஸம் என்று வரையறுக்கத்தக்கது.
இரா.முருகன் பின்நவீனத்துவர்கள் வரலாற்றைப்பற்றி கூறும் எல்லா வரையறைகளையும் முழுமையாகக் கொண்ட படைப்புகளை எழுதியிருக்கிறார். அரசூர் வம்சம் முதல் மிளகு வரையிலான நாவல்கள் அனைத்துமே வரலாற்றின் மீதான ஊடுருவல்கள். வரலாற்றை தலைகீழாக்கம் செய்யும் தன்மை கொண்டவை. விழுமியங்கள் சார்ந்தும், கட்டுக்கோப்பு சார்ந்தும், மையப்பார்வை சார்ந்தும் மரபான வரலாறு உருவாக்கும் அனைத்தையுமே முழுமையாக அவை தலைகீழாக்கம் செய்கின்றன. அத்தலைகீழாக்கத்தை எந்தத் தத்துவத்தின் துணைகொண்டும் நிகழ்த்தாமல் முழுக்க பகடி வழியாகவே அவை நிகழ்த்திச் செல்கின்றன. அந்தப் பெருஞ்சித்திரத்தினூடாக மையமென்றும், தரிசனமென்றும், விழுமியமென்றும் எதுவுமே திரளாமல் சிதைத்து விழிதொடும் தொலைவு வரை முற்றிலும் பரப்பி வைக்கும் பணியை அவை செய்திருக்கின்றன. ஆகவே தமிழின் முழுமையான பின் நவீனத்துவ வரலாற்றுக் கதை சொல்லி என்று இராமுருகனை வரையறை செய்ய முடியும்.
( 5 )
பின்நவீனத்துவ மாற்று வரலாற்றுப் பரப்பு என்று வரையறுக்கத்தக்கவை இரா.முருகனின் பெருநாவல் தொடர்கள். அரசூர் வம்சம் முதல் மிளகு வரையிலான அவருடைய அத்தனை நாவல்களையும் இணைத்து ஒற்றைப் பெருநாவலாகக் கூட வாசிக்க முடியும். ஒரு நாவலின் குறிப்பு பிறிதொரு நாவலில் வேறொரு வகையில் நீள்கிறது. பலசமயம் ஒரே கதைமாந்தர்களே வெவ்வேறு காலகட்டங்களிலாக இந்நாவல்களில் அனைத்திலும் வாழ்கிறார்கள். காலம் கடந்து நினைவுகளினூடாகவோ அல்லது மாயப்புனைவு வழியாகவோ பிற வரலாற்றுக்களங்களில் தோன்றுவதும் அவரது கதாபாத்திரங்களுக்கு இயல்வதாகிறது. அனைத்திலுமுள்ள புனைவுமொழியும் பார்வையும் ஒன்றே
அவருடைய புனைவுகளின் அடிப்படையான சில கூறுகளை ஒரு விமர்சகனாக வகுத்துக்கொள்ள விரும்புகிறேன். முதன்மையாக அவை முற்றிலும் உலகியல் சார்ந்தவை. ஒருவேளை தமிழில் மிகப் பிடிவாதமான உலகியல் தன்மை கொண்ட படைப்பாளி என்று இரா.முருகனை மட்டுமே கூற முடியும்.
உலகியல்த் தன்மை என்பது கண்கூடாக விரிந்திருக்கும் பருப்பொருள்வெளியுடன் மட்டுமே தன் சித்தத்தை இணைத்துக்கொள்வது. புலன்களால் அறியப்படாத எதையுமே ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. இங்கே அன்றாடத்தில் நிகழ்ந்தவை, நிகழ்பவை, நிகழச்சாத்தியமானவற்றிற்கு அப்பால் கற்பனையால் எவ்வகையிலும் எழாமலிருப்பது. மாயங்கள் கூட அன்றாடத்தில் இருந்து எழுந்து வந்து செவிகளை அடைபவையாக இருப்பது..
புனைவில் அந்த உலகியல்த் தன்மை வெவ்வேறு கூறுகளால் மீறப்படுகிறது. இலட்சியங்கள், கனவுகள் ஆகியவை உலகியலுக்கு அப்பாற்பட்டவை. ஆன்மிகமும் மெய்யியலும் உலகியலைக் கடந்து செல்பவை. உணர்ச்சி நிலைகளின் தீவிரம் கூட உலகியல் சார்ந்த அன்றாடத்தன்மை எல்லையை மீறும்போது ஒரு லட்சியவாதத் தன்மையை அடைந்து உலகியலைக் கடந்து செல்கிறது. இந்தக்கூறுகளால் தான் தமிழின் பிற படைப்பாளிகள் உலகியல் பற்றுடன் இருக்கையிலேயே அவர்களின் ஒருபகுதி உலகியலைக் கடந்து செல்கிறது.
உதாரணமாக சொல்லத்தக்க சில படைப்பாளிகளை எடுத்துப் பார்க்கலாம். நீல.பத்மநாபன், அசோகமித்ரன் போன்றவர்கள் லௌகீகத்தின் எளிமையை அன்றாடத்தின் துல்லியத்தை தங்கள் புனைவுகளினூடாக நிகழ்த்தியவர்கள். அவ்வெல்லையைக் கடந்து செல்ல எவ்வகையிலும் முயலாதவர்கள். ஆனால் அசோகமித்திரனின் படைப்புகள் வாழ்க்கையை ஏதோ ஒருகணத்தில் ஒரு முடிவின்மையுடன் இணைத்துக்கொள்ள முயல்கின்றன. அவ்வகையிலாக அவை தத்துவமும் மெய்யியலுமாக உருக்கொள்கின்றன. தண்ணீரில் யமுனாவுடன் பேசும் அந்தப் பக்கத்து வீட்டு மாமியோ, விடுதலை நாவலில் ஐயர் கண்டடையும் அகமோ, புலிக்கலைஞன் கதையில் அக்கதையினூடாக கதை சொல்லி முன்வைக்கும் லட்சியமோ அவ்வாறு உலகியலைக் கடந்து செல்வதுதான்.
நீல. பத்மநாபனின் நாவல்கள் முற்றிலும் உலகியல் ஒன்றையே சொல்லி ஆனால் ஒன்றுடன் ஒன்று இணைத்து இணைத்து ஒட்டுமொத்த சித்திரம் ஒன்றை உருவாக்குகையில் உலகியலுக்கு அப்பால் உள்ள லட்சியம் ஒன்று வந்து முன் நிற்கிறது. உதாரணமாக உறவுகள் ஒரு மரணத்தை ஒட்டி சந்திக்கும் உறவுகளின் சித்திரங்களால் மட்டுமே ஆனது. எளிதாக குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற ஒற்றை வரியின் விரிவாக்கமாக அந்த நாவலைப்படிக்க முடியும் ஆனால் உறவுகளின் வலையினூடாக மனிதம் இங்கு ஒரு திரளென திகழும் சித்திரத்தை அளிப்பதனூடாக அது ஒரு லட்சியவாதத்தை நிகழ்த்திவிடுகிறது. அவ்வகையாக உலகியலை கடந்து செல்கிறது.
உலகியல் சார்ந்தவர் என்று எளிதாக சொல்லத்தக்க ப.சிங்காரம் படிமங்களினூடாக அதைக் கடந்து செல்வதைக் காணலாம். உதாரணமாக பாண்டியன் மைதானிலிருந்து ரங்கூனுக்கு கப்பலில் வரும் காட்சியின் உள அலைகள். இப்படி தமிழின் முன்னோடிப்படைப்பாளி ஒவ்வொருவரை தொட்டு எடுத்தாலும் அவர் உலகியல் கடந்து செல்லும் தருணங்களால் தான் அவரது உச்சம் நிகழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது.
எனது வாசிப்பில் இப்போது இரா.முருகன் மட்டுமே முற்றிலும் உலகியலானவர் என்று தோன்றுகிறது. அவருடைய உலகியல் எல்லா வகையான லட்சியவாதங்களையும் நையாண்டியால் கடந்து செல்கிறது. எந்த உணர்ச்சி நிலையையும் புனைவிற்குள் நிகழ்த்த முடியாத அளவிற்கு அவருடைய புனைவு மொழியிலேயே தாவிச்செல்லும் ஒரு கேலி உள்ளது. வரலாற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து ஒரு மையம் நோக்கிக் கொண்டு செல்லவோ ஒரு விழுமியமாகத் திரட்டிக்கொள்ளவோ ஒரு லட்சியமாகக் கூர்மைப்படுத்தவோ அவருடைய புனைவுலகம் முயல்வதே இல்லை. ஆகவே முற்றிலுமாக இங்கே நிகழ்வன, நிகழ்வன என எண்ணிக்கொள்ளப்படுவன, நிகழ் வாய்ப்புள்ளவை, நிகழ்வனவற்றுக்கு நேர்தலைகீழானவை என்று மட்டுமே அவருடைய படைப்புலகம் இயங்குகிறது.
இந்த உலகியல் தன்மையே தமிழில் தொடர்ந்து இலக்கியம் படித்துக்கொண்டு வரும் வாசகனுக்கு சிலசமயம் இப்படைப்புகள் சோர்வளிக்கவும் காரணமாகிறது. திரும்ப திரும்ப அன்றாடத்தையே வித்தாரமாக சிதைத்தும் விளையாட்டுப்பொருளாக மாற்றியும் இக்கதைகள் சொல்லிச் செல்கின்றவோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏழு கழற்சிக்காய்களை இருகைகளிலுமாக வைத்து ஆடும் ஒரு கலைஞனின் திறமை போன்று இப்புனைவு தோற்றமளிக்கிறது. அக்கழற்சிக்காய்கள் அவனிலிருந்து விடுதலை பெற்று தன்னியல்பாக காற்றில் சுழன்று நடனமாடும் சித்திரத்தை நமக்கு அளித்து வியப்புக்குள்ளாக்கினாலும் கூட அவை மொத்தமே ஏழுதான் என்ற எண்ணம் நமக்குத் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது போல. ஆனால் இந்த உலகியல் தன்மை தமிழ் இலக்கியம் உருவாக்கிய ஒட்டுமொத்த சித்திரத்திற்கும் நேர் எதிராகத் தன்னை நிலை நிறுத்துக்கொண்டிருக்கிறது என்பது ஒரு முக்கியமான இலக்கியச் சாதனை என்று நான் நினைக்கிறேன். இதைக் கருத்தில் கொள்ளாமல் தமிழ் இலக்கியத்தின் ஒட்டுமொத்தத்தை இன்று வகுத்துவிட முடியாதென்பதும் இரா.முருகனின் இடத்தை உறுதிப்படுத்தும் அம்சமாகும்.
(மேலும்)