கே.சச்சிதானந்தன், ஐந்து கவிதைகள்

போகிறவர்களைப் போகவிடுங்கள்

 

போகிறவர்களைப் போகவிடுங்கள்

எஞ்சுபவர்களை நோக்கி பார்வையைத் திருப்புங்கள்

 

கண்ணாடியைப் பாருங்கள்

ஒரு தேவதை அதற்குள் இருந்து

உங்களிடம் ’வாழ்க வாழ்க’

என்று உங்கள் குரலில் முணுமுணுக்கிறது

 

மௌனத்திற்குச் செவியளியுங்கள்

அது உண்மையில் ஒரு முழக்கம்

கூந்தலை பின்னால்தள்ளிவிட்டுக்கொண்டு

காதலிபோல வெடித்துச்சிரிக்கும்

அருவிகள், இலைநடனம்

காற்றின் சிலம்பொலி, சுவர்க்கோழி ரீங்காரம்

ஆற்றுக்கு அப்பாலிருந்து

இனியும் சாகாதவர்களின் பாடல்

காதுகளில் பூக்குலைகள் தொடுத்துக்கொண்டு

கை தட்டியபடி வரும் ஆவணி

நேற்று இல்லை, நாளையுமில்லை

ஆகாயம் நோக்கித் திறக்கும்

இன்றின் வாசல்கள் மட்டும்

 

கூடவே மணங்களும்

ஈர வைக்கோலின் நெல் அவிப்பதின்

புதுமண்ணின் இலஞ்சியின் கமுகுப்பூக்குலையின்

ஏலத்தின் பாம்புமுட்டையின்.

மரங்களும் மனிதர்களும் எழுப்பும்

ரகசியச் சுரப்புகளின் வாசனைகள்.

 

இன்று நான் உறங்கப்போவதில்லை

உங்களை உறங்கவிடப்போவதுமில்லை.

 

அவ்வப்போது

 

அவ்வப்போது சிரிப்பது நல்லது

தற்கொலைக்கு முன்னர்கூட

 

ஏனென்றால் சூரியன் நமக்குப்பிறகும் இருக்கும்

கொந்தளிக்கும் கடலில்

மீனவர்கள் தோணியிறக்குவார்கள்

மூழ்கி இறந்தவன்

கரையில் கழற்றிவைத்த வேட்டி

ஆற்றங்கரைக்காற்றில் பறக்கப் பயில்கிறது

வறுமைகளின் மெத்தையில் படுத்து

ஓர் ஆணும்  ஒரு பெண்ணும்

சொர்க்கம் நோக்கி மலர்கிறார்கள்

 

ஒரு சிறுவன் மதியத்தின் தோளிலமர்ந்து

நெற்றிப்பட்டம் கட்டிய யானைகளை கனவுகாண்கிறான்

ஒரு சிறுமி தாழம்பூ மணத்தை முகர்ந்து முகர்ந்து

காற்றாக மாறுகிறாள்

ஒரு பறவை திரும்ப பறக்கும் வழியில்

நான்கு நீலநிற முட்டைகளையும் ஒரு விண்மீனையும்

அந்திப்பரப்பில் இட்டுச்செல்கிறது

மகிழ்ச்சியான குடிகாரனொருவனின் உதட்டில்

சைகால் ஜெயச்சந்திரன் போல நடுங்குகிறார்

ஒரு கவிதை குடைவிரித்து முகம் மறைத்து

ஆலமரத்தடியில் நடந்து செல்கிறது

 

சேப்பஞ்செடியின் இலையில் மரகத மழைத்துளி

கவிஞர் குஞ்ஞிராமன்நாயரை நினைவுகூர்கிறது

இதே பூமியின் வயிற்றில்

இந்நிமிடமே பார்க்கவிரும்புகிறேன்

ஆத்மாவுள்ள ஓர் அடையாளத்தை

ஐயன்காளியைப்போல

சிறகுள்ள ஒரு மைத்துளி

அப்துல்ரஹ்மானைப்போல வீரமும் அன்பும்கொண்ட

ஒரு பொற்கதிர்.

கேளப்பனைப்போல மணலில் விரியும்

ஒரு வெண்ணிற சங்குபுஷ்பம்

வி.டியைப்போல சிரித்து பொழியும்

ஒரு கோடைமழை

ஏகேஜியைப்போல பற்றற்ற

பளிங்கு இதயத்தின் ஒரு துளி

வற்கீஸின் தோண்டியெடுக்கப்பட்ட கண்களில் இருந்து

முளைத்தெழும் ஒரு போதியிலை.

 

சொல்லுங்கள்

உண்டு என

அது மூச்சுவிடுகிறது

அசைகிறது என்று.

இதே பூமியின் வயிற்றில்.

 

என் துடிக்கும் செவிகளை

நான் மண்ணோடு சேர்த்து வைக்துப்பார்க்கிறேன்

*

  • பி.குஞ்ஞிராமன்நாயர். மலையாள கற்பனாவாதக் கவிஞர்
  • கேளப்பன் – சுதந்திரப்போராட்ட வீரர்
  • அப்துல் ரஹ்மான் – சுதந்திரப்போராட்ட வீரர்
  • ஏ.கே.கோபாலன். இடதுசாரிப் பெருந்தலைவர்.
  • வி.டி.நம்பூதிரிப்பாடு – சமூகசீர்திருத்தவாதி.
  • வற்கீஸ்- கொல்லப்பட்ட நக்சலைட் தலைவர்

 

இறுதிவிருப்பம்

 

 

நான் அசோகன்

பிணக்குவியல்களின்

துயரம் நிறைந்த காவல்காரன்

சகோதரர்களின் தலைகளை மிதித்து

ரத்தநதியை கடக்கும் துரியோதனன்

குருதிகலசத்தை கிரீடமாக்கிக்கொண்ட

வெறும் ஊன்தடி

 

என் கழிவிரக்கம்

பாலைவெளியில் அலையும்

ஆண்மையற்ற காளை

என் மனமாற்றம்

குருதி படிந்த வாளின்மீது

சுற்றப்பட்ட காவி

 

தர்மச்சொற்பொழிவாற்றும் இக்கனவுகளால்

என் பாவத்தை மறைக்கமுடியாது

அவையும் என் கீர்த்தித்தூண்களென்றாகும்

என் தீமையின் விரைத்தெழல்கள்.

 

என் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரக்காலும்

நான் ஒடுக்கிய ஒரு வம்சத்தின் முதுகெலும்பு

என் சிம்மங்களின் ஒவ்வொரு சடைமயிரும்

நான் எரித்த நகரங்களின் சிதைச்சுவாலை.

 

இருபோர்களிலும் நான் தோற்றேன்

எனக்கு மரணதண்டனை அளியுங்கள்

என் இறுதிவிருப்பம் இதுவே

இப்புவியின் இறுதி அரசன்

நானேயாகவேண்டும்.

 

ஹிரோஷிமாவின் நினைவு

 

நாங்கள் புற்கள்

புயலாலும் ஒடிக்கமுடியாதவர்கள்

பூகம்பங்களையும் புரட்சிகளையும்

முயல்களையும் வென்றுகடந்தவர்கள்

மாபாதகங்களின் மௌனசாட்சிகள்

நாங்கள் சொல்கிறோம்

இனி இது நிகழலாகாது.

 

1

 

நினைவுகூர்கிறோம் ஹிரோஷிமாவை.

கோடி சூரிய ஒளியுடன்

மரணம் வந்திறங்கியது

பின்னர் கரி, சாம்பல்

மண்டையோடுகளின் பூங்கா.

முலைப்பாலும் குருதியும் சொட்டும்

கருகிய கிமோணாக்கள்.

பற்றி தகித்த இதயங்களுடன்

வீட்டின் குளிர்தேடி தவழ்ந்துவந்து

படியில் துடித்து விழுந்த

குழந்தைகளின் குட்டிச்செருப்புகள்.

அஞ்சி பள்ளிப்பைகளில் இருந்து துள்ளி

வெளியே விழுந்த பொம்மைக்குழந்தைகள்

நின்றுவிட்ட இயந்திரங்களில் ஒட்டியிருக்கும்

அப்பமும் துணியும் செய்த விரல்கள்

செத்த பாடல்களின் தொப்பிகள்

மறைந்த நடனங்களின் பாவாடைச்சுருக்கங்கள்

கரைந்துக் குலைந்த காதல்கள்

எரியும் ஆகஸ்டின் வெண்ணிறவெம்மையில்

உருகிய செர்ரி பூக்கள்

உருகிய கண்கள்

உருகிய கடிகாரங்களில்

உருகிப்போன காலம்

உருகிப்போன சிலேட்டுகளில்

உருகி வழிந்த மொழி

 

 

2

 

நாங்கள் புற்கள்

பூமியை சூனியவெளியில்

சுழலும் மரகதமாக ஆக்குபவர்கள்

விளையாடும் குழந்தைகளுக்கும்

உதிரும் மலர்களுக்கும்

வலிக்காமல் பார்த்துக்கொள்பவர்கள்.

இறப்பவர்களின் மண்டையோடுகளில்

இனிமைகளை பச்சைகுத்தி வைப்பவர்கள்

நாங்கள் சொல்கிறோம்

இனி இது நிகழலாகாது

 

நாங்கள் நினைவுகூர்கிறோம்

செர்னோபில்.

கத்தி வீசுபவனைப்போல

குருதிபூசிக்கொண்டு வருவதில்லை சாவு

காளைப்போர் செய்பவனைப்பொல

இறுகிய கால்சட்டையும் சிவந்த துணியுமாகவும் அல்ல

பூமியை பிறப்பித்த

முதல் பெருவெடிப்பு போல

திருவிழாக்கள்நிறைந்த ஏப்ரலில்

கோடைநள்ளிரவில்

ராப்பாடிகளின் தொண்டைகளையும்

நாடோடிகளின் நடனக்கால்களையும்

அசைவிழக்கச் செய்தபடி மீண்டும்

ஹிரோஷிமாவின் கடும்சூரியன் வந்திறங்கியது

வசந்தத்தில் இருந்து வேனிலுக்கு

தவழ்ந்து படர்ந்தேறும் வெம்மையின் முதல்சர்ப்பங்கள்

ஆட்டுமந்தைகளின் கழுத்துமணிகளுக்கும்

காகங்களின் கா-காக்களிலும்

பூனைகளின் மியாவ்களிலும்

தவழ்ந்தேறும் விஷமிளிர்வு

உப்பவைக்கும் பலூனுக்குள்

மூச்சுடன் பாய்ந்தேறிச்செல்லும் உயிர்

தாகம்கொண்ட குழந்தைகள ஏற்றிக்கொண்டு

எங்கும் கொண்டுசெல்லா வழிகள் வழியாக

ஓடும் அன்னையர்

வீண் பிரார்த்தனைகள் போல

வெள்ளைப்படுக்கைவிரிப்புகளில் வந்துவிழும்

குறைக்குழந்தைகள்

மரணம் ஒழுகும் பால்குப்பிகள்

குருதி குடிக்கும் தக்காளித் தோட்டங்கள்

தங்கவாள்களை வீசி நிற்கும் கோதுமை வயல்கள்

செத்த கிளிகளை உதிர்க்கும் மரத்த மரங்கள்

கசக்கும் தேன். கரிய மகரந்தப்பொடி

கரிய பனி.

கொல்லும் மழை கொல்லும் காற்று

கொல்லும் நிலா

 

3

 

நாங்கள் புற்கள்

மழைப் புள்ளிகள் விழுந்த

கனவின் பச்சைக்கொடிகள்

அடர்களங்களின் பாலைகளிலும்

உயிரின் ஈரத்தை  தக்கவைப்பவர்கள்

இரவின் குளம்படிகளில்

நசுங்குவதற்காக நாங்கள் வளரவில்லை

கேளுங்கள் எங்கள் பசுமைச்செய்தியை,

 

குழந்தைகளை ஊட்ட

தாலாட்டுகளையும் வெள்ளரிக்கொடிகளையும்

இந்த மண்ணில் நட்டு வளர்த்த அன்னையரே,

அமைதியின் புதிய உதயத்திற்கு

பல்லாண்டு பாடும் பாணர்கை முழவுகளை

சாட்சியாக்கி உணர்ந்தெழுக.

அணுக்ககதிர் கிரகணத்திலிருந்து காப்பாற்றுக

குறுந்தோட்டியின் வேர்களுள்ள

உங்கள் பாசத்தின் அமுதசந்திரனை

நெல்வயல்களிலும்

பேரர்களின் கனவுகளிலும்

வரும்யுகத்தின் பொன் விளையவைக்கும்

வீரர்களான விவசாயிகளே,

தெய்யவடிவங்களில் ஊறிவரும்

முன்னோரின் கண்ணீரைச் சாட்சியாக்கி எழுக.

விஷமரணங்களில் இருந்து காப்பாற்றுக

கமுகின் பூக்குலைகளின் மணமுள்ள

உங்கள் செயல்களின் அழியாத சூரியனை.

அடியாளனின் பறையிலும் ஏழைகளின் இதயத்திலும்

மீண்டும் ஒருமுறை

வளவாழ்வின் தாளம் முழங்கும்வரை.

இடையனின் புல்லாங்குழலும் மாரிக்கால முகிலும்

பெய்யும் அமிர்தவர்ஷிணியில் இப்புவி

இன்னொருமுறை தளிர்க்கும் வரை.

சிலைகள்

இன்று எங்கள் மகாகவிஞனின் சிலை

இதே தெருவழியாகச் சென்றது

எழுத்தும் அசைவும் வற்றிய

வெண்கல உதடுகளுக்குமேல்

இரண்டு ஈக்கள் புணர்ந்தன.

சுழிகளையும் சுழற்காற்றுகளையும் உருவாக்கிய

சுட்டுவிரல்மேல்

ஒரு காகம் வந்தமர்ந்து

மலமறுத்து பறந்துசெல்கிறது.

 

இதே தெருவழியாகத்தான்

முன்பு எங்கள் நாட்டை ஆட்சி செய்த

அரசரின் கருங்கற்சிலையும் சென்றது.

இன்று அவர் நாற்சந்தியில்

தீவிரம்குறையாமல்

போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறார்.

 

அதன் பிறகும்

எத்தனை சக்கரவர்த்திகள்

ராஜதந்திரிகள் மக்கள்தலைவர்கள்

கலைஞர்கள் சேனாதிபதிகள்

இதே தெருவழியாக எழுந்தருளினார்கள்.

அனைவரும் நகரத்து மாளிகைகளின்

திருஷ்டிப் பொம்மைகளாக ஆனார்கள்.

 

சட்டென்று

உயிருள்ள அனைத்தையும் தொட்டு சிலையாக்கும்

மந்திரவாதியாகக் காலம்

என் முன் வந்து நிற்கிறது.

 

சாவது என்றால்

ஒரு திருஷ்டிப்பொம்மையாக ஆவது என்று பொருள்.

 

 

 

முந்தைய கட்டுரைதேவிபாரதி
அடுத்த கட்டுரைநேர்வழி விருது விழா அழைப்பு