அன்புள்ள ஜெ,
பொருளாதாரச் சுமை மற்றும் ஆராய்ச்சி துறையில் ஆதரவின்மை காரணமாக ஆராய்ச்சியில் இருந்து விலகி ஒரு பொது மருத்துவராக கடந்த நான்கு ஆண்டுகளாக ஊத்தங்கரையில் பணி புரிந்து வருகிறேன் . இன்று நான் பெரிதும் மதிக்கும் ஆராய்ச்சியாளர் லூக் ஓ நீல் (Luke O’Neill) அவர்களின் ஒரு சமீப கட்டுரையை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி இதழ்களில் ஒன்றான Nature -யில் கண்டேன் .
Murphy, M.P., O’Neill, L.A.J. A break in mitochondrial endosymbiosis as a basis for inflammatory diseases. Nature 626, 271–279 (2024). https://doi.org/10.1038/s41586-023-06866-z
2017 ஆம் ஆண்டில், நியூக்ளியஸுக்கும் மைட்டோகாண்ட்ரியாவுக்கும் இடையிலான எண்டோசைம்பியோடிக் உறவின் இழப்பு, செப்டிக் ஷாக் மற்றும் வார்பர்க் விளைவு போன்ற பெரும்பாலான நோயியல் நிலைமைகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கலாம் என்ற கருதுகோளை நான் முன்மொழிந்தேன்.
பேராசிரியர் வில்லியம் மார்ட்டின், பேராசிரியர் ருஸ்லான் மெட்ஜிடோவ், பேராசிரியர் புருனோ லெமைட்ரே, பேராசிரியர் லூக் ஓ’நீல், பேராசிரியர் நிக் லேன் உட்பட பல முக்கிய விஞ்ஞானிகளுடன் எனது கருதுகோளைப் பகிர்ந்து கொண்டேன்.பேராசிரியர் லெமைட்ரே இது ஒரு மிக சிறந்த கோட்பாடு, இருப்பினும் சோதனை ரீதியாக நிரூபிப்பது கடினம் என்று குறிப்பிட்டார்.
மர்பி மற்றும் ஓ’நீலின் சமீபத்திய கட்டுரையில் எனது பணி மேற்கோள் காட்டப்படவில்லை என்பதை நான் கவனித்தேன்.
இந்த முக்கிய கருதுகோளை உலகில் முதன்முதலில் முன்மொழிந்தவன் நான். ஏழு வருடங்களுக்கு முன் நான் உங்களை வேலூரில் சி.எம்.சி.யில் சந்தித்தேன். அங்கு சிகிச்சை பெற்று வரும் உங்கள் நண்பர் அலெக்ஸை சந்திக்க வந்தீர்கள்.. என் நண்பர் வேணு வெட்ராயன் உடன் இருந்தார்.
அப்போது நான் இந்தக் கருதுகோளைக் உங்களிடம் கூறினேன். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடந்த உரையாடலில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது இந்த கருதுகோள் பயங்கரமா இருக்கே என்று கூறினீர்கள் .
நண்பர் வேணுவிடம் பிறகு பேசும் பொழுது , ஜெயமோகன் இலக்கியம், நான் மருத்துவ ஆராய்ச்சி என வேறு உலகங்களில் இயங்கிய போதிலும் , ஒரு துறையில் ஞானம் பெற்ற ஒருவர் எவ்வாறு முற்றிலும் வேறுபட்ட ஒரு துறையின் முக்கிய கருதுகோளை புரிந்து கொண்டார் என்று வியந்து கூறினேன் . நண்பர்கள் கவனிக்கவும் , அந்த சமயத்தில் சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் என்னை பைத்தியம் என்றே கருதினர் .
மிகுந்த வருத்தத்துடன் என் மனைவிடம் சில வருடங்களுக்கு முன் கூறினேன் , இந்த முக்கிய கருதுகோளை நான் உலகில் எறிந்துவிட்டேன் , அதற்கு தகுதி இருப்பின் முளைத்தெழும்.முளைத்தெழுகிறது . நன்றி ஜெயமோகன்.
இந்த தலைப்பு தொடர்பான எனது இரண்டு முக்கிய கட்டுரைகளை கீழே காணலாம்.:
- Natesan, Vasanthakumar. (2017). Becoming Archaea: Septic Shock, Warburg Effect and Loss of Endosymbiotic Relation – Billion-Year War of Two Genomes. OSF Preprints, October 18. doi:10.31219/io/4pjye . ( https://doi.org/10.31219/osf.io/4pjye )
- Vasanthakumar N., Bhakta-Guha D., Guha G., Arunachalam J. (2020). Friend turned foe: A curious case of disrupted endosymbiotic homeostasis promoting the Warburg effect in sepsis. Med Hypotheses, 141:109702. doi:10.1016/j.mehy.2020.109702 . Epub 2020 Mar 31. PMID: 32289643. ( https://doi.org/10.1016/j.mehy.2020.109702 ).
அன்புடன்
என்.வசந்தகுமார்
அன்புள்ள வசந்தகுமார்,
முற்றிலும் தனிநபர்த்தளத்தில், முழுமையாகவே கற்பனை சார்ந்து உருவாகும் இலக்கியத்திலேயே இன்று ஏதேனும் நிறுவனம் சார்ந்து செயல்படுபவர்களே முன்னிலைப்படுத்தப் படுகிறார்கள். அமைப்புகள் அவர்களை முன்னிறுத்த வேண்டும். அமெரிக்காவில் கவனிக்கப்படும் நாவல்களில் பலவற்றில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் எழுத்துக்கல்வி பெற்றவர்களே ஆசிரியர்கள் என்பதை காணலாம். எஞ்சியோர் அரிதாக, தற்செயலாக, கவனிப்பு பெறுபவர்கள் மட்டுமே.
இச்சூழலில் ஆய்வு என்பது தனிப்பட்ட அளவில் நிகழ்த்தப்பட வாய்ப்பு மிக அரிது. ஆய்வுக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் சார்ந்து மட்டுமே ஆய்வுகள் நிகழமுடியும் என்னும் சூழலே உலகளாவ உள்ளது. சமூகவியல், மானுடவியல் போன்ற தளங்களிலேயே இப்படி என்னும்போது தூய அறிவியலில் சொல்லவே தேவையில்லை.
உண்மையில் இது ஒருவகையான அறிவதிகாரம். இதை மேலைநாடுகள் தங்கள் கைகளில் வைத்துள்ளன. ஜப்பானும், சீனாவும் மட்டுமே அந்த அறிவதிகாரத்திற்கு எதிராக அரசு ஆதரவுடன் எதையாவது செய்ய முடிகிறது. இந்தியாவில் முழுமையாகவே மேலை அறிவதிகாரத்திற்கு அடிமைப்பட்டு நிற்கும் போக்கே உள்ளது. பாதுகாப்புத்துறைக்கு மட்டுமே தனித்துச் செயல்படுவதற்கான அரசு ஆதரவு உள்ளது.
இச்சூழலில் நீங்கள் உங்கள் குரலை எப்படி ஒலிக்கவிடமுடியும் என்ற திகைப்பே எனக்கு ஏற்படுகிறது. அமெரிக்காவில் உயராய்வு செய்த ஒருவர் சூழலின் அழுத்தத்தால் இந்தியாவில் மருத்துவராக பணியாற்றுவதென்பதே எனக்கு அன்று விந்தையான ஒரு புனைவுபோல் இருந்தது. அமெரிக்கச் சூழலைவிட இந்தியச் சூழல் மேலானது என ஒருவர் சொல்லி முதல்முறையாக அப்போதுதான் கேள்விப்பட்டேன்.
நான் உங்களுடைய கொள்கைகளைப் பற்றி நண்பர்களுடன் தொடர்ச்சியாக விவாதித்துள்ளேன். அண்மையில்கூட நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். எனக்கு அறிவியல்பயிற்சி இல்லை. ஆனால் ஓர் எழுத்தாளனுக்குத் தேவையான அளவுக்கு தொடர்ச்சியான அறிவியல் வாசிப்பு உண்டு. ஆகவே உங்கள் கொள்கை திகைப்பூட்டும்படி புதியது என்றும் அசலானது என்றும் தோன்றியது. அதை உங்களிடம் சொன்னேன்.
அதன்பின் அக்கருத்தை தொடர்ச்சியாக உயிரியல் ஆய்வேடுகள் வழியாக வாசித்து அறிந்தேன். அறியும்தோறும் அது வளரும் கருத்தாகவே இருந்தது. எனக்கு முறையான அறிவியல் கல்வி இல்லை, என் வழி கற்பனை சார்ந்தது. ஆயினும் வருங்காலத்தின் உயிரியல் சார்ந்த பெரும்பாலான திறப்புகள் endosymbiotic theory சார்ந்தே இருக்குமென்றும், உயிருக்குள் உயிருக்குள் உயிர் என அமையும் ஒத்திசைவும் விலக்கமுமே கூடுதலாக விளக்கப்படும் என்றும் எண்ணினேன். என் எல்லைக்குள் ஓர் உருவகமாக என் தத்துவ வகுப்புகளில் இதைச் சொல்லியும் வருகிறேன்.
ஆனால் நீங்கள் சொன்னது ஒரு கருதுகோள் (ஹைபோதீஸிஸ்) என்னும் நிலையில் மிகமிக படைப்பூக்கம் கொண்ட முன்னகர்வு. அதன் நிரூபணச் சாத்தியமென்ன என்று தெரியவில்லை அன்று உங்களிடம் சொன்னேன்.
இப்போது அக்கருதுகோள் உலகளாவிய அறிவியல்சூழலில் முன்வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளித்தாலும் உங்கள் பங்களிப்பு அவர்களின் கவனத்திற்கே செல்லவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சாத்தியமான அனைத்து அறிவியல் ஊடகங்களிலும் உங்கள் கருத்தின் முன்தொடர்ச்சியை நீங்கள் முன்வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.
ஜெயமோகன்